Wednesday, April 15, 2015

விமானப் பயணம்

'பவானிசிங், பவானிசிங்!' அப்படின்னு ரெண்டு, மூனு நாளா வாசிச்சி, 'பவானி;' அப்படிங்கிற 'சிங்குப்' பொண்ணு போலனு நினைச்சா பெரிய கண்ணாடி, முன்னால் வழுக்கை, சஃபாரி என்று சிரிச்சுக்கொண்டிருக்கிறார் வழக்கறிஞர் பவானிசிங். ஒருவழியா அவரே ஆஜராகலாம்னு சொல்லிடுச்சு கர்நாடகா நீதிமன்றம். அவருக்கு மறுப்பு தெரிவிச்சா, வழக்கு இன்னும் ஒரு வருடம் தள்ளிப்போகும். சும்மாவே, நம்ம ஊரு இப்போ ரெண்டு முதல்வர்களை வச்சி படாத பாடு படுது.

இன்னொரு விஷயம் கவனிச்சிங்களா! 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி மேல முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு பதிவு செய்தவுடன், அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டது தலைமை. ஆனால், ஜெயலலிதா மேல் தீர்ப்பு வந்தும், குற்றவாளி என அறிவிக்கப்பட்டும் ஏன் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை?

வாழ்க்கையின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைப்பதில்லையே.

இன்று காலையில் எழும்போது ஒரு முடிவு எடுத்தேன். யாரைப் பற்றியும் மற்றவர்களிடம் பேசக் கூடாது. மனிதர்களை ரொம்ப கிரிட்டிக்கலாக பார்க்கக் கூடாது. எங்க பாஸ் ஃபாதர் சார்லி; சொல்வார்: 'மனிதர்களை என்று நாம் ஆராய்ச்சி செய்யத் தொடங்குகிறோமோ, அப்பொழுதே அவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம்!' என்று.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினோம்.

இன்று விமானப் பயணம் பற்றிப் பேசுவோம்.

ரோமிற்கு வந்தது என் முதல் பயணம் இல்லை என்றாலும், ஐரோப்பா கண்டத்திற்கு இதுதான் முதல் பயணம் என்பதால், முதல் உலகம் எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆசை நிறையவே இருந்தது.

சென்னையிலிருந்து தோகா வழி ரோம் செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ். தோகாவில் இரண்டு மணி நேரம் டிரான்சிட்.

விமானம் என்றதும் கோட்சூட் போட்டு, ஷூ அணிந்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலை இன்று மாறிவிட்டது. அவசரப் பயணங்களுக்கும், நெடுந்தூரப் பயணங்களுக்கும் பயன்படுத்தும் ஒரு வாகனம் அவ்வளவுதான். இதற்கு ஒரு சின்ன உதாரணம், சென்னையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எனக்கு இரண்டு வரிசைக்கு முன்னிருந்த பெண் ஒருவர் சுடிதாருடன் மாற்று அறைக்குச் சென்றுவிட்டு, நைட்டியுடன் திரும்பினார். அந்நேரம் ஏதோ நாம மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியனில் போவதுபோன்ற உணர்வுதான் இருந்தது. டிரெயினில் கொய்யாப்பழம், கடலைப் பருப்பு விற்பது போல விமானத்திலும் விற்பனை நடக்கிறது. 'என் பெற்றோர் குஜராத்தில் இருக்கிறார்கள். அங்கே பூகம்பம் வந்தபோது நாங்கள்...' என்று நாம் பேருந்திலும், டிரெயினிலும் பார்க்கும் மஞ்சள் கலர் அட்டைகளையும் விமானத்தில் பார்க்கலாம்.

விமானம் உடைஞ்சா அல்லது விபத்துக்குள்ளானா அதில் உள்ள கறுப்பு பெட்டி மட்டும்தான் அழியாது என்று எங்க ப்ரஃபசர் ஒருத்தர் சொன்னபோது, 'அப்படின்னா விமானம் முழுவதையும் கறுப்பு பெட்டி போல செய்யலாமே!' என்று சொல்லி அவரை டரியல் ஆக்கினவங்க நாங்க.

விமானப் பயணம் சொல்லிக் கொடுத்தவைகள் இரண்டு:

1. குறைவான சுமை. மகிழ்ச்சியான பயணம். வெளிநாட்டில் எதுவும் கிடைக்காது என்று சொல்லியே சாக்ஸ், கர்ச்சீப், பேண்ட், சர்ட், மாத்திரை, புத்தகம் என வாங்கி நிறைத்துவிட்டேன். என்னால் நகர்த்தக்கூட முடியாத அளவுக்கு லக்கேஜ். செக்-இன் செய்யும்போது எடை அதிகமாக இருப்பதால் இன்னும் கொஞ்சம் பணம் கட்டச் சொன்னார்கள். ரொம்ப லக்கேஜ் இருந்தா முதலில் செக்-இன் செய்யக் கூடாது. முதலில் ரொம்ப மெதுவாக வேலை பார்ப்பதால் நம் லக்கேஜ் எல்லாத்தையும் சோதித்துக் கொண்டிருப்பார்கள். கடைசியாகச் சென்றால் அவசர அவசரமாக வாங்கி உள்ளே அனுப்பி விடுவார்கள். ஆனால், இந்த முதல் அனுபவம் கற்றுக்கொடுத்ததிலிருந்து கைப்பை தவிர வேறு எதுவும் எடுத்துச் செல்வது கிடையாது. குறைவான சுமைகள் கொண்டு செல்வதால் விமான நிலையத்தில் காத்திருப்பும் குறைகிறது.

2. விமானத் தாமதம். தோகாவிலிருந்து புறப்பட்ட விமானம் இரண்டு மணி நேரம் தாமதம். மனது பதறிக் கொண்டிருந்தது. ஏர்போர்ட்டில் என்னை அழைக்க வரும் அந்த இத்தாலிய அருட்பணியாளருக்கு அவ்வளவு பொறுமை இருக்குமா? என்று. ஃபோன் அடித்தோ, மின்னஞ்சல் செய்தோ தாமதத்தையும் அறிவிக்க முடியாத நிலை. இருந்தாலும் காத்திருந்தார் அருட்பணியாளர். தாமதம் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. 'ஸாரி!' என்றேன். 'விமானம் தாமதமானால் நீ என்ன செய்ய முடியும்!' என்றார். ஜென்டில்மேன்! விமானத் தாமதம் பலருக்கு பல உணர்வுகளை ஏற்படுத்தும். சிலர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பர். சிலர் மொபைலில் புலம்பிக் கொண்டிருப்பர். சிலர் தூங்குவர். சிலர் சாதுவாக இருப்பர். மொபைலில் புலம்பலைத் தவிர நான் இந்த மூன்றையும் செய்தேன்.


1 comment:

  1. பவானிசிங்....அக்ரி கிருஷ்ணமூர்த்தி....தந்தை சார்லி என்று எங்கெல்லாமோ சுற்றிவிட்டு கடைசியில் தங்களின் விமானப்பயணத்தில் தடம் பதித்துள்ளீர்கள்.எந்த வேலையில் இறங்கினும் ஐம்புலன்களையும் அலர்ட்டாக வைப்பதுடன் சுற்றிநடக்கும் அத்தனையையும் தங்களின், மூளையின் ஒரு பக்கத்தில் படம்பிடித்து சேமித்து வைப்பது தங்களின், தனித்தன்மை.குறைவான சுமை,மகிழ்ச்சியான பயணம்.....இது விமானப்பயணத்துக்கு மட்டுமல்ல,,,,,நம் வாழ்க்கைப்பயணத்திற்கும் பொருந்தும்.விமானம் தாமதித்துப் போயினும் தந்தையின் எதிர்பார்ப்பிற்கிணங்க அவருக்காக்க் காத்திருந்த அந்த அருட்பணியாளர் உண்மையிலேயே ஒரு 'ஜென்டில்மேன்' தான். முதன் முதலாக விமானப்பயணம் செய்யக்காத்திருப்பவர்களுக்கு தந்தையின் பகிர்தல் நல்ல 'டிப்ஸ்'......

    ReplyDelete