Wednesday, April 22, 2015

முதல் சிம் கார்ட்

நான் முதன்முதலாக செல்லிட பேசி பயன்படுத்தியபோது நான் ஆன்மீகப் பயிற்சி ஆண்டில் இருந்தேன். அந்தப் பயிற்சி மதுரை விரகனூரில் நடைபெற்றது. அந்தப் பயிற்சிக்கும், இறையியில் முதல் ஆண்டிற்கும் இடையிலான விடுமுறையின்போது நான் தன் மகளுக்குப் பிரெஞ்சு சொல்லிக் கொடுத்ததற்காக ஒரு மொபைல் ஃபோன் பரிசளித்தார் செபமாலை அன்னை ஆலயப் பங்கின் அக்கா ஒருவர். அது ஒரு மோட்டாரோலா. குட்டியாக அழகாக நீல நிறத்தில் இருந்தது. அதற்கு முதல் முதலாக சிம் கார்ட் போடச் சொல்லி அவரே 200 ரூபாயும் கொடுத்தார்.

அந்த மொபைல் ஃபோனும் மறைந்துவிட்டது. அந்த அக்காவின் இருப்பிடமும் மறந்துவிட்டது.

நான் ரோமிற்கு வருகிறேன் என்று சொல்லி என் அம்மா பரிசளித்த ஐஃபோனுக்கு இப்போது சிம் கார்ட் வாங்க வேண்டும். என்னதான் காஸ்ட்லி ஃபோன் வைத்திருந்தாலும், அதில் சின்ன சிம்கார்ட் இல்லையென்றால், அது வெறும் பேப்பர் வெயிட் தானே!

சிம்கார்ட் வாங்க உடன் வந்ததோடு மட்டுமல்லாமல், தன் அன்பளிப்பாக அதை வாங்கியும் கொடுத்தார் நம் உதவிப்பங்குத்தந்தை அந்திரேயா. வாங்கியது வோடஃபோன் சிம்கார்ட். போட்ட ஒருநாளில் எல்லாக் காசும் தீர்ந்து விட்டது. ஏனெனில் மொபைல் டேடாவை நான் அணைத்து வைக்கவில்லை.

அந்திரேயாதான் இன்றைய நம் ஹீரோ.

என் தங்கையின் வயதுதான் இந்த அந்திரேயாவுக்கு. என் தங்கை பிறந்த 1984 மே 27ஆம் நாளில் பிறந்தவர் இவர். சொந்த ஊர் ரோம் நகரம். பிடித்த விளையாட்டு கால்பந்து. பழகுவதற்கு எளிமையானவர். இவரிடம் நான் கற்றுக்கொண்டவை மூன்று:

1. எளிமை. எளிமை என்றால் செருப்பு அணியாமல் இருப்பதோ, கையில் வாட்ச் கட்டாமல் இருப்பதோ அல்ல. எளிமை என்றால் தன்னைவிட சிறியவருக்குக் காட்டும் புன்முறுவல் அவ்வளவுதான். இவரோடு வெளியே சென்றால் நாம் போய்ச் சேரும் இடத்திற்குக் கூடுதலான நேரம் பிடிக்கும். இந்த ஏரியாவில் தெரியாத ஆளே இல்லை. டீக்கடை, பூக்கடை, செய்தித்தாள் கடை, ரோட்டில் பிச்சை எடுப்போர், பேக் விற்போர் என அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர். இவரின் இந்த பண்பைப் பார்த்து நான் அடிக்கடி என்னையே கேட்டதுண்டு. நான் இருந்த தேனியில் கோயிலுக்கு எதிரே ஒரு பேக்கரியும், கோவிலை ஒட்டி ஒரு காஃபி கடையும் உண்டு. பல நாட்கள் அங்கே நானும் போயிருக்கிறேன். ஆனால், அங்கிருப்பவர்கள் யார் என்பதை நான் கண்டுகொண்டதே கிடையாது. வாழ்வில் சில பொழுதுகளும், சில மனிதர்களும் நாம் அனுபவிக்காமலே நம்மிடமிருந்து அகன்று போய்விடுகின்றன. கொஞ்சம் எளிமையும், கொஞ்சம் புன்முறுவலும் இருந்தாலும் இந்த உலகத்தில் நமக்கு எதிரிகளே இல்லாது போய்விடுவார்கள்.

2. தெனரெட்சா. இது ஒரு இத்தாலியன் வார்த்தை. இதற்குச் சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை. கான்செப்ட் ரொம்ப சிம்பிள். உங்களுக்கு ஒரு குழந்தை இருக்குனு வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை தூரத்தில் இருக்கு. ஒரு நாள் உங்களுக்கு ஃபோன் பண்ணி, 'அம்மா, ரொம்ப பசிக்குது. சாப்பிட ஒன்னும் இல்லை. கடையெல்லாம் பூட்டிருச்சு. நான் என்ன செய்ய?' என்று கேட்குது. நீங்களும் ஏதாவது அட்வைஸ் கொடுத்தோ, பொறுத்துக்கோ என்று சொல்லிவிட்டோ ஃபோனை வைத்துவிடுகிறீர்கள். நினைவெல்லாம் உங்கள் குழந்தைதான். இந்த நேரத்தில் உங்கள் வீட்டுக்கு ஒரு கேரியர் நிறையா பிரியாணி வருகிறது. நீங்களும் பசியாக இருக்கிறீர்கள். ஆனால் கேரியரைத் திறந்தவுடன், உங்களையறியாமல் ஒரு சோகம் அப்பிக் கொள்கிறது. முதல் வாய் எடுத்து வைத்தவுடன் துக்கம் தொண்டையை அடைக்கிறது. 'அங்கே குழந்தை பசியாக இருக்கிறதே!' என்ற எண்ணமே உங்களுக்கு கண்ணீரை வரவைக்கின்றது. இந்த நேரத்தில் உங்களுக்கு வரும் உணர்வுதான் 'தெனரெட்சா' - இது ஒரு கையறுநிலை. நான் இத்தாலிய மொழி தெரியாமல் இத்தாலி திருப்பலி வைக்கவும், இத்தாலியன் கலாச்சாரம் தெரியாமல் அவர்களின் உணவை உட்கொள்ள நான் படும் கஷ்டத்தையும் பார்த்து, என்னை 'தெனரெட்சா' கொண்டு பார்த்ததாக அடிக்கடிச் சொன்னவர் நம்ம அந்திரேயா.

3. படிப்புக்கு முழுக்கு. புத்தகத்திற்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம். குருப்பட்டத்திற்கு முதல் நாள் 'இனி படிக்கவே கூடாது!' என சபதம் எடுத்ததோடு மட்டுமல்லாமல், அதை இன்றுவரை கடைப்பிடிப்பவரும் கூட. 'அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு' என்னும் சபை உரையாளரின் கூற்றை அப்படியே வாழ்வாக்குபவர். ஆனாலும், தெரிந்து கொள்ளும் ஆர்வம் இவருக்கு இயல்பாக உண்டு. விவிலியம் சார்ந்த விளக்கங்களை அடிக்கடி கேட்பார். ஒரு கட்டத்தில் படிப்பதை நாம் நிறுத்திவிட்டு, நாம் பெற்றதை அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் இவர் தந்தை வாழ்க்கைப் பாடம். தேவையில் இருக்கிறேன் என யார் அழைத்தாலும் ஓடிவிடுவார். வாழும் மனிதர்கள் தாம் இவரின் புத்தகங்கள்.

கடந்த ஆண்டு மாறுதலாகி வேறு பங்குக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் அடிக்கடி தொடர்பு கொள்வதுண்டு.



1 comment:

  1. புரிந்துகொள்ளக்கூடிய மனிதர்களைப்பற்றிப் புரியாத பல மனித உணர்வுகளைப்பற்றிப் பேசுவது சுவையான விஷயம். தந்தையே! முகம் தெரியா அந்த உங்களது நண்பர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒருவர்தான். ஆம், பல சமயங்களில் விலைகொடுத்து வாங்கும் பொருட்களை பெரிதாக எண்ணி செலவில்லாத 'புன்முறுவல்'போன்ற பல விஷயங்களை மறந்து போகிறோம்.ஒரு இனிமையான முறுவல் போதும் இவ்வுலகத்தையும் அதன் மனிதர்களையும் வாங்கவில்லை எனக்கற்றுக் கொடுக்கும் உங்கள் நண்பருக்கு ஒரு சபாஷ்! நாம் கற்றதையும்,பெற்றதையும் மற்றவருடன் பகிர வேண்டும் என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்தான்.' தெனரெட்சா'....இந்த வார்த்தையின் அர்த்தம் புரிகிறது.'Helplessness'...இதுதான். எம்போன்ற பெண்கள் காலம் முழுக்க அனுபவிக்கும் ஒரு உணர்வுதானே இது! நன்றாகவே புரிகிறது.அவருடன் தொடர்பு கொள்கையில் எங்களது பிரியத்தையும் எடுத்துக் கூறுங்கள்.நன்றி.....

    ReplyDelete