Wednesday, March 27, 2019

வலியவரைக் கட்டுவது

இன்றைய (28 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 11:14-23)

வலியவரைக் கட்டுவது

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்ட, கூட்டத்தினர் வியந்து, 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே பேயை ஓட்டுகிறார்' என்று குற்றம் சுமத்துகின்றனர்.

பாவம் இந்த மக்கள்! தம் சகோதரர் ஒருவரிடமிருந்து பேய் அகன்றதைக் குறித்து அக்களிக்காமல், அல்லது பேச்சற்ற ஒருவர் பேசும் கொடையைப் பெற்றதைப் பற்றிக் கொண்டாடாமல், இயேசுவுக்கு இந்த ஆற்றல் பேயிடமிருந்தே வந்தது என்று அவரைக் குற்றம் சுமத்தும் நோக்குடன் இருக்கிறார்கள். ஆக, 'பேய்தான் பேயை விரட்டியது. இயேசுவுக்கு ஆற்றல் கிடையாது' என்றும், 'பேய்களின் தலைவன் இயேசுவில் இருக்கும்போது இயேசுவும் பேய்தான்' என்றும் மக்களிடம் மறைமுகமாகச் சொல்கின்றனர் இந்தச் சிறிய உள்ளம் கொண்ட மக்கள்.

சில நேரங்களில் நாமும் நம்முன் நடக்கும் நற்செயல்களைக் கொண்டாடாமல் அவற்றின் நதிமூலம் ரிசிமூலம் பார்த்துக்கொண்டு பரிதாபமாக நிற்கிறோம்.
இயேசு அவர்களுக்கு விளக்கம் தருவதற்காக உருவகம் ஒன்றைக் கையாளுகின்றார்: 'வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாய் இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்த அவரை வென்றால் அவர் நம்பி இருந்த எல்லா படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்!'

இவ்வுருவகத்தை இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்.

முதலில், 'வலியவர்' என்பவர் 'பேய்.' இவரை வெல்வதற்கு 'மிகுந்த வலிமையுடையவர்' தேவை. அவர்தான் இயேசு. இயேசு பேச்சிழந்தவரைக் குணமாக்கும்போது, மிகுந்த வலிமையுடைய அவர் முன் வலியவர் என்னும் பேய் நிற்க முடியாமல், தன் படைக்கலங்களையும் கொள்ளைப் பொருளையும் அப்படியே போட்டுவிட்டு ஓடுகிறது.

இரண்டாவதாக, நாம் ஒவ்வொருவருமே வலியவர். நம்முடைய உடைமைகள் என்பவை நம்முடைய முதன்மைகள், நம்முடைய மதிப்பீடுகள், நம்முடைய பண்புநலன்கள். இவற்றை எப்பாடு பட்டாவது காத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, நம்மைவிட வலிமையுடையவர் உருவாகாத வண்ணம், அப்படி உருவாகும்போது அவரைவிட வலிமைபெறும் நிலைக்கு நாமும் உயர வேண்டும். அப்படி இல்லாதபோல நாம் அனைத்தையும் இழந்துவிட வாய்ப்பிருக்கிறது. மேலும், இயேசுவின் சமகாலத்தவர் வலிமையுடைய பேய் பக்கம் இருந்தார்களே தவிர, மிகந்த வலிமையுடைய இயேசுவின் பக்கம் இருக்கவில்லை. ஆகையால் அவர்களும் சிதறடிக்கப்படுகிறார்கள்.

தவக்காலத்தில் பல முயற்சிகள் செய்து நம் தீய இயல்புகளை வென்றெடுக்கிறோம்.

தீமைகள் குறைய தீமைகளைக் குறைப்பது மட்டும் வழி அல்ல. நன்மைகளைக் கூட்டுவதும் வழியே. ஏனெனில், படைக்கலங்கள் கூடக் கூட எதிரிக்கு பயம் வந்துவிடும். படைக்கலங்கள் அழிக்கப்பட்டால் நாமும் அழிந்துபோவோம்.

ஆக, இன்று நான் யார் பக்கம்? வலியவர் பக்கமா? அல்லது வலிமைமிகுந்தவர் பக்கமா?

என்னுடைய வலிமையை அழிக்கக்கூடிய வலிமைமிகுந்த இயல்பு எது? அதை எதிர்கொள்ள நான் என்ன செய்கிறேன்?

1 comment:

  1. "தீமைகள் குறையத் தீமைகளை மட்டும் குறைப்பது வழி அல்ல.நன்மைகளைக்கூட்டுவதும் வழியே.ஏனெனில் படைக்கலங்கள் கூடக்கூட எதிரிக்கு பயம் வந்துவிடும்.படைக்கலங்கள் அழிக்கப்பட்டால் நாமும் அழிந்து போவோம்." இன்றைக்கு நான் என் நன்மையைக் கூட்டுவது எப்படி? எங்கோ ஓரிடத்தில் ஆரம்பித்துத்தானே ஆகவேண்டும்!.தந்தை குறிப்பிடும் இடத்தில் ஆரம்பிப்போமே! சில நேரங்களில் நம்முன் நடக்கும், நல்ல செயல்களின் நதிமூலம்,ரிஷிமூலம் பார்க்காமல் அவற்றைக் கொண்டாடுவோமே! அது மட்டுமல்ல....என்னைத்தாங்கும் வலியவர் யார்? அவருக்குப் பெருமை சேர்க்க, என் வலிமையை மேலும்,மேலும் கூட்ட நான் ஏதும் செய்கிறேனா? செய்கிறேன் எனில் என்ன செய்கிறேன்? யோசிப்போமே! பின் செயலில் இறங்குவோமே!! எனக்கு சவாலாக வரும் பதிவு.சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete