Tuesday, March 19, 2019

உங்களுக்குத் தெரியவில்லை

இன்றைய (20 மார்ச் 2019) நற்செய்தி (மத் 20:17-28)

உங்களுக்குத் தெரியவில்லை

இயேசு தன் பாடுகளை இரண்டாம் முறை அறிவிக்கும் நிகழ்வில் செபதேயுவின் மக்கள் அல்லது செபுதேயுவின் மனைவி இயேசுவிடம் வைக்கும் கோரிக்கை பற்றி வாசிக்கின்றோம். மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் செபுதேயுவின் மக்கள் கேட்டதாகப் பதிவு செய்ய, மத்தேயு மட்டும் சீடர்களைக் காப்பாற்றி, செபுதேயுவின் மனைவி கேட்டதாகப் பதிவு செய்கிறார். ஆனால், இயேசுவின் பதில் என்னவோ செபதேயுவின் மக்களை நோக்கியே எல்லா நற்செய்திகளிலும் இருக்கிறது.

'நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை' என்கிறார் இயேசு.

எப்படி ஒரு ஜென் போதகர் தன் சீடர்களை அறியாமையிலிருந்து அறிவுக்கு, மடமையிலிருந்து ஞானத்திற்கு அழைத்துச் செல்வாரோ அவ்வாறே இயேசுவும் தன் சீடர்களை ஞானத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவர்கள் இப்படிக் கேட்பதற்குக் காரணம் அவர்களின் அறியாமைதான் என அவர்களுக்கு நினைவூட்டுகிறார். ஏனெனில், இயேசுவின் முன்னறிவிப்பை, குறிப்பாக, 'மானிட மகன் ... மூன்றாம் நாள் ... எழுப்பப்படுதல்' போன்ற வார்த்தைகளைத் தவறாகப் புரிந்திருக்கலாம். அல்லது, இயேசுவை இவ்வுலக அரச மெசியாவாகத் தவறாகப் புரிந்திருக்கலாம். எப்படியோ அவர்கள் தங்களின் அறியாமையிலும் புரிந்துகொள்ளாத நிலையிலும் இருக்கின்றனர்.

அறியாமை அல்லது புரிந்துகொள்ளாமைக்கு எதிராக வழக்கமாக இரண்டு உணர்வுகள் எழும்: ஒன்று, கோபம். இன்னொன்று, இரக்கம்.

மற்றவரின் அறியாமையைக் கண்டு கோபம் வந்தால் அது சீடர்கள் மனநிலை. மற்ற 10 சீடர்களும் யோவான் மற்றும் யாக்கோபின் மேல் கோபம் கொள்கின்றனர். இவர்கள் கோபம் பொறாமையால்கூட இருக்கலாம். 'ஏன்டா, நாங்களே சும்மாயிருக்கிறோம். உங்களுக்கென்ன அரியணை!' என்ற ரீதியில்கூட இருந்திருக்கலாம். ஆனால், பல நேரங்களில் மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்ள முடியாதபோது அல்லது அவர்களின் அறியாமையை விட்டு வெளியே வர மறுக்கும்போது அல்லது தவறாகப் புரிந்துகொள்ளும்போது அவர்கள்மேல் கோபம் வருவது முதல் நிலை.

ஆனால், இயேசுவின் மனநிலை இரண்டாம் மனநிலையாக இருக்கிறது. சீடர்கள் மற்றும் அவர்களின் அம்மாவின் கோரிக்கையைக் கேட்ட இயேசு கண்டிப்பாக சிரித்திருப்பார். 'என்னப்பா! எவ்வளவு சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையே!' என்று இரக்கப்பட்டிருப்பார். இயேசுவின் இரக்கம் கடிந்துகொள்ளாத இரக்கமாக இருக்கிறது. அவர்களின் அறியாமையை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்களை ஞானத்திற்கும் அறிவிற்கும் அழைத்துச் செல்கிறார் - ஒரு குழந்தையை அதன் தந்தை ஏற்றுக்கொள்வதுபோல.

இயேசுவின் அறிவுரை மூன்று நிலைகளில் இருக்கிறது:

அ. ஒருவர் மற்றவரை அடக்கி ஆளுதல் கூடாது - ஆக, அதிகாரம் என்பது அடக்கி ஆளுதலில் இல்லை. தன் சிலுவை அரியணை என்பது அடக்கி ஆளுதலில் இல்லை. தன்னை அடக்குபவன்தான் அரசனே தவிர, பிறரை அடக்குபவன் அல்ல. ஆக, ஒருவர் தன்னுள் எழுகின்ற 'அதிகாரம்' என்ற எண்ணத்தை அடக்கினாலே பாதிப் பிரச்சினை முடிந்துவிடும்.

ஆ. எப்படி இருக்க வேண்டும்? பெரியவர் தொண்டராக வேண்டும். முதன்மையாய் இருப்பவுர் பணியாளராக இருக்க வேண்டும். இதைச் செய்ய நிறைய துணிச்சல் வேண்டும். யார் ஒருவர் தன் அடையாளத்தை இழக்க முன்வருகிறாரோ அவரை இப்படி இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு வகுப்பறையில் ஒரு ஆசிரியர் தன் ஆசிரியர் நிலையிலிருந்து இறங்கி மாணவர் நிலைக்கு வருதல் மிகவும் கடினம். அவர் மாணவரைப் போல தரையில் அமர வேண்டும். அவர்களின் மொழியைப் பேச வேண்டும். அவர்கள் கேலி பேசினாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், தானே முதலில் மாணவராக இருந்து இவற்றை எல்லாம் கற்றக்கொள்ள வேண்டும். அடையாளங்கள் அகற்றுதலும், அடுத்தவரின் பாதம் அமர்தலும் இதில் அடங்கும்.

இ. மானிட மகனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் - மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்காகவும், தன்னை முழுமையாக இழப்பதற்காகவும் வந்ததுபோல, ஒருவர் மற்றவருக்கு தொண்டு ஆற்றவும், தங்களையே இழக்கவும் தயாராக இருக்கவும் வேண்டும் என்கிறார் இயேசு.

நான் இயேசுவைப் பற்றிக் கொள்ளும் அறியாமை என்ன? அந்த அறியாமையில்தான் என்னுடைய விண்ணப்பங்கள் இருக்கின்றனவா? இன்று அவர் என்னை ஞானத்திற்கு அழைக்கும்போது என் மனநிலை என்ன?

2 comments:

  1. இயேசு என்னை ஞானத்திற்கு அழைக்கும்போது, எனது மனநிலை என்ன? என்ற சுய ஆய்விற்கு பணித்துள்ளீர்.🙏.

    ReplyDelete
  2. விவிலியத்தில் வரும் கான்ட்ரவர்ஸிக்குட்பட்ட பகுதிகளுள் இதுவும் ஒன்று என்று எண்ணுகிறேன்.இங்கே செபதேயுவின் மனைவி இயேசுவிடம் வைத்த கோரிக்கையை ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு இயேசுவால் ஒரு நல்லது நடக்க வேண்டும எனும் நியாயமான ஆவலின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன். இதில் சீடர்கள் கோப்ப்படவோ,இயேசு இரக்கப்படவோ ஒன்றுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் "இயேசு, அவர்களின் கோரிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்களை ஞானத்திற்குள்ளும்,,அறிவுக்குள்ளும் அழைத்துச்செல்கிறார்- ஒரு குழந்தையை அதன் தந்தை ஏற்றுக்கொள்வது போல".... எனும் தந்தையின் வரிகள் ஏற்றுக்கொள்வதாகவே உள்ளன.நான் என் அறியாமையிலிருந்து ஞானத்துக்குள் அடிபதிக்க என்ன செய்ய வேண்டும்? தன்னைத் தானே அடக்கி ஆளத்தெரிந்தவனும்,ஆசிரியருக்கான அடையாளங்களை அகற்றி மாணவனின் பாதம் அமர்பவனும், தன்னையே இழந்து,அடுத்தவருக்குத் தொண்டு செய்யத் தயாராக இருப்பவனும் எவனோ,அவனே தன்னை இழந்து ஞானத்தை ஏற்றுக்கொள்பவன் என்கிறார் தந்தை. இவற்றை நம் தவக்காலப் பயிற்சியாகக் கொள்ள நமக்கு உதவிக்கரம் நீட்டும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete