Friday, January 18, 2019

இயேசுவின் முதன்மைகள்

இன்றைய (19 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 2:13-17)

இயேசுவின் முதன்மைகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மத்தேயுவை அழைக்கும் நிகழ்வும், அந்த நிகழ்வின் இறுதியில் வரும் விருந்து உபசரிப்பும், அந்த விருந்து உபசரிப்பில் பங்கேற்று இயேசுவைப் பற்றிய மக்களின் விமர்சனமும், அதற்கு இயேசுவின் பதிலும் என நான்கு பகுதிகள் உள்ளன.

மக்களின் விமர்சனத்திற்கான இயேசுவின் பதிலை நம்முடைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை.
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'

தன்னுடைய வாழ்க்கை யாருக்காக என்ற முதன்மையைத் தெளிவாக அறிந்திருக்கிறார் இயேசு.

மருத்துவர் யாருக்கெல்லாம் தேவை?

அவருடைய குடும்பத்திற்கு, அவருடைய நண்பர்களுக்கு, அவருடன் வேலை பார்ப்பவர்களுக்கு, அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கு, மற்றும் அவரிடம் நலம் நாடி வருபவர்களுக்கு. இந்த ஐந்துக் குழுக்களில் இறுதியில் வருகின்ற நலம் நாடி வருபவர்களுக்குத்தான் மருத்துவர் இன்றியமையாதவர் ஆகிறார். அல்லது மற்ற நான்கு குழுக்களில் உள்ளவர்கள் தாங்கள் நோயுறும்போது மருத்துவரை நாடுவர். ஆக, மருத்துவரின் பணி நோயற்றவர்களை அல்ல, நோயுற்றவர்களைத் தேடிச் செல்வதாக இருத்தல் வேண்டும்.

தான் எல்லாருக்கும் என அனுப்பப்பட்டாலும், வந்தாலும் தன் பணி யாருக்கு என்பதை வரையறுக்கின்றார் இயேசு. 'நேர்மையாளர்களை அல்ல. பாவிகளையே அழைக்க வந்தேன்.' முந்தையர்களுக்கு இயேசு தேவையில்லை என்று பொருள் அல்ல. மாறாக, அவர்கள் ஏற்கனவே கரை சேர்ந்தவர்கள். கரை சேர்ந்தவர்களுக்கு மரக்கலம் தேவையில்லை. கடலில் உழல்வோருக்குத்தான் தேவை. கரை சேர்ந்தவர்கள் எனக்குப் பிடித்தமானவர்கள் என்பதற்காக மரக்கலத்தை அவர்களுக்குக் கொடுத்தால், அது அவர்களுக்கு ஒரு பக்கம் சுமையாகவும், மறுபக்கம் கடலில் அமிழ்ந்துகொண்டிருப்போருக்கு ஆபத்தாகவும் முடியும்.

இயேசு தன்னுடைய பணியின் முதன்மை என்ன என்பதை அறிந்திருந்தார். மேலும், அதை யாருக்காகவும் அவர் வளைத்துக்கொள்ளவில்லை. தன்னைப் பற்றிய விமர்சனம் எழுகிறது என்ற காரணத்திற்காக அதை மாற்றிக்கொள்ளவோ, அல்லது தன் முதன்மையை இழக்கவோ இல்லை.

நம் வாழ்வின் முதன்மைகளை நிர்ணயித்த பிறகு நிறைய மற்றவைகள் வரும். மற்றவைகளைக் கவனித்துக்கொண்டே இருந்தால் முதன்மையானவைகள் துன்புறும் நிலை ஏற்படும்.

முதன்மையை நாம் எப்படி நிர்ணயிப்பது?

'எந்தச் செயலை நான் மட்டுமே செய்ய முடியுமோ அதில்தான் என் முதன்மை கட்டப்பட வேண்டும்'

கடிதம் எழுதுவது என வைத்துக்கொள்வோம்.

கடிதம் எழுதுவதுதான் முதன்மையே தவிர, அதை அனுப்புவதற்கான வழியை ஆராய்வது முதன்மை அல்ல. கடிதத்தை யார் வேண்டுமானாலும் போஸ்ட் அல்லது கூரியர் செய்யலாம். ஆக, எழுதுவதை விட்டுவிட்டு, எப்படி அனுப்புவது? யார் வழியாக அனுப்புவது? என்று குழப்பிக் கொண்டிருப்பது நம் நேரத்தை வீணடிப்பதோடல்லாமல், கடிதம் எழுதுவதற்கான நேரத்தையும் இழக்க வேண்டிய நிலையில் கொண்டுNபுhய் விடும்.

மேலும், முதன்மையை நிர்ணயிக்கும் போது நம்மால் பயன்பெறுபவர்களை மனத்தில் கொள்ளவேண்டும். நோயுற்றவர்களை நாடிச் செல்லும் மருத்துவர் தன் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே செல்கின்றார். அவரை நோய் பற்றிக்கொள்ளும் ஆபத்து அதிகம். ஆனால், தன் பாதுகாப்பு வளையத்தை விட்டுச் சென்றால்தான் நோயுற்றவருக்கு நலம் தர முடியும். பாவிகளோடு தங்குவதும் தன் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே செல்வதே.

ஆக, என் முதன்மைகள் என் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளதை மட்டும் நாடாமல், வெளியில் இருப்பதை நாட வேண்டும். நான் ஒரு ஆசிரியர் என வைத்துக்கொள்வோம். 90 மார்க் வாங்குகிற நல்ல மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது என் பாதுகாப்பு வளையம். நான் பெரிதாக ஒன்றும் கஷ்டப்படத் தேவையில்லை. ஆனால் தேர்ச்சி பெற முடியாத மாணவர்களை நான் தேடிச் செல்லும்போது அது எனக்கு வலிக்கும். அந்த வலிதான் என் முதன்மையை நிர்ணயிக்க வேண்டும்.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேன்மையாக முன்வைக்கின்றார்: 'நம் தலைமைக்குரு (இயேசு) நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்.'

இயேசுவைப் போன்று முதன்மையை நிர்ணியக்கவும், நிர்ணயித்த முதன்மையில் நிலைத்திருக்கவும், வலுவின்மையில் முதன்மையைப் பதித்துக்கொள்ளவும் நம்மால் முடிந்தால் எத்துணை நலம்!

3 comments:

  1. என் முதன்மைகளை நான் தேர்வு செய்யுமுன், அதில் நாம் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே செல்லக்கூடிய அபாயங்களும் இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இந்தப் புரிதலைப் பெற தந்தை கொடுக்கும் எடுத்துக்காட்டுகள் அருமை.இயேசுவைப்போன்று முதன்மையை நிர்ணயிக்கவும்,நிர்ணயித்த முதன்மையில் நிலைத்திருக்கவும்,வலுவின்மையில் முதன்மையைப் பதித்துக்கொள்ளவும் நம்மாலும் முடியும் என்று அடித்துச்சொல்லும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete
  2. ஆம் இயேசுவைப் போன்று, நம்மாலும் முடிந்தால் எத்துணை நலம்!
    முயற்சிக்கத்தூண்டிய, அருட்பணி.யேசு லுக்கு எம் அன்பான நன்றிகள்!

    ReplyDelete
  3. GOOD REFLECTION YESU.

    ReplyDelete