Friday, April 24, 2015

ஒரே கால் வலி

'உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்!' என்று சொன்னார் திருமூலர்.

'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்பதும் நம் முன்னோர் மொழி.

ஆக, உயிரின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உணர்வின் வளர்ச்சிக்கும் உடல் நலன் மிக முக்கியமானது.
2013ஆம் ஆண்டு பிறந்த நாளன்று ஒரு முடிவெடுத்தேன். தினமும் ஐந்து கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று. பிறந்த நாளன்று அம்மா வாங்கிக் கொடுத்த எஃப் பைக் எனப்படும் எக்சர்சைஸ் பைக்கை ப்ளஸ் பண்ணி உடற்பயிற்சியும் தொடங்கியாயிற்று.

நல்லா போய்க்கொண்டிருந்த சில மாதங்களில் ஜெர்மனிக்கு சென்றபோதும், அதைத் தொடர்ந்த விடுமுறையிலும் சைக்கிள் ஒட்ட முடியவில்லை.

ரொம்ப நாளா ஓட்டாம கிடந்த சைக்கிளை என்று ஓட்டத் தொடங்கினேன் என மறந்து போயிற்று. ஆனால், இப்போ நல்ல இம்ப்ரூவ்மெண்ட். தினமும் 15 கிமீ. அதுவும் 27 நிமிடங்களில்.
சைக்கிள் ஓட்டுறதுல ஒரு நல்ல பயன் உடம்பில் உள்ள 'லிபிடோ' நல்லாவே குறைஞ்சுடுச்சு. முன்னால எல்லாம் எந்தப் பொண்ணுங்களப் பார்த்தாலும் அழகா, அட்ராக்டிவா இருக்காளே!னு தோணும். இப்பல்லாம் அப்படி தோணுறது இல்ல. ஒருவேளை வயசாயிட்டுருக்கோ!

இரவில் நல்ல தூக்கம் வருது.

சைக்கிள் போதாதுன்னு, நேற்று 15 கிமீ ஜாக்கிங் செய்யத் தொடங்கினேன். கால் வலி இன்னும் விடவில்லை. இன்று நடக்கவும், படியில் ஏறவும்கூட சிரமப்பட்டேன்.

'முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும்' என்பதுபோல வலியை வலியால் தான் சரி செய்ய முடியும். மாலையில் ஓடுவதற்காக காத்திருக்கிறேன்.

மறையுரை தயாரிக்க பைபிள் திறந்தால் பின்வரும் பகுதி தென்பட்டது.

பவுலடியார் திமொத்தேயுவுக்கு ஒரு அறிவுரை சொல்கிறார்:

'இறைப்பற்றில் நீ வளரப் பயிற்சி செய்.
ஏனென்றால் உடற்பயிற்சி ஓரளவுதான் பயன் தரும்.
ஆனால், இறைப்பற்று எல்லா வகையிலும் பயன்தரும்!'
(1 திமொ 4:7ஆ-8)

இன்று மாலை ஜாக்கிங் போகலாமா? வேண்டாமா? சொல்லுங்க பவுலடியாரே!

1 comment:

  1. தமிழில் இப்படி ஒரு பழமொழி இருப்பது தந்தைக்குத் தெரியுமா என்று தெரியவில்லை."வச்சா குடுமி; செரச்சா மொட்டை" என்பதுதான் அது.வேகம் தேவைதான்....ஆனால் அதைவிட விவேகம் பெரிதல்லவா? அந்நிய மண்ணில் அவதி பட்டால் கேட்க யார் இருக்கிறார்கள்? இதில் பவுலடியாரை வேறு வம்புக்கிழுக்கிறார்..யார் கண்டது?...உடற்பயிற்சியும் இறைப்பற்றின் ஒரு அங்கம் தானோ என்னவோ!! எது எப்படி இருப்பினும் தந்தையின் கால்வலி சரியானால் சரிதான்....

    ReplyDelete