Wednesday, January 2, 2019

இயேசுவின் திருப்பெயர்

இன்றைய (3 ஜனவரி 2019) நற்செய்தி (லூக் 2:21-24)

இயேசுவின் திருப்பெயர்

இன்றைய நாளில் இயேசுவுக்கு பெயரிடப்பட்ட விழாவைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய வழிபாட்டிற்காக இரண்டு விதமான வாசகங்கள் தரப்பட்டுள்ளன: ஒன்று, திருப்பெயர் திருவிழா (பிலி 2:1-11, லூக் 2:21-24), இரண்டு, திருப்பிறப்புக் காலம் (1 யோவா 2:29-3:6). நம் சிந்தனைக்கு திருப்பெயர் திருவிழாக்குரிய வாசகத்தை எடுத்துக்கொள்கிறோம்.

'பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை வேறு பெயர் சொல்லி அழைத்தால் அதன் மணம் மாறுமா?' என்று ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் கேட்கிறார் ஷேக்ஸ்பியர்.

இயேசு பிறப்பு முன்னறிப்பு நிகழ்வுகளில் அவருக்கு மூன்று பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.

மத்தேயு நற்செய்தியில், யோசேப்புக்குக் கனவில் தோன்றுகிற வானதூதர், 'யோசேப்பே, தாவீதின் மகனே ... மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில், அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' (மத் 1:20-21). இங்கே 'இயேசு' என்பது அவருக்கு இடப்பட பெயர் என்றாலும், சற்று நேரத்தில் தொடரும் வானதூதர், 'அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவீர்' (காண். மத் 1:22-23) என்று சொல்லி, 'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் நம்மோடு' என்ற பொருளும் சொல்லப்படுகிறது. ஆனால், யோசேப்பு குழந்தைக்கு 'இயேசு' என்றே பெயரிடுகிறார் (காண். மத் 1:25). ஆனால், எகிப்திலிருந்து திருக்குடும்பம் நாசரேத்துக்குத் திரும்பும்போது, 'நசரேயன்' (காண். 2:23) என்ற பெயர் தரப்படுகிறது. இவ்வாறாக, மத்தேயு நற்செய்தியாளரைப் பொறுத்தவரை, இயேசு, இம்மானுவேல், நசரேயன் என்ற பெயர்கள் ஒரே குழந்தைக்கு இடப்படுகின்றன. ஆனால், இங்கே 'இயேசு' என்பதை 'பொருட்பெயர்' எனவும், 'இம்மானுவேல்' மற்றும் 'நசரேயன்' என்பதை 'பண்புப்பெயர்' அல்லது 'காரணப்பெயர்' எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

லூக்கா நற்செய்தியில், மரியாவுக்குத் தோன்றுகிற கபிரியேல், 'இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்' (லூக் 1:31) எனச் சொல்கின்றார். அதே போல, இயேசுவுக்கு எட்டாம் நாள் விருத்தசேதனம் செய்து, குழந்தைக்கு 'இயேசு' என்று பெயரிடுகிறார்கள் அவரின் பெற்றோர் (காண். லூக் 2:21). ஆனால், இயேசுவின் பிறப்பை இடையர்களுக்கு அறிவிக்கின்ற வானதூதர்(கள்), 'உங்களுக்கு மீட்பர் பிறந்திருக்கிறார்' (லூக் 2:11) எனச் சொல்கின்றார். எபிரேயம் அல்லது அரமேயத்தில் 'யஷூவா' அல்லது 'யோசுவா' என்றால் 'மீட்பர்' என்று பொருள். ஆக, 'இயேசு' (கிரேக்கத்தில் 'இயேசுஸ்') என்பதை அரமேய மூலத்திலிருந்து மொழிபெயர்த்து இடையர்களுக்குச் சொல்கின்றார் வானதூதர்.

மீட்பர் என்பதற்கு முதல் ஏற்பாட்டில், எபிரேயத்தில் 'கோயல்' என்ற பதம் உண்டு. இந்தப் பதம்தான் அடிக்கடி ரூத்து நூலில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, போவாசு ரூத்தை தன்னுடையவராக்குகின்றார். அப்படி ஆக்கும்போது அவர் ஒரு குறிப்பிட்ட பணத்தைக் கொடுத்து அவரின் இழப்பை மற்றவருக்கு ஈடு செய்ய வேண்டும் (காண் இச 25:5-6). மேலும், அடிமைத்தனத்திலிருந்து ஒருவரை விடுதலை செய்வதற்கு பிணை கொடுப்பவரை 'கோயல்' என அழைத்தனர் (காண். லேவி 25:48-49).

இதை கிரேக்கத்தில் 'சோத்தேர்' ('காப்பாற்றுபவர்') என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறார் லூக்கா. ஆக, இயேசு மனுக்குலத்தை பாவங்களிலிருந்து 'மீட்பவராக' இருக்கிறார். பிணையாக அவர் தன் உயிரையே கையளிக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். பிலி 2:1-11), புனித பவுல், '... எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்' என்று சொல்லி, 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என்று மூன்று பெயர்களை வரிசையாகச் சொல்கின்றார்: 'இயேசு' (மீட்பர்), 'கிறிஸ்து' (மெசியா அல்லது அருள்பொழிவு பெற்றவர்), 'ஆண்டவர்' ('கடவுள்'). இதில் பவுல் குறிப்பது என்னவென்றால், இயேசு தன் பெயருக்கு ஏற்ப வாழுகின்றார். தன் பெயராகவே மாறிவிடுகின்றார்.

ஆக, பெயரில் நிறையவே இருக்கிறது.

நம் தமிழ் மரபில் வழக்கமாக தாத்தா அல்லது பாட்டியின் பெயரைத் தான் ஒரு தந்தை தன் குழந்தைக்கு வைத்தார். ஆகையால்தான் அக்குழந்தையை 'பெயரன்' (பேரன்) அல்லது 'பெயர்த்தி' (பேத்தி) என்று அழைக்கிறார்கள். இவ்வாறாக, பெயரில் ஒருவர் இவ்வுலகில் தொடர்ந்து வாழ முடியும். ஆக, சாவைத் தோற்கடிக்க, இறவாமையை உறுதி செய்ய மனுக்குலம் கண்டுபிடித்ததே பெயர். இன்று நாம் நிறைய வித்தியாசமான பெயர்களை வைக்கின்றோம்.

ஆனால், 'நல்ல பெயர்' எடு என்பதும், 'பெயர்க்கேற்ப வாழ்' என்பதும் நமக்குச் சொல்லப்படுகின்ற அறிவுரைகள். 'பெயர்' ஒருவரின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. அந்தப் பெயரைக் காப்பாற்ற நிறைய 'பொறுப்புணர்வு' தேவை.


2 comments:

  1. Happy feast Reverend Yesu!
    இந்த பெயர்க்காரணம் அற்புதம்!
    என் உள்ளம் உவகையால் நனைகின்றது.
    நன்றி!முனைவரே!

    ReplyDelete
  2. தெரியாத பல விஷயங்களைத் தெளிவாக்கும் ஒரு பதிவு.எத்தனையோ பெயருக்கு உரிமைக்காரரான மரியாவின் மைந்தனைப்பற்றிப் புனித பவுலடியார் " எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி,எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்." எனக்கூறும் வரிகள் இயேசுவின் பின்புலத்தை பறைசாற்றுகின்றன. "தன் பெயருக்கேற்ப வாழும் இயேசு,தன் பெயராகவே மாறிவிடுகிறார்" எனும் தந்தையின் வரி ஒருவருக்கு சூட்டப்படும் பெயரின் முக்கியத்துவத்தை எடுத்துவைக்கிறது.தாத்தா,பாட்டிகளின் பெயரைத்தாங்கி நிற்கும் 'பெயரன்'களும்,' பெயர்த்தி'களும் அவர்களின் முன்னோர்களை வாழவைக்கிறார்கள் என்பது அழகான செய்தி.அவரவர் பெயரைக்காப்பாற்ற அவரவருக்கு " பொறுப்புணர்வு" தேவை என்பது மட்டுமின்றி ஒருவரை " நல்ல பெயர்" எடுக்க வைப்பதையும, " பெயருக்கேற்ப வாழவைப்பதையும்'' பெரியவர்கள் தங்கள் தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்பதையும் இன்றைய பதிவு அழகாகவும்,அழுத்தமாகவும் முன்வைக்கிறது.

    எழுத்துக்களை மாற்றிப் போட்டாலும் 'இயேசு' எனும் பொருள் கொண்ட தந்தை "யேசு" வுக்கு என் வாழ்த்துக்களும்!! செபங்களும்!!!

    ReplyDelete