Thursday, March 7, 2019

நோன்பு

இன்றைய (8 மார்ச் 2019) நற்செய்தி (மத் 9:14-15)

நோன்பு

தவக்காலம் தொடங்கியதோ என்னவோ, வாட்ஸ்ஆப், டுவிட்டர், யூட்யூப் என எங்கெங்கு காணினும் சிலுவையும், சாம்பலும், சோகமான இசையும், வாடிய முகங்களும், எச்சரிக்கை வாசகங்களும் ஸ்டேட்டஸாக, கீச்சாக, காணொளியாக வலம் வருகின்றன.

அப்படி வலம் வந்த ஸ்டேட்டஸ் ஒன்றில், 'லெந்து' என்றால் 'லவ்' என்று தலைப்பிட்டு, 'இறைவேண்டல்' - 'உனக்கும் இறைவனுக்கும் உள்ள அன்பு,' 'நோன்பு' - 'உனக்கும் உனக்கும் உள்ள அன்பு,' 'தர்மம்' - 'உனக்கும் பிறருக்கும் உள்ள அன்பு,' ஆக, 'தவக்காலம்' என்றாலே 'அன்பு' என்று இருந்தது.

'நோன்பு' - 'உனக்கும் உனக்கும் உள்ள அன்பு'

இதை நான் நேற்று வாசித்தவடன் மிகவும் சரி எனப்பட்டது. ஆனால், இன்றைய நற்செய்தியும் (மத் 9:14-15), முதல் வாசகமும் (எசா 58:1-9), நோன்பின் பொருள் இது மட்டும் அல்ல என்று காட்டுகின்றன.

'நோன்பு' என்பதை பழைய தமிழில் 'விரதம்' என்கிறோம். 'விரதம்' என்ற சமஸ்கிருத வார்த்தை, 'விர்' மற்றும் 'ர்த்தா' என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பு. 'விர்' என்றால் 'விரும்புதல், ஆளுதல், தள்ளிவைத்தல், வரையறை செய்தல், தேர்ந்தெடுத்தல்' என்றும், 'ர்த்தா' என்றால் 'பிரபஞ்சத்தோடு அல்லது பிரபஞ்சத்தில் உள்ள ஒருங்கிணைவு, ஒழுங்கமைப்பு' என்றும் பொருள். ஆக, இணைத்துப் பார்க்கும்போது, ஒருவர் தன் தனிப்பட்ட முயற்சி அல்லது தெரிவின் வழியாக பிரபஞ்சத்தின் ஒழுங்கமைப்போடு தன்னை இணைத்துக்கொள்வதே விரதம். இது உணவு ஒறுத்தலாக இருக்கலாம், அல்லது செயல் மாற்றமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, புலால் ஒறுத்தலும் விரதமே, உணவு மறுத்தலும் விரதமே, உடலுறவு மறுத்தலும் விரதமே, மது மறுத்தலும் விரதமே.

உபநிடதங்கள் 'விரதத்திற்கு' இரண்டு பொருள் தருகின்றன: ஒன்று, ஒருவர் தனிப்பட்டு, தனக்குத்தானே எடுத்துக்கொள்ளும் வாக்குறுதி விரதம். பெரும்பாலும் இது உணவு மறுக்கும் வாக்குறுதியாக இருந்தது. இரண்டு, ஒரு அறநெறி ஒழுக்கம். எடுத்துக்காட்டாக, 'பதிவிரதம்' என்பது ஒரே திருமணத்திற்குள் பிரமாணிக்கமாக இருப்பது, 'குருவிரதம்' என்பது ஆசிரியருக்கு கீழ்ப்படிவது. மேலும், நாளைப் பொறுத்து, கடவுளைப் பொறுத்து, உடல் உறுப்பைப் பொறுத்து விரதங்களில் பல வகைகள் இருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் வருகின்ற யோவானின் சீடர்கள், 'நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?' என்று கேட்கின்றனர். இயேசு அவர்களுக்கு மணமகன் உருவகம் சொல்லி, 'மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வரும். அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்' என்கிறார்.

இங்கே, நோன்பு என்பது உண்ணாநிலை அல்ல. மாறாக, ஏதோ ஒரு வகையான ஒறுத்தல். ஆனால், யோவானின் சீடர்களும் பரிசேயர்களும் இதை வெறும் உண்ணாநிலை என்றும், தன்மையமானது என்றும் புரிந்துகொள்கின்றனர். ஆனால், இயேசு இந்த இரண்டு பொருளையும் மாற்றி, 'நோன்பு' என்பது 'மணமகனுக்கான தேடல்' என்று புதிய பொருளைத் தருகின்றார். அதாவது, நோன்பு என்பது மணமகன் மையமாக, மணமகனுக்கான எதிர்நோக்காக இருக்க வேண்டும். மேலும், மணமகன் விட்டுச்செல்லும் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது, மணமகனின் விழுமியங்களை வாழ்வது என்பவையே இயேசுவைப் பொறுத்தவரையில் நோன்பு.

இதையொட்டியே, இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 28:1-9) எசாயா இறைவாக்கினர் வழியாக, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களின் நோன்பு இருக்கும் முறையைக் கிண்டல் செய்கின்றார்: 'ஒருவன் நாணலைப் போலத் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையும் சாம்பலும் அணிவதா நோன்பு?' தொடர்ந்து, நோன்பின் புதிய வரையறையைத் தருகின்றார் கடவுள்: 'கொடுமைத் தளைகளை அவிழ்ப்பது, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்வது, எவ்வகை நுகத்தையும் உடைப்பது, பசித்தோருக்கு உணவைப் பகிர்வது, தங்குவதற்கு இடமில்லாதவர்களுக்கு இடம் தருவது, உடையற்றோருக்கு உடை தருவது'. மேலும், இத்தகைய நோன்பு இருந்தால் மட்டுமே 'உன் வாழ்வு விடியல் போல எழும். விரைவில் வாழ்வு துளிர்க்கும். உன் மன்றாட்டு கேட்கப்படும்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

இஸ்ரயேல் மக்கள் இருந்த நோன்பு தன்மையம் கொண்டதாகவும், எதையும் இழக்கத் தேவையில்லாததாகவும் இருந்தது. எடுத்துக்காட்டாக, புலால் மறுப்பு அல்லது உணவு மறுப்பு அவர்களுக்கு பசியைத் தந்தாலும் இப்படி மறுத்ததால் அவர்களின் பணம் சேமிக்கப்பட்டது. ஆக, நிறைய விரதம் நிறைய பணம் என்று விரதம் பொருளாதார முதலாளித்துவத்தையும் ஆதரித்தது. ஆனால், கடவுள் குறிப்பிடும் நோன்பில் எல்லாமே செலவுதான். தளைகளை அகற்ற, விடுதலை செய்ய, பசித்தோருக்கு உணவளிக்க, தங்க இடம் கொடுக்க, உடுக்க உடை கொடுக்க என்று எல்லாச் செயல்களிலும் இழப்பு காத்திருக்கிறது. ஆனால், இந்த இழப்பே அவர்களுக்கு பேறு என்கிறார் கடவுள்.

இன்று நாம், உண்ணாநோன்பு கடந்து, மொபைல் நோன்பு, இண்டர்நெட் நோன்பு, வாட்ஸ்ஆப் நோன்பு, கார்பன் நோன்பு (அதாவது, கார், பைக் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது), டிவி நோன்பு, வார்த்தை நோன்பு (பேசாமல் இருப்பது), லிஃப்ட் நோன்பு, மின்இணைப்பு நோன்பு என நிறைய நோன்புகள் இருக்கத் தொடங்குகிறோம். இவை அனைத்திலும் நோன்பு இருப்பவர் பொருளாதார நிலையில் ஒன்றையும் இழப்பதில்லை. இப்படிப்பட்ட நோன்புகளால் ஒருவருக்கு இன்னும் சர்ப்ளஸ் பணம் கிடைக்கும். ஆனால், இதை விடுத்து, முதல் வாசகம் சொல்லும் வகை நோன்பு இருந்தோமென்றால் நமக்கு வலிக்க ஆரம்பிக்கும்.

வலித்தால்தான் அது விரதம். வலித்தால்தான் அது வரம்.


1 comment:

  1. விரதம்,நோன்பு போன்ற வார்த்தைகளுக்கு விளக்கம் தரும் தந்தை 'நோன்பு' என்பது 'உண்ணாநிலை அல்ல' என்றும் அது 'மணமகனுக்கான தேடல்' என்றும் ஒரு மாற்றுக்கருத்தை முன்வைக்கிறார்.மணமகன் விட்டுச்செல்லும் மகிழ்ச்சியை மட்டுமல்ல; அவரின் விழுமியங்களையும் தக்க வைத்துக்கொள்வதே இயேசுவின் பார்வையில் " நோன்பு " என்கிறார். அதற்கான வரைமுறைகளையும் அவரே பட்டியலிடுகிறார்."ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்வது........ உடையற்றோருக்கு உடை தருவது"..... என நீள்கிறது பட்டியல். இத்தகைய நோன்பு இருப்போருக்கே "வாழ்வு விடியல் போல எழும்; வாழ்வு துளிர்க்கும்; மன்றாட்டும் கேட்கப்படும்." என ஆசீர்வாதங்களையும் அள்ளி இறைக்கிறார்.கூடவே வரும் தந்தையின் ஆலோசனையும் நம்மைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. நாணலைப்போல் வளைந்து சாக்கையும்,சாம்பலையும் அணிவதை விடுத்து நமக்கு 'வலி' தரக்கூடிய விஷயங்களில் நம் நோன்பைக்காட்ட வேண்டுமாம். ஏனெனில் " வலித்தால் தான் அது விரதம்; வலித்தால் தான் அது வரம்." வலியோடு கூடிய விரதம்,வரத்தையும் சேர்த்தே கொண்டுவருமெனில் அது இரட்டை இலாபமில்லையா? இன்றைய நேரத்தின் தேவையறிந்து விரதத்தோடு கூடிய பல விஷயங்களை ஒரு கலவையாக்கித் தந்த தந்தையை இன்று வாசகர்களின்" "வரமாகப்" பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete