Thursday, January 10, 2019

இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்

இன்றைய (11 ஜனவரி 2018) நற்செய்தி (லூக் 5:12-16)

இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தொழுநோயாளர் ஒருவரின் நோய் நீக்குதலை வாசிக்கின்றோம். நோய் நீக்கிய அவர், நோய் நீங்கப் பெற்றவரிடம், 'யாருக்கும் சொல்ல வேண்டாம்' எனச் சொல்லி அனுப்புகின்றார். ஆயினும், இயேசுவைப் பற்றிய செய்தி பரவுகின்றது.

'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' - இயேசு தான் செய்த அற்புதங்களில் ஒரே ஒரு முறை தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஏறக்குறைய, 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என்று சொல்லி அனுப்புகின்றார். கல்லறைகளில் வாழ்ந்த பேய் பிடித்தவரிடம் மட்டும்தான், 'ஆண்டவர் உனக்குச் செய்ததை உன் உறவினருக்கு அறிவி' என அனுப்புகின்றார்.

இதை ஆய்வாளர்கள் 'மெசியா இரகசியம்' என்கிறார்கள்.

'உன்னிடம் விலைமதிப்பான பொருள் ஒன்று இருந்து, அதை அடுத்தவரிடம் நீ சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்' என்று 'தி ஆல்கமெஸ்ட்' நாவலில் சொல்கிறார் பவுலோ கோயலோ. 'இவனிடம் என்ன இருக்கப் போகிறது!' என்ற ஏளனம் அடுத்தவர்களிடம் இருக்கும் விலைமதிப்பானதைக் கண்டுகொள்ள நம்மைத் தடுத்துவிடுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் இயேசு, 'யாருக்கும் சொல்ல வேண்டாம்' என்று சொல்கிறாரோ?

மேலும், சில விடயங்கள் யாரும் சொல்லவில்லை என்றாலும் எப்படியும் தெரிந்துவிடும். தொழுநோய் நீங்கிய இவரை மோசேயின் சட்டப்படி குருவிடம் காட்டுமாறு அனுப்புகிறார் இயேசு. 'உனக்கு எப்படி நோய் நீங்கியது?' என்று குரு கேட்கும்போதும், உறவினர்கள் கேட்கும் போதும் இவர் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். இப்படித்தான் இயேசுவைப் பற்றிய செய்தி வேகமாகப் பரவுகின்றது.

இதில் என்ன விந்தையென்றால், ஊருக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருந்த தொழுநோயாளர் ஊரின் உறுப்பினராகிறார். ஊருக்கு உள்ளே வாழ்ந்து கொண்டிருந்த இயேசு தன்னையே தனிமைப்படுத்திக்கொள்கின்றார்.

'பெயர்' அல்லது 'புகழ்' ஒரு பெரிய போதை. நம் படைப்பாற்றலைக் கெடுப்பது இதுவே. ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஒரு நிகழ்வை நடத்துங்கள். 'மிக அழகாக இருந்தது' என்று பாராட்டுகிறார்கள். நீங்கள் அந்தப் பாராட்டில் சற்று மயங்குகிறீர்கள். அடுத்த ஆண்டும் விழா வருகிறது. அந்நேரமும் நீங்கள்தான் இந்நிகழ்வைச் செய்ய அழைக்கப்படுகிறீர்கள். அந்த நேரம் படைப்பாற்றல் நம்மில் பெரும்பாலும் மழுங்கியே இருக்கும்.

இயேசு இதைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறார். 'எனக்கு இத்தனை பேரைத் தெரியும்,' 'என் குரூப்பில் இவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள்,' 'நான் பலருக்கு அறிமுகமானவர்,' 'என்னை எல்லாருக்கும் தெரிய வேண்டும்' என்று நாம் வாழும் கலாச்சாரத்திற்கு மாற்றுக் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குகின்றார் இயேசு. 'அறிமுகம் அவசியமில்லை' என்று தனிமைத்தவம் செய்கிறார்.

தான் செய்ய வேண்டிய நற்செயலைச் செய்துவிட்டு, வார்த்தைகள் பேச வேண்டாம், செயல்கள் பேசட்டும் எனத் தனியே ஒதுங்கி இறைவேண்டல் செய்கின்றார் இயேசு.

நாம் நம்மோடும் தனித்திருக்கும் பொழுதே இறைவேண்டல். நம் வாழ்வு தாயின் கருவறையில் தொடங்கிய போதும் (இரட்டைக் குழந்தைகள் தவிர), நாம் கல்லறையில் துயில் கொள்ளும்போதும் (மொத்தமாக அடக்கப்படும் இடங்கள் தவிர) தனியாகவே இருக்கிறோம்.இந்த இரண்டும் தனிமை அல்ல. மாறாக, தன்மைய நிலை. இங்கே தான் நம்மை நாமே நமக்கு அறிமுகம் செய்துகொள்ளவும், புதியதாக்கிக்கொள்ளவும் முடியும்.

ஆக, அடிக்கடி ஆள் நடமாட்டம் இல்லாத, அதே போல நம் மூளையிலும் நிறைய ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் நாம் இருத்தல் சால்பு.


3 comments:

  1. 'நாம் நம்மோடு தனித்திருக்கும் பொழுதே இறைவேண்டல்'...சரியே! ஆனால்நாம் கருவறையில் தொடங்கியபோதும்,கல்லறையில் துயில் கொள்ளும்போதும் இருப்பது தனிமை அல்ல; 'தன்மையை நிலை'என்கிறார் தந்தை.முந்தையது உயிருள்ளது; பிந்தியது உயிரற்றது.இரண்டும் எப்படி ஒன்றாகும்? புரியவில்லை.
    ஆனால் நம் சுற்றுப்புறத்திலும், மூளையிலும் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நாம் இருக்கும்போது மட்டுமே, வார்த்தைகள் அல்ல; தன் செயல்களே தன்னைப்பற்றிப்பேசட்டும் என ஒதுங்கி நிற்கும் இயேசுவுக்கு சீடராவோம்.....பின்பற்றக்கூடிய செயலே! வாய்ச்சொல் வீரராக அன்று; செயல்வீரராக நமக்கு அழைப்பு விடுக்கும் தந்தைக்கு என் சல்யூட்!!!

    'மெசியா இரகசியம்'...புதுவார்த்தை...புது விஷயம்.நன்றிகள்!!!

    ReplyDelete
  2. வாராத்தைகள் பேசவேண்டாம்;
    செயல்கள் பேசட்டும் ;
    நன்றி.
    " ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நாம் இருப்பது சால்பு.
    நன்றி.
    வாழ முயற்சிக்கிறோம், நிச்சயமாய், நண்பரே!

    ReplyDelete
  3. " நம் மூளையிலும் நிறைய ஆள்நடமாட்டம் இல்லாத நிலையில் நாம் இருப்பது சால்பு."
    A perfect truth which only Yesu can imbibe..

    ReplyDelete