Friday, October 19, 2018

கவலைப்பட வேண்டாம்

நாளைய (20 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:8-12)

கவலைப்பட வேண்டாம்

'எப்படி பதில் அளிப்பது?
என்ன பதில் அளிப்பது?
என்ன பேசுவது?'

- 'இதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.

இந்த வரிகளை திபா 139:1-4-உடன் பொருத்திப் பார்ப்போம்:

'ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்.
நான் அமர்வதையும் எழுவதையும் அறிந்திருக்கின்றீர்.
என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்.
என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.
ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகுமுன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.'

நம் எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?

எங்கிருந்தோ வருகின்றன - இல்லையா?

வரலாற்றைப் புரட்டிப்போட்ட யோசனைகள், பாடல்கள், காவியங்கள், கண்டுபிடிப்புகள், ஓவியங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், முடிவுகள் என மனிதகுலத்தை முன்னேற்றிய மனித படைப்பாற்றல் எண்ணங்கள் மனிதர்களிலிருந்து தோன்றினாலும், பிரபஞ்சத்தோடு அவர்கள் கொண்டிருந்த இணைப்பே, இவ்வெண்ணங்களை ஊற்றெடுக்கிறது என்று சொல்கிறது உளவியல் ஆய்வு.

ஆக, எண்ணங்கள் நம்மைச் சுற்றிக் கிடக்கின்றன. நம் ஆழ்மனம் இந்த பிரபஞ்சத்தோடு இணையும்போது அவை நம் எண்ணங்கள் ஆகின்றன.

இதையே நாளைய முதல் வாசகத்தில் (காண். எபே 1:15-23), 'இவற்றை நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப்பெறுவனாக' என்று அகக்கண்கள் ஒளிபெறுவதை விரும்புகின்றார் பவுல்.

ஒரு வை-ஃபை ரவுட்டரோடு நாம் நம் மொபைலை இணைக்கும்போது எப்படி ஒட்டுமொத்த இணைய உலகத்தோடு இணைப்பு பெற்று, இணையத்தின் தகவல்கள் நம் தகவல்கள் ஆகின்றனவோ, அப்படியே நாம் இறைவனோடு இணையும்போது அவரின் ஆவியின் சொற்கள் நம் ஆவியின் சொற்கள் ஆகின்றன.

இதை அடைவதற்கான சின்ன பாஸ்வேர்ட், 'அமைதி.'

3 comments:

  1. முதலில் எனக்குப் பிடித்த அழகான 139ம் திருப்பாடலின் வரிகளோடு ஆரம்பித்துள்ள பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றிகள்.அண்ட சராசரங்களோடு நாம் கொண்டிருக்கும் இணைப்பே நம்மில் எழும் எண்ணங்களுக்குக் காரணம் என்கிறார் தந்தை.இந்த எண்ணங்களை மொழிபெயர்ப்பது நமது செயல்களே என்பதை நாம் மறுக்க இயலாது.செயல்கள் வளம்பெற எண்ணங்களும்,எண்ணங்கள் வளம்பெற இணைப்புக்களும் சரியாக இருக்கவேண்டும்.நாம் யாருடன்/ எதனுடன் இணைந்துள்ளோம்? நம் எண்ணங்கள் இறைவனோடு இணையட்டும்;நம் சொற்கள் ஆவியின் சொற்களாகட்டும்.இவற்றை நமதாக்க நமக்கான பாஸ்வேர்ட் 'அமைதி' எனில் அந்த 'அமைதி'க்கான பாஸ்வேர்டை எங்கே தேடுவது?கவலை வேண்டாம்... அதற்கும் தூய ஆவியே துணையாக வருவார் என்ற பாசிட்டிவ் எனர்ஜி தரும் தந்தையின் எழுத்துக்கு என் வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!.

    ReplyDelete
  2. Passwordக்கு நன்றி.
    இறைஅமைதி இதயங்களை
    இறையோடு இணைக்கட்டும்!
    வழிவகுத்த அருட்பணி.யேசுவுக்கு,
    வரலாறு வழிமொழியட்டும்...
    நன்றி!

    ReplyDelete