Sunday, January 6, 2019

விளிம்பிலிருந்து மையம் நோக்கி

இன்றைய (7 ஜனவரி 2019) நற்செய்தி (மத் 4:12-17, 23-25)

விளிம்பிலிருந்து மையம் நோக்கி

நாம் சாதாரண கண்ணாடி டம்ளரில் தண்ணீர் குடிக்கும்போது (ஸ்ட்ரா வைத்துக் குடிக்கும் நேரம் தவிர) விளிம்பில் இதழ் பதித்தே நாம் குடிக்கின்றோம். மையத்திலிருக்கும் தண்ணீரை விளிம்பு வழியாகவே நாம் அடைகின்றோம். மையத்திலிருக்கும் தண்ணீருக்கு உருவம் கொடுப்தே கண்ணாடி டம்ளரின் விளிம்புகளே. ஆனால், பல நேரங்களில் கண்டுகொள்ளாப்படாமல் இருப்பவைகளும் விளிம்புகளே.

'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என அடிக்கடி மொழிவார் அறிஞர் அண்ணா. அதே போலவே பல இடங்களில் 'மையம் வளர்கிறது, விளிம்பு தேய்கிறது' என்பதே எதார்த்தம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பணித்தொடக்கத்தை மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்வதை வாசிக்கின்றோம். இயேசுவின் சமகால பாலஸ்தீனம் கலிலேயா-சமாரியா-யூதேயா என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தது. சமாரியா நிலப்பரப்பில் இனக்கலப்பு செய்து தீட்டானதாகக் கருதப்பட்ட சமாரியர்கள் வாழ்ந்தனர். யூதேயாவிலும், கலிலேயாவிலும் யூதர்கள் வாழ்ந்தனர். இந்த யூதர்களில் யூதேயாவில் வாழ்ந்தவர்கள் உயர்குடி மக்கள். பொருளாதார, அரசியல் பலம் கொண்டிருந்தவர்கள். ஆனால், கலிலேயாவில் வாழ்ந்தவர்கள் சாதாரண விவசாய, வெகுசன மக்கள். இயேசுவின் பணி அக்கால யூத மையமான யூதேயாவில் தொடங்காமல் விளிம்பாக இருந்த கலிலேயாவில் தொடங்குகிறது.

ஏன்?

இஸ்ரயேல் ஒரு இனமாக உருவெடுத்தபோது அதன் பயணம் விளிம்பிலிருந்தே தொடங்கியது. ஆபிரகாம் புறப்பட்ட 'ஊர்' என்ற இடம் ஒரு விளிம்பு. இஸ்ரயேல் மக்கள் மோசேயின் தலைமையில் செங்கடல் கடந்தது ஒரு விளிம்பு. அசீரியா, பாபிலோனியா, மோவாபு, மிதியான், பிலிஸ்தியா போன்ற மையங்களை எதிர்த்து தன் இருப்பை உறுதி செய்தபோதும் அது விளிம்பாகவே இருந்தது. காலப் போக்கில் அது மையமாக வளர்ந்தது.

விளிம்புகள் இயல்பாகவே நொறுங்கும் தன்மை கொண்டவை.

மேலும், கலிலேயா என்ற விளிம்பில் பணியைத் தொடங்கும் இயேசு, 'நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர்' போன்ற விளிம்பு நிலை மக்களிடமிருந்து தொடங்குகிறது. இவ்வாறாக, இயேசு தன் பணித் தொடக்கத்திலேயே தன் அடையாளத்தை வலிமையில் காணாமல் வலுவின்மையில் காண்கின்றார்.

எடுத்துக்காட்டாக, 'ஊதாரி மகன்' (லூக் 15:13-32) எடுத்துக்காட்டில், தந்தை, மையத்திலிருந்த தன் மூத்த மகனுக்காகக் காத்திராமல், விளிம்பிலிருந்த இளைய மகனுக்குக் காத்திருக்கும் இரக்கத்தைக் கடவுளின் இரக்கம் என முன்வைக்கின்றார்.

இன்று, ஒரு புகைப்படம் எடுப்பதில் தொடங்கி நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மையத்தில் இருக்கவே நாம் விரும்புகிறோம். ஆனால், மையம் மாறக் கூடியது. வேகமாக மறையக் கூடியது. ஆனால், விளிம்பு எப்போதும் இருக்கக் கூடியது.

இன்றைய நாளில் நம் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களை எண்ணிப் பார்க்கலாம். அப்படிப்பட்ட யாரையாவது ஒருவரைச் சந்திக்கலாம். ஏன்? நம் விளிம்பு நிலையையே நாம் கொண்டாடலாம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 யோவா 3:22-4:6), எதிர்க்கிறிஸ்து பற்றிய போதனைக்கு முன், அன்பைப் பற்றிப் பேசுகின்றார் யோவான். ஒருவர் மற்றவரிடம் நாம் செலுத்தும் அன்பு விளிம்பிலிருந்தே தொடங்குகிறது. ஒருவரின் தனிமை என்ற விளிம்பை மற்றவரின் தனிமை என்ற விளிம்போடு நெருக்குவதே அன்பு. இப்படியாக விளிம்புகள் இணைந்து வலிமை பெறுவதே அன்பின் வலிமை.

2 comments:

  1. "விளிம்புகள் இணைந்து வலிமை பெறுவதே அன்பின் வலிமை"
    இதுவரை எம்மிடையே விளம்பப்படாத பகிர்வு...
    தங்களுடைய அனைத்து பகிர்வுகளுமே, "Unique." ஒருவரின் தனிமை என்ற விளிம்பை........... அற்புதம்

    நன்றி.

    ReplyDelete
  2. தண்ணீர் குடிக்கும் முறையில் கூடப் பாடமா? கற்கலாம் என்கிறார் தந்தை." இயேசு தன் பணித்தொடக்கத்திலேயே தன் அடையாளத்தை வலிமையில் காணாமல் வலுவின்மையில் காண்கிறார்." நான் மையமா? விளிம்பா?மாறக்கூடிய மையத்தில் அல்லாமல் எப்போதுமே இருக்கிற விளிம்பாக நான் மாறி, தனிமையில் இருக்கும் இன்னொரு விளிம்புடன் இணைவதில் என்ன கஷ்டம்? செய்யலாமே! விளிம்புகள் இணையவும்,அன்பின் வலிமை கூடவும் வழி சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete