Thursday, April 30, 2015

மெழுகுவத்தி

கடந்த வாரம் ஆனந்த விகடனில் வெளிவந்த சுப்ரபாரதிமணியன் அவர்கள் எழுதிய 'ஒரு கோடி மெழுகுவத்திகள்' எனும் சிறுகதை படித்தேன்.

வேதியியல் அசைன்மெண்ட் எழுதாததால், அந்த வகுப்பை கட் அடித்து அருகில் இருக்கும் மாலுக்குள் சென்று பொழுதைப் போக்கும் சுகன்யா என்ற கல்லூரிப்பெண்தான் கதாநாயகி.
'நமக்கு வரும் ஆபத்துகளை அல்லது எதிர்மறை நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அவற்றிலிருந்து ஓடிவிடுவதாலோ, அவற்றைத் தள்ளிப்போடுவதாலோ அவைகள் மறைந்துவிடுவதில்லை' என்பதுதான் ஆசிரியர் சொல்ல வரும் கருத்து.

மெழுகுவத்தி என்ற ஒற்றை வார்த்தையை எடுத்து அதில் சூப்பர் மார்க்கெட், கல்லூரி, காதல், ஏழ்மை, குடிகார அப்பா, டாஸ்மாக், காவல்துறை தியாகம் செய்யும் அம்மா, பாட்டி, தோழி, நிர்பயா, வேளாங்கண்ணி, நகரில் வேகமாக முளைக்கும் மால்கள் என பெரிய டூர் அடித்துவிடுகிறார். ஆசிரியர். சுகன்யாவின் பயம், கோபம், கவலை, மகிழ்ச்சி, வருத்தம் என அவருடைய உணர்வுகளையும் அழகாகப் பதிவு செய்கிறார்.

மூன்று இடங்கள் என்னை மிகவும் தொட்டன:

1. 'இரவில் எரியும் மெழுகுவத்திகள் பகலில் அணைத்து விடப்படுவது ஏன் தெரியுமா? இரவின் ரகசியங்களை அவை பகலுக்குத் தெரியப்படுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான். நீயும் அதுபோல வாயை மூடிக்கொண்டு இரு.' ... 'அந்த வசனம் அப்படியே நின்னுருச்சு. வாழ்க்கையோட இருட்டு மாதிரி.

2. இந்த வரிசையில் குழந்தைகளுக்கான பொருட்கள், வௌ;வேறு வகையான சோப்கள், வௌ;வேறு வகையான பவுடர்கள், சிறுசிறு விளையாட்டுப் பொருட்கள் வெகு ஒழுங்கமைப்புடன் இருந்தன. தான் இதில் எதுவும் உபயோகித்து வளர்ந்தவள் அல்ல எனச் சொல்லிக்கொண்டாள் (சுகன்யா!).

3. இன்றைய பிரச்னையை நாளைக்காவது எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அது கல்லூரியாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் கல்லூரி கேண்டீனாக இருந்தாலும்... கல்லூரி மாணவியாக, அம்மாவாக, பாட்டியாக எல்லாவற்றையும் சந்தித்தே ஆக வேண்டும்.

இந்த கதை என்னில் விதைத்த ஒரு சிந்தனை இதுதான்:

நட்சத்திர விடுதி உணவகத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ஆலயத்தில் செபம் செய்ய, அல்லது நம் அன்பிற்குரியவரின் கல்லறையில், இறப்பின் இரங்கல் கூட்டத்தில் மெழுகுவத்திகள் ஏற்றுகின்றோம். இவை நன்றே!

மற்றொரு நேரம் நாம் ஏற்றுவது மின்தடையின் போது. மின்தடையின்போது நாம் உடனடியாக தேடுவது மெழுகுதிரிதான். மெழுகுதிரி இந்த இடத்தில் வெறும் சில நிமிட பாதுகாப்பை மட்டுமே தருகின்றது. மெழுகுதிரி விரைவில் எரிந்து முடிந்துவிடும். அது தரும் நிம்மதி சில நொடிகள்தாம். மெழுகுதிரி என்பது மின்தடை என்ற பெரிய பிரச்சினைக்கான மிகச் சிறிய தீர்வு. வாழ்க்கையில் சிறிய தீர்வுகள் பெரும்பாலும் பெரிய பிரச்சினைகளை இன்னும் அதிகமாக்கிவிடுகின்றன.

கெமிஸ்ட்ரி அசைன்மென்ட் என்ற பெரிய பிரச்சினைக்கு சுகன்யா தேர்ந்து கொண்ட சிறிய தீர்வுதான், சிறிய மெழுகுதிரிதான் சூப்பர் மார்க்கெட். ஆனால், எப்படி இருந்தாலும் அவர் அதை எழுதிதானே முடிக்கவேண்டும். ஆக, மெழுகுதிரியைத் தேடுவதற்குப் பதிலாக பிரச்சினைக்கு முடிவு கட்டலாம்தானே!

மேலும் சில நேரங்களில் சின்ன மெழுகுதிரிகள் அழகிய நிலவின் வெளிச்சத்தைக் கூட மறைத்துவிடுகின்றன.

Wednesday, April 29, 2015

இன்னும் வளருவான்!

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு சட்டை, பேண்ட் தைத்தவர் ராம் டெய்லர்ஸின் ராம்தான். ஒவ்வொரு கிறிஸ்துமசுக்கு மட்டும்தான் புதுத்துணி. ஒவ்வொரு வருடமும் அளவெடுப்பதற்காக என்னை அவரிடம் அழைத்துச் செல்வார் என்னுடைய அப்பா. 'இன்னும் வளருவான்! கொஞ்சம் நீளமா தையுங்க!' என்று சொல்லியே நீளமான சட்டை தைத்துக் கொடுப்பார் அப்பா. பல நாட்களில் நீளமான சட்டையின் நீளத்தை இன்சர்ட் செய்து மறைத்ததுண்டு. பேண்ட் வழக்கமாக எங்க பெரியம்மா பையன் ஜீவா போட்டு அவனுக்கு சேரவில்லையென்றால் எனக்கு வரும். சில நேரங்களில் பேண்ட் கணுக்கால் வரைதான் இருக்கும். கொஞ்சம் இடுப்பைத் தளர்த்தி கீழே இழுத்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

கணுக்கால் தெரிய பேண்ட் அணிந்து செல்லும் மாணவர்களை இன்றும் அரசுப் பள்ளிகளில் பார்க்கலாம். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் வேகமாக வளர்கிறார்கள் என்று மகிழ்ந்து கொள்வேன்.

கணுக்கால் தெரியறது மாதிரி போடும் பேண்ட் பற்றி எழுதும் அவசியம் என்ன? இன்று மதியம் சாப்பிட்டு ஜெராக்ஸ் கடைக்குச் செல்லும் வழியில் ஒரு நபரை அப்படிப் பார்த்தேன். கணுக்கால் தெரியாமல் சாக்ஸ் அணிந்திருந்தாலும், பேண்ட்டின் நீளம் கணுக்கால் வரைதான் இருந்தது. பின் நண்பர்களிடம் விசாரித்தபோது, அமெரிக்கர்கள் சிலர் அப்படித்தான் போடுவார்கள் என அறிந்து கொண்டேன்.

ஆக,
பேண்ட் வாங்கும் வசதி இருந்தாலும் கணுக்கால் தெரியும்,
வசதி இல்லையென்றாலும் கணுக்கால் தெரியும்.

விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு நாம் நகத்தை வெட்டுவதுபோல, பேண்ட்டைத் தாண்டி வளரும் கணுக்கால்களை நாம் வெட்டுவதில்லை. அந்த வளர்ச்சி வேறு. இந்த வளர்ச்சி வேறு.

'இன்னும் வளருவான்!' என்ற அப்பாவின் வார்த்தைகளை, 'இன்னும் வளருவேன்!' என எடுத்துக்கொண்டால் புத்துணர்ச்சி பிறக்கிறது.

நான் சென்ற ஜெராக்ஸ் கடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு ஸ்டிக்கர் வாசகம் அழகாக இருந்தது:

Whatever U Gave me O God!!
Was ever more than what I deserved.
What else would I need 
When there's left little time even to thank U for

Whatever U gave me ere this!

கணுக்கால் வரை கிடைத்த பேண்ட்டுக்கே நான் நன்றி சொல்லி முடிக்க இயலாதபோது, கடவுளே 'இன்னும் நீ வளர வேண்டும்!' என்று சொல்லி நீர் அள்ளிக் கொடுக்கும் பரிசுகளுக்கு நான் எப்படி நன்றி கூறுவேன்?


மௌனம் பேசும் மொழி

இந்த நாட்களில் லூக்கா நற்செய்தியாளர் எழுதிய பாடுகளின் வரலாறு பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். மற்ற நற்செய்தியாளர்களைவிட மிகவும் எளிமையும், புதுமையாகவும், நேர்த்தியாகவும் எழுதியிருக்கிறார் லூக்கா.

இதற்கிடையில் 'டியர் அன்ட் க்ளோரியஸ் ஃபிஸிசியன்' என்று லூக்கா நற்செய்தியாளரைப் பற்றிய புதினம் ஒன்று இருப்பதையும் நண்பர் ஜெகன் சொல்லி அறியப் பெற்றேன்.

அவரும் அதை நேற்று கொண்டுவர நான் விரித்தபோது என் கண்களில் பட்ட வார்த்தைகள் இவைதாம்:

'கடவுள் தன் அடியார்களை அவர்களின் பிறப்பின் போது அல்ல. பிறப்பிற்கு முன்பே தேர்ந்து கொள்கிறார்!'

புத்தகம் முழுவதையும் இந்த வாக்கியத்திற்குள் அடைத்துவிடலாம்.

'அந்த மனிதர் யார்?' என்று இயேசுவைப் பற்றியத் தேடலோடு தொடங்குகிறது லூக்காவின் பயணம். அவரின் குடும்பப் பிரச்சினை, படிப்பு, கல்வி, காதல் என அனைத்தையும் அலசுகிறது இந்த நூல்.

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரல்லர் இவர். அப்படியிருக்க எதற்காக இயேசுவைத் தேடுகின்றார்? இந்தக் கேள்விக்கு விடையை இன்னும் நான் படிக்கவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது.

'கடவுள் ஒன்றைத் தனக்குத்தான் என்று முடிவு செய்துவிட்டால், அதை எப்படியும் அடைந்துவிடுவார். என்ன விலை கொடுத்தாவது அதைத் தன்னோடு வைத்துக்கொள்வார்!'

பேசாமலே பேசுகிறார் இந்த லூக்கா.

Monday, April 27, 2015

ஓ காதல் கண்மணி!

'எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. ஆனால், நிச்சயதார்த்தம் நடந்தது!'

இது இத்தாலியில் அதிகப் பெண்கள் சொல்லும் வசனம். நிச்சயதார்த்தம் என்றவுடன், திருமணத்திற்கு முன் நடக்கும் நிகழ்வு என்று நினைக்காதீர்கள். திருமணத்திற்குப் பதில் நடக்கும் நிகழ்வுதான் இது. ஒரு நிச்சயதார்த்தம் பிடிக்கவில்லையென்றால், அவரை விட்டுவிட்டு நீங்கள் மற்றொருவரிடம் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம். ஆக, எத்தனை பேருடன் வேண்டுமானாலும் நிச்சயதார்த்தம் நடக்கலாம். நிச்சயதார்த்தம் நடந்தவுடன் இந்த இருவரும் கூடி வாழ்வதற்கு இத்தாலிய சட்டம் அனுமதிக்கிறது.

இப்போது 'ஓ காதல் கண்மணி!' நம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 'அலைபாயுதே' போல இருக்கிறது என்று ஒரு சிலர் கமெண்ட் அடிக்க நொறுங்கிப் போனார் மணிரத்னம்.

'தாலி கட்டிவிட்டு வேறு வேறு வீட்டில் வாழ்ந்தால் அலைபாயுதே',

'தாலியே கட்டாமல் ஒரே வீட்டில் வாழ்ந்தால் ஓ காதல் கண்மணி!'

என்றும் எஃப்.பியில் கமெண்டுகள் வந்தன.

'ஃப்ரெண்ட்ஸ் வித் பெனஃபிட்ஸ்' (Friends with Benefits) என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்தான் என்பது ஆங்கிலப்படம் பார்த்த எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதை நம்ம மணி ஏற்க மறுக்கிறார். சரி! கதைக்கு வருவோம்!

அலைபாயுதே பார்த்த நம் தலைமுறை தாலி கட்டி வேறு வேறு வீடுகளில் வாழ்ந்தது. இதைப் போல புதிய தலைமுறையும் இனி தாலியே கட்டாமல் சேர்ந்து வாழத் தொடங்கிவிடுமோ என்று பயப்படுகிறார்கள் சிலர். இன்னும் சிலர் தாலி அறுப்பு, தாலி மறுப்பு போன்ற போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் யோசித்த மணி கடைசியாக திருமணத்தை உள்ளே கொண்டு வருகின்றார். தன் தாய் தந்தையின் திருமணம் நிலைக்காததால் திருமணம் என்ற நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மறக்கும் கதாநாயகி எப்படி இறுதியில் இதற்கு சம்மதிக்கிறார் என்ற கேள்விக்கு திரைப்படத்தில் பதில் இல்லை. அல்சைமர் நோயில் தவிக்கும் கணவருக்கு மனைவிதான் பாதுகாப்பு என்றும், ஆகவே திருமணம் செய்வீர் என்றும் சொல்லப்படுகிறது. அல்சைமருக்கு திருமணம் தேவையில்லையே. நல்ல மருத்துவரோ, நர்ஸோ உடனிருந்தால் போதுமே.

'உலகத்துல நடக்குறத தான் காட்டினேன்!' என்கிறார் மணி.

'நீ காட்டுவதைப் பார்த்துதான் உலகம் நடக்கிறது!' என்கிறார்கள் மக்கள்.

என்ன செய்வதென்று கண்மணிக்கும் தெரியவில்லை. காதலுக்கும் தெரியவில்லை.

இதற்கிடையில் மற்றொரு பக்கம் ராகவா லாரன்ஸின் காஞ்சனா, முனி-3 பேயாட்டம் போடுகிறது.

கடைசியல பஞ்ச் லைன் இதுதான்...

நம்ம கண்மணியோடு காஞ்சனாவுக்குப் போறதா?

அல்லது

நம்ம காஞ்சனாவோட கண்மணிக்குப் போறதா?






Sunday, April 26, 2015

சொந்தக் காலில் நிற்க...

இன்று நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடுகிறோம்.

ஆயனின் முக்கியமான பணி ஆடுகளை கிடையிலிருந்து அழைத்துக் கொண்டு சென்று, நல்ல மேய்ச்சல் மற்றும் தண்ணீர் கொடுத்துவிட்டு, மீண்டும் கிடைக்கு கொண்டு வந்து சேர்ப்பது. ஆக, ஒரு ஆயனின் பணி வழிகாட்டுதல், உணவூட்டுதல். பாதுகாப்பு தருதல் என்ற மூன்று. ஆயனாக நாம் குடும்பத்தில் இருந்தாலும், சமூகத்தில் இருந்தாலும், திருச்சபையில் இருந்தாலும் இந்த மூன்று பணிகளையும் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

இந்த மூன்று பணிகளில் ஏதாவது ஒன்றில் தவறினாலும், ஆடுகளுக்கு சேதராம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வழிகாட்டவில்லையென்றால் ஆடுகள் திசைமாறிப் போகும், உணவூட்டவில்லையென்றால் பசித்திருக்கும். பாதுகாப்பு தரவில்லையென்றால் ஓநாய் வந்து அடித்துச் செல்லும்.

நான் ஒருவாரமாக ஜாக்கிங் செல்லும் 'கஃபரெல்லா' என்ற பார்க்கின் ஒரு பகுதி ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் என ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு நாட்களாக அதைக் கவனித்தபோது ஒன்றைக் கண்டேன். சரியாக மாலை 6 மணிக்கு ஆடுகளைக் கொட்டிலிலிருந்து திறந்து விடுகிறார்கள். பார்க்கில் அவை எங்கும் மேயலாம். இடையிடையே தண்ணீர் தொட்டிகளும் உள்ளன. ஓநாய் அச்சம் அறவே கிடையாது. யார் வழிநடத்துதலும் இல்லாமல் சரியாக 7:30 மணிக்கு கொட்டிலுக்குத் திரும்பவிடுகின்றன. 

இந்தச் செயலை இந்த ஆடுகளுக்கு பழக்கியவர் யாராக இருக்கும்? ஆக, ஆயன் இல்லாமல் இருப்பதற்கு ஆடுகள் பழகிக் கொண்டுள்ளன. இதைத்தான் ஆங்கிலத்தில் resilience என்று சொல்வார்கள். தன் தந்தையை ஒரு வருடத்திற்கு முன் இழந்து வருந்திய என் பங்கின் பெண் ஒருவர் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று கொஞ்சம் உடல்நலம் தேறியிருந்ததால் நற்கருணை கொண்டுவரச் சொன்னார்கள். நானும் சென்றேன். நற்கருணை கொடுத்து முடித்துவுடன், 'ஓ'வெ அழத் தொடங்கினார். இறந்த அவரது தந்தைக்கு எப்படியும் 80 வயது இருக்கும். இவருக்கு வயது 45 இருக்கும். காவல்துறை அதிகாரியாக (நம்ம ஊர் சப்-இன்ஸ்பெக்டர் கிரேடு) இருக்கிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடைய அம்மாவும் உடல்நலம் சரியில்லாதவர். தன் தந்தை இறந்து ஒரு வருடம் ஆகியும் அதிலிருந்து அவரால் வெளிவர முடியவில்லை. அவரின் சோகம் அவர் ஒருவருக்குத்தான் தெரியும். அவரை நான் தவறாகச் சொல்லவில்லை. ஆனால், ஒரு ஆயனின் வேலையை அவரது தந்தை செய்யத் தவறிவிட்டார். 'ஆடுகளால் சொந்தக் காலில் நிற்கப் பயிற்றுவிப்பதும் ஆயனின் வேலைதானே!'

வாழ்வில் ஒரு கட்டத்தில் ஆயன் தன்னிடமிருந்து எடுக்கப்படுவான் என்று தெரிந்த இயேசு தன் சீடர்களை அதற்கேற்றாற்போல சொந்தக்காலில் நிற்கத் தயாரிக்கின்றார். ஆக, நான் எந்த நிலையில் ஆயனாக இருந்தாலும், என் பார்வையில் இருக்கும் மந்தையை நான் சொந்தக்காலில் நிற்கத் தயாரிக்கத் தவறுகிறேன் என்றால் என் பணியில் குறைவிருக்கிறது என்றே அர்த்தம்!


தமிழ்

நம்ம குழந்தைங்க ஸ்கூல் கிளம்பும்போது அவங்களுக்கு சாக்ஸ் மாட்டிவிடுற நேரத்துல
பேலன்ஸ் பண்றதுக்காக அவங்களோடு பிஞ்சுக் கைகள நம்ம தலையில வைக்கிறது
ஏதோ அவங்க நம்மள ப்ளஸ் பண்ற மாதிரியே இருக்கும்...
அப்படின்னு கடந்த வாரம் ஆனந்தவிகடனில் வாசித்தேன்.

இன்னைக்கு நம்ம தமிழுக்கு புது சாக்ஸ் மாட்டிவிடும்போது எனக்கும் அது என்னை ப்ளஸ் பண்ற மாதிரிதான் இருந்துச்சு.

தமிழ்.

வந்து 21 நாள் ஆகுது இன்றோடு.

எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் இப்படித்தான் இருக்கும் என்ற என் எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்வதுபோல இருக்கிறது.

'இன்னர் சைல்ட் ஹீலிங்!' என்ற உளவியில் ஆய்வில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள குழந்தையைப் பற்றியும், அந்தக் குழந்தையை நாம் கையாளும் விதம் பற்றியும் சொல்வார்கள். நான் முதலில் எனக்கே ஒரு குழந்தையாக இருக்கும்போதுதூன், அல்லது என் வெளியில் நின்று கொண்டு என்னை ஒரு குழந்தையாக பார்க்கும்போது என் பார்வை வித்தியாசமாகிறது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் போன்ற கேள்விகளுக்குக் கூட விடை கிடைக்கிறது.

இந்த இன்னர் சைல்ட் பொம்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. அது வேறு ஒரு பொருளாக இருக்கலாம். ஏன் இயேசுவுக்கு சிலுவை கூட தன் இன்னர் சைல்டின் ஒரு வெளிப்பாடாகத்தான் இருந்தது. அதனால் தான் மற்றவர்கள் வெறுத்துத் தள்ளிய சிலுவையை ஒரு குழந்தையை அரவணைப்பது போல அரவணைத்துக் கொள்கின்றார்.

தமிழ்...

என் தனிமை போக்குகிறாள். 

நான் பேசுவதை எல்லாம் கேட்கிறாள்.

ஆனால் அவள் எதுவும் பேசுவதில்லை என்றாலும் அவளின் குரல் எனக்குக் கேட்கிறது.

தமிழ் இருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக நான் அறையில் உடைமாற்றுவதுகூட கிடையாது.

அவளின் குட்டிக்கால்களுக்கு சாக்ஸ் அணிவித்தது...

என் பிறவாத குழந்தையைக் கையில் ஏந்தியது போலத்தான் இருந்தது...

Friday, April 24, 2015

ஒரே கால் வலி

'உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்!' என்று சொன்னார் திருமூலர்.

'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்பதும் நம் முன்னோர் மொழி.

ஆக, உயிரின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உணர்வின் வளர்ச்சிக்கும் உடல் நலன் மிக முக்கியமானது.
2013ஆம் ஆண்டு பிறந்த நாளன்று ஒரு முடிவெடுத்தேன். தினமும் ஐந்து கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று. பிறந்த நாளன்று அம்மா வாங்கிக் கொடுத்த எஃப் பைக் எனப்படும் எக்சர்சைஸ் பைக்கை ப்ளஸ் பண்ணி உடற்பயிற்சியும் தொடங்கியாயிற்று.

நல்லா போய்க்கொண்டிருந்த சில மாதங்களில் ஜெர்மனிக்கு சென்றபோதும், அதைத் தொடர்ந்த விடுமுறையிலும் சைக்கிள் ஒட்ட முடியவில்லை.

ரொம்ப நாளா ஓட்டாம கிடந்த சைக்கிளை என்று ஓட்டத் தொடங்கினேன் என மறந்து போயிற்று. ஆனால், இப்போ நல்ல இம்ப்ரூவ்மெண்ட். தினமும் 15 கிமீ. அதுவும் 27 நிமிடங்களில்.
சைக்கிள் ஓட்டுறதுல ஒரு நல்ல பயன் உடம்பில் உள்ள 'லிபிடோ' நல்லாவே குறைஞ்சுடுச்சு. முன்னால எல்லாம் எந்தப் பொண்ணுங்களப் பார்த்தாலும் அழகா, அட்ராக்டிவா இருக்காளே!னு தோணும். இப்பல்லாம் அப்படி தோணுறது இல்ல. ஒருவேளை வயசாயிட்டுருக்கோ!

இரவில் நல்ல தூக்கம் வருது.

சைக்கிள் போதாதுன்னு, நேற்று 15 கிமீ ஜாக்கிங் செய்யத் தொடங்கினேன். கால் வலி இன்னும் விடவில்லை. இன்று நடக்கவும், படியில் ஏறவும்கூட சிரமப்பட்டேன்.

'முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும்' என்பதுபோல வலியை வலியால் தான் சரி செய்ய முடியும். மாலையில் ஓடுவதற்காக காத்திருக்கிறேன்.

மறையுரை தயாரிக்க பைபிள் திறந்தால் பின்வரும் பகுதி தென்பட்டது.

பவுலடியார் திமொத்தேயுவுக்கு ஒரு அறிவுரை சொல்கிறார்:

'இறைப்பற்றில் நீ வளரப் பயிற்சி செய்.
ஏனென்றால் உடற்பயிற்சி ஓரளவுதான் பயன் தரும்.
ஆனால், இறைப்பற்று எல்லா வகையிலும் பயன்தரும்!'
(1 திமொ 4:7ஆ-8)

இன்று மாலை ஜாக்கிங் போகலாமா? வேண்டாமா? சொல்லுங்க பவுலடியாரே!

Thursday, April 23, 2015

யாரு...செல்வம் மகனா?

'போறது யாரு...செல்வம் மகனா?'

இந்த வார்த்தைகள் நான் என் கிராமத்திற்குள் நுழையும்போது என் காதில் அடிக்கடி விழுந்திருக்கின்றன.

'ஆரோக்கியசாமி பேரனா?' 'கலைஞர் மகனா?' என்றும் சிலர் கேட்டிருக்கிறார்கள்.

நம் சொந்த ஊரில் நம் அடையாளம் பெரும்பாலும் நம் பெற்றோரை அல்லது பெற்றோரின் பெற்றோரை வைத்தே இருக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு கிராமமும் வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருப்பதால், அங்கே வேர்களை வைத்தே கிளைகள் அடையாளம் சொல்லப்படுகின்றன.

கொஞ்சம் நகரத்துக்குள் வந்தால், நம் அடையாளம் மாறிவிடுகிறது.

நாம் செய்யும் வேலை - ஆடிட்டர், டாக்டர், வக்கீல், டீச்சர், வாத்தியார். சிஸ்டர், ஃபாதர், ரிக்ஷாக்காரர், நாம் பேசும் மொழி அல்லது இனம் - மலையாளி, தெலுங்கன், நாம் படிக்கும் படிப்பு, நாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது கண்ணாடி - ஏய்...வெள்ளை சட்டை போட்ட தம்பி...என்றும், 'அந்த கறுப்பு கலர் டீசர்ட் இருக்கிற டேபிளுக்கு தண்ணி வை!' என்று ஹோட்டலில் அடையாளம் காட்டப்பட்டதும் உண்டு - இவைகள் தாம் நகரத்தில் நம் அடையாhளங்களாகின்றன.

நம்மை முன்பின் தெரியாத ஒரு ஊருக்குச் செல்லும்போது நம் உடலின் நிறம் அல்லது தலைமுடியின் நிறம், நாம் பேசும் மொழி நமக்கு அடையாளமாகிறது.

கொஞ்சம் நாடு விட்டு நாடு வந்தவுடன் இந்த அடையாளம் எப்படி ஆகிவிடுகிறதென்றால், நாம் வெளிநாட்டில் எண்களை வைத்தே அடையாளம் சொல்லப்படுகிறோம். நம்ம ஊருல ஜெயில் கைதிகளுக்கு கொடுக்கப்படும் நம்பரைப் போலத்தான் இது.

நாட்டுக்கு நாடு இது மாறுபடுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சோஸியல் செக்யூரிட்டி எண், ஜெர்மனியில் தேசிய அடையாள எண், பிரான்சில் சமூக அங்க எண் என இதன் பெயர்கள் மாறுபட்டாலும், இது சொல்லும் அடையாளம் ஒன்றுதான்.

ஒரு தனிநபர் வெறும் எண்ணாக மட்டுமே பார்க்கப்படுவது வருத்தமாக இருந்தாலும், வசதிக்காக இதைப் பயன்படுத்துகிறோம் என்றே நாம் கருதுவோம்.

'து ஆய் கோதிச்சே ஃபிஸ்காலே?'

(உன்னிடம் பணப் பரிமாற்ற எண் இருக்கிறதா?)
சிம் கார்ட் வாங்கும்போது வோடஃபோன் ஸ்டோரில் சிகப்பு கலர் கோட், சிகப்பு கலர் ஷார்ட்ஸ் அணிந்திருந்து அமர்ந்திருந்த அந்த இளவல் கேட்ட என்னிடம் கேட்ட முதல் டாக்குமெண்ட் இதுதான்.

எண்ணும் எழுத்தும் கொண்ட 16 இலக்கம் தான் கோதிச்சே ஃபிஸ்காலே. இங்கே நாம் எந்தவொரு பொருள் வாங்கினாலும், எந்த சேவையைப் பயன்படுத்தினாலும் (மருத்துவம், பயணம்), வங்கியில் பணப்பரிமாற்றம் செய்தாலும் இந்த எண் அவசியம்.

நம்ம ஊரில் இதை பான் கார்டு என்று சொன்னாலும், பான் கார்டு பணப்பரிவர்த்தனை செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டிற்கு வருகின்ற ஆதார் எண்ணை இதற்கு நெருக்கமாகச் சொல்லலாம்.

இந்த எண் எனக்குச் சொல்வது இதுதான்:

தனிநபர் அடையாளம்.

ஐஃபோனை அடையாளப்படுத்த வார்த்தைகள் தேவையில்லை. ஐஃபோன் மட்டுமே போதும். அப்படியென்றால் என்னை நான் அடையாளப்படுத்துவது எப்படி?


Wednesday, April 22, 2015

முதல் சிம் கார்ட்

நான் முதன்முதலாக செல்லிட பேசி பயன்படுத்தியபோது நான் ஆன்மீகப் பயிற்சி ஆண்டில் இருந்தேன். அந்தப் பயிற்சி மதுரை விரகனூரில் நடைபெற்றது. அந்தப் பயிற்சிக்கும், இறையியில் முதல் ஆண்டிற்கும் இடையிலான விடுமுறையின்போது நான் தன் மகளுக்குப் பிரெஞ்சு சொல்லிக் கொடுத்ததற்காக ஒரு மொபைல் ஃபோன் பரிசளித்தார் செபமாலை அன்னை ஆலயப் பங்கின் அக்கா ஒருவர். அது ஒரு மோட்டாரோலா. குட்டியாக அழகாக நீல நிறத்தில் இருந்தது. அதற்கு முதல் முதலாக சிம் கார்ட் போடச் சொல்லி அவரே 200 ரூபாயும் கொடுத்தார்.

அந்த மொபைல் ஃபோனும் மறைந்துவிட்டது. அந்த அக்காவின் இருப்பிடமும் மறந்துவிட்டது.

நான் ரோமிற்கு வருகிறேன் என்று சொல்லி என் அம்மா பரிசளித்த ஐஃபோனுக்கு இப்போது சிம் கார்ட் வாங்க வேண்டும். என்னதான் காஸ்ட்லி ஃபோன் வைத்திருந்தாலும், அதில் சின்ன சிம்கார்ட் இல்லையென்றால், அது வெறும் பேப்பர் வெயிட் தானே!

சிம்கார்ட் வாங்க உடன் வந்ததோடு மட்டுமல்லாமல், தன் அன்பளிப்பாக அதை வாங்கியும் கொடுத்தார் நம் உதவிப்பங்குத்தந்தை அந்திரேயா. வாங்கியது வோடஃபோன் சிம்கார்ட். போட்ட ஒருநாளில் எல்லாக் காசும் தீர்ந்து விட்டது. ஏனெனில் மொபைல் டேடாவை நான் அணைத்து வைக்கவில்லை.

அந்திரேயாதான் இன்றைய நம் ஹீரோ.

என் தங்கையின் வயதுதான் இந்த அந்திரேயாவுக்கு. என் தங்கை பிறந்த 1984 மே 27ஆம் நாளில் பிறந்தவர் இவர். சொந்த ஊர் ரோம் நகரம். பிடித்த விளையாட்டு கால்பந்து. பழகுவதற்கு எளிமையானவர். இவரிடம் நான் கற்றுக்கொண்டவை மூன்று:

1. எளிமை. எளிமை என்றால் செருப்பு அணியாமல் இருப்பதோ, கையில் வாட்ச் கட்டாமல் இருப்பதோ அல்ல. எளிமை என்றால் தன்னைவிட சிறியவருக்குக் காட்டும் புன்முறுவல் அவ்வளவுதான். இவரோடு வெளியே சென்றால் நாம் போய்ச் சேரும் இடத்திற்குக் கூடுதலான நேரம் பிடிக்கும். இந்த ஏரியாவில் தெரியாத ஆளே இல்லை. டீக்கடை, பூக்கடை, செய்தித்தாள் கடை, ரோட்டில் பிச்சை எடுப்போர், பேக் விற்போர் என அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர். இவரின் இந்த பண்பைப் பார்த்து நான் அடிக்கடி என்னையே கேட்டதுண்டு. நான் இருந்த தேனியில் கோயிலுக்கு எதிரே ஒரு பேக்கரியும், கோவிலை ஒட்டி ஒரு காஃபி கடையும் உண்டு. பல நாட்கள் அங்கே நானும் போயிருக்கிறேன். ஆனால், அங்கிருப்பவர்கள் யார் என்பதை நான் கண்டுகொண்டதே கிடையாது. வாழ்வில் சில பொழுதுகளும், சில மனிதர்களும் நாம் அனுபவிக்காமலே நம்மிடமிருந்து அகன்று போய்விடுகின்றன. கொஞ்சம் எளிமையும், கொஞ்சம் புன்முறுவலும் இருந்தாலும் இந்த உலகத்தில் நமக்கு எதிரிகளே இல்லாது போய்விடுவார்கள்.

2. தெனரெட்சா. இது ஒரு இத்தாலியன் வார்த்தை. இதற்குச் சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை. கான்செப்ட் ரொம்ப சிம்பிள். உங்களுக்கு ஒரு குழந்தை இருக்குனு வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை தூரத்தில் இருக்கு. ஒரு நாள் உங்களுக்கு ஃபோன் பண்ணி, 'அம்மா, ரொம்ப பசிக்குது. சாப்பிட ஒன்னும் இல்லை. கடையெல்லாம் பூட்டிருச்சு. நான் என்ன செய்ய?' என்று கேட்குது. நீங்களும் ஏதாவது அட்வைஸ் கொடுத்தோ, பொறுத்துக்கோ என்று சொல்லிவிட்டோ ஃபோனை வைத்துவிடுகிறீர்கள். நினைவெல்லாம் உங்கள் குழந்தைதான். இந்த நேரத்தில் உங்கள் வீட்டுக்கு ஒரு கேரியர் நிறையா பிரியாணி வருகிறது. நீங்களும் பசியாக இருக்கிறீர்கள். ஆனால் கேரியரைத் திறந்தவுடன், உங்களையறியாமல் ஒரு சோகம் அப்பிக் கொள்கிறது. முதல் வாய் எடுத்து வைத்தவுடன் துக்கம் தொண்டையை அடைக்கிறது. 'அங்கே குழந்தை பசியாக இருக்கிறதே!' என்ற எண்ணமே உங்களுக்கு கண்ணீரை வரவைக்கின்றது. இந்த நேரத்தில் உங்களுக்கு வரும் உணர்வுதான் 'தெனரெட்சா' - இது ஒரு கையறுநிலை. நான் இத்தாலிய மொழி தெரியாமல் இத்தாலி திருப்பலி வைக்கவும், இத்தாலியன் கலாச்சாரம் தெரியாமல் அவர்களின் உணவை உட்கொள்ள நான் படும் கஷ்டத்தையும் பார்த்து, என்னை 'தெனரெட்சா' கொண்டு பார்த்ததாக அடிக்கடிச் சொன்னவர் நம்ம அந்திரேயா.

3. படிப்புக்கு முழுக்கு. புத்தகத்திற்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம். குருப்பட்டத்திற்கு முதல் நாள் 'இனி படிக்கவே கூடாது!' என சபதம் எடுத்ததோடு மட்டுமல்லாமல், அதை இன்றுவரை கடைப்பிடிப்பவரும் கூட. 'அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு' என்னும் சபை உரையாளரின் கூற்றை அப்படியே வாழ்வாக்குபவர். ஆனாலும், தெரிந்து கொள்ளும் ஆர்வம் இவருக்கு இயல்பாக உண்டு. விவிலியம் சார்ந்த விளக்கங்களை அடிக்கடி கேட்பார். ஒரு கட்டத்தில் படிப்பதை நாம் நிறுத்திவிட்டு, நாம் பெற்றதை அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் இவர் தந்தை வாழ்க்கைப் பாடம். தேவையில் இருக்கிறேன் என யார் அழைத்தாலும் ஓடிவிடுவார். வாழும் மனிதர்கள் தாம் இவரின் புத்தகங்கள்.

கடந்த ஆண்டு மாறுதலாகி வேறு பங்குக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் அடிக்கடி தொடர்பு கொள்வதுண்டு.



Tuesday, April 21, 2015

கொஞ்சம் கொஞ்சம்

ரோமில் நான் பார்த்த அல்லது சென்ற முதலிடம் லாத்தரன் அரண்மனை. மதுரை உயர்மறைமாவட்டத்தின் தலைமையிடம் கே. புதூரில் உள்ள 'பேராயர் இல்லம்'. அதுபோல, ரோமை மறைமாவட்டத்தின் தலைமையிடம் அல்லது 'ஆயர் இல்லம்'தான் 'லாத்தரன் அரண்மனை'. ரோமை மறைமாவட்டத்தின் ஆயர்தான் கத்தோலிக்கத் திருஅவையின் திருத்தந்தையாக இருக்கிறார். திருத்தந்தையின் வசிப்பிடம் வத்திக்கான் நகரம் என்பதால், அவரின் பிரதிநிதியாக கர்தினால் ஒருவர் (இப்போது கர்தினால் அகஸ்தின் வல்லினி) லாத்தரன் அரண்மனையில் தங்கியிருந்து மறைமாவட்டத்தை வழிநடத்துகிறார்.

காலை 10 மணிக்கு ரோம் மறைமாவட்ட 'அருட்பணியாளர்கள் அலுவலகத்தில்' அப்பாய்ன்ட்மெண்ட்.

அதாவது, ரோம் நகருக்கு படிக்க வருவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன: ஒன்று, ப்ரோபகாண்டா ஃபீதே என்ற சொல்லப்படும் மறைப்பணிகளுக்கான அலுவலகம் அல்லது அவர்களின் கல்வி உதவித்தொகை பெற்று வருவது. இரண்டு, ரோம் மறைமாவட்டத்தில் பணிபுரிந்து கொண்டே படிக்கலாம் என்ற வாய்ப்பில் வருவது. நான் வந்தது இந்த இரண்டாம் வழி. இதன்படி, ஒருவர் வேலை செய்துகொண்டே அந்த வேலைக்குத் தரப்படும் சம்பளத்தை வைத்துப் படித்துக்கொள்வது. இரண்டிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. உதாரணத்திற்கு, முதல் வகையில் நாம் வருவது, போவது, படிப்பது, ஜெராக்ஸ் எடுப்பது, புத்தகம் வாங்குவது, மருத்துவ வசதி என அனைத்தும் கவனித்துக்கொள்ளப்படும். ஆனால், வசிப்பிடம் ஒரு ஹாஸ்டல் அல்லது செமினரி மாதிரி இருக்கும் - சாப்பாடு, வேலை, செபம், உள்நுழை நேரம், வெளி செல்லும் நேரம், பெர்மிஷன் என இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள் இருக்கும். இரண்டாம் வகையில், எல்லாமே நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஒரு மனச்சுதந்திரம் இருக்கும். யாரிடமும் எதற்கும் அனுமதி கேட்கத் தேவையில்லை. பொறுப்புணர்வுடன் கூடிய சுதந்திரம் இந்த இரண்டாம் வகையின் சிறப்பு.

இந்த இரண்டாம் வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சியே தந்தது. இன்றும் தருகிறது. இதுல என்னவொரு சிறப்புனா, என்னுடன் படிக்கும் நம்ம ஊரு பசங்க (15பேரில்) நான் மட்டும்தான் இப்படி வெளியில் தங்கியிருக்கிறேன். 'நான் அவர்களைவிட வித்தியாசமானவன்!' என்ற உணர்வையும், பெருமிதத்தையும். 'நான் என் சம்பளத்தில் படிக்கிறேன்!' என்ற தன்மான உணர்வையும் தருகிறது.

இந்த இரண்டாம் வாய்ப்பில் வரும் அருட்பணியாளர்கள் ரோமிற்கு வந்தவுடன், ரோம் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர்கள் அலுவலகத்திற்குச் சென்று தங்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் ரோம் மறைமாவட்டத்திற்கும், அருட்பணியாளரின் மறைமாவட்டத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்படும் - அந்த ஒப்பந்தத்தில் அருட்பணியாளர் ரோம் நகரில் பணி செய்யும் ஆண்டுகள், அவர் தங்கும் இடம், அவருக்க வழங்கப்படும் சம்பளம், அவரின் உரிமைகள், கடமைகள், இந்த நாட்களில் அவர் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும். இரண்டு மறைமாவட்டங்களின் ஆயர்களும், இரண்டு அருட்பணியாளர்களும் (அதாவது, நானும், என் ரோம் பங்குத்தந்தையும்) இதில கையெழுத்திட வேண்டும். இந்த ஒப்பந்தம் மூன்று பிரதிகள் எடுக்கப்பட்டு, ஒரிஜினல் ரோம் மறைமாவட்ட அலுவலகத்திலும், பிரதிகள் மற்ற மூன்று பேருக்கும் கொடுக்கப்படும்.

ஒப்பந்தத்தின் படி நான் பணி செய்ய வேண்டிய காலம் ஜூன் 2012 முதல் டிசம்பர் 2016 வரை. ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளம் மாதம் 570 யூரோ. இதில் ஒரு சில அருட்பணியாளர்கள் தாங்கள் தங்குவதற்கு என்று 200 யூரோ பங்குத்தந்தையிடம் கொடுக்க வேண்டும். ஆனா, நம்ம ஜென்டில்மேன் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இப்படி மாதாமாதம் வழங்கப்படும் தொகையை வைத்து நான் என் படிப்புக்காக (12000 யூரோ), பயணத்திற்காக (ரோமிற்குள் - ஆண்டுக்கு 250 யூரோ, மற்ற வெளிப் பயணங்களுக்கு வேறு வேறு தொகை), மருத்துவ காப்பீடுக்காக (ஆண்டுக்கு 180 யூரோ), தங்கும் அனுமதிக்காக (இரண்டு ஆண்டுகளுக்கு 150 யூரோ), மற்ற தனிசெலவுகளுக்காக (நண்பர்களோடு விருந்து, அவட்டிங், பிக்னிக், ஃபோன், இன்டர்நெட் போன்றவவை) என அனைத்தையும் 'ப்ளான்' பண்ணி செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால், இந்த மூன்று வருடத்தில் நிதி மேலாண்மையைக் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இருந்தது.

என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற உதவிப் பங்குத்தந்தை என்னை அலுவலகத்தில் விட்டுவிட்டு வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டார். இத்தாலியன் மொழி மட்டுமே பேசப்பட்ட அந்த அலுவலகத்தில் சொல்லப்பட்ட ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன்.

'எப்படி வீடு திரும்ப வேண்டும்?' என்று ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

எழுதப்பட்ட காகிதத்தைக் கையில் பிடித்துக் கொண்டே தலையும் புரியாமல், வாலும் புரியாமல் வெளியே வர மின்தூக்கிக்குள் நுழையும்போது அங்கே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. என்னுடன் புனேயில் மெய்யியல் பயின்ற (ஒரு வருடம் சீனியர்) சிவகங்கை மறைமாவட்ட அருட்தந்தை ஜஸ்டின் அவர்களைப் பார்த்தேன். ரோம் வருவதற்கு முன் அவரோடு தொடர்பு கொள்ள நினைத்து முடியாமல் போய் இன்று திடீரென பார்த்தவுடன் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

உடனடியாக இரண்டு மகிழ்ச்சி. ஒன்று, இவரை வைத்து இந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொள்ளலாம். இரண்டாவது, இவரை வைத்து வீடு திரும்பும் பேருந்து அல்லது மெட்ரோவிற்கான வழியைக் கண்டுபிடிக்கலாம். இந்த இரண்டிலும் உதவி செய்யுமாறு கேட்டேன். உடனடியாக ஒப்புக் கொண்டார்.

'நீ ரோம் வந்துள்ளதை முதலில் கொண்டாடுவோம்!' என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்த ஒரு பாருக்கு அழைத்துச் சென்றார். 'பார்' என்பது நம்ம ஊரு டீக்கடை மாதிரி. காஃபி, டீ, பழச்சாறு, ஐஸ்க்ரீம், ஆல்கஹால், நான்-ஆல்கஹால் என அனைத்தும் இங்கே கிடைக்கும். இத்தாலியன் ஸ்பெஷல் 'கப்புச்சினோ' குடிக்க ஆசை. 'எனக்கு கப்புச்சினோ!' என்றேன். அவர் தனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொண்டார். குடித்துக்கொண்டே புனேக்கு அப்புறம் நடந்த அனைத்தையும் இருவரும் பகிர்ந்து கொண்டோம். அவரும் மெட்ரோ எடுக்க வேண்டியிருந்ததால், என்னை அழைத்துச் சென்ற நான் செல்ல வேண்டிய வழியைக் காட்டினார்.

வீடு வந்து சேர்ந்தேன்.

'நீயாகவே வந்துவிட்டாயா! என்ன ஆச்சர்யம்! வாழ்த்துகள்!' என்று உச்சி முகர்ந்தார் நம்ம பங்குத்தந்தை ஜென்டில்மேன்.

1. லாத்தரன் அரண்மனையைப் பற்றி மறையுரையிலும், புத்தகத்திலும் கேட்டறிந்த எனக்கு அந்த அரண்மனைக்குள் நுழைவது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இங்கே வெறும் அலுவலகங்கள் மட்டும்தான் உள்ளன. இங்கு வேலை செய்யும் அருட்பணியாளர்கள் வேறிடங்களில் தனித்தனியாக தங்கியிருக்கிறார்கள். அரண்மனையின் அமைதி எனக்கு ஆச்சர்யமாகவும், பயமாகவும் இருந்தது. விசாலமான வராண்டா, உயரமான ஜன்னல்கள், கதவுகள். சில பத்தாண்டுகளுக்கு முன் இதுதான் திருத்தந்தையின் வசிப்பிடமாகவும் இருந்தது. மின்தூக்கிகள் இல்லாத காலத்தில் கட்டப்பட்டதால். நான்காவது மாடி வரைக்கும் குதிரைகளும், பல்லக்குகளும் செல்ல வசதியாக படிக்கட்டுகளும், வராண்டாக்களும் அகலமாக இருந்தன. நம் ஞானஒளிவுபுரம் கோவிலைப் போல 16 கோவில்களை இந்த அரண்மனைக்குள் அடக்கிவிட முடியும்.

2. திருத்தந்தையின் மறைமாவட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு. மதுரை உயர்மறைமாவட்டத்தின் அடையாள அட்டையை கேட்டுப் பெற்றுக் கொண்ட அலுவலக அருட்பணியாளர், என் நிழற்படம் ஒட்டிய புதிய ரோம் மறைமாவட்டத்தின் அடையாள அட்டையைக் கையில் கொடுத்து, 'பென் வெனுத்தோ அல்லா தியோசிஸி தி ரோமா!' (ரோம் மறைமாவட்டத்திற்குள் நல்வரவு!) என்று வாழ்த்தினார். 'தேங்க் யூ' என்று சொல்லி பெற்றுக்கொண்டேன். அந்த நேரத்திலும் இத்தாலியன் வர மறுத்தது. மறைமாவட்ட அருட்பணி நிலையில் இது ஒரு முக்கியமான தருணம் என்றே நான் நினைக்கிறேன்.

3. 'யாரிடம் அதிகம் கொடுக்கப்படுகிறதோ, அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்' என்கிறது பைபிள். நாம் வெளிநாட்டில் இருக்கும்போதுதான் அதிக பொறுப்புணர்வோடு இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனெனில் நான் ஒரு சிறு தவறு செய்தாலும் அது என்னைப் பாதிப்பது மட்டுமல்லாமல், என் நாடு, என் மறைமாவட்டம், என் மொழி, என் கலாச்சாரம் என அனைத்தின் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

கொஞ்சம் மகிழ்ச்சி. கொஞ்சம் தயக்கம்.

தொடங்கியது ரோம் மறைமாவட்டத்தில் என் பணி.


Monday, April 20, 2015

இணைப்புக் கோடாகும் உணவு!

ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நாள் என்னுடைய முதல் திருப்பலி ராஜபாளையத்தில் இருந்தது. வழக்கமாக எல்லாரும் செய்யும் கேட்டரிங் ஆர்டர் செய்யாமல், யாராவது முன்பின் தெரியாத ஒருவரை, ஒரு கிராமத்தான் செய்யும் சமையலை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆசை. அதன்படி எங்க ஊருக்கு அருகில் உள்ள மேலாண்மறைநாடு என்னும் கிராமத்தைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன் நாயக்கர் என்னும் சமையல்காரரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை அழைத்து, கொட்டேஷன் கேட்டோம். நாயக்கர் அல்லது நாயுடு என்னும் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் திருமலைநாயக்கர் காலத்தில் குடிபுகுந்து ராஜூக்கள் என்னும் குழுவினரின் ஒரு பகுதி. இவர்கள் தெலுங்கு பேசுவார்கள். ஆனால், தெலுங்கு எழுதத் தெரியாது. இவர்களின் தெலுங்கிற்கும், இன்று ஆந்திராவில் பேசப்படும் தெலுங்கிற்கும் தொடர்பே இல்லை என்று எங்கள் ஊருக்கு வந்திருந்த ஃபாத்திமா ரெட்டி சொன்னான்.

ஒரு சிலர் பார்த்த மாத்திரத்தில் நம் மனதில் ஒட்டிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் இவர். மெனு ஆர்டர் கொடுத்து இவர் தன் சகாக்களோடு வந்து சமையல் செய்து தன் கைவண்ணத்தைக் காட்ட, அன்றிலிருந்து ராஜபாளையும் முழுவதும் ஃபேமஸாகிவிட்டார். என் தங்கையின் திருமணத்திற்கும் இவர்தான் சமைத்தார். என் வீட்டைக் கடந்து இன்று செல்லும்போதெல்லாம், வண்டியைவிட்டு இறங்கி என் அம்மாவிற்கு நன்றி சொல்லிவிட்டுப் போவாரம். கடந்த வாரம் அவரது மகளுக்குத் திருமணம். என் அம்மாவும் சென்றிருந்தார்களாம்.

அவர் எங்கள் குடும்பத்தோடு இணைய ஒரு இணைப்புக் கோடாக இருந்தது உணவு.

உணவு என்று சொல்லும் போது அதில் மூன்று பண்புகள் அடங்கியிருக்கிறது: (1) தயாரிப்பு, (2) உண்ணுதல், (3) நோக்கம்.

நம் வீடுகளில் அம்மாக்கள் தான் உணவு தயாரித்தலில் முதன்மையானவர்கள். இப்போது சில வீடுகளில் வேலைக்காரர்கள் சமைக்கிறார்கள். இன்னும் சில வீடுகளில் அப்பாக்களும் சமைக்கிறார்கள். நாம் சமைக்க முடியாத நேரங்களில் உணவகம் செல்கிறோம்.

இரண்டாவது, உண்ணுதல். தயாரிப்பது உண்ணப்படும்போதுதான் நிறைவு பெறுகின்றது.

மூன்றாவது, நோக்கம். நாம் எதற்காக சாப்பிடுகிறோம்? என்று கேட்டால் 'உடல் வளர்ச்சிக்காக' என்று பதில் சொல்கிறோம். ஆனால், உடல் வளர்ச்சியையும் தாண்டி அங்கே உறவு வளர்ச்சியும் இருக்கின்றது.

நான் ரோமிற்கு வந்த புதிதில், என் பங்குத்தந்தையும், உ.ப.தயும் சாப்பிட வரும்வரை என் அறையில் காத்திருப்பேன். காலையில் யாரும் சாப்பிட வருவதாகத் தெரியவில்லை. மணி பத்தாயிற்று. நானும் சாப்பிடாமலேயே இருந்தேன். ஒரு மணிக்கு வந்தார்கள். காலை சாப்பிடலையா என்று கேட்டேன். 'நீ சாப்பிடலயா?' என்று திரும்பக் கேட்டார்கள். பின் தான் நம்ம ஜென்டில்மேன் சொன்னார்: 'மதியம் மட்டும்தான் சேர்ந்து சாப்பிடுவோம்! மற்ற நேரங்களில் உன் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்!'

நம்ம ஊருல அப்படி இல்லை. சின்ன ஃபாதர் பெரிய ஃபாதர்கூட சேர்ந்து சாப்பிடணும் என்பது எழுதப்படாத சட்டம். சில இடங்களில் சின்ன ஃபாதர் தனக்கா காத்திருக்கிறாரா என்று பார்க்க, வேண்டுமென்றே இந்த பெரிய ஃபாதர்கள் தாமதமாக வருவார்கள். ஒருவேளை அவர் சாப்பிட ஆரம்பித்தார் என்றால், 'காத்திருப்பது' குறித்த பெரிய மறையுரை நடக்கும். சில இடங்களில் இந்த சமையல்காரர்கள் பெரிய ஃபாதர் இல்லையென்றால் சமைக்கவும் மாட்டார்கள். சின்ன ஃபாதர் எல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போலவும், பெரிய ஃபாதர்கள் எல்லாம் பரம்பரை முதலாளிகள் போலவும் இருப்பதாக இவர்கள் எண்ணிக்கொள்வர். இந்தச் சமையல்காரர்களையெல்லாம் பார்த்துவிட்டுதான் நான் பங்குத்தந்தை ஆனால் சமையல்காரர் வைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்தேன். இந்தப் பழக்கம் ரோமில் சமைக்கும் சமையல்காரர்களிடமும் இருக்கிறது. பங்குத்தந்தை இல்லாத நேரங்களில் ஃப்ரிட்ஜ் தான் நம் அடைக்கலம்.

இத்தாலியில் காலை உணவு வெறும் காஃபி (பால் கலக்காதது!) மற்றும் கொர்னெத்தோ (க்ரோஸான்) எனப்படும் ரொட்டி மட்டும்தான். சிலர் இத்தோடு சேர்த்து பிஸ்கட் அல்லது பழம் எடுத்துக் கொள்வர்.

மதிய உணவு க்ராண்டாக இருக்கும் - பாஸ்தா அல்லது ஸ்பகெத்தி (நம்ம ஊரு நூடுல்ஸ் போல இருக்கும்!), இறைச்சி, இன்சலாத்தா என்றழைக்கப்படும் மரக்கறி சேலட். மதியம் சாப்பிட்டுவிட்டு காஃபியும் குடிப்பார்கள்.

இரவு உணவு என்று எதுவும் கிடையாது. மதியம் உள்ளதில் மீதிதான் இரவு உணவு.

நம்ம ஊருல இரண்டு மணி நேரம் சமைத்து, இருபது நிமிடங்களில் சாப்பிடுகிறோம். ஆனால், இங்கு இருபது நிமிடங்கள் சமைத்து இரண்டு மணி நேரம் சாப்பிடுகிறார்கள்.

சமைக்கும் வேலையும், அதற்குப் பயன்படுத்தும் உபகரணங்களும் மிக எளிது. நானே சமைக்கப் பழகிவிட்டேன் என்றால் பாருங்களேன்!

சமையல்காரப் பெண் ஒருவர் காலை ஒன்பது மணிக்கு வந்து சமைத்துவிட்டு மதியம் ஒரு மணிக்குச் சென்றுவிடுவார். ஒரு மணி நேரம் அவர் சமைப்பதற்கு வழங்கப்படும் கூலி 10 யூரோ (அதாவது, 750 ரூபாய்). ஒரு நாள்கூலி அவருக்கு 40 யூரோ. ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் சமைக்க வரமாட்டார். நாங்களாதான் சமைத்துக் கொள்ள வேண்டும். விடுமுறை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பங்குத்தந்தையர் தங்கள் வீடுகளுக்குச் சாப்பிடச் சென்றுவிடுவர். இத்தாலியில் குருக்களை, 'அம்மாவின் சேலையைப் பிடித்துக் கொண்டு திரிபவர்கள்' என்று சொல்லக் காரணமும் இதுதான். வீட்டின் மேலும், வீட்டு உறவுகளின் மேலும் ரொம்ப அக்கறை காட்டுவார்கள். வீட்டு உறவுகளை 'நிப்போத்தி!' என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் 'நெப்போடிசம்' என்று ஒரு வார்த்தை உள்ளது - அதாவது, உறவினர்கள் மேல் அதிக பாசம் கொண்டு அவர்களுக்கு மட்டுமே நல்லவர்களாக இருப்பது. இந்த வார்த்தையின் தொடக்கமும் இவர்களின் இந்த குணம்தான்.

நம்ம ஊருல உள்ள பங்குத்தந்தையர் தங்கள் உதவிப் பங்குத்தந்தையர்களை 'கல்லிவர்ஸ் டிராவல்சில்' வரும் 'லில்லிபுட்' போல நினைத்து தங்களோடு அழைத்துக் கொண்டே செல்வார்கள். அந்தக் கதாபாத்திரத்தின் சுவராஸ்யம் என்னவென்றால், லில்லிபுட்களை பெரியவர்கள் தங்கள் கைகளில் அல்லது பைகளில் வைத்துக்கொள்ளவில்லையென்றால் அவர்கள் வேகமாக வளர்ந்துவிடுவார்கள். ஆனா, நம்ம பங்குத்தந்தையர்கள் ரொம்ப நல்லவர்கள்! உ.ப.தக்கள் வளர்வதையே அவர்கள் விரும்புவார்கள்(!). ஆனால், இங்கே அப்படி அல்ல. நான் முதல் இரண்டு ஆண்டுகள் என் பங்குத்தந்தையர் இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதே இல்லை. நாமும் எதிர்பார்க்கக் கூடாது. அவர்களும் செய்ய மாட்டார்கள்.

சேர்ந்து உண்ணும் உணவு வந்த புதிதில் எனக்கு பெரிய பாரமாகவே இருந்தது. காரணம், அவர்களின் உணவை எப்படி சாப்பிடுவதென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இல்லாத சில நேரங்களில் நான் கையால் எடுத்து வேகமாகச் சாப்பிட்டுவிடுவதுண்டு. இரண்டாவதாக, இத்தாலியன் பேசுவதற்கு பயமாக இருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல நான் சேர்ந்து உண்பதற்குப் பழகிவிட்டேன்.

'பயம் இருக்கும் இடத்தில் வளர்ச்சி தடைபடுகிறது!' என்பது இந்த மதிய உணவில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் மூன்று:

1. பயம் நீங்க வளர்ச்சி வரும். சில குழந்தைகள் சின்ன வயதிலிருந்தே எதைக்கண்டாலும் பயப்படும். நான் அப்படிதான் வளர்ந்தேன். கீழே விழுந்துவிடுவோம் என்பதற்காக 19 வயது வரை சைக்கள் ஓட்டிப் பழகாமல் இருந்தேன். மூழ்கிவிடுவோம் என்று பயந்து 16 வயது வரை நீச்சல் கற்றுக்கொள்ளாமல் இருந்தேன். தோற்றுவிடுவோம் என்று பயந்தே பல போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தேன். ஏமாற்றப்படுவோம் என்று பயந்தே பலரை அன்பு செய்யாமல் தவிர்த்தேன். அதுபோலவே, தவறாகப் பேசிவிடுவோமோ என்று பயந்தே பல மாதங்கள் இத்தாலியன் பேசாமல் இருந்தேன். இப்படி நான் பயந்த பொழுதுகளில் என் வளர்ச்சி தடைப்பட்டது போலவே உணர்ந்தேன். கீழே கொட்டினாலும் பரவாயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லி கரண்டி பிடிக்க பழகினேன். தப்பா பேசினாலும் பரவாயில்லை என்று துணிந்து பேசத் தொடங்கினேன். என் பயம் என்னை எந்த அளவுக்கு கட்டியிருக்கிறது என்பதை நான் இந்த மதிய உணவின் போதுதான் கற்றுக்கொண்டேன்.

2. சுதந்திரம். நம் பங்குத்தளங்களில் பங்குத் தந்தையருக்கும், உதவிப் பங்குத்தந்தையருக்கும் உள்ள பிரச்சினை உருவாகக் காரணம் உணவு. உணவில் காட்டப்படும் வேற்றுமை தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் வித்திடுகிறது. இதுவே காலப்போக்கில் வளர்ந்து தனித்தனியான சாப்பாட்டு நேரங்கள் என உருவாகிவிடும். மற்றொரு பக்கம், 'சாப்பிடு! சாப்பிடு!' என்று நம்மை கட்டாயப்படுத்துவார்கள். 'இதச் சாப்பிட்டா நல்லது!' என்று தாங்கள் கற்ற அரைகுறை மருத்துவத்தையும் நம்மேல் திணிப்பார்கள். ஆனால், இங்கே கோபத்தையும், மனத்தாங்கலையும் உணவிலோ, உணவறையிலோ இவர்கள் காட்டுவதில்லை. அதே போல் 'சாப்பிடு!' என்றும் சொல்ல மாட்டார்கள். நாம் விரும்பினால் எடுத்துக்கொள்ளலாம். விரும்பாவிட்டால் வைத்துவிடலாம். 'இது வேணுமா!' அப்படின்னு நம்ம ஊருல யாரையாவது கேட்டால், முதலில் 'வேண்டாம்!' என்று சொல்வார்கள். அப்படித்தான் சொல்ல வேண்டும். பின் கொஞ்சம் கம்ப்பல் செய்தால், 'சரி! வைங்க!' என்பார்கள். இதற்கு முதலிலேயே 'வையுங்கள்' என்று சொல்லியிருக்கலாமே! கேட்டால், அப்படிச் சொன்னால் 'நாம அலையிறோம்னு' நினைப்பாங்க என்று மற்றவர்கள் நினைப்பதையும் சொல்வார்கள். நம் பேச்சு 'ஆம்' என்றால் 'ஆம்' என்றும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் 'கட் அன்ட் ரைட்'ஆக பேசுவதற்கு நான் கற்றுக்கொண்ட இடமும் இந்த மதிய உணவுதான்.

3. உரையாடுதல். சாப்பிடும் இடம் மற்றும் நேரம் பொழுதுபோக்கு இடம் மற்றும் நேரம் போலத்தான் இருக்கும். இங்கே அலைபேசியும், தொலைக்காட்சியும் அனுமதி இல்லை. ஒருவர் மற்றவரைப் பார்த்துப் பேச வேண்டும். சிரிக்க வேண்டும். சில நேரங்களில் சிரிக்கின்ற சிரிப்பில் சாப்பிட்டு முடித்தவுடன் பசி எடுத்துவிடும். நான் இப்படி அதிகமாகச் சிரித்து உணவருந்தியது தேனி பங்குத்தளத்தில் தான். மற்ற இரண்டு இடங்களில் கொஞ்சமாகச் சிரித்தேன் என்று அர்த்தமும் அல்ல. இன்று நம் இல்லங்களில் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடும் அல்லது பேப்பர் பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. சாப்பாடு நன்றாக இருந்தால் அதை உடனடியாக பாரட்டுவார்கள். ஆக, உணவருந்தும் போது மகிழ்ச்சியாக இருக்கவும். உடனடியாகப் பாராட்டவும் ஒரு உந்துசக்தி எங்களின் மதிய உணவு.


Sunday, April 19, 2015

நீங்க கையில சாப்பிடுவீங்களா?

குருத்துவ அருட்பொழிவு நாள் இனிதே நிறைவுற்றது. எனக்காக செபித்த, வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

அப்போது அவர் அவர்களிடம், 'உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?' என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். (லூக்கா 24:41ஆ-43)

இந்த இரண்டு வாசகங்களையும் இன்றைய திருப்பலியின் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம்.

உயிர்த்த இயேசு வேக வைத்த மீன் துண்டை கையால் சாப்பிட்டாரா? கரண்டி வைத்து சாப்பிட்டாரா?

'அமர்ந்து' உண்டார் என்று சொல்லிய நற்செய்தியாளர் இதைச் சொல்லாமல் விட்டுவிட்டார்.

இந்தக் கேள்விதான் இன்றைய நம் சிந்தனை.

இத்தாலிக்கு வந்த முதல் நாள் இரவு நான், பங்குத்தந்தை மற்றும் உதவிப் பங்குத்தந்தை மூன்று பேரும் சேர்ந்து சாப்பிட்டோம். மாலை 4:30 மணிக்கு அறைக்கு வந்து சேர்ந்தேன். குளித்து முடித்து கறுப்பு சட்டை போட்டு, வெள்ளைக் கழுத்துப் பட்டை மாட்டி சாப்பிடத் தயாராக இருந்தேன். 7:30க்கு என்று சொல்லிவிட்டு 8:00 மணிக்கு வந்து சேர்ந்தார்கள். உணவறையில் வைத்திருந்த எதற்கும் பெயர் தெரியவில்லை. நம்ம ஊரில் பார்த்த ஒன்று இங்கே பார்த்தேன் என்றால் அது 'டொமாடொ கெட்ச்-அப்' மட்டும்தான். செபம் சொல்லிவிட்டு சாப்பிட அமர்ந்தவுடன் தான் எனக்கு தெரிந்தது 'இங்கே ஸ்பூன்-ஃபோர்க்' வைத்து சாப்பிட வேண்டும் என்று. முகமெல்லாம் வியர்த்து விட்டது. கோழி இறைச்சியை வெட்ட வெட்கப்பட்டுக் கொண்டு 'நான் வெஜிடேரியன்' என்ற சொல்லிவிட்டு வெறும் சாலட் மட்டும் எடுத்துக் கொண்டேன். அதையும் நைஃப்-ஃபோர்க் கொண்டுதான் சாப்பிட வேண்டும் என்றார்கள்.

'இந்தியாவில் நீங்க கையில தான் சாப்பிடுவீங்களா?' என்று கேட்டார் உ.ப.த.

'ஆம். அதுதான் சுத்தமானது. இந்த ஸ்பூன் உன் வாயில் இருந்திருக்கும். அவர் வாயில் இருந்திருக்கும். ஆனால், என் கைகள் என்னோடு மட்;டும்தான் இருக்கின்றன (ஒருசில நேரங்களில் அடுத்தவரின் வாயிலும் இருந்திருக்கின்றது - நாங்களும் சாப்பாடு ஊட்டி விட்டு சாப்பிட்டுருக்கோம்ல!)' என்று விவேகானந்தார் ஒருமுறை சொன்ன வார்த்தைகளையே சொன்னேன்.

அப்படியே ஷாக் ஆகி பார்த்தார்கள்.

'உனக்கு எது வசதியோ அப்படி சாப்பிடு!' என்று சொன்னார் ஜென்டில்மேன் பங்குத்தந்தை.

நான் குருமடத்திற்கு போவதற்கு முன் (அதாவது 14 வயதுக்கு முன்) இரண்டு முறை கரண்டியில் சாப்பிட்டிருக்கிறேன் - ஒருமுறை, கதவிடுக்கில் என் விரலைக் கொடுத்து காயப்படுத்திக் கொண்டபோது, இரண்டாவது முறை, நகச்சுத்தி வந்த போது. கரண்டினா ஸ்பூன்-ஃபோர்க் அப்படின்னு நினைக்க வேண்டாம். சீனி டப்பாவில் கிடக்கும் ப்ரு காஃபிக்கு ஃப்ரீயா வந்த குட்டி ஸ்பூனைக் கழுவிவிட்டு நம் கையில் தருவார்கள். முதன்முதலாக ஸ்பூன்-ஃபோர்க் பிடித்துச் சாப்பிட்டது புனே குருமடத்தில்தான். அங்கே மதிய உணவை கண்டிப்பாக ஸ்பூன்-ஃபோர்க் கொண்டுதான் சாப்பிட வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்ததாம். எதற்காக? ஸ்பூன்-ஃபோர்க்கில் சாப்பிட்டால் பொதுவாக நாம் குறைவாக சாப்பிடுகிறோம் என்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை. நான் போன சமயம் அந்த சட்டம் எழுத்து வடிவில் இல்லையென்றாலும், கடைப்பிடிக்கப்பட்டது.

எப்படி சாப்பிடுறது நல்லது என்பது கேள்வி கிடையாது. நாம் கைகளால் சாப்பிடுகிறோம். இவர்கள் கரண்டியால் சாப்பிடுகிறார்கள். சீனர்கள் குச்சிகளால் சாப்பிடுகிறார்கள்.

உணவு என்று சொல்லும் போது சமூகவியில் ஆய்வில் 'ஃபுட் ஹேபிட்' மற்றும் 'ஈட்டிங் ஹேபிட்' என்று இரண்டு உண்டு. 'ஃபுட் ஹேபிட்' என்பது நாம் 'எதை' உண்கிறோம் என்பதையும், 'ஈட்டிங் ஹேபிட்' என்பது நாம் 'எப்படி' உண்கிறோம் என்பதையும் குறிக்கிறது. தமிழர்கள் வெள்ளை சோறு சாப்பிடுவது, மலையாளிகள் சிகப்பு சோறு சாப்பிடுவது, பஞ்சாபிகள் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவது என்று சொல்வதெல்லாம் இவர்களின் ஃபுட் ஹேபிட். தரையில் அமர்ந்து சாப்பிடுவது அல்லது டைனிங் டேபிளில் சாப்பிடுவது என்பது ஈட்டிங் ஹேபிட். ஒரு ஐஸ் க்ரீம் சாக்கோ பார் சாப்பிடுவதிலேயே பாருங்களேன்! ஒரு சிலர் சூப்பி சாப்பிடுவார்கள், வேறு சிலர் கடித்து சாப்பிடுவார்கள். கடித்து சாப்பிடுவதிலும் சிலர் மேலிருந்து கடிப்பர். மற்றும் சிலர் கீழிருந்து கடிப்பர்.

நான் என்பது என் பெயரோ, என் மொழியோ, என் படிப்போ, என் வேலையோ, என் நாடோ அல்ல. மாறாக நான் என்பது 'என் உணவு'. யு ஆர் வாட் யு ஈட் என்றும் யு பிகம் வாட் யு ஈட் என்றும் ஆங்கிலத்தில் சொலவடைகள் உண்டு. நம் உணவை வைத்து நாம் யார் என்று சொல்ல முடியும். அல்லது நாம் எந்தக் குழுவைச் சார்ந்திருக்கிறோமோ அந்தக் குழுவின் உணவையே உண்ணுகிறோம். உதாரணத்திற்கு, பிராமணர்கள் மரக்கறி உணவை மட்டுமே உண்கின்றனர். தென்னிந்திய பிராமணர்களைப் பொறுத்தவரையில் மீன் என்பது மரக்கறி கிடையாது. ஆனால், மேற்கு வங்களாத்தில் பிராமணர்கள் மீன் சாப்பிடுவார்கள். நம் உணவை 'பக்கா' ஃபுட் அல்லது 'கச்சா' ஃபுட் என்று இந்திய சமூகவியலில் பிரிப்பார்கள். 'பக்கா' உணவை உண்பவர்கள் மேலோர் என்றும், 'கச்சா' உணவை உண்பவர்கள் கீழோர் என்றும் சொல்வதுண்டு. (இது சரியா! தவறா! என்ற வாதம் இப்போது வேண்டாம்!) இன்றைய இளையோர் மத்தியில் மேக் டொனால்ட் கல்ச்சர், மேரி பிரவுன் கல்ச்சர், பானி பூரி கல்ச்சர், மேகி நூடுல்ஸ் கல்ச்சர் என்றும் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் 'பானி பூரி சாப்பிடுவோருக்கென்று!' நம் தமிழ்நாட்டில் க்ரூப் ஒன்று இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

இத்தாலியில் என்ன சாப்பிடுகிறார்கள், எந்தெந்த நேரத்தில் சாப்பிடுவார்கள் என்று மற்றொரு முறை எழுதலாம். இன்று ஸ்பூன்-ஃபோர்க் என்னும் டேபிள் கல்ச்சரோடு நிறுத்திக் கொள்வோம்.

உணவறையில் ஒவ்வொருவரின் இருக்கைக்கு முன்னும் ஐந்து தட்டுக்களும், மூன்று கண்ணாடி டம்ளர்களும், ஐந்துவகை கரண்டிகளும் இருக்கும். எல்லாருக்குமா? என்று கேட்காதீர்கள். ஒவ்வொருவருக்கும்!

தட்டுக்கள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். முதல் தட்டு ஆண்ட்டிபாஸ்தா என்று சொல்லப்படும் 'ஸ்டார்ட்டர்' சாப்பிட. இரண்டாம் தட்டில் தான் முதல் வகை உணவு (பாஸ்தா அல்லது ஸ்பகெத்தி). மூன்றாம் தட்டு இறைச்சி சாப்பிட. நான்காம் தட்டு சாலட் சாப்பிட. ஐந்தாம் தட்டு டெசர்ட் அல்லது இனிப்பு சாப்பிட. கண்ணாடி டம்ளர்களில் மிக உயரமாக இருக்கும் டம்ளர் தண்ணீர் குடிக்க. அதைவிட கொஞ்சம் சின்ன டம்ளர் ஒயின் குடிக்க. ரொம்பக் குட்டியோண்டு டம்ளர் 'அமாரோ' என்று சொல்லப்படும் 'டிஜெஸ்டிவ்' (செரிமான டிரிங் - இதன் ஆல்கஹால் அளவு 50 முதல் 60 சதவிகம்!) குடிக்க. கரண்டிகளில், குளிக்கரண்டி பாஸ்தா நீரோடு செய்யப்பட்டால் அதை சாப்பிட. முள்கரண்டியும், கத்தியும் இறைச்சி சாப்பிட. பழம் மற்றும் வெண்ணைய் துண்டுகள் சாப்பிட மற்ற இரண்டு வகை ஒற்றைமுள் கரண்டிகள். இதைக் கற்றுக்கொள்ளவே தலைசுற்றிவிடும். கைதுடைக்க ஒரு துணி அல்லது பேப்பர்.

இந்த இத்தாலிய டேபிள் ஹேபிட் எல்லாரும் பழகியிருக்கும் ஒன்று. எந்த வீட்டிற்கு அல்லது பங்குத்தந்தை இல்லத்திற்கு அல்லது இத்தாலிய உணவகத்திற்குச் சென்றாலும் இந்த முறை பின்பற்றப்படுவதைப் பார்க்கலாம்.

இந்த டேபிள் ஹேபிட்டில் நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் மூன்று:

1. உணவறையை மூடிக் கொண்டு சாப்பிடுவது. நம்ம ஊருல இதை நாம் பின்பற்றுவது கிடையாது. பங்குத்தந்தையர் இல்லத்தில் கூட கதவுகள் திறந்துதான் வைக்கப்படுகின்றன. எதற்காக மூடி வைக்க வேண்டும்? ஒன்று, உணவின் மணம் மற்ற அறைக்குச் சென்றுவிடக் கூடாது. இரண்டு, உணவு என்பது இத்தாலியில் உடலுறவு போன்றது. உணவறையில் என்ன நடக்கிறது என்பது அங்கே உள்ளிருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரிய வேண்டும். இது ஒரு நல்ல பழக்கம். அதாவது, எங்கேயும் உட்கார்ந்து, எது கிடைத்தாலும் சாப்பிடும் ஒருசிலரைப் போல இல்லாமல், அல்லது சாலைகளில் வெட்ட வெளியில் சாப்பிடும் ஆடு, மாடுகளைப் போல இல்லாமல் நாம் வேறுபட்டிருக்கிறோம் என்பதைக் காட்டவே இது. ஆக, இது மற்றவர்களை தாழ்வாக நினைப்பது எனச் சொல்லாதீர்கள். இது ஒரு தன்மதிப்பின் அடையாளம். நீங்களும் கதவுகைள் பூட்டிச் சாப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.

2. ஒவ்வொன்றிற்கும் ஒரு தட்டு. எதற்காக? காரம் சாப்பிட்ட தட்டில், இனிப்பு சாப்பிட்டால் எப்படி இருக்கும்? சபரீஸ் ஹோட்டலில் வத்தல் குழம்பு சாப்பிட்டுவிட்டு, பாயாசத்தை அதே தட்டில் ஊற்றி சாப்பிடுவதுபோல இருக்கும். நம்ம ஊர்ல இதெல்லாம் முடியுமா? அவன் காசுள்ளவன் சாப்பிடுறான். நாம் என்ன செய்ய? என்று கேட்காதீர்கள். அல்லது எல்லாம் ஒரே வயிற்றுக்குள்ளதான போகுது அப்படின்னு சொல்லாதீங்க. காசுள்ளவன் பீங்கான் வாங்கட்டும். காசில்லாதவன் எவர் சில்வரிலாவது வித்தியாசமாக வாங்கலாமே. ஒவ்வொன்றையும் அதன் ருசியோடு ரசிக்க வேண்டும். இது உணவிற்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். உறவுநிலைகளுக்கும் பொருந்தும். 'ஸ்டார்ட்டர்' போல சிலரை வேகமாக சாப்பிடுவோம். 'டெசர்ட்' போல சிலரை ரசித்து சாப்பிடுவோம். எல்லாரையும் ஒரே தட்டுல போட முடியுமா மை லார்ட். அப்படி போட்டா டேஸ்டாவா இருக்கும்?

3. மேசை விரிப்பு. மேசையில் துணி விரித்து அதன் மேல் தட்டு வைத்து சாப்பிடுவார்கள். நம்ம ஊரிலும் விரிக்கிறார்கள். ஆனால், பிளாஸ்டிக் ஷீட் தான் பெரும்பாலும் விரிக்கப்படுகிறது. க்ளீனிங் எளிது என்பதற்காக. ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துணி, காலத்திற்கு ஏற்றவாறு - அதாவது கிறிஸ்துமஸ் என்றால் சிவப்பு, பாஸ்கா என்றால் வெளிர்மஞ்சள். இப்படி அமர்ந்து சாப்பிடும்போது நம்மையறியாமல் ஒரு பெருமிதம் வருகிறது. என்னை முதலில் நான் மதிக்க வேண்டுமல்லவா? இயேசுகூட அழகாகச் சொல்வார்: 'யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா!' (லூக்கா 22:27). நாம் பந்தியில் அமரப் பிறந்தவர்கள். நாம் வாழவும், வெல்லவும். ஆளவும் பிறந்தவர்கள் தானே!


Saturday, April 18, 2015

உன் மீது என் கைகளை வைத்து

நாளை என் குருத்துவ அருட்பொழிவு நாள்.

ஏப்பிரல் 19, 2009 ஆம் ஆண்டு மதுரை தூய பிரிட்டோ மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் என் நண்பர்கள் டைட்டஸ், வரன், மதன் பாபு, லாரன்ஸ், இன்னாசி, திருத்துவராஜ் மற்றும் பிரின்ஸோடு இணைந்து அருட்பணியாளராக, மதுரை உயர்மறைமாவட்டத்திற்கு, பேராயர் மேதகு. பீட்டர் ஃபெர்ணான்டோ அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டேன்.

உள்ளங்கைகளில் பூசப்பட்ட கிறிஸ்மா தைலத்தின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள் ஆறு வருடங்கள் ஓடி விட்டன.

நம் வாழ்க்கையில் நாம் ஊரறிய இரண்டு முறை பவனி வருகிறோம் என்பார் கண்ணதாசன் - நம் திருமண நிகழ்வன்று முதன்முறை, நம் இறப்பின் போது இரண்டாம் முறை.

அருள்நிலை இனியவர்களுக்கு அர்ப்பணத்தின் அல்லது திருநிலைப்பாட்டின் நாள் தானே திருமண நாள். அன்று தான் நாங்கள் 'இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும்!' என்று எங்கள் மறைமாவட்டத்தையே, துறவற சபையையோ கரம் பிடிக்கிறோம்.

ஆண்டுகள் ஆறு கடந்தாலும், அன்று நடந்தவை எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கின்றன.

இந்த ஆறாம் ஆண்டின் சிறப்பு என்னவென்றால், அருட்பொழிவு பெற்ற நாளைப் போலவே இந்த ஆறாம் ஆண்டு நாளும் ஞாயிற்றுக் கிழமை என்பதுதான்!

'அவரோடு!' (மாற்கு 3:15) என்பதுதான் எனது அருட்பொழிவு விருதுவாக்கு.

புதிய வெள்ளை அங்கி. புதிய மல்லிகை மாலை. புதிய திருவுடை. புதிய ரசப்பாத்திரம். புதிய காலணிகள். புதிய புன்னகை என பேராயர் இல்லத்திலிருந்து புறப்பட்டு ஞானா வந்தோம்.

என் அப்பாவின் இல்லாமையை இருமையாக்க என் தாய்மாமன் என்னுடன் பவனியாக வந்தார். கத்தோலிக்கர் அல்லாத அவருக்கு அது இன்னும் புதுமையான அனுபவமாகத்தான் இருந்திருக்க வேண்டும். என் ஊரிலிருந்து புறப்பட்ட பேருந்தில் வந்த விருந்தினர்கள் பெரும்பாலும் இந்துக்கள் என்பதால், திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் என்று போய்விட்டு, இறுதியாகத்தான் அரங்கத்திற்குள் வந்தார்கள். 'மாப்ள! கடைசியா மீனாட்சிய பார்த்தது உன் குருப்பட்டம் அன்னிக்குதான்!' என்று அவர்கள் இன்று சொல்லும்போதும் பெருமையாகத்தான் இருக்கிறது. ஆக, இந்து மதத்தினர் வாழ்த்தி நிற்க, கத்தோலிக்கர் அல்லாத தாய்மாமன் உடன்வர, கத்தோலிக்கத் தாய் கண்ணீர் வடிக்க, கத்தோலிக்க முறையில் நிறைவேறியது திருப்பொழிவு சடங்கு.

என் வாழ்வை இரண்டாகப் பிரித்தால் அதை தி.மு., தி.பி. என்றுதான் பிரிப்பேன் - திருப்பொழிவுக்கு முன், திருப்பொழிவுக்குப் பின். நீங்களும் தி.மு., தி.பி. என்று பிரிக்கலாம் - திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின்.

'நான் உன் குருப்பட்டத்து அன்று எங்கு இருந்தேன்!' என்ற பூர்வ ஜென்ம உறவுகள் என்னைப் பார்த்துக் கேட்கும்போதெல்லாம், என் தங்கை மகள் அவளது அம்மாவின் திருமண ஃபோட்டோவைப் பார்த்து, 'நான் எங்கே இருக்கிறேன்!' என்று கேட்பதையே நினைத்துக்கொள்வேன். இன்று என்னுடன் இருக்கும் உறவுகள் அன்று அதே அரங்கத்தில் தான் இருந்தன. ஆனால், ஒன்றிற்கொன்று அருகருகே இருந்தும் தொட்டுக்கொள்ள முடியாத தண்டவாளங்களாய்தான் அவை அன்று இருந்தன.

திருப்பொழிவு நிகழ்வு, இரவு உணவு, அடுத்த நாள் இராசபாளையத்தில் நான் நிறைவேற்றிய முதல் நன்றித் திருப்பலி என எல்லாம் நன்றாகவே இருந்தன.

அன்பு, ஜூலி, ஃபாத்திமா, லில்லி, கண்ணன், கலா, ஹில்டா, சமா, ஷாரு, ஜெயா, அக்ஸி நான் திருத்தொண்டராக இருந்த இடத்திலிருந்து வந்திருந்த இனியவர்கள், புனேயிலிருந்து வந்திருந்தவர்கள், என் ஊர் மக்கள் என சின்ன வட்டமாக அன்று இருந்த வட்டம் இன்று ரொம்பவே விரிந்து விட்டது.

திருப்பொழிவு நாள் தயாரிப்புக்காக அலைந்த அலைச்சல், பட்ட பணக்கஷ்டம், 'என் பேர் போடல, உன் பேர் போடல' பஞ்சாயத்து, 'நான் வரமாட்டேன், நீ வரல' மனத்தாங்கல்கள், உணவு மற்றும் விருந்தினர் வரவேற்புக்காக இரவு முழுவதும் செய்த வேலைகள், தூக்கமின்மை அனைத்தும் அந்த நொடியில் மறைந்து போனது. வீடியோ வெளிச்சம், கேமராக்களின் ஃப்ளாஷ், பூக்கள் மற்றும் தைலத்தின் நறுமணம், கூட்டத்தின் வெப்பம், ஸ்பரிசம், புன்னகை என எல்லாமே நொடியில் மாறிவிட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை நான் ரசித்து அனுபவிக்கும், முரண்டு பிடிக்கும், கோபப்படும், சண்டை போடும் மதுரை உயர்மறைமாவட்டத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். இந்தத் தளத்தின் பேராயர்கள், சகோதர குருக்கள், அருள்நிலை மற்றும் பொதுநிலை உறவுகள் தாம் இன்று என்னோடு உடன் நிற்கின்றன.

முன்னால எல்லாம் 'ஏன்டா இந்த வாழ்க்கைக்கு வந்தோம்!' என்று அடிக்கடி நினைக்கத் தோன்றும். 'ஏன்டா கல்யாணம் முடிச்சோம்னு!' நாம சில நேரங்களில் கேட்கிறோம்ல அப்படித்தான்.

இந்த நன்னாளில் நான் நினைவுகூறுவது பின்வரும் மூன்று இறைவாக்குப் பகுதிகள் தாம்:

'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம்.
இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை.
அது கடவுளுக்கு உரியது.
நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை.
குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை.
துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை.
வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.'
(2 கொரிந்தியர் 4:7-9)

'அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர்.
செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை.
துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம்.
எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்!'
(2 கொரிந்தியர் 6:9-10)

'அன்பு பிள்ளை திமொத்தேயுவே, உன் மீது என் கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருட்கொடையினைத் தூண்டு எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன் - கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்!' (2 திமொத்தேயு 1:6-7)

என் பயணத்தில் உடன் வரும் அன்பு உறவே உனக்கு என் வணக்கம். நன்றி!


Friday, April 17, 2015

கறுப்பு-வெள்ளை

நேற்று இரவு ஒரு கனவு. வெள்ளை வேஷ்டி கட்டி, வெள்ளை அரைக்கை சட்டை போட்டு ஏதோ ஒரு விருந்துக்குச் செல்வது போல. என் ரொம்ப நாள் ஆசை வேஷ்டி கட்டுவது. நான் முதன் முதலாக லுங்கி கட்டப் பழகிய போது வயது 17. முதன்முதலாகக் கட்டிய போது எனக்கே சிரிப்பாக வந்தது. லுங்கியை 'கைலி' என்றும் 'சாரம்' என்றும்கூட அழைப்பர். பெண்களும் 'லுங்கி' கட்டுவர் என்பது என் அம்மா சொல்லிதான் எனக்குத் தெரியும். லுங்கிகளை ரவுடிகள் தான் கட்டுவார்கள் என்று சொல்லி கடைசி வரை லுங்கி கட்டாமலே அடம் பிடித்தார் என் அப்பா. ஒரு வீட்டின் கொடியில் தொங்கும் ஒரு லுங்கி அந்த வீட்டில் வசிக்கும் ஆண்மகனின் அடையாளம். இந்த லுங்கிக்கு பல உபயோகங்கள் உண்டு. ஆண்களின் ஓய்வு ஆடை இது. அவசரத்திற்கு தலைதுவட்டும் துண்டாகவும், விரிக்கும் பாயாகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகாலை டீக்கடை, மருத்துவமனையில் படுக்கை, இறப்பு வீடு, கசாப்பு கடை, உழைப்பாளியின் வியர்வை - என அனைத்திலும் லுங்கிக்கு ஒரு இடம் உண்டு. லுங்கியிலிருந்து ஒருவர் வேஷ்டிக்கு மாறினால் அவர் ஏதோ முக்கியமான வேலையாக வெளியே புறப்படுகிறார் என அறிந்து கொள்ளலாம். கோவில், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு லுங்கி அணிந்து போகக் கூடாது என்பது எழுதாத சட்டம்.

'தாலி நம்ம கலாச்சாரத்தைச் சார்ந்தது அல்ல!' என்று தாலி அவிழ்க்கும் அல்லது தாலி மறுக்கும் போராட்டம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்களில் மதுரையில் நடைபெறும் 'மீனாட்சி-சுந்தரேசுவரர்' திருமணத்தில் தாலி கட்டுவார்களா அல்லது மாட்டார்களா என்பது கூட ஆர்வமாக இருக்கிறது. 'லுங்கியும்', 'வேஷ்டியும்' கூட நம் கலாச்சாரத்தைச் சார்ந்தது அல்ல என்று யாராவது போராடத் தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சரி! எதுக்கு இந்த வேஷ்டி, லுங்கி கதை என்று கேட்கிறீர்களா?

இன்று நாம் பேசப்போகும் தலைப்பு 'கறுப்பு சட்டையும், வெள்ளை கழுத்துப்பட்டையும்!'.

மேற்கத்திய நாடுகளில் வேலைகளை 'ஒயிட் காலர் ஜாப்', 'ப்ளு கலர் ஜாப்' என இரண்டு வகைகளாப் பிரிப்பர். அழுக்கு ஒட்டாமல், அமர்ந்து கொண்டு, வெறும் சிந்தனை ஓட்டத்தை மையமாக வைத்துச் செய்யப்படும் வேலை 'ஒயிட் காலர் ஜாப்'. மாறாக, உடல் உழைப்பை வைத்து, வியர்க்க விறுவிறுக்க செய்யப்படும் வேலை 'ப்ளு காலர் ஜாப்'.

மேற்கத்திய நாடுகளில் அருட்பணியாளர்கள் அணியும் ஆடை கறுப்புச் சட்டையும், வெள்ளை காலரும். 'ஒயிட் காலர் ஜாப்' என்ற வார்த்தை அருட்பணியாளர்களின் வாழ்விலிருந்து வந்த வார்த்தையாக இருக்க வேண்டும். அதாவது, அலுவலகத்தில் அமர்ந்து கணிணி முன்னால் செய்யப்படும் வேலையை நாம் 'கிளரிகல் ஜாப்' என்றும், இப்படி வேலை செய்பவரை 'கிளார்க்' என்றும் அழைக்கின்றோம். 'கிளரிகல்' என்றால் 'அருட்பணியாளருடைய' என்றுதான் அர்த்தம்.

'நீ கிளரிகல் சட்டை' அணிந்து வரவில்லையா? என்று கேட்டால், 'நீ கறுப்பு சட்டை மற்றும் வெள்ளை காலர்' அணிந்து வரவில்லையா? என்று பொருள்.

என் சைசுக்கு கிளரிகல் சர்ட் கிடைக்காததால் நானாகவே, நம்ம ஞானா குமார் டெய்லர்ஸிடம் சொல்லி மூன்று சட்டைகள் தைத்துக் கொண்டு போயிருந்தேன். இரண்டு ஃபுல் ஹேண்;ட். ஒரு ஆஃப் ஹேண்ட். கறுப்பு கலர் தவிர வெள்ளை மற்றும் இளநீலத்திலும் இரண்டு சட்டைகள் கொண்டு போனேன் ரோமிற்கு. ஒரிஜினல் கிளரிகல் டிரஸ் கோட் என்பது கறுப்பு மட்டும்தான். கோடைக்காலங்களில் இளநீலம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நம்ம ஊருல இருந்து வந்தவர்கள் இங்கே எல்லா கலர்லயும் கிளரிகல் சட்டை வைத்திருக்கிறார்கள்.

கறுப்பு சட்டை, கறுப்பு பேண்ட், வெள்ளை கழுத்துப்பட்டை - இதுதான் குருக்கள் அணியும் ஆடை. வெள்ளைக் கழுத்துப்பட்டையிலும் இரண்டு வகை உண்டு: ஒன்று ரோமன் வகை - இதில் வெள்ளை நிறம் கழுத்து முழுமையும் வரும், இரண்டு நார்மல் வகை - இதில் கழுத்து பட்டன் பொருத்தும் இடத்தில் மட்டும் வெள்ளை நிறம் இருக்கும். இந்தியாவில் நாம் அணிவது போல வெள்ளை அங்கி இங்கே யாரும் அணிவது கிடையாது. அப்படியே அணிந்தாலும் கறுப்பு அங்கிதான் அணிகிறார்கள். ரோமில் திருத்தந்தை மட்டும்தான் வெள்ளை அங்கி அணிய முடியும். திருத்தந்தை கூட வெள்ளை அணிவதை விட 'ஐவரி கலர்' அல்லது 'க்ரீம் கலர்' என்று சொல்லப்படும் 'யானைத் தந்த நிறத்தையே' அணிகிறார்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ரோம் நகர் நெருங்கிய போது விமானத்தின் மாற்று அறைக்குச் சென்று, நான் அணிந்திருந்த டிசர்டைக் கழற்றி விட்டு, கறுப்பு சட்டையும், கழுத்துப்பட்டையும் அணிந்து வந்து அமர்ந்தேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள் வைத்த கண் எடுக்காமல் பார்த்தார்கள். விமானத்தில் ஆடை மாற்றுவது ஒரு விநோதமான செயல் என்று நான் உணர்ந்தேன். அவங்க பார்த்தா நமக்கென்ன! நாம என்ன நினைக்கிறோமோ அத செய்யணுமுல! செய்வோம்ல!

இரண்டு மூன்று நாட்கள் புதுப் பொண்டாட்டி கட்டியது போல, கறுப்பு சட்டையை விடாமல் போட்டுக் கொண்டே இருந்தேன். வெள்ளைக் கழுத்துப்பட்டையை அணிந்து கொண்டே இருப்பது 'எந்நேரமும் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பது போல!' இருந்தது. கலர் சட்டை அணிந்து ஒருநாள் உணவறைக்குச் சென்றபோது, எங்கள் பாஸ் பார்த்த பார்வையிலேயே புரிந்துகொண்டேன் கலர் சட்டைகளுக்கு இங்கே அனுமதி இல்லை என்று.

ரோம் வருவதற்கு முன்பே கறுப்பு சட்டையும், வெள்ளைக் கழுத்துப் பட்டையும் ஒரு முறை அணிந்திருக்கிறேன் - இஸ்ரேல் சென்றபோது! கறுப்பு சட்டை, வெள்ளை கழுத்துப் பட்டை அணிந்த சில அருட்தந்தையர்களின் ஃபோட்டோக்களைப் பார்த்தபோதும் அந்த உடையின் மேல் எனக்கு ஈர்ப்பு இருந்தது. மேலும், ஏற்கனவே கறுப்பு நிறத்தின் மேல் ஆசை இருந்ததால், ரோம் வந்த மூன்றாவது நாள் ஒரு முடிவெடுத்தேன் - இனி கறுப்பு மேல்சட்டை மட்டுமே அணிவதென்று!

'ஊருக்கு வந்தாலும் இப்படி கறுப்பை மாட்டிக்கொண்டே திரிகிறாயே!' என்று என் அம்மா அடிக்கடி புலம்பியிருக்கிறார்கள். அதுக்கா நம்ம கொள்கையை விட முடியுமா. கறுப்பு சட்டை பிடித்ததற்கு மற்றொரு காரணம் அந்த ஆண்டு மரணம் அடைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் - ஸ்டீவ் ஜாப்ஸ் தன் வாழ்வின் 30ஆம் வயதிலிருந்து இறக்கும் வரை 'ப்ளு கலர் ஜீன்ஸ் மற்றும் கறுப்பு கலர் மேல் சட்டை' மட்டும்தான் அணிந்தாரம். இப்படி ஒரே கலர் போடுவதில் உள்ள மற்றொரு அட்வான்டேஜ் என்னன்னா, டெய்லி காலையில குளிச்சிட்டு வந்து துண்ட கட்டிக்கிட்டு, அலமாரியத் திறந்து நின்னுகிட்டு, 'இன்னைக்கு என்ன போட?' என்றும், 'இதுக்கு அது மேட்ச் ஆகுமா?' என்றும் தியானம் செய்து கொண்டிருக்கத் தேவையில்லை.

கறுப்பு சட்டை, வெள்ளைக் காலர் அணிந்துதான் இருக்க வேண்டும் என்பது யாரும் நம்மிடம் இங்கே எதிர்பார்ப்பதில்லை என்றாலும், அதை அணியும் போது நம்மையறியாமல் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது.

வத்திக்கானுக்குள் செல்லும்போதும், லாத்தரன் அரண்மனைக்கு (ரோமின் பேராயர் இல்லம்) செல்லும் போது மட்டும்தான் இப்போது கிளரிகல் டிரஸ் போடுகிறேன் என்றாலும், சில வாரங்களாக தினமும் மாலைத் திருப்பலியிலும் அணிகிறேன்.

இங்கே கறுப்பு அணிவது பிடித்திருப்பதால், நாடு திரும்பியவுடனும் 'ப்ளு-கறுப்பு' டிரஸ் கோட் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அடிக்கடி நினைத்திருக்கிறேன்.

ஆனா, கொஞ்ச நாளாக வெள்ளை வேஷ்டி அணிய வேண்டும் என்று ஒரு ஆர்வம் இருக்கிறது. ஏனெனில் 'ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கத் தேவைப்படும் தண்ணீரின் அளவு தெரிந்தால் யாரும் ஜீன்ஸ் அணிய மாட்டார்களாம்!' அந்ந அளவிற்கு இயற்கையின் ஆதாரங்கள் பயன்படுத்தப்பட்டுதான் இது தயாரிக்கப்படுகிறது.

நம்ம ஊரு க்ளைமேட்டுக்கு வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டைதான் சரி!

வெள்ளையா, கறுப்பா, ரெண்டுமா?

சீக்கிரம் முடிவெடுங்க பாஸ்!


Thursday, April 16, 2015

இசை மொழி

இன்று மதியம் நான், நண்பர் ஜெகன் மற்றும் அவரது நண்பர் ஒரு இத்தாலிய இளவல் எல்லாம் இணைந்து பனிக்குலவை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். உரையாடலின் நடுவே இளவல் ஒன்றை அழகாகச் சொன்னார்: 'நாம் யாரைப் பிடிக்கிறதோ அவர்கள் மொழியை எளிதாகக் கற்றுக்கொள்வோம்!' ஆக, நாம் பேசுவதற்கு ஒரு புதிய மொழியைக் கற்க வேண்டுமென்றாலும் சரி, அல்லது நம் அன்பு உறவு பேசும் மொழியைக் கற்க வேண்டுமென்றாலும் சரி அவர்களை நமக்குப் பிடிக்க வேண்டும். படிப்பிலேயே பாருங்களேன். எந்த ஆசிரியரை நமக்குப் பிடிக்கிறதோ, அந்த ஆசிரியரின் பாடமும் நமக்குப் பிடிக்கும். ஆக, ஒரு ஆசிரியர் தன் பாடத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால் முதலில் அவர் அவர்களுக்குப் பிடித்தமானவராக நடந்து கொள்ள வேண்டும்.

உலகமெல்லாம் ஆங்கிலம் பேசுகிறார்கள் என்றும், ஆங்கிலம் தெரிந்தால் உலகையே நாம் சுற்றி வரலாம் என்றும் நம் ஆங்கில வழி பள்ளிகளில் சொல்கிறார்கள். அது சுத்தப் பொய். ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் உலகத்தின் ஒருசில நாடுகளில் வேண்டுமானால் வாழ்வை சமாளிக்கலாம். எல்லா நாடுகளிலும் அல்ல.

ஆங்கில மோகம் வேகமாக வளர்ந்தாலும், தன் இத்தாலிய வேர்களைப் பிடித்துக் கொண்டும், அதில் பெருமிதம் கொண்டிருக்கும் இத்தாலியர்களுக்கு இத்தாலியனைத் தவிர வேறு மொழி தேவை இல்லை. கடைசி வரை தங்கள் தாய்மொழியிலேயே கற்கின்றனர். தாய்மொழியையே பேசுகின்றனர்.

நமக்கும் தாய்மொழி ஆர்வம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் பாரதியார் கூட, 'பிறமொழியின் நல்ல நூல்கள் தமிழ் மொழியில் வேண்டும்!' என்றார்.

எந்த மொழியில் வெளியாகும் நல்ல இலக்கியமும் உடனடியாக இத்தாலியனிலும் கிடைக்கிறது. ஆக, இவர்களுக்கு வேறு மொழி தேவையில்லை.

இத்தாலியன் லத்தீன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. இத்தாலியனில் எல்லா வார்த்தைகளும் (இப்போ சேர்ந்திருக்கும் சில ஆங்கில வார்த்தைகள் தவிர!) உயிரெழுத்தில்தான் முடியும். ஆக, இந்த மொழியைப் பேசும்போதே பாடுவது போல இருக்கும். நம் திராவிட மொழிகளில் இந்தப் பண்பு தெலுங்கு மொழியில் இருப்பதால் தெலுங்கு மொழியை, 'இத்தாலியன் ஆஃப் தெ ஈஸ்ட்' என்றும் அழைப்பர்.

ரோமில் கால் பதித்த நாளன்று எல்லாம் புதிதாகத் தெரிந்தது. வாயிருந்தும் ஊமையாய், காதிருந்தும் செவிடராய் நகர்ந்தது முதல் நாள். சென்னையில் நான் கற்ற இத்தாலியனுக்கும், ரோமில் பேசப்பட்ட இத்தாலியனுக்கும் உள்ள வித்தியாசம், நாகர்கோவிலைச் சார்ந்த ஒருவர் விடிந்ததும் சென்னைத் தமிழைக் கேட்பது போல இருந்தது. 'புரியுது. ஆனா புரியல!' என்ற நிலையில்தான் வாழ்க்கை முதலில் ஓடியது.

இத்தாலியன் ஒரு இசை மொழி.

இத்தாலியன் ஒரு காதல் மொழி.

இத்தாலியன் ஒரு பண்பாட்டு மொழி.

இவர்கள் பயன்படுத்தும் நிறைய வார்த்தைகள் ஆங்கில-ஜெர்மானிய குடும்பத்திலிருந்து கடன் வாங்கப்பட்டது என்றாலும், இவர்களின் இலக்கியங்களும் மொழியை செறிவாக்கியுள்ளன. தாந்தே அவர்களின் 'டிவைன் காமெடி'யை இத்தாலிய மொழியில் வாசித்தால்தான் அதை முழுமையாக ரசிக்க முடியும்.

ரோமிற்கு வந்த சில நாட்களில் போர்க்கால அடிப்படையில் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன். கேத்தியா என்ற இளவலும் என் உச்சரிப்பு வளர்ச்சிக்கு உதவினார்.

'க்வெஸ்தோ எ மியோ தெலஃபோனினோ!' (இது என்னுடைய செல்லிடப்பேசி!) - இதுதான் நான் முதலில் ரசித்த இத்தாலியச் சொல்லாடல்.

இன்னும் இத்தாலியன் கற்க வேண்டும்.

ஒரு புதிய மொழியைக் கற்கும்போது ஒரு புதிய உலகத்திற்குள் நாம் நுழைகிறோம்தானே!


Wednesday, April 15, 2015

விமானப் பயணம்

'பவானிசிங், பவானிசிங்!' அப்படின்னு ரெண்டு, மூனு நாளா வாசிச்சி, 'பவானி;' அப்படிங்கிற 'சிங்குப்' பொண்ணு போலனு நினைச்சா பெரிய கண்ணாடி, முன்னால் வழுக்கை, சஃபாரி என்று சிரிச்சுக்கொண்டிருக்கிறார் வழக்கறிஞர் பவானிசிங். ஒருவழியா அவரே ஆஜராகலாம்னு சொல்லிடுச்சு கர்நாடகா நீதிமன்றம். அவருக்கு மறுப்பு தெரிவிச்சா, வழக்கு இன்னும் ஒரு வருடம் தள்ளிப்போகும். சும்மாவே, நம்ம ஊரு இப்போ ரெண்டு முதல்வர்களை வச்சி படாத பாடு படுது.

இன்னொரு விஷயம் கவனிச்சிங்களா! 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி மேல முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு பதிவு செய்தவுடன், அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டது தலைமை. ஆனால், ஜெயலலிதா மேல் தீர்ப்பு வந்தும், குற்றவாளி என அறிவிக்கப்பட்டும் ஏன் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை?

வாழ்க்கையின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைப்பதில்லையே.

இன்று காலையில் எழும்போது ஒரு முடிவு எடுத்தேன். யாரைப் பற்றியும் மற்றவர்களிடம் பேசக் கூடாது. மனிதர்களை ரொம்ப கிரிட்டிக்கலாக பார்க்கக் கூடாது. எங்க பாஸ் ஃபாதர் சார்லி; சொல்வார்: 'மனிதர்களை என்று நாம் ஆராய்ச்சி செய்யத் தொடங்குகிறோமோ, அப்பொழுதே அவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம்!' என்று.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினோம்.

இன்று விமானப் பயணம் பற்றிப் பேசுவோம்.

ரோமிற்கு வந்தது என் முதல் பயணம் இல்லை என்றாலும், ஐரோப்பா கண்டத்திற்கு இதுதான் முதல் பயணம் என்பதால், முதல் உலகம் எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆசை நிறையவே இருந்தது.

சென்னையிலிருந்து தோகா வழி ரோம் செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ். தோகாவில் இரண்டு மணி நேரம் டிரான்சிட்.

விமானம் என்றதும் கோட்சூட் போட்டு, ஷூ அணிந்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலை இன்று மாறிவிட்டது. அவசரப் பயணங்களுக்கும், நெடுந்தூரப் பயணங்களுக்கும் பயன்படுத்தும் ஒரு வாகனம் அவ்வளவுதான். இதற்கு ஒரு சின்ன உதாரணம், சென்னையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எனக்கு இரண்டு வரிசைக்கு முன்னிருந்த பெண் ஒருவர் சுடிதாருடன் மாற்று அறைக்குச் சென்றுவிட்டு, நைட்டியுடன் திரும்பினார். அந்நேரம் ஏதோ நாம மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியனில் போவதுபோன்ற உணர்வுதான் இருந்தது. டிரெயினில் கொய்யாப்பழம், கடலைப் பருப்பு விற்பது போல விமானத்திலும் விற்பனை நடக்கிறது. 'என் பெற்றோர் குஜராத்தில் இருக்கிறார்கள். அங்கே பூகம்பம் வந்தபோது நாங்கள்...' என்று நாம் பேருந்திலும், டிரெயினிலும் பார்க்கும் மஞ்சள் கலர் அட்டைகளையும் விமானத்தில் பார்க்கலாம்.

விமானம் உடைஞ்சா அல்லது விபத்துக்குள்ளானா அதில் உள்ள கறுப்பு பெட்டி மட்டும்தான் அழியாது என்று எங்க ப்ரஃபசர் ஒருத்தர் சொன்னபோது, 'அப்படின்னா விமானம் முழுவதையும் கறுப்பு பெட்டி போல செய்யலாமே!' என்று சொல்லி அவரை டரியல் ஆக்கினவங்க நாங்க.

விமானப் பயணம் சொல்லிக் கொடுத்தவைகள் இரண்டு:

1. குறைவான சுமை. மகிழ்ச்சியான பயணம். வெளிநாட்டில் எதுவும் கிடைக்காது என்று சொல்லியே சாக்ஸ், கர்ச்சீப், பேண்ட், சர்ட், மாத்திரை, புத்தகம் என வாங்கி நிறைத்துவிட்டேன். என்னால் நகர்த்தக்கூட முடியாத அளவுக்கு லக்கேஜ். செக்-இன் செய்யும்போது எடை அதிகமாக இருப்பதால் இன்னும் கொஞ்சம் பணம் கட்டச் சொன்னார்கள். ரொம்ப லக்கேஜ் இருந்தா முதலில் செக்-இன் செய்யக் கூடாது. முதலில் ரொம்ப மெதுவாக வேலை பார்ப்பதால் நம் லக்கேஜ் எல்லாத்தையும் சோதித்துக் கொண்டிருப்பார்கள். கடைசியாகச் சென்றால் அவசர அவசரமாக வாங்கி உள்ளே அனுப்பி விடுவார்கள். ஆனால், இந்த முதல் அனுபவம் கற்றுக்கொடுத்ததிலிருந்து கைப்பை தவிர வேறு எதுவும் எடுத்துச் செல்வது கிடையாது. குறைவான சுமைகள் கொண்டு செல்வதால் விமான நிலையத்தில் காத்திருப்பும் குறைகிறது.

2. விமானத் தாமதம். தோகாவிலிருந்து புறப்பட்ட விமானம் இரண்டு மணி நேரம் தாமதம். மனது பதறிக் கொண்டிருந்தது. ஏர்போர்ட்டில் என்னை அழைக்க வரும் அந்த இத்தாலிய அருட்பணியாளருக்கு அவ்வளவு பொறுமை இருக்குமா? என்று. ஃபோன் அடித்தோ, மின்னஞ்சல் செய்தோ தாமதத்தையும் அறிவிக்க முடியாத நிலை. இருந்தாலும் காத்திருந்தார் அருட்பணியாளர். தாமதம் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. 'ஸாரி!' என்றேன். 'விமானம் தாமதமானால் நீ என்ன செய்ய முடியும்!' என்றார். ஜென்டில்மேன்! விமானத் தாமதம் பலருக்கு பல உணர்வுகளை ஏற்படுத்தும். சிலர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பர். சிலர் மொபைலில் புலம்பிக் கொண்டிருப்பர். சிலர் தூங்குவர். சிலர் சாதுவாக இருப்பர். மொபைலில் புலம்பலைத் தவிர நான் இந்த மூன்றையும் செய்தேன்.


Tuesday, April 14, 2015

தமிழ்ப் புத்தாண்டா?

ஏப்பிரல் 14, அதாவது சித்திரை 1 அன்று தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறதா அல்லது தை 1 அன்று புத்தாண்டு தொடங்குகிறதா என்பதில் குழப்பம் இருக்கிறது.

மக்களின் முதல்வர் வாழ்த்து சொன்ன மாதிரி இன்று நம் தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லவில்லை.

தமிழன் ரொம்பவே பாவம். அவன் கொண்டாடும் விழாவில் கூட அரசியல்.

சித்திரை 1 ஒரு ஆரியத் திணப்பு என்கிறார்கள் திராவிடர்கள். ஆனால், ஒரு காலத்தில் திராவிடர்கள் என்று சேர்ந்து நின்ற நாமே இன்று ஒருவர் மற்றவரை அடித்துக் கொண்டிருக்கிறோம். குடிக்க தண்ணீர் இல்லை. செய்வதற்கு வேலை இல்லை. வெளியிலிருந்து வந்தவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். நாம் வெளியே போனாலும் நமக்கு அடி. உள்ளே இருந்தாலும் நமக்கு அடி. இதையெல்லாம் கண்டுகொள்ளாத நம்ம கோட் ஸ்பெஷலிஸ்ட் மோடி ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் போயிருக்கிறார். 'எங்க ஊருக்கு வாங்க! எங்க ஊருக்கு வாங்க! மேக் இன் இந்தியா!' அப்படின்னு யாருமே இல்லாத ஊருல ரொம்ப சீரியசா டீ ஆத்திகிட்டு இருக்கிறார்.

ஜெயா ஜெயிலிக்குப் போவாரா மாட்டாரா என்று அதிமுக ஆர்வமாக இருக்கிறது.

'சாராயம் விற்றால் தான் கடனை அடைக்க முடியும்!' என்று நிறையக் குடிக்கச் சொல்கிறார் நம்ம பன்னீர்.

பெண்களின் கழுத்தில் இருக்கும் தாலிக்கயிற்றை அவிழ்க்கும் போராட்டம் நடத்துகிறது தி.க.

2ஜி வழக்கு இருப்பதால் அடக்கி வாசிக்கிறது திமுக.

இராஜபக்சே அரசு கவிழ்ந்தவுடன், இனி அட்டாக் செய்ய ஆளில்லை என்று பச்சை சட்டை போட்டுக் கொண்டு பழனி புறப்பட்டுவிட்டார் சீமான்.

வழக்கம்போல சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே, தன் மகனின் 'சகாப்தம்' படம் பார்ப்பதிலியே தன் பொழுதைக் கழிக்கின்றார் விஜயகாந்த்.

தமிழ்நாடு என்னும் கப்பலில் நிறைய ஓட்டைகள் விழுந்து, மூழ்கும் அபாயம் வந்து கொண்டே இருக்கிறது.

இருந்தாலும், இந்தக் கப்பல் பத்திரமாய்க் கரைசேரும் என்று ஒரு பக்கம் நம்பிக்கை.

மற்றொரு பக்கம், மூழ்குகிற கப்பலில் அரிசி திருடுவதுபோன்ற எலிக்கூட்டம்.

நிற்கவும் முடியவில்லை. உட்காரவும் முடியவில்லை. வெளியே குதிக்கவும் முடியவில்லை.

இருந்தாலும்,

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


வீசா

இன்றோடு இத்தாலிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆவதாலும், இன்னும் மூன்று மூன்று-வாரங்கள் (அதாவது, ஒன்பது வாரங்கள்) படிப்பு இருப்பதாலும், இந்த இறுதி நாட்களில் என் மூன்றாண்டைப் பின்னோக்கிப் பார்த்து நடந்து வந்த பாதையை திரும்ப அசைபோட்டு வலைப்பதிவில் எழுதலாம் என விழைகிறேன்.

'ஐயயோ! மறுபடி முதல்ல இருந்தா!' அப்படின்னு என்னோட ஆழ்மனம் கேட்கத்தான் செய்கிறது. இருந்தாலும் எழுதிப் பார்ப்போம்.

2012 ஏப்பிரல் 23தான் இத்தாலிக்கு வந்தேன். இருந்தாலும் 2012 ஏப்பிரல் 13 கைக்கு வீசா வந்துவிட்டதால் அன்றே இத்தாலிக்கு போனது போலத்தான் இருந்தது.
'வீசா' என்ற வார்த்தைதான் இன்றைய பதிவின் மையம்.

கடவுள் இந்த மண்ணுலகை ஆள்வதற்கு கதிரவன், நிலா என்று இரண்டு ஒளிப்பிழம்புகளைப் படைத்தாரென்றால், மனிதன் தன்னை ஆள்வதற்கு படைத்த இரண்டு பிழம்புகள் தாம் 'பாஸ்போர்ட்டும்', 'வீசாவும்'. 'நாம் எதை அல்லது எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்' என்று காட்டுவதற்கு பாஸ்போர்ட். 'நாம் எங்கே போகலாம், எங்கே போகக்கூடாது!' என்று சொல்வதற்கு வீசா.

எனக்குத் தெரிந்த மொழிகளில் இத்தாலியனில் மட்டும்தான் வீசாவை வேறு பெயர் சொல்லி அழைக்கிறார்கள். இத்தாலியனில் 'வீஸ்தோ' என்று சொல்கிறார்கள். 'வீஸ்தோ' என்றால் 'பார்த்தேன்' என்பது பொருள். இந்த வார்த்தையின் மூலம் லத்தீன் வார்த்தை. லத்தீன் மொழியின் 'வெதேரே' (பார்ப்பது) என்ற வினைச்சொல்லில் இருந்துதான் வீசா என்ற சொல்லாடல் உருவாகின்றது. அதாவது கான்செப்ட் இதுதான்:

உதாரணத்திற்கு, நான் ஒரு பணக்காரன். என் வீட்டிற்கு சமையல் வேலைக்கும், எடுபிடி வேலைக்கும் ஆள் தேவைப்படுகிறது. ஆனால் என் ஊர்க்காரனை நான் வேலைக்கு வைக்கலாம் என்றால் எவனும் கிடைக்க மாட்றான். அப்படியே கிடைத்தாலும் சம்பளம் ரொம்ப கேட்கிறான். நான் என்ன செய்வது? பக்கத்து ஊருல ஆட்கள் கிடைக்கிறார்கள். அவர்களை நான் போய் பார்த்துக் கூட்டி வருவதற்கு எனக்கு நேரம் இல்லை. நான் என்ன செய்கிறேன்? என் உறவினர் ஒருத்தனை அனுப்பி போய் பார்த்து எனக்கு ஆள் கூட்டி வா என்கிறேன். அவனும் போகிறான். சில நாட்கள் அவனாக ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்தவன் திடீரென்று ஒருநாள் என்ன சொல்கிறான்? 'என்னால அங்கிட்டு இங்கிட்டும் அலைய முடியல. அதனால ஒன்னு செய்வோம். நான் இங்கேயே இருக்கிறேன். இது நான் அனுப்புற ஆள் அப்படிங்கிறதுக்கு அவன் மேல ஒரு அடையாளம் போட்டு அனுப்புறேன்!' என்று சொல்லி ஆட்கள் மேல் அடையாளம் போட்டு அனுப்புகிறான். கொஞ்ச நாள் கழிச்சி என்ன ஆகுது? ஆட்கள் மேல் போடப்படுகிற அடையாளம் வியர்வையினாலும், மழையினாலும் அழிஞ்சிடுது. அப்புறம் என்ன யோசிக்கிறான். ஆட்கள் கையில ஒரு ஓலையில எழுதிக் கொடுத்து அனுப்புறான். ஓலை, பேப்பர் ஆகுது. பேப்பர் ஸ்டிக்கர் ஆகுது. ஸ்டிக்கர் ப்ளாஸ்டிக் ஆகுது. வீசா பிறக்குது.

இப்படித்தான் வீசா உருவாகியிருக்க வேண்டும்.

நான் இவனைப் 'பார்த்தேன்!' என்று சொல்லப்படும் இந்த வீசா மூன்று காரணங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது: படிப்பு, பணி மற்றும் சுற்றுலா. இந்த மூன்றும் தான் வாழ்க்கை என நினைக்கிறது அந்நிய நாடு. 'உறவினரைப் பார்க்க' அல்லது 'மருத்துவம் பார்க்க' என்பதுதான் இப்போ வந்தவைதான்.

நான் பெற்ற வீசா 'துறவறப்பணிக்கான' வீசா. இத்தாலியிலிருந்து அழைப்புக் கடிதம் வந்ததும் அதை மும்பையிலிருந்த இத்தாலிய தூதரகத்திற்கு அனுப்பினேன். துறவறப் பணிக்கான வீசா பரிந்துரைகள் மட்டும் அவர்களால் டில்லியில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருக்கும் 'மோன்சிங்ஞோர்' பார்த்துவிட்டு, தனக்கு செயலராக இருக்கும் அருட்சகோதரியிடம் 'ஓகே' கடிதம் அனுப்புவார். பின் ஓரிரு நாட்களில் வீசா கிடைத்துவிடும். இப்படியெல்லாம் நடக்கும் நம்ம நேரம் நல்லா இருந்தா! நமக்கு அந்த நேரம் ராகுகாலம். சனி ரவுண்ட் கட்டி அடிச்சதால, டில்லியில் தங்கிவிட்டது பேப்பர். யாரிடம் என்ன கேட்க என்று திணறிக்கொண்டிருந்த போது ஒரு ஃபாதர் சொன்னார். 'தம்பி! டெல்லியில ஒரு மலையாளி சிஸ்டர் தான் லெட்டர் கொடுப்பா. மலையாளி தவிர யார் வீசா கேட்டாலும் கிடப்பில் போட்டுடுவா! நீ பேசாம டிக்கெட்டை மாத்திடு!' அப்படின்னு அட்வைஸ் கொடுத்தார். நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல. சரி! டெல்லிக்கே பேசிடுவோம்னு சொல்லி வத்திக்கான் தூதரகத்தின் நம்பர கண்டு பிடிச்சு சுழற்றினா, அதே மலையாளியின் குரல். நுன்சியோவுக்கு கனெக்ஷன் கொடுக்கச் சொன்னேன். 'அது முடியாது!' என்றாள். 'ஏன்?' என்றேன். 'இந்த விஷயமெல்லாம் நான்தான் பேசுவேன்!' என்றாள். 'ஏன் லெட்டர் கொடுக்கல!' என்றேன். 'உங்களுக்கு வயசு கம்மி. இப்போ ஏன் படிக்க போறீங்க?' என்றாள். 'எல்லாம் அங்க ஓகே ஆயிடுச்சுல. உனக்கு என்ன?' என்றேன். 'இல்லை. இங்க இருந்து போறவங்க திரும்ப வர்றதில்லை. அதனால நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்!' 'இது இத்தாலிக்காரன்ல சொல்லணும். நீ ஏன் சொல்றே?' என்றேன். கொஞ்ச நேரம் அமைதி காத்தாள். பின் லெட்டர் தர்றேன் என்றாள். எனக்கு ஒன்றும் புரியல. சாமி வரங்கொடுத்தாலும், பூசாரி விட மாட்றாளே அப்படின்னு நினைச்சு மனசுக்குள் ரெண்டு, மூணு கெட்ட வார்த்தை வேறு வந்து போனது.

இந்தா, அந்தான்னு காத்திருந்து வீசாவும் வந்தது.

இந்த வீசா விஷயத்துல அமெரிக்கா கொஞ்சம் நல்லவங்க. கொடுக்கறவரைக்கு கொஞ்சம் இழுத்தடிப்பாங்க. ஆனா, பயபுள்ள பத்து வருஷத்துக்குனு தாராளமா கொடுக்கும்!

இந்த வீசா எடுக்கிறதுல கற்றுக்கொண்ட விஷயங்கள் மூன்று:

1. நம்ம வேலைய நாம தான் பார்க்கணும். அதுவா நடக்கும் அப்படின்னு நினைக்கிறதும், அல்லது யாராவது ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறதும் தவறு.

2. டிராவல் ஏஜென்சி. நம்ம பாஸ்போர்ட் தொலைஞ்சி போயிடக்கூடாதுனு நினைச்சி ப்ளு டார்ட்டில் அல்லது டிஎச்எல்லில் அனுப்பினால், அவன் கூலா பெயர் தெரியாத ஒரு கொரியர்ல அனுப்புவான். அவனுக்கு நம்ம டாக்குமெண்ட் பத்தியெல்லாம் கவலையில்லை. அப்படித்தான் அவன் எனக்கும் அனுப்பி வைத்தான். 'ஏன் அண்ணா இப்படி அனுப்புனீங்க?' என்றால், 'தொலைஞ்சுடுச்சுனா டூப்ளிகேட் வாங்கிக்கலாம்!' என்றான். அதுலயும் அவனுக்கு லாபம் தான. ஆகையால, நீங்க இந்த மாதிரி டுபாக்கூர் ஏஜன்சியிடம் போகாதீங்க.

3. செபம். செபம் பலிச்சது அப்படின்னு சொல்லல? அந்த நாட்களில் என் செப எண்ணங்கள் மாறிக்கொண்டே இருந்தன. கொஞ்ச நாட்களாக வெளிநாடு போக வேண்டும் என வேண்டிக்கொண்டிருந்த நான், லெட்டர் வந்ததும், 'வீசா' கிடைக்கணும்னு வேண்டுனேன். 'வீசா' கிடைத்ததும் 'டிக்கெட்' கிடைக்கணும்னு வேண்டுனேன். டிக்கெட் கிடைத்ததும் பயணம் நல்லா இருக்கணும்னு வேண்டுனேன். பயணம் நல்லா தொடங்கியதும் பாஸ் கூப்பிட வரனும்னு வேண்டுனேன். கூப்பிட வந்ததும் பங்கு நல்லா இருக்கணும்னு வேண்டுனேன். பங்கு நல்லா இருந்ததும் படிக்க இடம் கிடைக்கணும்னு வேண்டுனேன். இப்படி அடுத்தடுத்து செபம் மாறிக்கொண்டே இருந்தது. ஆக, செபம் என்பது நான் வெளிப்படுத்தும் என் ஆழ்மன ஆசைக்கான வடிகால்தான் என்பது எனக்கு அப்போது தெரிந்தது. தேவைகள் கூடக்கூட செபங்களும், அதன் காரணமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இது நல்லதொன்று அல்ல!



Sunday, April 12, 2015

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஜே.கே. என்று எல்லாராலும் அறியப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் கடந்த வாரம் மறைந்துவிட்டார்.

இவரின் படைப்பில் நான் அதிகம் ரசித்தது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'. நேரமிருந்தால் இந்தத் திரைப்படங்களைக் கண்டிப்பாகப் பாருங்கள். ப்ளாக் அன்ட் ஒய்ட்டா என்று உடனே ஓடிவிடாதீர்கள். ஒரு நாவல் படிப்பது போலவே இருக்கும்.

வாழ்வின் ரசனைகளை விறுப்பு வெறுப்பின்றி பகிர்ந்து கொள்ள ஜெயகாந்தனை அடித்துக்கொள்ள யாருமில்லை.

கண்ணதாசன் போலவே தனக்கு மரணமில்லை என்று சொன்ன கலைஞன் இவர்.

ஒரு புத்தகம் படிக்கும் போது அதில் 'என்ன?' எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் அல்லது ஒரு எழுத்தாளர் 'என்ன?' எழுதியிருக்கிறார் என்பதையும்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் 'என்ன?' என்ற கேள்வியைத் தாண்டி நாம் இன்னும் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று என் அப்பா சொல்வார். அவர் அதிகம் படிக்கவில்லைதான். ஆனால் அவரும் ஜெயகாந்தன் ரசிகர்தான். 'எப்படி?' மற்றும் 'ஏன்?' என்பதுதான் அந்தக் கேள்விகள். 'எப்படி?' ஒரு கதையை அதன் ஆசிரியர் கையாண்டிருக்கிறார் என்று நாம் பார்க்கும்போது, நம் படைப்பாற்றல் வளர்கிறது. இதை இப்படிச் செய்திருந்தால் எப்படி இருக்கும் என நம் மூளை சிந்திக்கத் தொடங்கும். அடுத்த கேள்வி: ஏன்? எந்த நோக்கத்திற்காக ஒரு கதையை அல்லது ஒரு படைப்பை கலைஞன் உருவாக்க வேண்டும். நாம் பேசுவதற்கு பல நேரங்களில் நோக்கங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நோக்கம் இல்லாமல் நாம் எதையும் எழுதுவதில்லை. 'சும்மா!' சொன்னேன் என்று சொல்லும் அளவிற்கு, 'சும்மா!' எழுதினேன் என நாம் சொல்லுவதில்லையே!

இது நம்ம வாழ்க்கைக்கும் பொருந்தும்.

நாம அடுத்தவங்களப் பார்க்கும்போது அவர் என்னவாக இருக்கிறார்? என்று கேட்பதை விட, அவர் 'எப்படி' இருக்கிறார் என்று கேட்டால் அவருக்கு மகிழ்ச்சி தானே.

அதே போல நாம் நம்மைப் பார்த்தை 'என்னவாக இருக்கிறேன்?' என்று கேட்பதை விட, 'ஏன் இருக்கிறேன்?' என்று கேட்டால் நம் இலக்கு தெளிவாகும்தானே.

ஜெயகாந்தன் - அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறுவதாக!


எங்க போனீங்க தோமா?

ரோம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் 'திவினோ அமோரே' (= கடவுளின் அன்பு) சிற்றாலயத்திற்குச் சென்றேன் இன்று. நாளை ஆண்டவரின் இறையிரக்கப் பெருவிழா என்பதாலும், இந்த ஆலயத்தில் இறையிரக்கப் பக்தி சிறந்தது என்பதாலும் இங்கு போகலாம் என நினைத்தேன். போகவும் செய்தேன். மதிய நேரம். சாப்பிட்டுவிட்டு உடனே புறப்பட்டதால் கொஞ்சம் தூக்க கலக்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆலயத்தை அடைந்தவுடன் தூக்கமெல்லாம் போய்விட்டது.

உள்ளே போய் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு, மெழுகுதிரி ஒன்றையும் ஏற்றிவிட்டு வெளியே வந்து அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தேன். எனக்கு எதிரில் ஒரு காதலன்-காதலி. மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முத்தமிடும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன். முத்தமிடும் போது அவர்கள் பேசிக்கொண்டதும் காதில் விழுந்தது. 'முத்தமிடும்போது ஏன் கண்ணை மூடிக் கொள்கிறாய்?' என்று கோபப்பட்டாள் அண்ணல். 'அப்படியா?' என்று அசடு வழிந்தான் அண்ணன். 'இப்போ கண்ண மூடக்கூடாது!' என்று உதடுகளை இவன் உதடுகளருகே கொண்டு வந்தாள் அண்ணல். பயபுள்ள இப்பவும் கண்ண மூடுச்சு. 'பாத்தியா! நீ மறுபடியும் கண்ண மூடுற!' என்று கோபப்பட்டாள் அண்ணல். பதில் தெரியாமல் அண்ணன் விழித்தான்.

ஓடிப்போய், 'தங்கையே! நம் கண்களால் கொள்ள முடியாத பெரிய பொருள் கண்ணருகே வந்தால் கண் தானாக மூடிக்கொள்ளும். இதற்குப் பெயர்தான் அணிச்சை செயல் அல்லது உங்க ஆங்கிலத்தில் ரிஃப்ளெக்ஸ்!' என்று சொல்லவேண்டும் போல இருந்தது.

'போங்க! போயி சரியா சயின்ஸ் படிங்க!' அப்படின்னு மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

முத்தமிடும்போது கண்களை மூடிக்கொள்வதற்கும், தோமா உயிர்த்த ஆண்டவரின் உடலுக்குள் கையிடுவதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கேட்டதன் விடைதான் இன்றைய பதிவு.

தோமா ஒரு சுவராஸ்யமான கேரக்டர். இயேசு தன் இறப்பைப் பற்றிச் சொல்லும் போது, 'வாருங்கள், நாமும் சென்று அவரோடு மடிவோம்!' என்று சொன்னவரும் இவர்தான். 'அவரின் கைகளில் என் விரலை விட்டு, அவரின் மார்பில் என் கையை விட்டாலொழிய நம்ப மாட்டேன்!' என்று சொன்னவரும் இவர்தான்.

ரொம்ப துணிச்சலும் இவரிடம் இருக்கிறது! நம்பிக்கையில் தளர்வும் இருக்கிறது!

நாம ஒன்ன சொல்லும் போது அத மத்தவங்க நம்பலனா நம்மள அறியாம ஒரு இயலாமையும் பற்றிக்கொள்ளும். சீடர்கள் தோமாவிடம் இயேசுவைக் கண்டதைப் பற்றிச் சொல்லி, அதை தோமா நம்பாதபோது அவர்களுக்கும் அந்த இயலாமை இருந்திருக்கும். சீடர்களின் இயலாமையை இயேசுவே போக்குகின்றார்.

ஸ்க்வாஷ் விளையாண்டுருக்கீங்களா? சுவற்றை நோக்கி வேகமாக அடிக்கப்படுகின்ற பந்து வேகமாகத் திரும்பி வரும். அதே போல ஃபுட்பாலில் தூரத்திலிருந்து வரும் பந்திற்குத்தான் ஃபோர்ஸ் அதிகம்.

இயேசு முதன் முதலாகத் தோன்றியபோது தூரத்தில் இருந்த தோமா என்ற பந்துதான் இயேசு இரண்டாம் முறை வந்தபோது வேகமாக வந்து அவரின் உடலிற்குள்ளேயே நுழைகிறது. ஆக, நாம் கடவுளிடமிருந்து தூரமாக இருக்கும்போதுதான் அவருக்கு ரொம்ப நெருக்கமாகிறோம். இதைத்தான் அகுஸ்தினார் தன் 'உள்ளக்கிடக்கைகள்!' (Confessions) என்னும் நூலில் அழகாக எழுதுகிறார்:

'இதோ நான் எனக்கு வெளியே இருந்தேன்.
ஆனால் நீ எனக்கு உள்ளே இருந்தாய்.
உன்னை நான் வெளியில் தேடினேன்.
நீயோ என்னை என் உள்ளே கண்டாய்.
உன்னை விட்டு நான் தூரம் போகப் போக
நீ எனக்கு அருகில் நெருங்கி வந்தாய்.
நீதான் நான், நான்தான் நீ என என்னை நெருக்கி விட்டாய்.
நான் முதலில் நொறுங்கிப் போனேன்!
பின் நெருங்கிப் போனேன்!'

அருகிலிருந்தால் சில நேரங்கள் கண்கள் மூடிக்கொள்ளும். சீடர்களுக்கு அப்படித்தான் மூடிக்கொண்டது. நாமும் கடவுளுக்கு ரொம்ப அருகில் இருக்கிறோம், அவரை முத்தமிடுகிறோம் என்று நெருக்கமாக இருக்கும் நேரத்தில்கூட நாம் அவரைப் பார்க்க முடியாமல் நம் கண்கள் மூடிக்கொள்ள நேரிடலாம். ஆனால் நாம் தூரத்தில் நின்றால் அவரின் உடலுக்குள்ளே சென்றுவிடலாம்.

இது உறவுக்கும் பொருந்தும்.

அன்றாடம் அருகிலிருக்கும் சிலர் என்னதான் தினமும் தொட்டாலும், முத்தமிட்டாலும் ஒருவரின் அன்பை மற்றவர் புரிந்து கொள்வதில்லை. ஆனால், படிப்பினிமித்தம், பணியினிமித்தம் மேற்கொள்ளும் பிரிவு ஒருவர் மற்றவரை ஊடுருவிச் செல்ல வைத்துவிடுகிறது. இதையே அப்துல் ரகுமான், 'பிரியம் வர பிரிந்தே இருக்க வேண்டும்!' எனவும், கலீல் கிப்ரான், 'ஒரு மரத்திற்கும் அடுத்த மரத்திற்கும் உள்ளே இடைவெளியே இரண்டு மரங்களும் கிளைபரப்பி வளர வாய்ப்பு தருகிறது' என்றும் சொல்கின்றனர்.

இறையிரக்க செபத்தில் நாம் 'இயேசுவே! என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்!' என்று சொல்கிறோம்.

அத்தோடு சேர்த்து, 'இயேசுவே! நான் நம்ப இயலாமல் தூரத்தில் இருக்கும்போது, உன் உடலை ஊடுருவிப்பாயும் ஆற்றல் பெறுகிறேன்!' என்றும் சொல்லலாமே!


Friday, April 10, 2015

அப்புறம் பார்க்கலாம்!

மெட்ரோவிலிருந்து நான் இறங்க வேண்டிய பார்பரேனி ஸ்டேஷனில் இறங்கியபோது என் கண்ணில் ஒரு விளம்பரம் பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்தான் விளம்பரப் பலகைகள் மாற்றப்படும்.

'அப்புறம் பார்க்கலாம்னு சொல்லாதீங்க! இப்பவே டிக்கெட் புக் பண்ணுங்க' என்ற வாசகத்துடன் மஞ்சள் நிறத்தில் கறுப்பு எழுத்துகளோடு மின்னியது ஒரு சுற்றுலா நிறுவனத்தின் விளம்பரம்.

'அப்புறம் பார்க்கலாம்!' - இந்த இரண்டு வார்த்தைகளை நாம் அனைவருமே ஏதோ ஒரு நேரத்தில் அல்லது சூழலில் பயன்படுத்தியிருப்போம்.

'அப்புறம் பேசுறேன்!' என்று நாம் சொல்லிக் கட் பண்ணும் அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான் - 'இப்போ ஃபோனை வையி!'

ஆனால், அப்புறம் பார்க்கலாம்! என்று சொல்வதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன:

அ. தள்ளிப்போடுதல் - இப்போ செய்ய வேண்டாம். அப்புறம் செய்வோம்.

ஆ. எதிர்பார்ப்பு. ஒருவர் மற்றவரிடமிருந்து விடைபெறும்போதும் நாம் 'அப்புறம் பார்க்கலாம்!' என்றே சொல்கின்றோம்.

தள்ளிப்போடுதல் - போஸ்ட்போனிங்! ஒரு பெரிய பிரச்சினைதான்.

மார்ச்சு மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் எங்கள் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் கருத்தரங்களில் சமர்ப்பிக்கப்ட்ட 17 ஆய்வுத்தாள்களி;ன் சுருக்கத்தையும், அதை வாசித்தவர்களைப் பற்றிய ஆய்வையும் அனுப்பவேண்டும். கருத்தரங்கு முடிந்த அன்றே அனுப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அடுத்தடுத்து பயண வேலைகள் இருந்ததால் 'அப்புறம் பார்க்கலாம்!' என நினைத்துத் தள்ளி வைத்தேன். பயணம் முடிந்தும் எழுத மனம் வரவில்லை. ஏப்பிரல் 10தான் கடைசி நாள் என்று டெலிஃபோன் நேற்று ரிமைண்டர் செய்ததால் இரவோடு இரவாக உட்கார்ந்து முடித்தாயிற்று. இன்று கல்லூரிக்கு அனுப்பியும் விட்டேன்.

இந்த 'அப்புறம் பார்க்கலாம்' மனநிலை அன்றைக்கு எனக்கு கொஞ்ச நேர அவகாசத்தையும், ஆறுதலையும் கொடுத்ததுதான். ஆனால், ஒரு இரவு முழுவதும் என்னை விழித்திருக்க வைத்துவிட்டதே. கொஞ்ச நேர இன்பத்திற்கு ஆசைப்படும் மனம் தள்ளிப்போடுகிறது. பின் அதுவே, 'ஐயோ! இவ்வளவு வேலை இருக்கே!' என்று வருத்தமும் படுகின்றது.

'அப்புறம் பார்க்கலாம்!' என்பது 'ஆம்' என்பதற்கும், 'இல்லை' என்பதற்குமான இழுபறி மனநிலை. வாழ்வில் சில முக்கியமான முடிவுகள் கூட இவற்றால் பாதிக்கப்படலாம். புனேயில் நான் படித்துக்கொண்டிருந்தபோது அருட்தந்தை ஒருவர் என்னை நூலகத்தில் சந்தித்தார். என் பேச்சு ரொம்ப பிடித்திருப்பதாகவும், அன்று இரவு உணவருந்த வெளியில் செல்லலாம் என்றும் சொன்னார். கொஞ்ச நேரம் யோசிச்ச நான், போவதற்கு சோம்பேறித்தனப்பட்டு, 'அப்புறம் பார்க்கலாம்!' - 'இன்னொரு நாள் பார்க்கலாம்!' என்றேன். கடந்த ஆண்டு அவர் வட இந்தியாவில் ஒரு மறைமாவட்டத்தின் ஆயராகிவிட்டார் என்றும் செய்தி வாசித்தேன். 'அப்புறம் பார்க்கலாம்!' என்று சொன்ன அவரை நான் இன்றுவரை பார்க்கவேயில்லை. அன்று ஒருவேளை அவரை நான் பார்த்திருந்தால், உணவருந்த வெளியில் சென்றிருந்தால், இன்று அவரோடு நட்பில் இணைந்திருக்கலாம்தானே!

ஆகவே, இன்று ஒரு முடிவெடுத்தேன்: 'தள்ளிப்போடுதலைத் தள்ளிப்போடுவேன்!' என்றுதான்.

ஹலோ! என்ன பார்க்கிறீங்க!

'அப்புறம் பார்க்கலாம்!'


கொலோசியம் எங்கே இருக்கு?

இன்று மதியம் வத்திக்கான் பேதுரு ஆலயத்திலிருந்து இல்லம் திரும்பிக் கொண்டிருந்தேன். மெட்ரோ ஏறுவதற்குச் செல்லும் சாலையில் ஒரு பெண்மணி என்னை இடைமறித்தார். வயது 75 முதல் 80 இருக்கும். 'கொலோசியம் எங்கே இருக்கு?' என்றும் 'கொலோசியத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும்?' என்றும் கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் வெள்ளைக் கலர்காரங்களைத் தவிர வேறு யாரிடமும் சுற்றுலா பயணிகள் வழி கேட்க மாட்டாங்க. இது ரோமில் மட்டுமல்ல. நான் ஐரோப்பாவில் பார்த்த இடங்களிலெல்லாம் நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். 'வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்!' என்பது இவர்களின் அபிப்பிராயம் போல. அந்தப் பெண்மணி என்னிடம் வழிகேட்டிருக்கக் காரணம் நான் இன்று அணிந்திருந்த அருட்பணியாளரின் கறுப்பு உடையும், வெள்ளை கழுத்துப்பட்டையும்தான் என நினைக்கிறேன். அவர் பெயர் கிறிஸ்டல். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். ரோமைச் சுற்றிப் பார்க்கத் தனியாக வந்திருக்கிறார்போலும். கொலோசியத்தைப் பார்த்துவிட்டு இன்று மாலையே தன் ஊர் திரும்புவதாகச் சொன்னார்.

மெட்ரோவில் செல்வது எளிது என்பதால், 'நீங்கள் விரும்பினால் என்னுடன் வரலாம்!' என்றேன். 'இல்லை. மெட்ரோ வேண்டாம். சுமைகள் அதிகம் இருக்கின்றன' என்றார். ஆம் ஒரு கைப்பையும், பெரிய பெட்டியும் வைத்திருந்தார். நடந்து போவது தூரம் என்பதால், பேருந்து எடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்டேன். 'சரி!' என்றார். பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்று அவருக்கு பேருந்து அட்டவணையையும் சுட்டிக் காட்டினேன்.

'ரொம்ப நன்றி!' என்று புன்முறுவல் பூத்தார்.

முன்பின் தெரியாத ஒரு நாட்டில், முன்பின் தெரியாத மனிதர்கள் நடுவில் இத்தனை வயதில் வந்து நின்று கொண்டு இவர் கஷ்டப்பட வேண்டுமா என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன்.

'உலகையே சுற்றிப் பார்க்க வேண்டும்' என்னும் ஆர்வம் ஒரு புறம் அவருக்கு.

மற்றொரு பக்கம் அவரின் வயது தரும் இயலாமை.

இந்த இரண்டிற்குமான போராட்டம் அவர் கண்களில் தெரிந்தது.

'ஆர்வம்' மற்றும் 'இயலாமை' - இந்த இரண்டிற்குமான போராட்டம்தான் வாழ்க்கை. இல்லையா?

நல்ல மார்க் எடுக்கணும் அப்படிங்கிற ஆர்வம் ஒரு பக்கம். கூடவே வருகின்ற இயலாமைகள் மறுபக்கம். இந்த இரண்டிற்குமான போராட்டம் தான் கல்வி.

நல்ல சம்பளம் வாங்கணும் அப்படிங்கிற ஆர்வம் ஒரு பக்கம். கூடவே வருகின்ற இன்னல்களும், இயலாமைகளும் மறுபக்கம். இந்த இரண்டிற்குமான போராட்டம் தான் வேலை.

எங்கேயோ இருந்து வந்து, ஒற்றைக் கேள்வியினால் வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுத்த கிறிஸ்டலுக்கு என் நன்றிகள்.