Thursday, March 21, 2019

தமக்குச் சேர வேண்டிய

இன்றைய (22 மார்ச் 2019) நற்செய்தி (மத் 21:33-43,45-46)

தமக்குச் சேர வேண்டிய

1961ஆம் ஆண்டு வெளிவந்த 'பாலும் பழமும்' திரைப்படத்தின், 'போனால் போகட்டும் போடா' பாடலில், கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அழகான வரி ஒன்றை எழுதுகின்றார்: 'இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை இல்லை என்றால் அவன் விடுவானா?'

இது மிகவும் சாதாரண வாழ்வியல் நிகழ்வு. இரவல் கொடுத்தல் திரும்பப் பெறுதல் என்னும் நிகழ்வை இறைவனுக்குப் பொருத்தி, மனித உயிர் என்பது கடவுள் மனிதனுக்கு இரவலாகத் தந்தது என்றும், இறப்பின் போது இரவல் தந்தவன் அதைத் திரும்ப எடுத்துக்கொள்கிறான் என்பதும் கவிஞரின் கருத்து. மேலும், தொடர்ந்து, 'உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா? கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது' என உயிரின் திரும்பாநிலையைப் பதிவு செய்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஒப்பந்தம் அல்லது குத்தகைக்கு இரவல் தந்திருக்கும் ஒரு திராட்சைத் தோட்ட உரிமையாளர், பணியாளர்களால் ஏமாற்றப்படுவதையும், பணியாளர்கள் உரிமையாளரின் மகனையே கொன்றழிப்பதையும் பார்க்கின்றோம்.

இவ்வுவமையின் தொடக்கத்திலும் இறுதியிலும் வரும் சொல்லாடல் முக்கியத்துவம் பெறுகிறது: 'தமக்குச் சேர வேண்டிய பழங்களைத் தரக் கூடிய!'

'தமக்குச் சேர வேண்டிய பழங்களைத் தருமாறு' ஆட்களை அனுப்பி பணியாளர்களை வேண்டிக்கொள்கிறார் தலைவர். ஆனால், அவருக்கு உரியதை அவர்கள் கொடுக்க மறுத்ததோடு அவருக்கு உரியதையும், உரியவர்களையும், உரிய மகனையும் தவறாகக் கையாளுகிறார்கள். இறுதியில், தலைவர் இவர்களை அடித்துவிரட்டி, தமக்குச் சேர வேண்டிய பழங்களைத் தருகின்ற வேறொரு குழுவிடம் தோட்டத்தை ஒப்படைக்கின்றார். இவ்வுவமையைக் கேட்கின்ற தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் இந்நிகழ்வு தங்களைக் குறித்துச் சொல்லப்பட்டதை உணர்ந்து இயேசுவைப் பிடிக்க வழிதேடுகின்றனர்.

'ஒருவருக்கு உரியதை அவருக்குக் கொடுப்பதுதான்' நீதி என்கிறது அறநெறி.

திராட்சைத் தோட்ட உரிமையாளர்கள் ஏன் நீதியோடு செயல்பட மறுத்தார்கள்?

அ. திராட்சைத் தோட்ட உரிமையாளரின் நற்குணத்தை அவரின் பலவீனம் என எண்ணிக்கொண்டார்கள். ஏனெனில், குத்தகைக்கு நிலம் கொடுக்கப்படும்போது வழக்கமாக வெறும் நிலம் மட்டுமே கொடுக்கப்படும். சில இடங்களில் கிணறும் சேர்த்துக்கொடுக்கப்படும். ஆனால், நம் கதையில் வரும் உரிமையாளர் - அவர்தான் கடவுள் - ரொம்ப நல்லவராக இருக்கிறார். இவரே திராட்சைத் தோட்டம் போட்டு, வேலி அடைத்து, பிழிவுக்குழி வெட்டி, காவல் மாடமும் கட்டி அதைக் குத்தகைக்கு விடுகிறார். இந்த நன்மைத்தனத்தை அவர்கள் அவரின் பலவீனமாக எடுத்துக்கொள்கின்றனர்.

ஆ. பேராசை கொண்டனர். 'எனக்குரியதும் எனக்கு, உனக்குரியதும் எனக்கு' என்ற திருட்டு மனநிலை கொள்கின்றனர் இவர்கள். 'எனக்குரியது எனக்கு. உனக்குரியது உனக்கு' என்ற நீதியிலிருந்து பிறழ்கின்றனர்.

இ. பொறாமை கொள்கின்றனர். 'என்னிடம் இல்லாதது உன்னிடம் இருக்கிறது' என்ற உணர்வில், 'இவனைக் கொன்றால் சொத்து நம்முடையதாகும்' என்று நினைக்கின்றனர். ஏறக்குறைய இப்படிப்பட்ட பொறாமை நிகழ்வை - யோசேப்பு மிதியானியரிடம் விற்கப்பட்ட நிகழ்வை - இன்றைய முதல் வாசகம் பதிவு செய்கிறது. பொறாமை அடுத்தவரையும் அழித்து அதைக்கொண்டிருப்பவரையும் அழித்துவிடும் என்பதற்கு இன்றைய நற்செய்தி நல்ல எடுத்துக்காட்டு.

இன்று நான் கடவுளுக்குரிய கனிகளை கடவுளுக்குக் கொடுக்கிறேனா? என் வாழ்வை கனிதரும் நிலையில் வாழ்கின்றேனா?

அவரின் இரக்கத்தை, நற்குணத்தை அவரின் பலவீனம் என நினைத்து சோம்பியிருக்கிறேனா?

'எனக்குரியதும் எனக்கு, உனக்குரியதும் எனக்கு' என்று நான் திருட்டு அல்லது பேராசை உணர்வு கொள்கிறேனா? என்னுடைய பணம் மற்றும் பொருள்சார் பரிவர்த்தனைகள் பேராசையால் உந்தப்படுகின்றனவா?

'என்னிடம் இல்லாதது அவனிடம் அல்லது அவளிடம் இருக்கிறது' என்று நான் அடுத்தவரை என் தோட்டத்திலிருந்து வெளியேற்றிக் கொன்று போட நினைத்த தருணங்கள் எவை?

கனிகள் தர நாம் மறுக்கும்போது, கனிகள் தருகின்ற வேறொருவருக்கு நம் கொடைகள் மாற்றப்படும். பயன்படுத்தாத எதுவும் பாழடைந்து போகும்.

1 comment:

  1. மனசாட்சியுள்ள எவரையும் யோசிக்கச் செய்யும் பதிவு.' பொறாமை'....இது பல தப்பான விஷயங்களுக்கு நம்மை இட்டுச்செல்கிறது.'கரையான்' போன்ற இந்தக்குணம் நம்மையும் அரித்து,நம்மைச் சார்ந்தவர்களையும் அரித்து விடும்.இன்றைய 'திராட்சைத்தோட்ட' உரிமையாளரின் நிகழ்வைப் பாடமாக்கி வாசகர்களைப் பல கேள்விகளுக்குள்ளாக்கி இருக்கிறார் தந்தை.எல்லா கேள்விகளுக்குமே பதில் அளிக்கும் நிலையில் நான் இருந்தாலும் " கனிகள் தர நான் மறுக்கும்போது,கனிகள் தருகின்ற வேறொருவருக்கு என் கொடைகள் மாற்றப்படும்.பயன் படுத்தாத எதுவும் பாழடைந்து போகும்."..... எனும் விஷயம் என்னை ரொம்பவே யோசிக்க வைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒருவரிடமுள்ள நன்மைத்தனம் பலவீனமாகப் பார்க்கப்படுவது உண்மையே! என் வாழ்வைக்கனி தரும் முறையில் வாழவும்,கடவுளுக்குரிய கனிகளை அவருக்கேத் திருப்பித்தரவும் இந்தத் தவக்காலம் எனக்கு உதவட்டும்...
    இன்றைய நற்செய்தியைத் தந்தை கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளோடு அழகாகக் கோர்த்திருப்பது சொல்ல வந்த விஷயத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.அவர் பிறப்பிற்கு முன்னே பிறந்த பாடலை இத்தனை அழகாகத் தானும் புரிந்து கொண்டு, கோர்க்க வேண்டிய இடத்தில் கோர்த்திருப்பது அருமை! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete