Monday, January 14, 2019

பொங்கல் திருவிழா

இன்றைய திருவிழா - பொங்கல் திருவிழா

தை மாதத்தின் முதல் நாளான இன்று நாம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறோம். தை 1 ஆண்டின் புத்தாண்டா அல்லது சித்திரை 1 ஆண்டின் புத்தாண்டா என்பதில் நிறைய அரசியல் இருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுவோம்.

பொங்கல் - இதை நான் மூன்று வார்த்தைகளில் புரிந்து கொள்ள விழைகிறேன்: (அ) இயற்கை, (ஆ) இனிமை, (இ) இணைப்பு.

அ. இயற்கை

பொங்கல் அன்று நாம் சூரியனுக்கு நன்றி சொல்கிறோம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், பொங்கல் திருநாளில் இயற்கையின் ஐம்பெரும்பூதங்களும் இணைந்திருக்கின்றன. 'மண்' பானை, அதில் இடப்படும் 'நீர்,' அதைச் சுட வைக்கும் 'நெருப்பு,' நெருப்பை உந்தித் தள்ளும் 'காற்று,' பானைக்குள் நிரம்பி பின் பொங்குதலுக்கு வழிவிடும் 'ஆகாரயம்.' இப்படியாக இயற்கையின் மொத்தமும் பொங்கல் திருநாளில் நினைவுகூறப்படுகிறது.

ஆ. இனிமை

சர்க்கரை, கரும்பு என இனிமை இங்கு முன்வைக்கப்படுகிறது. அறுசுவைகளில் ஆற்றல் தரும் சுவை இனிப்பு. ஆகையால்தான், நம் உடலில் குளுக்கோஸ் குறைந்தவுடன் நம் ஆற்றல் குறைந்துவிடுகிறது. ஆக, ஆற்றலைக் கொண்டாடும் இந்நாளில் இனிமை சுவை பரிமாறப்படுகிறது.

இ. இணைப்பு

இன்றைய நாளில் மனிதர்கள் இயற்கைக்கும், மனிதர்கள் ஒருவர் மற்றவருக்குமான இணைப்பைக் கொண்டாடுகிறோம். பொங்கல் விழாவின் நீட்சியாக வரும் 'மாட்டுப்பொங்கல்' மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உள்ள இணைப்பையும், தொடர்ந்து வரும் 'காணும் பொங்கல்' அல்லது 'கன்னிப் பொங்கல்' மனிதர்கள் தங்களுக்குள்ளான இணைப்பையும் கொண்டாடுவதாக அமைகிறது.

இன்றைய திருப்பலிக் கொண்டாட்டத்தில் நாம் பயன்படுத்தும் முதல் வாசகம் (காண். யோவேல் 2:21-24, 26-27), 'நிலமே, நீ அஞ்சாதிரு! காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்!' என்று இயற்கையை நோக்கிப் பேசும் ஆண்டவர், 'களங்களில் கோதுமை நிறைந்திருக்கும். ஆலைகளில் திராட்சை ரசம் வழிந்தோடும்' என்று ஆறுதல் தருகின்றார். இவ்வாறாக, இஸ்ரயேல் மக்களின் நிந்தையை அகற்றுகின்றார் கடவுள்.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 6:6-11, 17-19), 'இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான். ஆனால் மனநிறைவு உள்ளவர்களுக்கே தரும' என்கிறார் பவுல். ஆக, பொங்கல் நாளில் நாம் கொள்ள வேண்டிய ஒரு மதிப்பீடு 'மனநிறைவு.' 'போதும்' என்றால் 'இதுவே போதும்!' 'போதாது' என்றால் நமக்கு 'எதுவுமே போதாது!'

நற்செய்தி வாசகம் (காண். லூக் 17:11-19) தொழுநோய் நீங்கப்பெற்ற பத்துப் பேரில் சமாரியன் ஒருவர் திரும்பி வந்து நன்றி சொல்வதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆக, நன்றியின் நாள் இது என்பதை இவ்வாசகம் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த எல்லா வாசகங்களையும் இணைக்கும் முகத்தான் இருக்கிறது இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 126). 'கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள் ... விதை எடுத்துச் செல்லும்போது அழுகையோடு செல்கின்றார்கள். அரிகளைச் சுமந்து வரும்போது அக்களிப்போடு வருவார்கள்.'

விதைக்கும் ... அறுவடைக்கும் இடையே ஒன்று இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அது என்ன? உழைப்பு

விதை ஏதோ ஒரு மேஜிக்கினால் அறுவடைக்கு தயாராவதில்லை.

நாம் நிலத்தின் அரிசியை அப்படியே கடவுளுக்குப் படைப்பதில்லை. அதில் நம் உழைப்பைக் கலந்து பொங்கலாகப் படைக்கிறோம். திருப்பலியிலும் அப்படித்தான். நாம் கோதுமைப் பயிரையோ, திராட்சைக் கொடியையோ அப்படியே கடவுளுக்கு அளிப்பதில்லை. அவற்றில் நம் உழைப்பைக் கலந்து அவற்றை அப்பமாக, இரசமாக ஒப்புக்கொடுக்கிறோம். ஆக, உழைப்பு ஒன்றே ஒரு பொருளின், நபரின் இயல்பை மாற்றுகிறது.

ஆக, இன்றைய நாளில் உழைப்பு என்ற கொடைக்காக நன்றி கூறுவோம்.

'இயற்கை,' 'இனிமை,' 'இணைப்பு' - இம்மூன்றையும் ஒன்றாகக் கட்டுவது உழைப்பே.


3 comments:

  1. " பொங்கல்" என்பதன் மறுபெயர் 'உழைப்பு',மற்றும் ' நன்றி' என்று சொல்லாமல் சொல்லும் ஒரு பதிவு.இன்றையப் படையலான பொங்கலை 'இயற்கை', 'இனிமை', மற்றும் 'இணைப்பு' கலந்து குழைத்துத் தந்திருக்கிறார் தந்தை. இன்றையத் திருப்பலி வாசகங்கள் அனைத்தும் இயற்கையை முன்னிறுத்திக்காட்டியிருப்பது திருஅவையும்,இறைமக்களும் கைகோர்த்தே நடக்கின்றனர் என்பதைக்காட்டுகிறது. "கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடே அறுவடை செய்வார்கள்"... எனக்குப்பிடித்த திருப்பாடல் வரி. தந்தையின் பொங்கலில் 'ஐம்பெரும் பூதங்கள்' மட்டுமல்ல இயற்பியலும்,வேதியலும்,உயிரியலும் சேர்ந்தே விளையாடுகின்றன.. இத்தனை சிறிய மண்டைக்குள் எத்தனை பெரிய விஷயங்கள்! வியப்பு மேலிடுகிறது தந்தையை நினைக்கையில்! தந்தைக்கும்,மற்றும் அனைவருக்கும் என் இனிய பொங்கல்,புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. இயற்கை, இனிமை, இணைப்பு,
    உழைப்பு;
    அருமை...
    நன்றி!

    ReplyDelete
  3. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழனின் பொங்கல் விழாவை இனிமையான சிந்தனையோடு கொண்டாட கரும்பின் இனிப்பு போல் 'சிந்தனை விருந்து' அமைந்துள்ளது.
    இயற்கை,' 'இனிமை,' 'இணைப்பு' - இம்மூன்றையும் ஒன்றாகக் கட்டுவது உழைப்பே.அருமை .... பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete