Sunday, April 12, 2015

எங்க போனீங்க தோமா?

ரோம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் 'திவினோ அமோரே' (= கடவுளின் அன்பு) சிற்றாலயத்திற்குச் சென்றேன் இன்று. நாளை ஆண்டவரின் இறையிரக்கப் பெருவிழா என்பதாலும், இந்த ஆலயத்தில் இறையிரக்கப் பக்தி சிறந்தது என்பதாலும் இங்கு போகலாம் என நினைத்தேன். போகவும் செய்தேன். மதிய நேரம். சாப்பிட்டுவிட்டு உடனே புறப்பட்டதால் கொஞ்சம் தூக்க கலக்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆலயத்தை அடைந்தவுடன் தூக்கமெல்லாம் போய்விட்டது.

உள்ளே போய் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு, மெழுகுதிரி ஒன்றையும் ஏற்றிவிட்டு வெளியே வந்து அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தேன். எனக்கு எதிரில் ஒரு காதலன்-காதலி. மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முத்தமிடும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன். முத்தமிடும் போது அவர்கள் பேசிக்கொண்டதும் காதில் விழுந்தது. 'முத்தமிடும்போது ஏன் கண்ணை மூடிக் கொள்கிறாய்?' என்று கோபப்பட்டாள் அண்ணல். 'அப்படியா?' என்று அசடு வழிந்தான் அண்ணன். 'இப்போ கண்ண மூடக்கூடாது!' என்று உதடுகளை இவன் உதடுகளருகே கொண்டு வந்தாள் அண்ணல். பயபுள்ள இப்பவும் கண்ண மூடுச்சு. 'பாத்தியா! நீ மறுபடியும் கண்ண மூடுற!' என்று கோபப்பட்டாள் அண்ணல். பதில் தெரியாமல் அண்ணன் விழித்தான்.

ஓடிப்போய், 'தங்கையே! நம் கண்களால் கொள்ள முடியாத பெரிய பொருள் கண்ணருகே வந்தால் கண் தானாக மூடிக்கொள்ளும். இதற்குப் பெயர்தான் அணிச்சை செயல் அல்லது உங்க ஆங்கிலத்தில் ரிஃப்ளெக்ஸ்!' என்று சொல்லவேண்டும் போல இருந்தது.

'போங்க! போயி சரியா சயின்ஸ் படிங்க!' அப்படின்னு மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

முத்தமிடும்போது கண்களை மூடிக்கொள்வதற்கும், தோமா உயிர்த்த ஆண்டவரின் உடலுக்குள் கையிடுவதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கேட்டதன் விடைதான் இன்றைய பதிவு.

தோமா ஒரு சுவராஸ்யமான கேரக்டர். இயேசு தன் இறப்பைப் பற்றிச் சொல்லும் போது, 'வாருங்கள், நாமும் சென்று அவரோடு மடிவோம்!' என்று சொன்னவரும் இவர்தான். 'அவரின் கைகளில் என் விரலை விட்டு, அவரின் மார்பில் என் கையை விட்டாலொழிய நம்ப மாட்டேன்!' என்று சொன்னவரும் இவர்தான்.

ரொம்ப துணிச்சலும் இவரிடம் இருக்கிறது! நம்பிக்கையில் தளர்வும் இருக்கிறது!

நாம ஒன்ன சொல்லும் போது அத மத்தவங்க நம்பலனா நம்மள அறியாம ஒரு இயலாமையும் பற்றிக்கொள்ளும். சீடர்கள் தோமாவிடம் இயேசுவைக் கண்டதைப் பற்றிச் சொல்லி, அதை தோமா நம்பாதபோது அவர்களுக்கும் அந்த இயலாமை இருந்திருக்கும். சீடர்களின் இயலாமையை இயேசுவே போக்குகின்றார்.

ஸ்க்வாஷ் விளையாண்டுருக்கீங்களா? சுவற்றை நோக்கி வேகமாக அடிக்கப்படுகின்ற பந்து வேகமாகத் திரும்பி வரும். அதே போல ஃபுட்பாலில் தூரத்திலிருந்து வரும் பந்திற்குத்தான் ஃபோர்ஸ் அதிகம்.

இயேசு முதன் முதலாகத் தோன்றியபோது தூரத்தில் இருந்த தோமா என்ற பந்துதான் இயேசு இரண்டாம் முறை வந்தபோது வேகமாக வந்து அவரின் உடலிற்குள்ளேயே நுழைகிறது. ஆக, நாம் கடவுளிடமிருந்து தூரமாக இருக்கும்போதுதான் அவருக்கு ரொம்ப நெருக்கமாகிறோம். இதைத்தான் அகுஸ்தினார் தன் 'உள்ளக்கிடக்கைகள்!' (Confessions) என்னும் நூலில் அழகாக எழுதுகிறார்:

'இதோ நான் எனக்கு வெளியே இருந்தேன்.
ஆனால் நீ எனக்கு உள்ளே இருந்தாய்.
உன்னை நான் வெளியில் தேடினேன்.
நீயோ என்னை என் உள்ளே கண்டாய்.
உன்னை விட்டு நான் தூரம் போகப் போக
நீ எனக்கு அருகில் நெருங்கி வந்தாய்.
நீதான் நான், நான்தான் நீ என என்னை நெருக்கி விட்டாய்.
நான் முதலில் நொறுங்கிப் போனேன்!
பின் நெருங்கிப் போனேன்!'

அருகிலிருந்தால் சில நேரங்கள் கண்கள் மூடிக்கொள்ளும். சீடர்களுக்கு அப்படித்தான் மூடிக்கொண்டது. நாமும் கடவுளுக்கு ரொம்ப அருகில் இருக்கிறோம், அவரை முத்தமிடுகிறோம் என்று நெருக்கமாக இருக்கும் நேரத்தில்கூட நாம் அவரைப் பார்க்க முடியாமல் நம் கண்கள் மூடிக்கொள்ள நேரிடலாம். ஆனால் நாம் தூரத்தில் நின்றால் அவரின் உடலுக்குள்ளே சென்றுவிடலாம்.

இது உறவுக்கும் பொருந்தும்.

அன்றாடம் அருகிலிருக்கும் சிலர் என்னதான் தினமும் தொட்டாலும், முத்தமிட்டாலும் ஒருவரின் அன்பை மற்றவர் புரிந்து கொள்வதில்லை. ஆனால், படிப்பினிமித்தம், பணியினிமித்தம் மேற்கொள்ளும் பிரிவு ஒருவர் மற்றவரை ஊடுருவிச் செல்ல வைத்துவிடுகிறது. இதையே அப்துல் ரகுமான், 'பிரியம் வர பிரிந்தே இருக்க வேண்டும்!' எனவும், கலீல் கிப்ரான், 'ஒரு மரத்திற்கும் அடுத்த மரத்திற்கும் உள்ளே இடைவெளியே இரண்டு மரங்களும் கிளைபரப்பி வளர வாய்ப்பு தருகிறது' என்றும் சொல்கின்றனர்.

இறையிரக்க செபத்தில் நாம் 'இயேசுவே! என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்!' என்று சொல்கிறோம்.

அத்தோடு சேர்த்து, 'இயேசுவே! நான் நம்ப இயலாமல் தூரத்தில் இருக்கும்போது, உன் உடலை ஊடுருவிப்பாயும் ஆற்றல் பெறுகிறேன்!' என்றும் சொல்லலாமே!


1 comment:

  1. 'சந்தேகம்' எனும் அடைமொழியுடன் நாம் இத்தனை நாளும் தெரிந்து வைத்திருந்த 'தோமாவை' அழகான வெளிச்சத்திற்குக் கொணர்ந்திருக்கிறீர்கள்.தூரத்திலிருந்தால்தான் தொட முடியும்.உண்மைதான்.தூரம் சென்ற பின்பு தானே ஊதாரி மைந்தனால் தன் தந்தையின் அன்பை உணர முடிந்தது? அருகிலிருக்கையில் எந்த அன்பின் பரிமாணமும் முழுமையாக உணரப்படுவதில்லை.அருகாமையை விட தூரத்திலிருக்கும்,போது நம் 'தொடுதல்' இன்னும் அழகானது, உறுதியானது என்ற உண்மையை புனித அகுஸ்தினாரின் உள்ளக்கிடக்கையாக்க் காட்டியிருப்பது கண்களைக்கசிய வைக்கிறது. மற்றும் அப்துல் ரகுமான்,கலீல் கிப்ரான் போன்றோரின் வார்த்தைகள் 'தூரத்திற்கு' வலு சேர்க்கின்றன.எது எப்படியிருப்பினும் புனித தோமாவுடன் நாமும் சேர்ந்து மனமுருகி 'என் ஆண்டவரே! என் தேவனே! என நம் நா உச்சரிக்கையில் "இறை இரக்கம்" எந்தத் தூரத்தையும் துளைக்கவல்லது என்பதை உணர்வோம். மிக அழகானதொன்று......இன்றையப்பதிவு.

    ReplyDelete