Tuesday, October 2, 2018

திரும்பிப் பார்ப்பவர்

நாளைய (3 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 9:57-62)

திரும்பிப் பார்ப்பவர்

'நீர் எங்கு சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்' என்று தன்னிடம் சொன்ன ஒரு இளவலிடம், சீடத்துவத்தின் சவால்களை முன்வைக்கிறார் இயேசு.

மற்ற இரு இளவல்களிடம், 'என்னைப் பின்பற்றி வாரும்,' என இயேசுவே சொல்ல, அவர்களில் ஒருவர் தன் தந்தையை அடக்கம் செய்வதிலும், மற்றவர் தன் வீட்டில் பிரியாவிடை பெறுவதையும் முன்வைக்கின்றனர்.

'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் உழுவதற்கு தகுதியற்றவர்' என்ற தன் சமகால பழமொழியால் அவர்களுக்கு விடை பகர்கின்றார் இயேசு.

இது ஒரு விவசாய உருவகம். கலப்பை என்பது இன்றைய நவீன டிராக்டர் கலப்பை, சட்டி கலப்பை, ஜே.சி.பி, பொக்லைன் என மாறிவிட்டது.

கலப்பையில் கை வைத்து உழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்த்தால் என்ன நடக்கும்?

அ. கலப்பை நேர் கோட்டில் செல்லாது
ஆ. உழுத இடத்தையே உழுது கொண்டிருக்கும் நிலை வரும்
இ. உழுகின்ற நபரின் காலையே கலப்பை நோகச் செய்துவிடும்

இது இயேசுவைப் பின்பற்றும் சீடத்துவத்திற்கும் பொருந்தும்.

அ. வாழ்க்கை நேர் கோட்டில் செல்லாது.
ஆ. புதியதாக எதுவும் செய்யாமல் செய்ததையே திரும்ப செய்வதில் இன்பம் காண வைக்கும்.
இ. சீடருக்கே அது ஆபத்தாக முடியும்.

மேலும், திரும்பிப் பார்க்கும்போது நாம் இறந்த காலத்திற்குள் மீண்டும் செல்கின்றோம். நாம் பழையவற்றில் இன்பம் காண எத்தனிக்கிறோம். ஆனால், வாழ்வு என்பது நிகழ்காலத்திலும், புதியது தரும் சவாலை எதிர்கொள்வதிலும் இருக்கிறது என்கிறார் இயேசு.

நாளைய முதல் வாசகத்தில் (காண். யோபு 9:1-12,14-16) யோபு கடவுள்முன் மனிதரின் இயலாமை அல்லது கையறுநிலை பற்றி முறையிடுகின்றார். அவரோடு ஒப்பிடப்பட மனிதர்கள் தகுதியற்றவர்கள் எனவும், அவரின் இரக்கம் நம்மை அவர் அருகில் அழைத்துச் செல்கிறது என்றும் சொல்கிறார்.

தூரமாக இருக்கும் கடவுள் இயேசுவில் நமக்கு அருகில் வருகிறார். அவரோடு பேசவும், அவரைப் பின்பற்றவும் நம்மால் முடிகிறது.

அவரோடு செல்லும் சீடத்துவப் பயணம் அவர்மேல் மையம் கொண்டதாக இருந்தால் நம் கலப்பை நேராக உழும்.


1 comment:

  1. பல நேரங்களில் " நான் உம்மை மட்டுமே பின் பற்றுவேன்" என உறுதிமொழி எடுத்தும்,அதைப்பின்பற்றுவதில் வழுவும் பலரைக் குறித்த செய்திதான் "கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப்பார்ப்பவர் உழுவதற்குத் தகுதியற்றவர்" என்பது.புதியது தரும் சவாலை விடுத்து பழையவற்றில் இன்பம் காண எத்தனிப்பதுவே இதற்கான காரணம் என்கிறார் தந்தை.தூக்கிய கலப்பையைத் தோளில் சுமந்து முன்னேறிச்செல்ல நமக்குத் தேவை இயேசுவின் இரக்கம் மட்டுமே என்பதும்,தூரமாக இருக்கும் இயேசு நம் அருகில் வருகையில் மட்டுமே அவரோடு பேசவும், அவரைப்பின்பற்றவும் முடியும் என்பதும் இன்றையப் பதிவு நமக்கு எடுத்து வைக்கும் செய்தி."நமது கலப்பை நாம் விரும்பும்படி நேராக உழ வேண்டுமெனில் அவருடனான நம் சீடத்துவத்தைத் தக்க வைத்துக்கொள்வதே சால்பு" எனும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete