Thursday, March 14, 2019

விரைவாக

இன்றைய (15 மார்ச் 2019) நற்செய்தி (மத் 5:20-26)

விரைவாக

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் மலைப்பொழிவு (மத் 5-7) பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'கொலை செய்யாதே' என்ற முதல் ஏற்பாட்டுக் கட்டளைக்கு விளக்கவுரை தரும் இயேசு, கொலை செய்வது என்பது வெறும் வெளிப்புறச் செயல்தான். ஆனால், அது உள்புறம் கோபமாக வேரூன்றியிருக்கும் என்று சொல்லி அதை அகற்றக் கட்டளையிடுகின்றார். மருத்துவர்களில் இரண்டு வகை உண்டு. சில மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்துவார்கள். சில மருத்துவர்கள்தாம் நோயைக் குணப்படுத்துவார்கள். முதல் வகை மருத்துவத்தில் உடனடி ரிசல்ட் கிடைக்கும். மேலும், இம்மருத்துவம் எளிதானது. ஆனால், இரண்டாம் வகை மருத்துவத்தில் அதிக நாள் எடுக்கும். மருத்துவம் கடினமானது. ஆனால் பலன் நீடித்தது. இயேசு, இரண்டாம் வகை மருத்துவத்திற்கான அழைப்பை விடுக்கிறார்.

ஆக, கொலை செய்வதை விட, அதைத் தூண்டும் கோபத்தை அடக்கி ஆளக் கற்றுக்கொடுக்கின்றார்.

இரண்டாவதாக, மனத்தாங்கலோடு பலி வேண்டவே வேண்டாம்.

இங்கே, வெளிப்புறத்தில் பலி செலுத்திக் கடவுளோடு ஒப்புரவாகிவிட்டு, உள்புறத்தில் ஒருவர் மற்றவர்மேல் வைத்திருக்கும் வன்மம் வேண்டாம் என்கிறார் இயேசு.

மூன்றாவதாக, விரைவில் செயல்படுதல். எப்போது?

எதிரியோடு வழக்காடும்போது வழியில் விரைவில் சமரசம் செய்துகொள்வது அவசியம். அதாவது, பிரச்சினை பெரியதாகி அதை தீர்ப்பதைவிட, பிரச்சினையே இல்லாமல் பார்த்துக்கொள்ள அழைக்கிறார் இயேசு. நேரம் கூடக்கூட செயலின் தன்மை பெரிதாகும் என்பதால் உடனே செய்ய அழைக்கிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகம் (காண். எசே 18:21-28), தீயவருக்கும் நல்லவருக்குமான வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி நல்லவராக வாழ அழைக்கிறது நம்மை.

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 130) மிகவும் முக்கியமான பாடல். திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரின் நன்மைத்தனத்தைப் புகழ்ந்தவராய், 'நீர் எம் குற்றங்களை நினைவில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?' எனக் கேட்கிறார். அவர் நம் குற்றங்களை நினைவில்கொள்ளாத போது, நாம் மற்றவரின் குற்றங்களை ஏன் நினைவில் கொள்ள வேண்டும்?

மன்னிக்க மறுக்கும் மனம் மற்றவர்களின் குற்றத்திற்காக தன்னைத் தானே தண்டித்துக்கொள்கிறது.

2 comments:

  1. Great rev.Yesu!

    மன்னிக்க மறுக்கும் எம் மனப்பாங்கை, வன்மையாக கண்டித்துள்ளீர்...
    இறை இயேசுவின் வழிநின்று...

    தினை அளவேனும் முயற்சிக்கிறோம், நிச்சயமாய்....


    ஆனாலும் இந்த கத்திகள் அனைத்தும் பெண்ணின் வாயிலிருந்து வரவதாகத்தான் காட்ட வேண்டுமா?

    ஒரு ஆணையும் சேத்துக்கிறது????

    ReplyDelete
  2. " நீர் எம் குற்றங்களை நினைவில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?" எனக்கேட்கும் திருப்பாடல் ஆசிரியரோடு , நாமும் இணைந்தே இறைவனைக் கேள்வி கேட்க வேண்டிய காலமிது.அவர் நம் குற்றங்களை நினைவில் கொள்ளாதபோது...நாங்கள் பிறர் குற்றங்களை மன்னிப்பது போல என சொல்லிக்கொண்டு, மற்றவர்களின் குற்றங்களை நாம் ஏன் நினைவில் கொள்ள வேண்டும்? "மன்னிக்க மறுக்கும் மனம் மற்றவர்களின் குற்றத்திற்காகத் தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறது...." தந்தையின் கருத்து. " தவறுவது மனித மனம்; மன்னிப்பதோ இறை குணம்".... கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும் "இறைமையை" பற்றிக்கொள்ள வழி சொல்லும் தந்தையின் சொற்களுக்கு செவிமடுப்போம்....

    ReplyDelete