Friday, January 11, 2019

பெருமகிழ்ச்சி அடைகிறார்

இன்றைய (12 ஜனவரி 2019) நற்செய்தி (யோவா 3:22-30)

பெருமகிழ்ச்சி அடைகிறார்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் தாராள உள்ளம் என்ற ஆளுமைத் திறத்தைப் பார்க்கின்றோம்.

இயேசுவும் யோவானும் எதிர்கொள்கின்றனர் இந்நிகழ்வில். இந்நிகழ்வைப் பதிவு செய்வதற்கு முன்னோட்டமாக, இயேசுவும் யோவானும் வேறு வேறு இடங்களில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பதாகப் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். இயேசு திருமுழுக்கு பெறுவதை மத்தேயு, மாற்கு, லூக்கா பதிவு செய்ய, இயேசு திருமுழுக்கு கொடுப்பதை யோவான் மட்டுமே பதிவு செய்கின்றார். வேறு வேறு இடங்கள் திருமுழுக்கு கொடுப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படக் காரணம் இயேசுவின் சீடர்களுக்கும், திருமுழுக்கு யோவனின் சீடர்களுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள்தாம்.

இப்படி இருவரின் சீடர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருக்க, இயேசுவும் யோவானும் ஒருவரை ஒருவர் மதிப்பவர்களாக இருப்பதைப் பார்க்கின்றோம். 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்ற வரிகள்தாம் நினைவிற்கு வருகிறது.

திருமுழுக்கு யோவான் ஒரு மேன்மகனார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கிறது?

எப்படி?

திருமுழுக்கு யோவானிடம் வருகின்ற சிலர் இயேசுவைப் பற்றி கோள் மூட்டுகின்றனர். 'நீர் ஒருவருக்குத் திருமுழுக்கு கொடுத்தீரே - அதாவது, உம்மை விட ஜூனியர் ஒருவர் இருக்கிறாரே - அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் போகிறார்கள்.'

இவ்வார்த்தைகளைக் கவனித்தீர்களா?

எனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என வைத்துக்கொள்வோம். அந்தப் பிடிக்காத நபரைப் பற்றி என்னிடம் கோள் மூட்டுகின்ற ஒருவர் ரொம்பவும் மிகைப்படுத்திப் பேசி, என் நல்லெண்ணத்தைப் பெறவும், என் கோபத்தைத் தூண்டி அவரிடமிருந்து இன்னும் என்னைப் பிரிக்கவும் முயல்வார். இது அப்படியே இங்கு நடக்கிறது? 'அவர் திருமுழுக்கு கொடுக்கிறார்' என்று மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால், 'எல்லாரும் அவரிடம் போகிறார்கள்' என்று மிகைப்படுத்துகின்றார். மேலும், 'எல்லாரும் அவரிடம் போகிறார்கள்' அப்படின்னா என்ன அர்த்தம்? 'உம்மிடம் யாரும் வருவதில்லை. உம் புகழ் குறைந்துவிட்டது' என்று உள்ளீடாகக் சொல்கிறார்.

வழக்கமாக இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கும்போது கேட்பவருக்கு இயல்பாக கோபமும், சொல்லப்பட்ட நபரின் மேல் பொறாமையும் வரும். இந்தப் பொறாமை அல்லது கோபத்தில் அவர், 'அவன் என்னிடம் படித்தவன்தான்! அல்லது நான்தான் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன்' என்று சொல்லிச் சமாளிப்பார். இல்லையா?

ஆனால், திருமுழுக்கு யோவான் இப்படி எதிர்வினை ஆற்றவில்லை.
'அப்படியா? எல்லாரும் போறாங்களா? மகிழ்ச்சி தானே!' என்று சொல்லியதோடல்லாமல், 'இயேசுவின் ஆற்றல் விண்ணிலிருந்து வந்தது' என்று இயேசுவின் ஆற்றலுக்குச் சான்றுபகர்கின்றார். மேலும், 'நான் மெசியாவுக்கு முன்னோடிதானே தவிர மெசியா அல்ல' என்ற தன் தான்மையை ஏற்றுக்கொள்கின்றார். மேலும், இயேசுவை மணமகனாகவும் தன்னை மணமகன் தோழனாகவும் உருவகிக்கின்றார்.

'தோழனாக மணமகனின் அருகில் இருத்தலே மகிழ்ச்சி' என்று தன்னில் மகிழ்ச்சி காண்கிறார் யோவான்.

இறுதியாக, 'அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எது செல்வாக்கு குறைய வேண்டும்' என்று தாராள உள்ளத்தின் உச்சக்கட்டத்தை அடைகின்றார் யோவான்.

ஒரு பள்ளியில் பணியாற்றும் போது, அல்லது அருள்பணியாளராகப் பணியாற்றும்போது இம்மாதிரியான ஒப்பீடுகளை அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 'நேற்று வந்த டீச்சர் உங்கள விட நல்லா பாடம் எடுக்குறாங்க!' அல்லது 'புதுசா வந்திருக்கிற ஃபாதர் அல்லது ஃப்ரதர் நல்லா மறையுரை வைக்கிறார்!' என்று மற்றவர்கள் சொல்லும்போது, அங்கே, ஒப்பீடும் பொறாமையும் வரக்கூடாது. மாறாக, 'என் இருப்பில் என் இயல்பில் நான் செய்ய இயன்றதைச் சிறப்பாகச் செய்தேன்' என்ற பக்கவமும், 'அடுத்தவராலும் நன்றாகச் செயல்பட முடியும்' என்ற பரந்த மனமும் இருந்தால் நம் மகிழ்ச்சி பறி போகாது.

இந்த உலகம் பல நேரங்களில் முதல் இடங்களையே கொண்டாடுகிறது. ஆனால், இரண்டாம் இடமும் கொண்டாடப்பட வேண்டியது என்கிறார் யோவான். திருமண வீட்டில் கேமரா மணமகனைச் சுற்றியே வரும். ஆனால், அதற்காக அவர் அருகில் இருக்கிற தோழன் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தோழனாக இருப்பதும் நிறைவுதானே. மணமகனோடு ஏன் ஒப்பீடு செய்ய வேண்டும்?

இரண்டு கேள்விகள்:

1. மற்றவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சொல்லும்போது என் மனப்பாங்கு எப்படி இருக்கிறது? அவர்களுது ஒப்பீடுகளால் நான் என் இயல்பை மாற்றிக்கொள்கிறேனா? என் மகிழ்ச்சியை இழக்கிறேனா?

2. நான் என் அடையாளத்தை ஏற்றுக்கொண்டு, என் இருப்பில் நிறைவு கண்டு, அடுத்தவர் வளர வேண்டும் என்ற பரந்த மனம் கொள்கிறேனா?

3 comments:

  1. நாட்டுநடப்பை அப்படியே காமரா கண்கொண்டு பார்க்கும் ஒரு பதிவு.இப்பதிவின் ஒவ்வொரு வரியுமே கண்களில் ஒத்திக்கொள்ளப்பட வேண்டியவை.என் மனத்தில் பதிந்து விட்ட வரிகள்...எனக்குப்பின்னால் வந்த ஒருவர் எனக்கும் மேலாகப்புகழப்படுகையில் சொல்ல வேண்டிய வார்த்தைகள்..." என் இருப்பில்,என்இயல்பில் நான் செய்ய இயன்றதைச் சிறப்பாகச் செய்தேன்" மற்றும் "அடுத்தவராலும் செய்ய இயலும்".. ஒருவரின் மனப்பக்குவத்தையும், பரந்த மனத்தையும் படம் பிடித்துக்காட்டும் வார்த்தைகள்.பல சமயங்களில் மணமகனை விட அவரின் தோழன்தான் தான் அதிகமாக்க் கவனிக்கப்படுபவர் என்பது தந்தைக்குத் தெரியவில்லை போலும்.தந்தையின் இரு வினாக்களுக்கு... முதல் வினாவிற்குப்பதில் "இல்லை" எனவும் இரண்டாவது வினாவிற்கு " ஆம்" எனவும் இருந்தால் மகிழவும்,இலையெனில் நம்மை மாற்றிக்கொள்ளவும் முயல்வோம்.
    இயேசுவையும்,யோவானையும் மற்றவரிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் வார்த்தைகள்...
    " கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்."
    நம்மையும் பார்த்து நாலு பேர் இவ்வாறு குறிப்பிடும் நிலைக்கு நம்மை உயர்த்துவோம்.
    கைநிறையக் கற்கண்டை அள்ளித்தந்தது போன்றதொரு பதிவு. வாழ்த்துக்கள் தந்தைக்கு!!!

    ReplyDelete
  2. சுய ஆய்வு செய்ய வைக்கின்ற இரண்டு கேள்விகளுக்கும் மாண்புறு நன்றிகள்!
    "உம்மை விட junior....."
    முகத்தில் புன்னகை இழையோட வைத்தது, இன்று தங்களுக்கு கிடைத்த வெற்றி...
    நமஸ்காரம்!

    ReplyDelete