Friday, April 10, 2015

அப்புறம் பார்க்கலாம்!

மெட்ரோவிலிருந்து நான் இறங்க வேண்டிய பார்பரேனி ஸ்டேஷனில் இறங்கியபோது என் கண்ணில் ஒரு விளம்பரம் பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்தான் விளம்பரப் பலகைகள் மாற்றப்படும்.

'அப்புறம் பார்க்கலாம்னு சொல்லாதீங்க! இப்பவே டிக்கெட் புக் பண்ணுங்க' என்ற வாசகத்துடன் மஞ்சள் நிறத்தில் கறுப்பு எழுத்துகளோடு மின்னியது ஒரு சுற்றுலா நிறுவனத்தின் விளம்பரம்.

'அப்புறம் பார்க்கலாம்!' - இந்த இரண்டு வார்த்தைகளை நாம் அனைவருமே ஏதோ ஒரு நேரத்தில் அல்லது சூழலில் பயன்படுத்தியிருப்போம்.

'அப்புறம் பேசுறேன்!' என்று நாம் சொல்லிக் கட் பண்ணும் அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான் - 'இப்போ ஃபோனை வையி!'

ஆனால், அப்புறம் பார்க்கலாம்! என்று சொல்வதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன:

அ. தள்ளிப்போடுதல் - இப்போ செய்ய வேண்டாம். அப்புறம் செய்வோம்.

ஆ. எதிர்பார்ப்பு. ஒருவர் மற்றவரிடமிருந்து விடைபெறும்போதும் நாம் 'அப்புறம் பார்க்கலாம்!' என்றே சொல்கின்றோம்.

தள்ளிப்போடுதல் - போஸ்ட்போனிங்! ஒரு பெரிய பிரச்சினைதான்.

மார்ச்சு மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் எங்கள் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் கருத்தரங்களில் சமர்ப்பிக்கப்ட்ட 17 ஆய்வுத்தாள்களி;ன் சுருக்கத்தையும், அதை வாசித்தவர்களைப் பற்றிய ஆய்வையும் அனுப்பவேண்டும். கருத்தரங்கு முடிந்த அன்றே அனுப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அடுத்தடுத்து பயண வேலைகள் இருந்ததால் 'அப்புறம் பார்க்கலாம்!' என நினைத்துத் தள்ளி வைத்தேன். பயணம் முடிந்தும் எழுத மனம் வரவில்லை. ஏப்பிரல் 10தான் கடைசி நாள் என்று டெலிஃபோன் நேற்று ரிமைண்டர் செய்ததால் இரவோடு இரவாக உட்கார்ந்து முடித்தாயிற்று. இன்று கல்லூரிக்கு அனுப்பியும் விட்டேன்.

இந்த 'அப்புறம் பார்க்கலாம்' மனநிலை அன்றைக்கு எனக்கு கொஞ்ச நேர அவகாசத்தையும், ஆறுதலையும் கொடுத்ததுதான். ஆனால், ஒரு இரவு முழுவதும் என்னை விழித்திருக்க வைத்துவிட்டதே. கொஞ்ச நேர இன்பத்திற்கு ஆசைப்படும் மனம் தள்ளிப்போடுகிறது. பின் அதுவே, 'ஐயோ! இவ்வளவு வேலை இருக்கே!' என்று வருத்தமும் படுகின்றது.

'அப்புறம் பார்க்கலாம்!' என்பது 'ஆம்' என்பதற்கும், 'இல்லை' என்பதற்குமான இழுபறி மனநிலை. வாழ்வில் சில முக்கியமான முடிவுகள் கூட இவற்றால் பாதிக்கப்படலாம். புனேயில் நான் படித்துக்கொண்டிருந்தபோது அருட்தந்தை ஒருவர் என்னை நூலகத்தில் சந்தித்தார். என் பேச்சு ரொம்ப பிடித்திருப்பதாகவும், அன்று இரவு உணவருந்த வெளியில் செல்லலாம் என்றும் சொன்னார். கொஞ்ச நேரம் யோசிச்ச நான், போவதற்கு சோம்பேறித்தனப்பட்டு, 'அப்புறம் பார்க்கலாம்!' - 'இன்னொரு நாள் பார்க்கலாம்!' என்றேன். கடந்த ஆண்டு அவர் வட இந்தியாவில் ஒரு மறைமாவட்டத்தின் ஆயராகிவிட்டார் என்றும் செய்தி வாசித்தேன். 'அப்புறம் பார்க்கலாம்!' என்று சொன்ன அவரை நான் இன்றுவரை பார்க்கவேயில்லை. அன்று ஒருவேளை அவரை நான் பார்த்திருந்தால், உணவருந்த வெளியில் சென்றிருந்தால், இன்று அவரோடு நட்பில் இணைந்திருக்கலாம்தானே!

ஆகவே, இன்று ஒரு முடிவெடுத்தேன்: 'தள்ளிப்போடுதலைத் தள்ளிப்போடுவேன்!' என்றுதான்.

ஹலோ! என்ன பார்க்கிறீங்க!

'அப்புறம் பார்க்கலாம்!'


1 comment:

  1. ஆம்! சரியாகச் சொன்னீர்கள்! சில சமயம் நமக்கு வேண்டியவர்களிடம் தொலை பேசியில் பேசும்போது 'அப்புறம், பேசுகிறேன்' என,ற வார்த்தை வந்து விழுந்தால் 'நமக்கு மேல் வேறென்ன வேலை?' என்ற எரிச்சல் வருவது சகஜம்தான். ஆனால் பல சமயங்களில் சரியான முடிவு எடுக்க இயலாதபோது அதைத் தள்ளிப்போடுவது கொஞ்சம் புத்திசாலித்தனம்தான்! ஆனால் தந்தைக்கு ஏற்பட்ட மாதிரி நம்மை வருத்தப்பட வைக்கும் சம்பவங்களும் சில சமயம் விதிவிலக்கல்ல.பெற்ற தாய்க்குச் சம்மாக நான் நேசித்த ஒருவரை அருகிலேயே வைத்துக்கொண்டு அவர்களைப் பார்ப்பதைத் தள்ளிப்போட்டதால் அவர்களின் 'வெற்றுடம்பை'க்கூட பார்க்க முடியாமல் போன துயரம் இன்று வரை என்னில் குற்ற உணர்ச்சியாக உள்ளது.ஆகவே தந்தையுடன் சேர்ந்து " தள்ளிப்போடுதலைத் தள்ளிப்போடலாம்" என்று நாம் அனைவருமே முடிவெடுக்கலாமே!

    ReplyDelete