Tuesday, April 14, 2015

வீசா

இன்றோடு இத்தாலிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆவதாலும், இன்னும் மூன்று மூன்று-வாரங்கள் (அதாவது, ஒன்பது வாரங்கள்) படிப்பு இருப்பதாலும், இந்த இறுதி நாட்களில் என் மூன்றாண்டைப் பின்னோக்கிப் பார்த்து நடந்து வந்த பாதையை திரும்ப அசைபோட்டு வலைப்பதிவில் எழுதலாம் என விழைகிறேன்.

'ஐயயோ! மறுபடி முதல்ல இருந்தா!' அப்படின்னு என்னோட ஆழ்மனம் கேட்கத்தான் செய்கிறது. இருந்தாலும் எழுதிப் பார்ப்போம்.

2012 ஏப்பிரல் 23தான் இத்தாலிக்கு வந்தேன். இருந்தாலும் 2012 ஏப்பிரல் 13 கைக்கு வீசா வந்துவிட்டதால் அன்றே இத்தாலிக்கு போனது போலத்தான் இருந்தது.
'வீசா' என்ற வார்த்தைதான் இன்றைய பதிவின் மையம்.

கடவுள் இந்த மண்ணுலகை ஆள்வதற்கு கதிரவன், நிலா என்று இரண்டு ஒளிப்பிழம்புகளைப் படைத்தாரென்றால், மனிதன் தன்னை ஆள்வதற்கு படைத்த இரண்டு பிழம்புகள் தாம் 'பாஸ்போர்ட்டும்', 'வீசாவும்'. 'நாம் எதை அல்லது எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்' என்று காட்டுவதற்கு பாஸ்போர்ட். 'நாம் எங்கே போகலாம், எங்கே போகக்கூடாது!' என்று சொல்வதற்கு வீசா.

எனக்குத் தெரிந்த மொழிகளில் இத்தாலியனில் மட்டும்தான் வீசாவை வேறு பெயர் சொல்லி அழைக்கிறார்கள். இத்தாலியனில் 'வீஸ்தோ' என்று சொல்கிறார்கள். 'வீஸ்தோ' என்றால் 'பார்த்தேன்' என்பது பொருள். இந்த வார்த்தையின் மூலம் லத்தீன் வார்த்தை. லத்தீன் மொழியின் 'வெதேரே' (பார்ப்பது) என்ற வினைச்சொல்லில் இருந்துதான் வீசா என்ற சொல்லாடல் உருவாகின்றது. அதாவது கான்செப்ட் இதுதான்:

உதாரணத்திற்கு, நான் ஒரு பணக்காரன். என் வீட்டிற்கு சமையல் வேலைக்கும், எடுபிடி வேலைக்கும் ஆள் தேவைப்படுகிறது. ஆனால் என் ஊர்க்காரனை நான் வேலைக்கு வைக்கலாம் என்றால் எவனும் கிடைக்க மாட்றான். அப்படியே கிடைத்தாலும் சம்பளம் ரொம்ப கேட்கிறான். நான் என்ன செய்வது? பக்கத்து ஊருல ஆட்கள் கிடைக்கிறார்கள். அவர்களை நான் போய் பார்த்துக் கூட்டி வருவதற்கு எனக்கு நேரம் இல்லை. நான் என்ன செய்கிறேன்? என் உறவினர் ஒருத்தனை அனுப்பி போய் பார்த்து எனக்கு ஆள் கூட்டி வா என்கிறேன். அவனும் போகிறான். சில நாட்கள் அவனாக ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்தவன் திடீரென்று ஒருநாள் என்ன சொல்கிறான்? 'என்னால அங்கிட்டு இங்கிட்டும் அலைய முடியல. அதனால ஒன்னு செய்வோம். நான் இங்கேயே இருக்கிறேன். இது நான் அனுப்புற ஆள் அப்படிங்கிறதுக்கு அவன் மேல ஒரு அடையாளம் போட்டு அனுப்புறேன்!' என்று சொல்லி ஆட்கள் மேல் அடையாளம் போட்டு அனுப்புகிறான். கொஞ்ச நாள் கழிச்சி என்ன ஆகுது? ஆட்கள் மேல் போடப்படுகிற அடையாளம் வியர்வையினாலும், மழையினாலும் அழிஞ்சிடுது. அப்புறம் என்ன யோசிக்கிறான். ஆட்கள் கையில ஒரு ஓலையில எழுதிக் கொடுத்து அனுப்புறான். ஓலை, பேப்பர் ஆகுது. பேப்பர் ஸ்டிக்கர் ஆகுது. ஸ்டிக்கர் ப்ளாஸ்டிக் ஆகுது. வீசா பிறக்குது.

இப்படித்தான் வீசா உருவாகியிருக்க வேண்டும்.

நான் இவனைப் 'பார்த்தேன்!' என்று சொல்லப்படும் இந்த வீசா மூன்று காரணங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது: படிப்பு, பணி மற்றும் சுற்றுலா. இந்த மூன்றும் தான் வாழ்க்கை என நினைக்கிறது அந்நிய நாடு. 'உறவினரைப் பார்க்க' அல்லது 'மருத்துவம் பார்க்க' என்பதுதான் இப்போ வந்தவைதான்.

நான் பெற்ற வீசா 'துறவறப்பணிக்கான' வீசா. இத்தாலியிலிருந்து அழைப்புக் கடிதம் வந்ததும் அதை மும்பையிலிருந்த இத்தாலிய தூதரகத்திற்கு அனுப்பினேன். துறவறப் பணிக்கான வீசா பரிந்துரைகள் மட்டும் அவர்களால் டில்லியில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருக்கும் 'மோன்சிங்ஞோர்' பார்த்துவிட்டு, தனக்கு செயலராக இருக்கும் அருட்சகோதரியிடம் 'ஓகே' கடிதம் அனுப்புவார். பின் ஓரிரு நாட்களில் வீசா கிடைத்துவிடும். இப்படியெல்லாம் நடக்கும் நம்ம நேரம் நல்லா இருந்தா! நமக்கு அந்த நேரம் ராகுகாலம். சனி ரவுண்ட் கட்டி அடிச்சதால, டில்லியில் தங்கிவிட்டது பேப்பர். யாரிடம் என்ன கேட்க என்று திணறிக்கொண்டிருந்த போது ஒரு ஃபாதர் சொன்னார். 'தம்பி! டெல்லியில ஒரு மலையாளி சிஸ்டர் தான் லெட்டர் கொடுப்பா. மலையாளி தவிர யார் வீசா கேட்டாலும் கிடப்பில் போட்டுடுவா! நீ பேசாம டிக்கெட்டை மாத்திடு!' அப்படின்னு அட்வைஸ் கொடுத்தார். நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல. சரி! டெல்லிக்கே பேசிடுவோம்னு சொல்லி வத்திக்கான் தூதரகத்தின் நம்பர கண்டு பிடிச்சு சுழற்றினா, அதே மலையாளியின் குரல். நுன்சியோவுக்கு கனெக்ஷன் கொடுக்கச் சொன்னேன். 'அது முடியாது!' என்றாள். 'ஏன்?' என்றேன். 'இந்த விஷயமெல்லாம் நான்தான் பேசுவேன்!' என்றாள். 'ஏன் லெட்டர் கொடுக்கல!' என்றேன். 'உங்களுக்கு வயசு கம்மி. இப்போ ஏன் படிக்க போறீங்க?' என்றாள். 'எல்லாம் அங்க ஓகே ஆயிடுச்சுல. உனக்கு என்ன?' என்றேன். 'இல்லை. இங்க இருந்து போறவங்க திரும்ப வர்றதில்லை. அதனால நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்!' 'இது இத்தாலிக்காரன்ல சொல்லணும். நீ ஏன் சொல்றே?' என்றேன். கொஞ்ச நேரம் அமைதி காத்தாள். பின் லெட்டர் தர்றேன் என்றாள். எனக்கு ஒன்றும் புரியல. சாமி வரங்கொடுத்தாலும், பூசாரி விட மாட்றாளே அப்படின்னு நினைச்சு மனசுக்குள் ரெண்டு, மூணு கெட்ட வார்த்தை வேறு வந்து போனது.

இந்தா, அந்தான்னு காத்திருந்து வீசாவும் வந்தது.

இந்த வீசா விஷயத்துல அமெரிக்கா கொஞ்சம் நல்லவங்க. கொடுக்கறவரைக்கு கொஞ்சம் இழுத்தடிப்பாங்க. ஆனா, பயபுள்ள பத்து வருஷத்துக்குனு தாராளமா கொடுக்கும்!

இந்த வீசா எடுக்கிறதுல கற்றுக்கொண்ட விஷயங்கள் மூன்று:

1. நம்ம வேலைய நாம தான் பார்க்கணும். அதுவா நடக்கும் அப்படின்னு நினைக்கிறதும், அல்லது யாராவது ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறதும் தவறு.

2. டிராவல் ஏஜென்சி. நம்ம பாஸ்போர்ட் தொலைஞ்சி போயிடக்கூடாதுனு நினைச்சி ப்ளு டார்ட்டில் அல்லது டிஎச்எல்லில் அனுப்பினால், அவன் கூலா பெயர் தெரியாத ஒரு கொரியர்ல அனுப்புவான். அவனுக்கு நம்ம டாக்குமெண்ட் பத்தியெல்லாம் கவலையில்லை. அப்படித்தான் அவன் எனக்கும் அனுப்பி வைத்தான். 'ஏன் அண்ணா இப்படி அனுப்புனீங்க?' என்றால், 'தொலைஞ்சுடுச்சுனா டூப்ளிகேட் வாங்கிக்கலாம்!' என்றான். அதுலயும் அவனுக்கு லாபம் தான. ஆகையால, நீங்க இந்த மாதிரி டுபாக்கூர் ஏஜன்சியிடம் போகாதீங்க.

3. செபம். செபம் பலிச்சது அப்படின்னு சொல்லல? அந்த நாட்களில் என் செப எண்ணங்கள் மாறிக்கொண்டே இருந்தன. கொஞ்ச நாட்களாக வெளிநாடு போக வேண்டும் என வேண்டிக்கொண்டிருந்த நான், லெட்டர் வந்ததும், 'வீசா' கிடைக்கணும்னு வேண்டுனேன். 'வீசா' கிடைத்ததும் 'டிக்கெட்' கிடைக்கணும்னு வேண்டுனேன். டிக்கெட் கிடைத்ததும் பயணம் நல்லா இருக்கணும்னு வேண்டுனேன். பயணம் நல்லா தொடங்கியதும் பாஸ் கூப்பிட வரனும்னு வேண்டுனேன். கூப்பிட வந்ததும் பங்கு நல்லா இருக்கணும்னு வேண்டுனேன். பங்கு நல்லா இருந்ததும் படிக்க இடம் கிடைக்கணும்னு வேண்டுனேன். இப்படி அடுத்தடுத்து செபம் மாறிக்கொண்டே இருந்தது. ஆக, செபம் என்பது நான் வெளிப்படுத்தும் என் ஆழ்மன ஆசைக்கான வடிகால்தான் என்பது எனக்கு அப்போது தெரிந்தது. தேவைகள் கூடக்கூட செபங்களும், அதன் காரணமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இது நல்லதொன்று அல்ல!



1 comment:

  1. இன்றையப் பதிவின் விசா மற்றும் பாஸ்போர்ட் பற்றிய விஷயங்கள் என்னுள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.ஆனால் செபம் பற்றிய அந்த இறுதி வரிகள்..." நாம் வெளிப்படுத்தும் செபம் என்பது நம் ஆழ்மன ஆசைக்கான வடிகால்தான்;தேவைகள் கூடக்கூட தன் செபங்களும்,காரணங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.இது நல்லதொன்று அல்ல"... என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.நாம் ஜெனிக்கும் நாள் தொட்டு நம் அக,புறத் தேவைகள் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.நம்மைச்ச்சுற்றியுள்ள உலகமும்,மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கும்போது நாமும் மாறித்தானே ஆக வேண்டும்? தேவைகளும் மாறித்தானே செய்யும்? அதனால் நம்தேவைகளுக்கேற்ப நம் செபம் மாறுவதில் என்ன தவறு? நம் தேவைகள் அத்தனையையும் நாம் வெளிப்படுத்தும் முன்னரே நிறைவேற்றக் காத்திருக்கும் தந்தையிடம் பிள்ளைகளுக்குரிய வாஞ்சையோடு தெரிவிப்பதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.இதுதான் 'புத்திசாலித்தனம்' கலக்காத எளிமையான ஆனால் ஆழமான விசுவாசம் என்பது என் கருத்து. தவறா தந்தையே??!!

    ReplyDelete