Monday, March 25, 2019

டோமினோ விளைவு

இன்றைய (25 மார்ச் 2019) நற்செய்தி (மத் 18:21-35)

டோமினோ விளைவு

'அபூர்வ சகோதரர்கள்' (1989) திரைப்படத்தில் குட்டைக் கமல் பழிதீர்க்கும் விதமாக ஒவ்வொரு எதிரியையும் ஒவ்வொரு விதமாகக் கொலை செய்வார். ஒற்றைக் கோலிக்குண்டை உருட்டிவிட்டு, அது அடுத்தடுத்த பொருள்களைத் தட்டி, இறுதியில் ஒரு அம்பு எய்யப்பட்டு எதிரி ஒருவர் கொல்லப்படுவார். தொடக்கம் என்னவோ ஒரு சிறு கோலிக்குண்டுதான். ஆனால், அது அடுத்தடுத்த பொருள்களை இயக்கும்போது அது பெரிய செயலைச் செய்ய வல்லது.

இதை 'டோமினோ விளைவு' (domino effect) அல்லது 'தொடர் வினை' (chain reaction) அல்லது 'தொடர் விளைவு' என அழைக்கிறோம். நிறைய இடங்களில் விளையாட்டுச் சீட்டு அட்டைகளை வைத்து இந்த விளையாட்டு விளையாடப்படும்.

இப்படிப்பட்ட ஒன்றைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுத் தருகின்றார். 'என் சகோதரன் எனக்கு எதிராகப் பாவம் செய்தால் எத்தனை முறைய மன்னிக்க வேண்டும்?' எனக் கேட்கிற பேதுருவுக்குப் பதில் சொல்கின்ற இயேசு, 'ஏழுமுறை அல்லது எழுபது முறை ஏழு முறை' என்கிறார். மேலும், மன்னிக்க மறுத்த பணியாள் ஒருவன் எடுத்துக்காட்டையும் முன்வைக்கின்றார்.

எடுத்துக்காட்டிலிருந்து தொடங்குவோம்.

பணியாளன் ஒருவன் தன் அரசனால் தன்னுடைய ஏறக்குயை 510 கோடி ரூபாய்க் கடன் மன்னிக்கப்படுகிறார். ஆனால், அந்தப் பணியாளனால் தன் சக பணியாளின் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க் கடனை மன்னிக்க மறுக்கின்றான். நிறைய வைத்திருந்த அரசனுக்கு மன்னிப்பது எளிதாகவும், ஒன்றுமே இல்லாத பணியாளனுக்கு அவ்வாறு செய்வது கடினமாக இருந்ததோ?

இயேசு சொல்கின்ற டோமினோ விளைவு என்னவென்றால், அரசனிடமிருந்து மன்னிப்பைப் பெற்ற பணியாளன் தன் சகப் பணியாளனை மன்னிக்க வேண்டும். அவன் தனக்குக் கீழ் இருப்பவனை, அவன் இன்னும் தனக்குக் கீழ் ... என்று அடுத்தடுத்து மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும். விளையாட்டில் ஒரு அட்டை தடைபடும்போது ஒட்டுமொத்த விளையாட்டும் பாதியிலேயே முடிந்துவிடுகிறது.

ஆக, முதல் பாடம், கடவுளிடமிருந்து அன்றாடம் மன்னிப்பு பெறுகின்ற நாம், அதை நமக்குக் கீழ், நமக்குக் கீழ் என்று கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டாவது பாடம், 70 முறை 7 முறை. இந்தச் சொல்லாடலுக்கு நிறைய பொருள் தரப்படுகிறது. தொநூ 4:24ல் லாமேக்கு என்பவர் 70 முறை 7 முறை எனப் பழிதீர்க்கிறார். இந்த நிகழ்வின் பின்புலத்தில் பழிதீர்ப்பதற்கு எதிர்ப்பதமாக இயேசு மன்னிப்பை முன்வைக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், ஒரு செயல் தொடர் பழக்கமாக மாறும் வரை செய்ய வேண்டும் என்ற பொருளில்தான் இச்சொல்லாடல் பயன்படுத்தப்படுவதாக நினைக்கிறேன். இன்றைய உளவியலில் 21 நாள்கள் (அதாவது, மூன்று 7 நாள்கள்) ஒரு செயலைச் செய்யும்போது அது நம் பழக்கமாகிவிடுகிறது என்கிறார்கள். அதாவது, 21 நாள்கள் நான் காலை 5 மணிக்கு எழுந்தால், 22ஆம் நாள் எந்தவொரு எழுப்பியும் இல்லாமல் நான் 5 மணிக்கு எழுந்துவிடுவேன். இயேசுவின் சமகாலத்தில் இதைப்போன்ற ஒரு புரிதல் இருந்திருக்கலாம். ஆக, 70 முறை 7 முறை செய்யும்போது மன்னிப்பு பல் தேய்ப்பது போன்ற ஒரு தொடர் பழக்கமாக மாறிவிடுகிறது. தொடர்பழக்கமாக ஒரு செயல் மாறிவிட்டால் அது நம் இயல்பாகவே மாறிவிடுகிறது. இந்தவொரு பயிற்சியைத்தான் இயேசு தருகின்றார். மன்னிப்பதை நம் பழக்கமாக்கிக் கொள்வது.

மூன்றாவதாக, மன்னிப்பது மன்னிப்பவருக்கு நல்லது. ஏனெனில், மன்னிக்க மறுக்கும் ஒருவர் தன் நிகழ்காலத்தில் வாழாமல் இறந்த காலத்தில் வாழ்கிறார். எந்நேரமும் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார். இறந்த காலம் என்பது நம் மனத்தின் ஒரு அழுகிய பகுதி. அதை நாம் அப்படியே வைத்துக்கொண்டிருக்கும்போது அது துர்நாற்றத்தைத் தருவதோடு, நல்ல பகுதிகளையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது.

மேற்காணும், இரண்டு காரணங்களுக்காக இல்லை என்றாலும், இறுதியான மூன்றாவது காரணத்திற்காக மன்னிக்கத் தொடங்கினால் மனது நலமாகும்!


2 comments:

  1. "கடவுளிடமிருந்து மன்னிப்புப் பெறுகிற நாம்,அதை நமக்குக் கீழிருப்பவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்".இந்த உண்மையை மெய்ப்பிக்கத் தந்தை 'டோமினோ விளைவு', 'தொடர்வினை' என்று கொஞ்சம் 'இயற்பியல்' கலந்து பேசுகிறார். ஒருவரை மன்னிப்பதற்குப் பல காரணங்கள் இருப்பினும் மன்னிக்க மறுக்கும் ஒருவர் தன் நிகழ்காலம் விடுத்து இறந்த காலத்தில் வாழ்கிறார் என்றும்,மனத்தில் அந்த அழுகிய, துற்நாற்றம் எடுக்கும் பகுதியை நாம் எடுக்கவில்லையெனில், அது நல்ல பகுதிகளையும் அழிக்கத் தொடங்கி விடுகிறது எனவும் இதற்காக வேண்டியானாலும் நாம் மன்னிக்கப் பழக வேண்டும்......என்று தொடர்கிறார்.என் பங்குக்கு நான் சொல்வது...இத்தனை காரணங்களுக்காக இல்லை எனினும் மன்னிப்பது 'இறைகுணம்' என்பதற்காகவும்,' மன்னியுங்கள்; மன்னிக்கப்படுவீர்கள்' எனும் வேத வசனத்திற்காகவும் மன்னிக்கப்பழகலாமே! பெரிய விஷயங்களை சிறிய குப்பியில் அடைத்துத் தரும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. நிறைய வைத்திருந்த அரசனுக்கு மன்னிப்பது எளிதாகவும், ஒன்றுமே இல்லாத பணியாளனுக்கு அவ்வாறு செய்வது கடினமாக இருந்ததோ?

    I always had this question. The king can forgive because he had more. The servant would have less.. if he forgave, he might become poor. To me, the servant was right. But This domino effect is giving a new dimension to it. Thanks for this post, Father!

    ReplyDelete