Wednesday, April 29, 2015

இன்னும் வளருவான்!

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு சட்டை, பேண்ட் தைத்தவர் ராம் டெய்லர்ஸின் ராம்தான். ஒவ்வொரு கிறிஸ்துமசுக்கு மட்டும்தான் புதுத்துணி. ஒவ்வொரு வருடமும் அளவெடுப்பதற்காக என்னை அவரிடம் அழைத்துச் செல்வார் என்னுடைய அப்பா. 'இன்னும் வளருவான்! கொஞ்சம் நீளமா தையுங்க!' என்று சொல்லியே நீளமான சட்டை தைத்துக் கொடுப்பார் அப்பா. பல நாட்களில் நீளமான சட்டையின் நீளத்தை இன்சர்ட் செய்து மறைத்ததுண்டு. பேண்ட் வழக்கமாக எங்க பெரியம்மா பையன் ஜீவா போட்டு அவனுக்கு சேரவில்லையென்றால் எனக்கு வரும். சில நேரங்களில் பேண்ட் கணுக்கால் வரைதான் இருக்கும். கொஞ்சம் இடுப்பைத் தளர்த்தி கீழே இழுத்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

கணுக்கால் தெரிய பேண்ட் அணிந்து செல்லும் மாணவர்களை இன்றும் அரசுப் பள்ளிகளில் பார்க்கலாம். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் வேகமாக வளர்கிறார்கள் என்று மகிழ்ந்து கொள்வேன்.

கணுக்கால் தெரியறது மாதிரி போடும் பேண்ட் பற்றி எழுதும் அவசியம் என்ன? இன்று மதியம் சாப்பிட்டு ஜெராக்ஸ் கடைக்குச் செல்லும் வழியில் ஒரு நபரை அப்படிப் பார்த்தேன். கணுக்கால் தெரியாமல் சாக்ஸ் அணிந்திருந்தாலும், பேண்ட்டின் நீளம் கணுக்கால் வரைதான் இருந்தது. பின் நண்பர்களிடம் விசாரித்தபோது, அமெரிக்கர்கள் சிலர் அப்படித்தான் போடுவார்கள் என அறிந்து கொண்டேன்.

ஆக,
பேண்ட் வாங்கும் வசதி இருந்தாலும் கணுக்கால் தெரியும்,
வசதி இல்லையென்றாலும் கணுக்கால் தெரியும்.

விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு நாம் நகத்தை வெட்டுவதுபோல, பேண்ட்டைத் தாண்டி வளரும் கணுக்கால்களை நாம் வெட்டுவதில்லை. அந்த வளர்ச்சி வேறு. இந்த வளர்ச்சி வேறு.

'இன்னும் வளருவான்!' என்ற அப்பாவின் வார்த்தைகளை, 'இன்னும் வளருவேன்!' என எடுத்துக்கொண்டால் புத்துணர்ச்சி பிறக்கிறது.

நான் சென்ற ஜெராக்ஸ் கடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு ஸ்டிக்கர் வாசகம் அழகாக இருந்தது:

Whatever U Gave me O God!!
Was ever more than what I deserved.
What else would I need 
When there's left little time even to thank U for

Whatever U gave me ere this!

கணுக்கால் வரை கிடைத்த பேண்ட்டுக்கே நான் நன்றி சொல்லி முடிக்க இயலாதபோது, கடவுளே 'இன்னும் நீ வளர வேண்டும்!' என்று சொல்லி நீர் அள்ளிக் கொடுக்கும் பரிசுகளுக்கு நான் எப்படி நன்றி கூறுவேன்?


2 comments:

  1. மனத்தை நெகிழச்செய்யும் ஒரு பதிவு.இதைப்படித்து முடித்தபோது கன்னத்தில் வழிந்தோடிய நீர்த்திவலைகளை அடக்க இயலவில்லை.சோகமான இளவயது நினைவுகளையும் எத்துணை இயல்பாக, சுகமானதொன்றாக திரும்பிப்பார்க்க முடிகிறது உங்களால்! "கணுக்கால் தெரிய பேன்ட் அணியும் அரசுபள்ளி மாணவர்களைப்பார்க்கும் போதெல்லாம் அவர்கள் வேகமாக வளர்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்"... எத்துணை பாசிட்டிவ்வான எண்ணம்! அந்த இறுதி ஆங்கில வரிகள் ....எல்லோரது வாயிலும் முணுமுணுக்க வேண்டியவை.தங்களது இந்த 'எளிமை' ஒன்றுக்காகவே தாங்கள் இன்னும் வளரவேண்டும்!....வளருவீர்கள்!!

    ReplyDelete
  2. இந்த சிறுவயது அனுபவம் எனக்கும் உண்டு. 25 வருடங்கள் பின்னோக்கி நினைக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்.

    ReplyDelete