Wednesday, October 10, 2018

கேளுங்கள் கொடுக்கப்படும்

நாளைய (11 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 11:5-13)

கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறைவேண்டலில் இருக்கவேண்டிய அணுகுமுறை பற்றி அறிவுறுத்துகின்றார். தன் நண்பரிடம் நள்ளிரவில் அப்பம் வாங்கச் செல்லும் மற்றொரு நண்பரை எடுத்துக்காட்டி, 'தொந்தரவின் பொருட்டாவது கொடுக்கும்' அவரின் மனநிலையைச் சொல்கின்றார். மேலும், கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என இறைவேண்டலில் இருக்க வேண்டிய விடாமுயற்சியையும், பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்கும் தந்தையின் அன்பையும் பற்றிச் சொல்கின்றார்.

இயேசு தரும் எடுத்துக்காட்டிலிருந்து தொடங்குவோம்.

நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரின் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருகின்றார். 'அந்தக் காலத்தில் விருந்தினர்கள் எப்போது வருவார்கள் என்று காத்திருந்தோம். இந்தக் காலத்தில் விருந்தினர்கள் எப்போது போவார்கள் என்று காத்திருக்கிறோம்.' காத்திருக்காத விருந்தினர் ஒருவர் வருகிறார். அவரின் பசியாற்ற வேண்டும். பாலஸ்தீனம் போன்ற பாலைநிலச் சமுதாயத்தில் விருந்தோம்பல் தலைசிறந்த பண்பாகப் போற்றப்பட்டது. ஏனெனில், 'இன்று நான் விருந்தோம்பினால் இதே பாலைநிலத்தில் எனக்கு வேறொருவர் விருந்தோம்பல் செய்வார்' என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. விருந்தினர் வந்தவுடன் இவர் தன் வீட்டு அலமாரியைத் திறக்கின்றார். அங்கே ரொட்டி இல்லை. உடனடியாக இவருக்கு தன் நண்பரின் நினைவு வருகிறது. 'அவர் வீட்டில் ரொட்டி இருக்கும்' என நினைத்து அங்கே ஓடுகிறார். கதவைத் தட்டுகிறார். நண்பரின் குரல் கேட்டு அந்த நண்பர் எழுந்தாலும், படுக்கையை விட்டு எழ அவருக்கு மனமில்லை. அவரிடம் ரொட்டி இருக்கிறது. ஆனால், எழுந்து கொடுக்க அவரின் சோம்பல் தடுக்கிறது. 'நான் எழுந்தால் என் பிள்ளைகளும் எழுவார்கள்' என்று சொல்கிறார். இன்றுபோல, கணவன்-மனைவி ஒரு அறை, பிள்ளைகள் மறு அறை என்றல்ல அன்று. எல்லாரும் சேர்ந்துதான் தூங்கியிருப்பார்கள். எழுந்து, தீப்பந்தம் கொளுத்தி, அலமாரியைத் திறந்து, பாத்திரத்தை திறந்து, ரொட்டியை எடுத்து, கதவைத் திறந்து கொடுப்பது பெரிய வேலைதான். இவர் இப்படி செய்யும்போது வீட்டில் உள்ள எல்லாரின் தூக்கமும் கலையும். நட்பிற்காக எழாத அவரை நண்பரின் தொல்லை எழுப்பிவிடுகிறது. அதாவது, 'இவன் இப்படி தட்டிக்கொண்டே இருந்தாலும் பிள்ளைகள் எழுந்துவிடுவார்கள்' என்ற நிலையில் நண்பர் ரொட்டி கொடுக்கின்றார்.

ஆனால், கடவுள் அப்படியல்ல என்பதே இயேசுவின் செய்தியாக இருக்கிறது.

தட்டுகின்ற நண்பரின் விடாமுயற்சி நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு. நாம் கேட்கிறோம், தேடுகிறோம், தட்டுகிறோம். ஆனால், ஒருமுறை அல்லது இருமுறைதான் அப்படிச் செய்கிறோம். பின் சோர்ந்துவிடுகிறோம். வாழ்வில் பலவற்றை நாம் விடாமுயற்சியின்மையால் இழந்திருக்கிறோம். 'எறும்பு ஊற கல்லும் தேயும்' என்பது பழமொழி.

இரண்டாவதாக, 'மீன் கேட்டால் பாம்பு,' 'முட்டை கேட்டால் தேள்' என்ற மிகச்சாதாரண எடுத்துக்காட்டை தருகிறார். சில நேரங்களில் சில வீடுகளில் இப்படித்தான் கிடைக்கும். கேட்பது அனைத்தையும் கொடுத்துவிடும் தந்தையர் குழந்தைகளைக் கெடுத்துவிடுகின்றனர் என்பது வாழ்வியல் உண்மையாக இருக்கிறது. சில நேரங்களில் நம் அப்பாக்கள் இப்படித்தான் நமக்கு கொடுத்தார்கள். ஆனால், நம் கையில் கிடைத்த பாம்பை மீனாகவும், தேளை முட்டையாகவும் எடுத்துக்கொண்டு அமைதி காத்தோம். ஏன், கடவுளே சில நேரங்களில் அப்படித்தானே தருகின்றார். 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்றை நினைக்கத்தானே' செய்கின்றது.

இறுதியில் இயேசு சொல்லும் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்:

'தம்மிடம் கேட்கிற எல்லாருக்கும், கேட்கின்ற எல்லாவற்றையும் விண்ணகத் தந்தை கொடுத்துவிடுவது கிடையாது.' பின் எதைக் கொடுக்கிறார் அவர்? 'தூய ஆவியை.'

ஆக, தூய ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள் தாங்கள் விரும்பியது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நிறைவு கொள்வர்.

இதையே நாளைய முதல் வாசகத்தில் (கலா 3:1-5) தூய பவுலடியார், 'தூய ஆவியால் தொடங்கிய வாழ்க்கையை வெறும் மனித முயற்சிகளால் ஏன் முடித்துக்கொள்கிறீர்கள்?' என்று சாடுகின்றார்.

நாம் ஒன்று கேட்க, அவர் தூய ஆவியை நமக்கு கொடுக்கிறார் எனில், 'பாம்புக்கு பதில் மீனையும்,' 'தேளுக்குப் பதில் முட்டையையும்' கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம்.

இறுதியாக,

'கேளுங்கள்' என்பதை 'கையை நீட்டி கேளுங்கள்' என எடுத்துக்கொள்ளாமல், 'காது கொடுத்துக் கேளுங்கள்' என எடுத்துக்கொண்டால், 'அவர் சொல்வதை நாம் கேட்டால்,' 'நாம் விரும்பியதை அவர் கொடுப்பார்.'

'கேளுங்கள்' - 'காது கொடுத்து' - 'உங்களுக்கு கொடுக்கப்படும்'

2 comments:

  1. இறைவேண்டலில் இருக்க வேண்டிய விடா முயற்சியையும்,பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்கும் தந்தையின் அன்பையும் விளக்கும் ஒரு பதிவு. இன்னும் ஒருபடி மேலே போய் நாம் கேட்டது உடனே கிடைக்காதபோது அதற்காக காத்திருக்கத் தேவையான ' பொறுமை' யையும் சேர்த்துக்கொள்ளலாம்.இந்தப் பொறுமை அல்லது விடாமுயற்சியைப்பற்றித்தான் தந்தை " எறும்பு ஊறக் கல்லும் தேயும்" என்று குறிப்பிடுகிறார்.தங்கள் பிள்ளைகளின் அன்றாட அவசியத்தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய இயலாத பெற்றோருக்கும்,மீனைக்கேட்டால் பாம்பையும்,முட்டை கேட்டால் தேளையும் கொடுக்கும் பெற்றோருக்கு மத்தியில் " நாம் ஒன்று நினைக்க வேறொன்றைக் கொடுக்கும் தெய்வத்தையும் தந்தை விட்டு வைக்கவில்லை. நாம் கேட்காத ' தூய ஆவியை' அவர் கொடுக்கிறார் எனில் நம்முடைய அந்தப் பொழுதின் தேவை அதுதான் என்று அறிந்த பாசமிகு தந்தை அவர். தந்தையின் ' சுய கருத்து'.......கேளுங்கள்'- 'காது கொடுத்து'- 'உங்களுக்குக் கொடுக்கப்படும்'......அழகு மட்டுமல்ல; அருமையும் கூட.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. இந்த இறைவார்த்தைகளுக்கு இப்படி ஒரு பொருள் புனைந்தது மிகவும் அற்புதம்.
    யாரும் நினையாத ஒன்று...
    ஆனால்"YESU" உணர்த்திவிட்டார்...நன்று.
    " கேளுங்கள்"----
    ஆம் காது கொடுத்துக் கேளுங்கள்;
    "அவர் சொல்வதை நாம் கேட்டால்"
    நாம் வரும்பியதை அவர் கொடுப்பார்.
    ஏன் ஒருவேளை அவர் விரும்புவதையே நாம் கேட்பவர்களாக மாறிவிடுவோம்...
    " கேளுங்கள்"---காது கொடுத்து...
    இறைவன் உங்களுக்கு அள்ளி அளிப்பார் நிறைவாக...
    Your thoughts--- "unique"
    Your picture----" purely perfect"

    ReplyDelete