Sunday, October 7, 2018

அப்படியே செய்யும்

நாளைய (8 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 10:25-37)

அப்படியே செய்யும்

'டிட்டோ' - என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். 'டிட்டோ' என்ற இலத்தீன் வார்த்தைக்கு 'அப்படியே' அல்லது 'ஏற்கனவே சொன்னதுபோல' என்பது பொருள்.

'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்ற திருச்சட்ட நூல் ஆசிரியரின் கேள்விக்கு, 'திருச்சட்ட நூலில் என்ன வாசிக்கிறீர்?' என்று கேள்வியை விடையாகச் சொல்கிறார் இயேசு.

அவர் இறையன்பு மற்றும் பிறரன்பு பற்றிய கட்டளைகளைச் சொல்ல, இயேசு, 'சரியாய்ச் சொன்னீர். அப்படியே செய்யும்' என்கிறார்.

அவர் விடுவதாக இல்லை. 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?' என்கிறார். நல்ல வேளை, 'என் கடவுள் யார்?' அவர் கேட்கவில்லை. ஒருவேளை அவர் கேட்டிருந்தால் இயேசு என்ன நிகழ்வு சொல்லியிருப்பார்? அவரின் கேள்விக்கு 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டை சொல்கிறார் இயேசு. இறுதியில், 'நீரும் போய். அப்படியே செய்யும்!' என்கிறார்.

அப்படி அந்த சமாரியன் என்ன செய்தான்?

1. 'மெதுவாக பயணம் செய்தான்' - ஆக, வாழ்வில் வேகம் குறைக்க வேண்டும்.

2. 'அடிபட்டவரைக் கண்டான்' - ஆக, உனக்குச் சுற்றி நிகழ்வதைப் பார்க்க வேண்டும்.

3. 'அவர் மீது பரிவு கொண்டான்' - ஆக, 'நான் இவருக்கு உதவினால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்காதே. மாறாக, 'நான் இவருக்கு உதவாவிட்டால் இவர் என்ன ஆவார்?' என்று கேட்க வேண்டும்.

4. 'அவன் அவரை அணுகினான்' - ஆக, இணைப்பு என்பது அணுகுவதில் ஆரம்பமாகிறது.

5. 'காயங்களில் எண்ணெயும், மதுவும் வார்த்தான்' - ஆக, எந்த நேரத்தில், எந்த இடத்தில், எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

6. 'அவற்றைக் கட்டி' - ஆக, பிளவைக் கட்டி சரிசெய்தலே அன்பின் இயல்பு.

7. 'தன் விலங்கின்மீது ஏற்றி' - ஆக, தான் நடந்து, தன் விலங்கின்மேல் அவருக்கு இடம் கொடுத்தல். அதாவது, என் சுமை ஏற்று பிறருக்கு சுகம் தருதல்.

8. 'சாவடிக்குக் கொண்டுபோய்' - ஆக, நலம் தரும் பயணம் இறுதிவரை அமைதல் வேண்டும்.

9. 'இருதெனாரியத்தை எடுத்து' - ஆக, 'என் வாழ்வின் இரண்டு நாள் சம்பளம் போனாலும் பரவாயில்லை. அதை உனக்குக் கொடுக்கிறேன். மேலும், உனக்காக இன்னும் உழைக்கிறேன்' என்ற மனநிலை பெறுதல்.

'அடுத்தவரை அன்பு செய்வதை' இயேசு 9 எளிதான படிநிலைகளாக மாற்றித் தருகின்றார் இயேசு.

சில நேரங்களில் டிட்டோவாகச் செய்வதும் நலம்.


2 comments:

  1. " நல்ல சமாரியன்".... எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை."இப்படி நானும் இருந்தால் நன்றாய் இருக்குமே!" என்று என்னை ஏங்க வைக்கும் வார்த்தை.அந்த சமாரியன் செய்த நற்செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டும் தந்தை அவனுடைய ஒவ்வொரு செயலும் நம் வாழ்வில் எப்படி வெளிப்பட வேண்டுமென அர்த்தமுள்ள வரிகளில் விவரிக்கிறார். அந்த சமாரியனுக்கு நேர்ந்தது போல் ஒரு சம்பவம் நமக்கு அமையாமல் போகலாம்.ஆனால் பலவிதமான தேவைகளில் இருப்பவர்கள் நம்மைச்சுற்றி இருக்கத்தானே செய்கிறார்கள்? உணவின்றி,உடையின்ற.உள்ளத்தில் மகிழ்ச்சியின்றி எத்தனை பேரை நாம் பார்க்கிறோம்? அவர்களுக்கு என்ன செய்கிறோம்?....பல சமயங்களில் " ஐயோ பாவம்!" என்று சொல்வதைத்தவிர? தந்தையின் வரிகள்...." நான் இவருக்கு உதவினால் என்ன கிடைக்கும் என்று கேளாமல் இவருக்கு உதவவில்லை எனில் என்ன ஆகும்?" என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டும்." ..உந்துசக்தியைத் தரும் வரிகள்.சிந்திப்போம்; செயல்படுவோம்." "டிட்டோ" எனும் சொல்லுக்கு வழக்கில் உள்ள " காப்பியடித்தல்" என்றும் பொருள் கொள்ளலாம்.சமயங்களில் " காப்பியடித்தலும் தப்பில்லை" என்று கூறும் தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete
  2. 9 முத்துக்களும் நவரத்தினங்கள்...
    விலைமதிப்பற்ற வாழ்க்கை நெறிகள்...
    நிஜமாக்குவோம் நிச்சயமாக எம் வாழ்க்கை வழித்தடங்களில்...
    நீங்காத நல்ல சமாரியனாய்...

    ReplyDelete