Sunday, April 12, 2015

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஜே.கே. என்று எல்லாராலும் அறியப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் கடந்த வாரம் மறைந்துவிட்டார்.

இவரின் படைப்பில் நான் அதிகம் ரசித்தது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'. நேரமிருந்தால் இந்தத் திரைப்படங்களைக் கண்டிப்பாகப் பாருங்கள். ப்ளாக் அன்ட் ஒய்ட்டா என்று உடனே ஓடிவிடாதீர்கள். ஒரு நாவல் படிப்பது போலவே இருக்கும்.

வாழ்வின் ரசனைகளை விறுப்பு வெறுப்பின்றி பகிர்ந்து கொள்ள ஜெயகாந்தனை அடித்துக்கொள்ள யாருமில்லை.

கண்ணதாசன் போலவே தனக்கு மரணமில்லை என்று சொன்ன கலைஞன் இவர்.

ஒரு புத்தகம் படிக்கும் போது அதில் 'என்ன?' எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் அல்லது ஒரு எழுத்தாளர் 'என்ன?' எழுதியிருக்கிறார் என்பதையும்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் 'என்ன?' என்ற கேள்வியைத் தாண்டி நாம் இன்னும் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று என் அப்பா சொல்வார். அவர் அதிகம் படிக்கவில்லைதான். ஆனால் அவரும் ஜெயகாந்தன் ரசிகர்தான். 'எப்படி?' மற்றும் 'ஏன்?' என்பதுதான் அந்தக் கேள்விகள். 'எப்படி?' ஒரு கதையை அதன் ஆசிரியர் கையாண்டிருக்கிறார் என்று நாம் பார்க்கும்போது, நம் படைப்பாற்றல் வளர்கிறது. இதை இப்படிச் செய்திருந்தால் எப்படி இருக்கும் என நம் மூளை சிந்திக்கத் தொடங்கும். அடுத்த கேள்வி: ஏன்? எந்த நோக்கத்திற்காக ஒரு கதையை அல்லது ஒரு படைப்பை கலைஞன் உருவாக்க வேண்டும். நாம் பேசுவதற்கு பல நேரங்களில் நோக்கங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நோக்கம் இல்லாமல் நாம் எதையும் எழுதுவதில்லை. 'சும்மா!' சொன்னேன் என்று சொல்லும் அளவிற்கு, 'சும்மா!' எழுதினேன் என நாம் சொல்லுவதில்லையே!

இது நம்ம வாழ்க்கைக்கும் பொருந்தும்.

நாம அடுத்தவங்களப் பார்க்கும்போது அவர் என்னவாக இருக்கிறார்? என்று கேட்பதை விட, அவர் 'எப்படி' இருக்கிறார் என்று கேட்டால் அவருக்கு மகிழ்ச்சி தானே.

அதே போல நாம் நம்மைப் பார்த்தை 'என்னவாக இருக்கிறேன்?' என்று கேட்பதை விட, 'ஏன் இருக்கிறேன்?' என்று கேட்டால் நம் இலக்கு தெளிவாகும்தானே.

ஜெயகாந்தன் - அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறுவதாக!


1 comment:

  1. 'ஜெயகாந்தன்' மட்டுமின்றி படைப்பாளிகள் அனைவருமே சாகாவரம் பெற்றவர்கள்தாம் தம் படைப்பினால். அப்படிப்பார்க்கையில் மனிதப்பிறவி எடுத்த நாம் அனைவருமே ஒரு வித்த்தில் படைப்பாளிகளே..நம் வாழ்க்கையாகிய புத்தகத்தை நாமும் படைக்கிறோம் என்று எடுத்துக்கொண்டால்.தினம் தினம் இப்புத்தகத்தின் பக்கங்களை நிரப்புகிறோம் நம் அன்றாட செயல்களால்.நாளை யாரேனும் நம் ' வாழ்க்கைப் புத்தகத்தைப்' புரட்டிப் பார்ப்பார்களேயாயின் அவர்கள் அதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவாக இருக்கும்? பதில் திருப்தியாக இருப்பின் மகிழ்ச்சியே! இலையெனில் யோசிப்போம்......புத்தகத்தைத் திருத்தி எழுதுவோம்...

    ReplyDelete