Friday, March 22, 2019

தந்தை அவரைக் கண்டு

இன்றைய (23 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 15:1-3,11-32)

தந்தை அவரைக் கண்டு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு தந்தையும் இரு மகனும் என்னும் இயேசுவின் உவமையை வாசிக்கின்றோம். லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் இந்த எடுத்துக்காட்டு உலக இலக்கியச் சிறுகதைகளிலும் முக்கிய இடத்தை வைக்கின்றது. இயேசுவின் கதைகளில் இறுதியில் ஒரு திருப்பம் இருக்கும். இங்கே திருப்பம் என்னவென்றால், தூரத்தில் இருக்கின்ற இளைய மகன் வீடு திரும்புகின்றான். வீட்டிற்குள்ளேயே இருக்கின்ற மூத்த மகன் வீடு திரும்ப மறுக்கின்றான்.

இவ்விரண்டு கதைமாந்தர்களுக்கு நடுவில் வீட்டிற்கும் வெளியிலும் வந்து சென்று கொண்டிருப்பவர் தந்தைதான்.

இளைய மகன் திரும்பிய நேரம் தந்தை அங்கு இருந்தார்.

இந்தக் கதையின் தந்தை அப்படித்தான் இருக்கிறார். இளைய மகன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளிலிருந்து இவனுக்காக ஊருக்கு வெளியில் நிற்கின்றார். தன் மகன் திரும்ப வருவான் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் அவர். வருகின்ற அவர் எல்லாவற்றையும் இழந்து வரும்போது ஊர் கேலி பேசிவிடக்கூடாது என்பதற்காக, அவனை அப்படியே அள்ளித் தோள்மேல் வைத்துக்கொள்ள விழைந்து ஊருக்கு வெளியே நிற்கின்றார் அப்பா.

இப்படி ஊருக்கு வெளியே தினமும் நிற்கின்ற அப்பாவைப் பார்த்து மூத்தமகன் கண்டிப்பாக கேலி செய்திருப்பான். 'அவன் போய்ட்டான். அவ்வளவுதான். பணத்தோடு போன அவன் திருடர் கையில் அகப்பட்டிருக்கலாம். அல்லது அவர்கள் அவனைக் கொலை செய்திருக்கலாம். இனி நான் மட்டும்தான் உங்களுக்கு. வாங்க! நம் வேலையைப் பார்ப்போம். அவனால் வந்த குடும்ப பொருளாதார இழப்பை ஈடு செய்வோம்' என்றெல்லாம்கூட சொல்லியிருப்பான். ஆனால், அந்த அப்பா பொருளாதாரம் தெரியாத அப்பாவியாகத்தான் இருக்கிறார். ஆகையால்தான் வயல்வெளியில் நின்றுகொண்டிருக்கிறார் இவர்.

எந்நேரமும் இரக்கத்தோடு காத்திருக்கும் தயார்நிலை.

தன் மகன் ஏற்படுத்திய பொருள்செலவைப் பெரிதாக எண்ணாத தயார்நிலை.

தன் மகனைத் தீர்ப்பிடாத தயார்நிலை.

தன் பெயரை ஊரார் முன் கெடுத்தாலும் அதை மனதில் வைத்துக்கொள்ளாத தயார்நிலை.

தன் மகன் சேறு, சகதி, அழுக்கோடு வந்தாலும் அவன்மேல் போர்த்துவதற்கு முதல்தரமான ஆடை என்னும் தயார்நிலை.

கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி என்று அனைத்தும் அவனுக்காக தயார்நிலையில்.

இந்தத் தந்தை தன் மகனை எல்லாவற்றையும் எல்லாரையும்விட மேன்மையாகக் கருதினார் - அவன் எப்படி இருந்தாலும். ஆக, இளைய மகனுடைய தவறு இவரின் நல்ல குணத்தை மாற்றவும் இல்லை. மூத்த மகனுடைய பிடிவாதம் இவரின் தாராள குணத்தைச் சமரசம் செய்யவும் இல்லை.

இந்தத் தந்தையின் மனநிலை நமக்கு இருந்தால் எத்துணை நலம்!


5 comments:

  1. நமக்குப் பழக்கப்பட்ட " ஊதாரி மகன்" உவமையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில்,தனயனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத்,தந்தையை முன்னிறுத்தும் ஒரு நிகழ்வைத் தனக்கே உரித்தான வித்தியாசமான கோணத்தில் தந்திருக்கிறார் தந்தை. " இந்தத்தந்தை தன் மகனை எல்லாவற்றையும்,எல்லாரையும் விட மேன்மையாகக் கருதினார்- அவன் எப்படி இருந்தாலும் அவனுடைய தவறு இவரின் நல்ல குணத்தை மாற்றவும் இல்லை... மூத்த மகனுடைய பிடிவாதம் இவரின் தாராள குணத்தை சமரசம் செய்யவும் இல்லை".
    கண்டிப்பாக இந்தத் தந்தையின் மனநிலை அனைத்துத் தந்தையருக்கும் மட்டுமேயன்றி அனைவருக்கும் இருப்பின் நலம். போற்றுதற்குரிய ஒரு பதிவைத் தந்த தந்தைக்கு என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Good Reflection Yesu

    ReplyDelete
  3. "இருமுறை வீதிக்கு வந்தது தந்தையின் அன்பு" வீணாப்போனவனும் வீதிக்கு வர வச்சான். வீட்டுலே இருந்தவனும் வீதிக்கு வர வச்சான்

    ReplyDelete
  4. வந்து மன்னிப்பு கேட்ட சின்னவன் நல்லவன் னு நெனச்சேன்.. அப்பா தான் பெஸ்ட் னு புரியுது

    ReplyDelete
  5. Great புரிதல் Catherine Augustine!

    ReplyDelete