Thursday, January 3, 2019

நம்பிக்கைச் சுடர்

இன்றைய (4 ஜனவரி 2019) நற்செய்தி (யோவா 1:35-42)

நம்பிக்கைச் சுடர்

'தன் ஒளியால் இன்னொரு மெழுகுதிரியை ஏற்றும் மெழுகுதிரி தன் ஒளியை இழப்பதில்லை' என்பது பழமொழியும், நம் வாழ்வியல் அனுபவமும்கூட. எந்தவொரு தந்தையும், தாயும் தம் அன்பைத் தம் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டதால் இனித் தங்களிடம் மிச்சம் இல்லை என்று சொல்வது இல்லை. எந்தவொரு ஆசிரியரும் தன் அறிவை தன் மாணவர்களோடு பகிர்வதால் அதை இழப்பதில்லை. இப்படியாக, நாம் முழுவதுமாக மற்றவருக்குக் கொடுத்தாலும் நம்மிடம் துளியும் குறைந்து போகாத மெழுகுதிரியின் ஒளி, அன்பு, அறிவு வரிசையில் நம்பிக்கையும் இடம் பெறுகிறது.

எப்படி?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:35-42) யோவான் நற்செய்தியாளரின் பதிவின்படி இயேசு முதல் சீடர்களை அழைத்த நிகழ்வை வாசிக்கின்றோம்.

திருமுழுக்கு யோவான் தன் சீடர்கள் இருவருடன் நின்றுகொண்டிருக்கிறார். அப்பக்கம் இயேசு வர, திருமுழுக்கு யோவான், 'இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று இயேசுவைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர் சொன்ன அடுத்த நிமிடம் இயேசுவைப் பின்தொடர்கின்றர் அந்த இருவர். 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என இவர்கள் கேட்க, 'வந்து பாருங்கள்' என இயேசு சொல்ல, இவர்கள் போகிறார்கள், பார்க்கிறார்கள், தங்குகிறார்கள். அந்த இருவரில் ஒருவரான அந்திரேயா தன் சகோதரர் சீமோனிடம், 'மெசியாவைக் கண்டோம்' என்கிறார். அந்திரேயா இயேசுவிடம் சீமோனை அழைத்துச் செல்கின்றார்.

இங்கே திருமுழுக்கு யோவான், அந்திரேயா, சீமோன் என மூன்று திரிகள் அடுத்தடுத்து நம்பிக்கையால் பற்றிக்கொள்கின்றன. ஆனால், ஒரு திரிகூட தன் ஒளியை இழக்கவில்லை. மாறாக, நம்பிக்கை அடுத்தடுத்த நபருக்கு நகரும் போது வளர ஆரம்பிக்கிறது.

'கடவுளின் ஆட்டுக்குட்டி,' 'ரபி,' 'மெசியா' என நிகழ்வுகள் நம்பிக்கையின் வளர்ச்சியாக இருக்கின்றன. இயேசுவிடமிருந்து தூரத்தில், இயேசுவுக்கு அருகில், இயேசுவோடு என்று இயேசுவுடனான நெருக்கமும் வளர்கிறது.

முதல் கேள்வி, 'என்னிடம் உள்ள நம்பிக்கை வளர்கிறதா?'

இரண்டாம் கேள்வி, 'என் நம்பிக்கையை நான் மற்றவர்களுக்குக் கொடுக்கிறேனா?'

மூன்றாம் கேள்வி, 'எத்தனை பேருக்கு நான் இயேசுவைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்? அப்படிச் சுட்டிக்காட்டினால் எத்தனை பேர் என் வார்த்தைகளுக்குச் செவிமடுப்பர்?'

நிற்க.

இங்கே இயேசு வந்துவிட்டதால் திருமுழுக்கு யோவான் தன் அடையாளம் அகற்றப்பட்டதாகவோ, சீமோனுக்கு பேதுரு (கேபா) என்று பெயர் தரப்பட்டு அவர் முதன்மைப்படுத்தப்பட்டதால் அந்திரேயா தன் அடையாளம் அகற்றப்பட்டதாகவோ உணரவில்லை. இவர்கள் இருவருமே அடுத்தவர் வளர்வது கண்டு மகிழ்கின்றனர்.

ஆக, ஒளி, அன்பு, அறிவு, நம்பிக்கை இவை அனைத்துமே அடுத்தவர் வளர்வது கண்டு மகிழ வேண்டும். அப்படி இல்லையென்றால், இன்றைய முதல் வாசகம் (காண். 1 யோவா 3:7-10) எச்சரிப்பதுபோல, நாம் நெறி தவறியவர்களாகிவிடுவோம். அலகை அடுத்தவரின் வளர்ச்சியை விரும்புவதில்லை. அலகையின் வழி செல்வதே நெறி தவறுதல்.

2 comments:

  1. நேற்று வெறும் பெயர்கள் அளவில் இருந்த வார்த்தைகள் சற்றே நீட்சிபெற்று,இன்று 'கடவுளின் ஆட்டுக்குட்டி','ரபி','மெசியா'என்ற நம்பிக்கையின் வளர்ச்சியைக்காட்டும் வார்த்தைகளாக உரு மாறியுள்ளன.இயேசுவுக்கும்,எனக்குமிடையேயான தூரம் குறைந்து,நெருக்கம் வளர்கையில் என்னை நோக்கி நான் கேட்கவேண்டிய கேள்விகளாக சிலவற்றை முன் வைக்கிறார் தந்தை.பதில் தேட வேண்டிய கேள்விகளே என்பதில் ஐயமில்லை.ஆனால் அதைவிட இங்கே என்னைத் திரும்பத்திரும்ப வாசிக்க வைத்த வரிகள்..."இயேசுவின் வரவால் திருமுழுக்கு யோவானோ,இல்லை பேதுரு பெருமைப்படுத்தப்பட்டதால் அந்திரேயாவோ சிறுமையை விடுத்து,பெருமை கொள்கிறார்கள்" எனும் வரிகளே! அன்பை அள்ளித்தரும் தாய்- தந்தை,அறிவைப்புட்டும் ஆசிரியர்,மற்றும் தன்னைக்கரைத்துப் பிறருக்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி....இவர்களின் வரிசையில் நாமும் இணைவோம்.அடுத்தவரின் வளர்ச்சி கண்டு மகிழ்வோம்; நெறி தவறியவர்களாக அல்ல..நெறி காத்தவர்களாவோம். தன் ஆணித்தரமான வார்த்தைகளால் தன் பதிவிற்கு நாளும் வலு சேர்க்கும் தந்தையை இப்புத்தாண்டிலும்,வரும் காலங்களிலும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete
  2. Quite thought provoking, inspiring & leading for better life.
    Thank you.

    ReplyDelete