Monday, March 11, 2019

மிகுதியான சொற்கள்

இன்றைய (12 மார்ச் 2019) நற்செய்தி (மத் 6:7-15)

மிகுதியான சொற்கள்

ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லட் நாடகத்தின் (கட்டம் 2, காட்சி 2) ஒரு காட்சியில் பொலோனியுஸ் ஹேம்லட்டைப் பார்த்து, 'நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள், அரசே?' என்று கேட்பார். அதற்கு, ஹேம்லட், 'சொற்கள், சொற்கள், சொற்கள்' என்பார்.

மிகுதியான சொற்கள் பயன்படுத்துவது பற்றி ஞான இலக்கியங்கள் மிகவே எச்சரிக்கின்றன.

எடுத்துக்காட்டாக,

'ஞானியரின் வாய்மொழி அவருக்குப் பெருமை தேடித் தரும்.
மூடரோ தம் வாயால் கெடுவார்.
அவரது பேச்சு மடமையில் தொடங்கும்.
முழு பைத்தியத்தில் போய் முடியும்.
மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்.
என்ன பேசப் போகின்றார் என்பது எவருக்கும் தெரியாது.
அதற்குப் பின் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல இயலாது.' (சஉ 10:12-14)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, இறைவேண்டலில் மிகுதியான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றார். மேலும், சீடர்களின் இறைவேண்டல் எப்படி இருக்க வேண்டும் என்றும் கற்றுத் தருகின்றார். இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் அதிகமாக செயல் வார்த்தைகளைக் கொண்டிருக்கின்றன. ஆக, இந்த இறைவேண்டலைச் செய்பவர் தான் சொல்வதைச் செயல்களால் வடிக்க வேண்டும்.

'மாற்றத்தை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீண்' என்கிறார் சே குவேரா.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 55:10-11), ஆண்டவராகிய கடவுளின் வார்த்தையின் ஆற்றலை விளக்குகின்றார் எசாயா. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வந்தால் மண்ணுலகில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் காய்ந்து போகாது. இறைவார்த்தையும் அப்படியே என்கிறார் இறைவாக்கினர்.

இன்று அளவுக்கு அதிகமான சொற்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். மிகுதியாகச் சொற்களைப் பேசுகிறோம். செய்தித்தாள், இணையம், அலைபேசி, தொலைக்காட்சி, சினிமா என எங்கும் சொற்கள். நாம் கேட்கும் இவ்வளவு சொற்களும் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்துவது இல்லை. நாம் பேசும் சொற்களும் அப்படியே பல நேரங்களில் மற்றவர்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

ஆக, ஒன்றே சொல்வதும், அதை நன்றே சொல்வதும், அதையே இறைவேண்டல் என வாழ்வதும் இனிது என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வானத்திலிருந்து இறங்கி வரும் மழைபோல,பனிபோல என் சொற்களும் என் அயலானில் மாற்றத்தை ஏற்படுத்த என் செயல்களோடு இணைந்திருத்தல் அவசியமே!நாம் 'தவக்காலம்' என சொல்லிக்கொண்டு, நம் செபத்தை அதிகரிக்கிறோம் எனும் பெயரில் யாருக்கும் உபயோகமற்ற வார்த்தைகளை அடுக்குவதால் யாருக்கு என்ன இலாபம்? "தம் வாயாலே கெடும் மூடர் போலன்றி,தமக்குப்பெருமை தேடித்தரும் ஞானியரின் வாய்மொழியாக இருக்கட்டும் நம் வார்த்தைகள்" என்கிறார் தந்தை. ஞானியராக இல்லையேனும் பரவாயில்ல; மூடராக இல்லாமல் பார்த்துக்கொள்வோம். "ஒன்றே சொல்வதும்,அதை நன்றே சொல்வதும்,அதையே இறைவேண்டல் என வாழ்வதும் இனிது" என இறைவாக்குரைக்கும் தந்தைக்கு நன்றிகள் !!!

    ReplyDelete