Thursday, January 24, 2019

பவுலின் மனமாற்றம்

இன்றைய (25 ஜனவரி 2019) திருநாள்

பவுலின் மனமாற்றம்

சவுல் பவுலாகிய மாறிய திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

சவுலின் மாற்றம் என்பது வெறும் வளர்சிதை மாற்றம் அல்ல. அல்லது ஆள்மாற்றம் அல்ல. மாறாக, இயல்பு மாற்றம். அவரின் மதிப்பு மாற்றம்.

எப்படி?

'கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைத்தேன். சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன்' (திப 22:4) என்று தன்னைப் பற்றி அறிக்கையிடும் பவுல், உரோமையருக்கு எழுதிய திருமடலின் தொடக்கத்தில், 'இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது' (உரோ 1:1) என தன்னைப் பற்றிப் பெருமையுடன் எழுதுகின்றார்.

'ஒதுக்கிவைக்கப்பட்டவனாகிய பவுல்'

ஒதுக்கிவைக்கப்படுதல் என்பதை நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, தேவையில்லை என்று ஒதுக்கிவைப்பது. எ.கா. உப்புமாவில் நாம் காணும் கறிவேப்பிலை அல்லது வெண்பொங்கலில் நாம் காணும் மிளகு. இரண்டு, நாம் எதிர்நோக்கியிருக்கும் ஒன்றிற்காகத் தயாராக வைப்பது. எ.கா. வரவிருக்கும் திருமண நிகழ்விற்காக அணியவிருக்கும் ஆடை அல்லது பெர்ஃப்யூம். ஓட்டல்களில் ஒதுக்கிவைக்கப்படும் இருக்கைகளும் இவ்வகையே.

ஆக, ஒதுக்கி வைக்கப்படும் ஒன்று மதிப்பு பெறுகிறது. ஒதுக்கிவைக்கப்படும் அதைப் பெறுபவர் மதிப்பிற்குரியவராக இருக்கிறார்.

பவுல் தன் மதிப்பு என்ற நிலையை எப்படித் தெரிந்து கொண்டார்?

இவர் திமொத்தேயுவுக்கு எழுதும் இரண்டாம் திருமுகத்தில் இப்படிப் பதிவு செய்கின்றார்: 'ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை. சில மதிப்பற்றவை. ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் ...' (2 திமொ 2:20-21) என எழுதுகின்றார்.

பெரிய வீடு என்பது இங்கே செல்வந்தர் ஒருவரின் வீட்டைக் குறிக்கிறது. பவுலின் சமகாலத்தில் பொன் கலன்கள் பூசை அறையில் வழிபாடுகள் செய்யப் பயன்பட்டன. இதன் அடிப்படையில்தான் இன்று நம் திருப்பலியிலும் பொன் அல்லது பொன் முலாமிட்ட பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். வெள்ளிக் கலன்கள் உணவுப் பாத்திரங்களாகப் பயன்பட்டன. கழிவறைகள் பயன்பாடு இல்லாத வீடுகளில் மனித திரவ மற்றும் திடக் கழிவுகளும், மற்றும் விருந்தின்போது ஒருவர் எடுக்கும் வாந்தி போன்ற கழிவுகளும் மண் மற்றும் மரத்தாலான கலன்களில் சேகரிக்கப்பட்டு, அடிமைகளால் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், அடிமைகள் உணவு உண்ணும் பாத்திரங்களாகவும் மண் மற்றும் மரக்கலன்கள் பயன்பட்டன. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் மதிப்பு உண்டு என்பதை பவுல் மறுக்கவில்லை. ஒவ்வொரு பாத்திரமும் மதிப்பிற்குரியதுதான். ஆனால், அதன் பயன்பாட்டு மதிப்பு என்று வரும்போது பொன்னும், வெள்ளியும் முதன்மை பெறுகின்றன. அதிலும் பொன் மேலோங்கி நிற்கிறது.

ஆக, பவுல் தான் இதுவரை செய்த பணிகளான திருச்சட்டப்பணி, காவல் பணி, துன்புறுத்தும்பணி ஆகியவற்றையும், 'நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன், இஸ்ரயேல் இனத்தவன், பென்யமின் குலத்தவன். எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன், திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்' என்னும் அனைத்துக் கலன்களையும் அகற்றி, 'எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு' என்றும் 'குப்பை' என்றும் கருதுகிறார். ஆக, பவுல் தான் ஒதுக்கப்பட்டவன் என்ற நிலையில் கடவுளின் நற்செய்திப் பணிக்காக தன்னையே மதிப்பற்றவற்றிலிருந்து ஒதுக்கி வைத்துக்கொள்கிறார்.

இப்படி ஒதுக்கி வைக்கப்பதால் என்ன நடக்கிறது?

கடவுளின் நற்செய்திப் பணி நடந்தேறுகிறது. எப்படி?

பவுலே தொடர்ந்து எழுதுகிறார்: '... ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தூய்மையாக வைத்துக்கொண்டால் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார், எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார், தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்' (2 திமொ 2:20-21)

ஆக, மூன்று நிலைகளில் நற்செய்திப் பணி நடந்தேறுகிறது:

அ. மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார்

ஒரு பொருளின் மதிப்பு என்பது அதைப் பயன்படுத்துபவரின் கையில்தான் இருக்கிறது. அல்லது, மதிப்பற்ற ஒன்றிலிருந்து விலகி நிற்கும்போது அது மதிப்பு பெறுகிறது. நற்செய்திப் பணி என்னும் மதிப்புக்குரிய கடவுளின் பணியைத் தேர்ந்துகொள்ளும்போது ஒருவரின் தன்மதிப்பு இயல்பாகவே உயர்கிறது. தன்மதிப்பு கொண்டிருக்கும் ஒருவர் தூய்மையான உள்ளமும், அன்பும், அமைதியும் கொண்டிருப்பார். இழிவான ஊதியத்தின்மேல் அக்கறை கொண்டிருக்க மாட்டார். முதியோரிடம் கடுமையாக நடக்க மாட்டார். அனைவரையும் மதிப்பார். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்.

ஆ. எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்

இங்கே அடிக்கோடிடப்படுபவவை இரண்டு: நற்செயல், ஆயத்தநிலை. ஒரு வாகனம் போல. பயணம் என்பது நற்செயல். தேவையான பொருள்களும் பாதுகாப்பும் கொண்டிருப்பது ஆயத்தநிலை. ஆயத்தநிலையில் ஒரு பொருள் தன் உரிமையாளரின் பயன்பாட்டிற்காகத் தன்னையே முற்றிலும் கையளித்துவிடுகிறது. இதைத்தான் நாம் திருத்தொண்டர் மற்றும் அருள்பணியாளர் திருநிலைப்பாட்டின்போது, திருத்தொண்டரும், அருள்பணியாளரும் கீழ்ப்படிதல் என்ற வாக்குறுதியை அளித்தவுடன், ஆயர், 'இந்த நற்செயலை உம்மில் தொடங்கிய ஆண்டவர் அதை கிறிஸ்துவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வாராக!' என்கிறார். பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலும், ஆயர்பணி திருமுகங்களிலும் 'நற்செயல்' என்ற வார்த்தை 16 முறை வருகின்றது. பிறருக்கு உதவி செய்தல், தாராள உள்ளம் கொண்டிருத்தல், அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், மறைநூலைப் படித்துக் காட்டுதல், மனநிறைவு கொள்தல் என்று சொல்லும் பவுல், இன்னும் ஒருபடி மேலே போய், தீத்துவிடம், 'நற்செயல்களைச் செய்வதில் எல்லா வகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு' (தீத் 2:7) என்கிறார்.

இ. தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்

கடவுளின் நற்செய்திப்பணியின் பயன் பணியாளருக்கு அல்ல. மாறாக, தலைவருக்கு. 'தெ ப்ரூஃப் ஆஃப் புட்டிங் இஸ் இன் தெ ஈட்டிங்' என்பார்கள். கேக் நல்லது என்றால் அது உண்பவருக்கு இனிமையாக இருக்க வேண்டும். மனிதர்கள் எல்லாரும் பயன்பாட்டுப் பொருளா? என்று கேட்கலாம். மனித உறவுகள் பயன்பாட்டு அடிப்படையாகத்தான் உள்ளன. பயன்பாடு இல்லாத உறவுநிலை இல்லை. பயன்களின் தன்மை மாறலாமே தவிர பயன்பாடு மாற முடியாது. 'நாம் யாருக்கு பணி செய்கிறோமோ அவர்களோடுதான் நாம் நெருக்கமாவோம்' என்பது ஆங்கிலப் பழமொழி. நம் வீட்டில் பாருங்கள். நம் வீட்டில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரிவதை விட நம்மிடம் வேலை செய்பவர்களுக்குத் தெரியும். ஆக, அடுத்தவருக்குப் பயனுள்ளவராயிருக்கும்போது அவருக்கும் எனக்கும் உள்ள உறவு அதிகரிக்கிறது.

ஆக, கடவுளின் நற்செய்திப்பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்டவனாகிய பவுல் என்று தன்னை அடையாளப்படுத்தும் பவுல், மதிப்பற்றவற்றிலிருந்து தன்னையே ஒதுக்கிக்கொண்ட நாள்தான் இந்நாள்.

இந்நாளில் மதிப்பற்றவற்றிலிருந்து நாமும் ஒதுங்கி நின்று, மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படவும், எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், நம் தலைவருக்குப் பயனுள்ளவராக இருப்பவும் முயற்சிப்போம்.

2 comments:

  1. நன்று.
    நன்றி!

    ReplyDelete
  2. "தூய பவுல்".... 'இன்று நான் எப்படி இருந்தாலென்ன? 'என்னாலும் ஒரு மதிப்புள்ள கலமாக மாறமுடியும்' என்று நம்புவோருக்கு இவர் ஒரு 'துருவ நட்சத்திரம்!' 'நம்பிக்கையின் துளிர்'.என் வாழ்வோடு 'ஆதாயம்','இழப்பு', 'குப்பை'எனும் சொற்கள் இரண்டறக்கலக்கும் போதுதான் நான் ஒரு உபயோகமான கலமாக மாறமுடியும் என்பதைத் தன் எழுத்துக்களாலும்,வார்த்தைகளாலும் உலகத்துக்கு உரக்கச்சொன்னவர்.இவரும்,இவரது திருமுகங்களும் இல்லாத திருச்சபை முழுமைபெற்றதாக இருந்திருக்கமுடியுமா? தெரியவில்லை.( தந்தை என்னை மன்னிப்பாராக!) 'மதிப்பற்றவற்றிலிருந்து ஒதுங்கி நின்று,மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படவும், எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,நம் தலைவருக்கு பயனுள்ளவராகவும் இருக்க முயற்சிப்போம்' என்று கூறும் தந்தையை திருஅவைக்கு இன்றொரு 'பவுலாக' மாற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete