Monday, October 29, 2018

அதை ஒருவர் எடுத்து

நாளைய (30 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 13:18-21)

அதை ஒருவர் எடுத்து

'இருநூறு கோடி மக்களுக்கு மேல் இன்னும் நற்செய்தியைக் கேட்கவில்லை.
ஒருமுறைகூட கேட்கவில்லை. நாம் அதை மாற்றுவோம்.'

- இந்த வார்த்தைகளோடு ஒரு இணையதளத்தின் முதல்பக்கம் திறந்தால் நம் எதிர்வினை எப்படி இருக்கும்?

அ. 'ஓ அப்படியா...மாற்ற ஏதாவது செய்யலாமே? நாமும் நற்செய்தி அறிவிக்கலாமே!'

ஆ. 'இது சும்மா வெட்டிவேலை! ஏன்? எல்லா செய்தியும் நற்செய்திதானே! இயேசுவின் செய்திதான் நற்செய்தியா? இருக்கிற நிலையில நம்ம நற்செய்தியை காப்பாத்துறதே பெருசு! இதைப் போய் எப்படி அறிவிப்பது?

இ. இணையதளத்தின் முகப்பைப் பார்த்து, மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு, 'இதை வேறு யாராவது செய்யட்டும். எனக்கு வேறு வேலை இருக்கிறது' என்று அடுத்த இணையதளத்திற்கு கடந்து போவது.

நம் ஒவ்வொருவரின் எதிர்வினை இந்த மூன்று செயல்களுக்குள் அடங்கிவிடும் என நினைக்கிறேன்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சிக்கான உவமைகளாக, 'கடுகு,' மற்றும் 'புளிப்புமாவை' முன்வைக்கிறார். பல நேரங்களில் 'கடுகு' பற்றியும், 'புளிப்புமாவு' பற்றியும், 'இறையாட்சி' பற்றியும் சிந்தித்த எனக்கு இன்றைய நற்செய்தியில் வரும் மற்றொரு சொல்லாடல் கண்ணுக்குப் பட்டது: 'அதை எடுத்து அவர்.'

'ஒருவர் அதை எடுத்து'

'கடுகை எடுத்து அவர்'

'புளிப்புமாவை எடுத்து அவர்'

கடுகு தானாக நிலத்திற்குள் செல்லாது. புளிப்பு மாவு தானாக மாவுக்குள் இறங்காது.

இரண்டிற்கும் ஒரு மனித கை தேவை.

ஆக, மனித ஒருங்கியக்கம் இல்லாமல் இறையாட்சி கடுகு விதையாக விதைக்கப்படுவதும், புளிப்புமாவாக கரைக்கப்படுவதும் இல்லை.

நான் என் மாணவர்களோடு சில நேரங்களில் சிறைப்பணிக்குச் செல்வதுண்டு. சிறைப்பணிக்குச் சென்று திரும்பும்போதெல்லாம், 'இறையரசும் கிடையாது ... எதுவும் கிடையாது ... எல்லாம் நாமாக பேசிக்கொள்கிற ஒரு ரொமான்டிக் வார்த்தைதான் இது' என நினைத்துச் சோர்ந்ததுண்டு.

செய்யாத தவறுக்குத் தண்டனை, செய்யாத தவறை செய்ததாக ஒத்துக்கொள்ள அடி, தவறு செய்தவரை தப்புவிக்க மாற்றுக் கைதி, 100 ரூபாய் திருடினால் சிறை 1000 கோடி திருடினால் அரசு மரியாதை என பார்ப்பது, கேட்பது அனைத்தும் இறையரசு இருப்பதற்கான அறிகுறியை இல்லாமல் செய்துவிடுகிறது.

இந்தப் பின்புலத்தில், கடுகு, கொத்தமல்லி, உளுந்தம் பருப்பு, மாவு, எனச் சொல்லிக்கொண்டிருப்பது சரியா?

இந்தக் கேள்விக்கு விடை மேலே நாம் காணும் மனித கையின் தேவையில்தான் இருக்கிறது.

இறையாட்சி என்னும் கடுகுவிதையை நான் கையில் எடுக்கின்றேனா?

கடுகைக் கையில் எடுக்க மிகவும் கவனம் தேவை. அது என் விரல் இடுக்குகளுக்குள் ஓடிவிடலாம்.

புளிப்பு மாவைக் கையில் எடுத்து என் கையை நான் அழுக்காக்க வேண்டும். அதையும் நான் சரியாகக் கையாளாவிட்டால் அது என் விரல் இடுக்குகளுக்குள் பாய்ந்து சிந்தி விடும்.

இவ்வளவு மென்மையான இறையாட்சியை நான் முதலில் கவனமுடன் கைதாங்க வேண்டும். பின் இன்னும் கவனத்துடன் அடுத்தவரின் கரத்திற்கு மாற்ற வேண்டும். இதைச் செய்யாமல் வெறும் கேள்விகள் எழுப்புவது சார்பன்று.

ஆக, இன்று இறையாட்சி என்னும் கடுகை, மாவை நான் கைதாங்கி தூக்குகின்றேனா?

இதுவே என் கேள்வியாகவும், தேடலாகவும் இருக்கட்டும்.

6 comments:

  1. Yes...இதுவே என் கேள்வியாகவும்,தேடலாகவும் இருக்கட்டும்!
    இன்று இறையாட்சி என்னும் கடுகை, மாவை நான் கைதாங்கி தூக்குகின்றேனா???
    இதற்கு பதிலாக ஒரு எடுத்துக்காட்டு தந்தால், நலமாயிருக்கும்...
    Ok.We Will/I shall try to find the reply in the light of Gospel
    Thank you! Well done!

    ReplyDelete
  2. Yes...இதுவே என் கேள்வியாகவும்,தேடலாகவும் இருக்கட்டும்!
    இன்று இறையாட்சி என்னும் கடுகை, மாவை நான் கைதாங்கி தூக்குகின்றேனா???
    இதற்கு பதிலாக ஒரு எடுத்துக்காட்டு தந்தால், நலமாயிருக்கும்...
    Ok.We Will/I shall try to find the reply in the light of Gospel
    Thank you! Well done!

    ReplyDelete
  3. மிகவும் இயல்பாக,எதார்த்தமாக தந்தை தன் மனத்தின் இயலாமையை, மனச்சோர்வை வெளிப்படுத்துகிறார்.இது நம்மில் பலருக்கும் கூட ஏற்படக்கூடிய சோர்வுதான்.நிலமை நம் கட்டுக்கடங்காமல் போகும்போது நம் ஆற்றாமையைப் பற்றிப்புலம்புவதை விட, நம்மில் ஒளிந்துள்ள ஆற்றல் குறித்து சிந்திப்பதே நம் தேடலுக்கு விடையளிக்கும்.நம் மனக்கலத்திற்கு விடை 'மனித கையின் தேவையில் தான் இருக்கிறது' என்கிறார் தந்தை.ஆமாம் கடுகு என் விரல் இடுகளுக்குள் மாட்டிக்கொள்ளாமலும்,புளிப்பு மாவு என் கைகளை அழுக்காக்கி விடாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டுமெனில் அதற்கான இலாவகம் என் கரங்களுக்குத்தேவை.இந்த செயலின் மென்மைக்கு இணையாக வைக்கிறார் தந்தை " இறையாட்சியை". இந்த இறையாட்சியை என் கைகளால் தாங்குவது மட்டுமின்றி அடுத்தவரின் கைக்கு மாற்றுவது ஆயிரம் வார்த்தைகளை அடுக்குவதற்கும் மேலானது என்கிறார் தந்தை. "விசுவாசப்பரப்புதல்" எனும் வார்த்தை அதிகமாகப் பேசப்படும் இந்நாட்களில் அதைக்காக்கவும் பரப்பவும் நான் என்ன செய்கிறேன்? பதிலைத்தேடுவோம்...
    பி.கு...இன்றையப் பதிவை கையில் எடுக்கையில் நிச்சயமாக இந்த "கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு இவற்றைக் கையில் எடுப்பவர்கள் பெண்களே!" என்ற நினைப்பு தந்தைக்கு இருந்திருக்கும். இத்தனை பெரிய மகுடத்தைப் பெண்களின் தலையில் சூட்டிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Ideogram--- கடுகை கவனமாக தாங்கியுள்ள அந்த கைகள் அழகானவை...தாங்கியுள்ள விதம் அற்புதமானது.
      அவ்வாறே, இறையாட்சியை நாம் கைத்தாங்கி தூக்க வேண்டும் மண்ணகம் மலர...
      இனி எங்கள் அன்றாட செபங்களில் கண்டிப்பாக சிறையயிலிருப்போருக்கு, சிறப்பிடம் உண்டு.நன்றி for the motivation.

      Delete
  5. *sorry spelling mistake.
    * கைத்தாங்கி தூக்க வேண்டும்.
    * மண்ணகம் மலர...

    ReplyDelete