Wednesday, January 23, 2019

அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்

இன்றைய (24 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 3:7-12)

அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்

கடந்த சில மாதங்களாக ஆனந்த விகடனில் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதும் 'இறையுதிர் காடு' என்ற ஒரு தொடர் வெளிவந்துகொண்டிருக்கிறது. இறைவன், இறையருள், இறையருளின் மிச்சம், இறையருளுக்கான ஏக்கம் என நிறைய கருத்துருக்கள் இந்தத் தொடரின் கதையில் நிழலாடுகின்றன.

இன்றைய நம் உலகத்தைத்தான் 'இறையுதிர் காடு' என்று உருவகம் செய்கிறார் ஆசிரியர்.

இன்று இறைவனுக்கான தேடல் ஒட்டுமொத்தமாகக் குறைந்துகொண்டு வருகிறது. மேலும், இவ்வுலகில் நடைபெறும் நிகழ்வுகள் நாம் 'நாட்டில்' வாழ்கிறோமா அல்லது 'காட்டில்' வாழ்கிறோமோ என்ற கேள்வியையும் நம்மில் எழுப்புகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் காட்சி வித்தியமாசமாக இருக்கிறது.

'பெருந்திரளான மக்கள்,' 'பெருந்திரளான மக்கள் கூட்டம்,' 'நெருக்கிவிடாதவாறு,' 'அவர் மீது விழுந்துகொண்டிருந்தார்கள்' என்ற சொல்லாடல்கள் இயேசுவைத் தேடி மக்கள் திரண்டு வந்ததை நம்முன் கொண்டுவருகின்றது. இப்படி வந்தவர்கள் எல்லாருமே சாதாரண நபர்கள், தேவையில் இருந்தவர்கள், கையறுநிலையில் இருந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள், தொழுநோயாளர்கள்.

இயேசுவைத் தொட்டால் நலமடைவேன் என்ற இவர்களது நம்பிக்கையே இவர்களை இப்படி இயேசுவின் பின்னால் ஓடச் செய்கிறது.

'ஏழ்மையின் பயன்கள் இனிமையானவை' என்கிறார் ஷேக்ஸ்பியர். ஏனெனில், இந்த ஏழ்மைதான் நாம் மற்றவர்களைத் தேடிச்செல்லவும், இறைவனைத் தேடிச்செல்லவும் காரணமாக இருக்கிறது. அருள்பணி அல்லது துறவற வாழ்வில் மேற்கொள்ளப்படும் 'ஏழ்மை' என்ற வார்த்தைப்பாட்டின் பொருளும் இதுவே. அதாவது, 'என்னால் எல்லாம் முடியும்,' 'என்னிடம் அனைத்தும் இருக்கின்றன' என்ற நிலை மாறி, 'என் இருப்பிற்கும் இயக்கத்திற்கும் அடுத்தவரும் இறைவனும் தேவை' என்று ஒருவர் மற்றவரையும், இறைவனையும் தேடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதே இதன் நோக்கம்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஏழ்மை உணர்வு இருக்கும். இந்த உணர்வுதான் நம்மை அடுத்தவர் நோக்கி திருப்புகிறது. ஆனால், 'என்னால் எல்லாம் முடியும்' என்ற ஒரு மாயையை நாம் உருவாக்கிக்கொள்ளும்போது நான் என்னிலேயே உறைந்து போக வாய்ப்பிருக்கிறது.

ஆனால், இயேசுவின் சமகாலத்தவர்கள் அவரைத் தேடி ஓடுகிறார்கள். 'நாம் தெருவில் என்றாவது வேகமாக ஓடியிருக்கிறோமா?' பெரும்பாலும் இல்லை. ஏனெனில், 'அடுத்தவர் முன் ஓடுவது இழுக்கு' என்பது நாமாகவே வைத்திருக்கின்ற ஒரு கற்பனைப் புனைவு. ஆனால், அவசியம் என்று வரும்போது - ஆபத்து, விபரீதம், பேரிடர் - நாம் ஓடத்தான் செய்கிறோம். அந்த நேரத்தில் நாம் யார் கருத்தையும் பொருட்படுத்துவதில்லை.

இறைவனுக்கான தேவையும், தேடலும் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் இனியவர்கள்.

2 comments:

  1. 'என்னால் எல்லாம் முடியும்' எனும் நிலைமாறி, 'என் இருப்பிற்கும்,இயக்கத்திற்கும் அடுத்தவரும்,இறைவனும் தேவை' எனும் ஏழ்மை உணர்வு துறவறத்தாருக்கு மட்டுமல்ல; இல்லறத்தாருக்கும் கூடத்தேவையே! அனைத்தும் இருந்தும் மனத்தளவில் ஏழ்மையின் உச்சத்தில் வாழும் எத்தனையோ இல்லறத்தார் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்னில் உள்ள ஏழ்மை உணர்வு என்னை அடுத்தவரை நோக்கித் திருப்புகிறதென்றால் அதுவும் எனக்குத் தேவைதானே!" தேவையும்,தேடலும்"... நாம் யார்? நமக்கென்ன தேவை என்று சோதித்தறிய உதவும் வினாக்கள்.தேவையானவையும் கூட.
    இப்பொழுதெல்லாம் தந்தையின் பதிவுகளில் 'ஆன்மீகம்' கொப்பளிப்பதை உணரமுடிகிறது. தந்தையை இறைவன் நன் நலன்களால் நிரப்புவாராக!

    ReplyDelete