Sunday, March 3, 2019

ஒன்று குறைவுபடுகிறது

இன்றைய (4 மார்ச் 2019) நற்செய்தி (மாற் 10:17-27)

இன்னும் ஒன்று குறைவுபடுகிறது

இன்றைய நற்செய்தியில் இயேசுவைப் பின்பற்ற விரும்பிய ஒரு இளவலைப் பார்க்கிறோம்.

இந்த இளவலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு அடிக்கடி ஒரு கேள்வி எழுவதுண்டு: இந்த இளவல்போல எத்தனையோ பேர் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார்கள். இப்படி விருப்பம் உள்ளவர்கள் இறப்புக்குப் பின் எங்கே போவார்கள்?

இந்த இளவல் என்னிடம் எப்போதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடியவர். இவரை நாம் இவருடைய சூழலில் புரிந்துகொள்ள வேண்டும். இளவல்கள் எப்போதும் உடனடி விளைவுகளை விரும்புபவர்கள். எடுத்துக்காட்டாக, இன்று ஒரு பாடம் படிக்கிறார்கள் என்றால், அதற்கேற்ற வேலை நாளை கிடைக்கும் என்றால்தான் அதைப் படிப்பார்கள். மேலும், எதையும் அனுபவித்து அறிந்துகொள்ள விரும்புபவர்கள்.

இவருக்கு நிறைய சொத்துக்கள் இருந்தன. இயேசு அவற்றை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்கும்படியும், தன்னைப் பின்பற்றும்படியும் கூறுகின்றார். 'நான் இப்படிச் செய்தால் உடனே நிலைவாழ்வு கிடைக்குமா?' என்ற எண்ணம்தான் இவரை முகவாட்டத்தோடு அனுப்பியிருக்கலாம். ஆனால், 'முடியும்' என்றால், 'முடியும்' என்றும், 'முடியாது' என்றால் 'முடியாது' என்றும் சொல்லும் அளவுக்கு இவர் தன்னுரிமை பெற்றிருக்கின்றார். மேலும், எல்லாவற்றையும் இழந்துவிட்டு முகவாட்டமாய் இயேசுவைப் பின்பற்றவதைவிட, முகவாட்டமாய் விடைபெறுவதே சிறப்பு என நினைக்கிறார் இளவல்.

நம் வாழ்விலும் இயேசுவின் அழைப்பு முகவாட்டத்தைக் கொடுக்கலாம். இழப்போடு சேர்ந்து வரும் ஒரு உணர்வு முகவாட்டம். தன் காணிக்கை இறைவன் முன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என நினைக்கின்ற காயின் முகவாட்டத்தோடு நிற்கின்றான். தன் இழப்பை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இழப்பதற்கு நிறைய மனத்திடம் வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனெனில், என் மூளை இன்று இழக்கச் சொல்லும். நாளை, 'இழக்காதே! அவனைப் பார்! இவனைப் பார்!' என்று என்னை ஒப்பீடு செய்ய அழைக்கும். என் தீர்மானங்களோடு மறுபடி சமரசம் செய்துகொள்ள என்னை அழைக்கும். ஆக, இழப்பது என்பது ஒரு நெடிய போராட்டமே.

இன்று இயேசு என்னை அன்பொழுகப் பார்த்து, 'உனக்கு இன்னும் ஒன்று குறைவுபடுகிறது' என்று எதைச் சொல்கிறார்.

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 17:20-29) நல்லது செய்வோர் பெறுகின்ற வெகுமதி பற்றிப் பேசிவிட்டு, தொடர்ந்து, நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை என்ற நிலையில், 'மனம் வருந்துவோரைத் தம்மிடம் ஈர்த்துக் கொள்கிறார். நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்' என ஆறுதல் தருகின்றார்.

நற்செய்தி வாசகத்தின் இறுதியில், 'மனிதரால் இது இயலாது. கடவுளால் எல்லாம் இயலும்' என்கிறார். ஆக, இழக்க நாம் தயாராக இருக்கும்போது நாம் மனிதர்கள் என்ற நிலையில், நம் மனிதத்தின் வெறுமையையும், உடைந்த தன்மையையும் கொண்டாடக் கற்றுக்கொள்வோம். கைகளை மூடிக்கொண்டே பிறக்கும் நமக்கு விரித்துக் கொடுப்பதும், இழப்பதும் இறப்பு வரை தொடர் போராட்டமே.


2 comments:

  1. Great!
    சகோதரா...
    " எனக்கு இன்னும் என்ன குறைவுபடுகிறது" என்று எனக்கு எதை இயேசு சொல்கிறாரோ, அதற்கு செவிமடுக்கிறேன்...
    நிச்சயமாக....
    🙏 நன்றி!
    நாம் மனிதத்தின் வெறுமையையும் உடைந்த தன்மையையும் கொண்டாடக். கற்றுக் கொள்வோம்....Yes....
    தங்களைப் போன்ற spiritual masters உதவியுடன் 🙏

    ReplyDelete
  2. " இழப்பதற்கு நிறைய மனத்திடம் வேண்டும்; ஏனெனில் இழப்பது நெடிய போராட்டம்".. அனுபவித்தவர்களுக்கே இதன் உண்மை புரியும்.
    இழக்க நாம் தயாராக இருக்கும்பொழுது மனிதர்கள் என்ற நிலையில், நம் மனித்த்தின் வெறுமையையும்,உடைந்த தன்மையையும் கொண்டாடக் கற்றுக்கொள்வோம்; கைகளை மூடிக்கொண்டே பிறக்கும் நமக்கு கைகளை விரித்துக்கொடுப்பதும், இழப்பதும் இறப்பு வரை போராட்டமே!".... வாழ்க்கையின் நிதர்சனம்.
    " இழப்பும் எனக்கு சம்மதமே'"..... "இயலும் கடவுள் என்னோடுருப்பதால்.".... வாசகர்களைத் தவக்காலத்திற்குள் இட்டுச்செல்லும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete