Thursday, October 18, 2018

என் நண்பர்களாகிய உங்களுக்கு

நாளைய (19 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:1-7)

என் நண்பர்களாகிய உங்களுக்கு

நற்செய்தி நூல்களில் இயேசு தன் சீடர்களை இரண்டுமுறை 'நண்பர்கள்' என அழைக்கிறார்:

'என் நண்பர்களாகிய உங்களுக்குச் சொல்கிறேன்...' (லூக் 12:4)

'உங்களை நான் நண்பர்கள் என்றேன்...' (யோவா 15:15)

யோவானின் பதிவைவிட லூக்காவின் பதிவு அதிக பொருள் பொதிந்ததாக இருக்கிறேன். 'உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்று சொல்லாமல், 'என் நண்பர்களே' என நேரிடையாகச் சொல்கின்றார். இங்கே 'பிஃலயோ' என்ற வினைச்சொல்லிலிருந்து வரும், 'ஃபிலோய்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

கிரேக்க மொழியில் மனிதர்கள் மனிதர்களை அன்பு செய்வதை மூன்று சொற்கள் வழியாகக் குறிக்கின்றனர்:

அ. 'ஸ்தோர்கே' - இது பெற்றோர்-பிள்ளைகள், பிள்ளைகள்-பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோருக்கு இடையேயான அன்பு. இந்த உறவு இரத்த உறவு.

ஆ. 'ஈரோஸ்' - இது காதலர்கள், கணவன்-மனைவி இடையே திகழும் உறவு. இந்த உறவு திருமண உறவு.

இ. 'ஃபிலியா' - இது நண்பர்களுக்கிடையே நிலவும் அன்பு. வயது ஒத்திருக்கும், அல்லது எண்ணங்கள் ஒத்திருக்கும் நபர்களிடையே உள்ள அன்பு.

இயேசு பயன்படுத்தும் கிரேக்க வார்த்தை மூன்றாவது வார்த்தையாகிய 'ஃபிலியா' என்பது.

பல நேரங்களில் இரத்தம், திருமண உறவுகளைவிட, நட்பு உறவு மேலோங்கி இருக்கும் என்பது நாம் அறிந்ததே.

ஃபிலியா என்ற வார்த்தையை மையமாக வைத்து அரிஸ்டாடில் மூன்றுவகை நட்பைப் பற்றி எழுதுகின்றார்:

அ. பயன்பாட்டு நட்பு
ஆ. இன்பமைய நட்பு
இ. நற்குண நட்பு

இவற்றில் முதல் மற்றும் இரண்டாம் வகை நட்பு தீயவர்களிடமும் இருக்கலாம் என்று சொல்லும் அவர், மூன்றாம் வகை அன்பு நல்லவர்களிடம் மட்டும் இருக்கும் என்கிறார்.

இயேசு தன் சீடர்களை நண்பர்கள் என்று அழைப்பது இந்த மூன்றாம் நிலையில்தான். ஏனெனில், இயேசுவால் பயன்பெற்றவர்கள் அவரிடம் பயன்பாட்டு நட்பு கொண்டிருந்தனர். அவரை எதிர்த்தவர்கள் இன்பமைய (துன்பமைய) நட்பு கொண்டிருந்தனர். அவரோடு இருந்த திருத்தூதர்கள் நற்குண நட்பில் அவரோடு இணைந்திருக்கின்றனர்.

நட்பின் இரண்டு குணங்களை நாளைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்:

அ. நட்பில் ஒவ்வொருவரும் மதிப்பு பெறுவர் - 'இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?' ஐந்தாம் குருவி இலவசக் குருவி. நட்பில் இலவசக் குருவிக்கும் மதிப்பு உண்டு.

ஆ. நட்பில் அனைவருக்கும் முகம் இருக்கும் - 'தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது' கூட்டத்தில் ஒன்று அல்ல. தனித்தனியே ஒன்று.

இயேசுவின் நட்பு என்பது நாம் அவரின் நற்குணத்தால் பெற்றிருக்கின்ற உரிமைப்பேறு என்கிறார் பவுல் (முதல் வாசகம், எபே 1:11-14).

3 comments:

  1. "அன்பு" எனும் வார்த்தையின் கிரேக்க மூலத்தையும்,அதன் மூன்று விதங்களையும் அதில் "ஃபிலியா" என்ற வார்த்தைக்குரிய அன்பின் பொருள்பற்றியும் அழகான விளக்கம் தந்துள்ளார் தந்தை.ஆம்! எனது பெயரின் மூலம் கூட 'அன்பு' என்று சிறு பருவத்திலேயே சொல்லப்பட்டிருப்பதால் கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியாகவும் உள்ளது.உண்மைதான்; பல நேரங்களில் இரத்தம்,திருமண உறவுகளைவிட நட்பு உறவு பலரில் மேலோங்கி இருக்கும்.இந்த அன்பு இறைவனில் வெளிப்படும் வித்த்தை "ஐந்தாம் குருவியான இலவசக்குருவிக்கும் மதிப்பு உண்டு; நம் தலைமுடி எல்லாம் கற்றையாக இல்லாமல் தனித்தனியாக எண்ணப்பட்டுள்ளன" என்று இறைவனின் அன்பை அழகாக வர்ணிக்கிறார்.அவர் நம்மை " நண்பர்கள்" என்றழைப்பது அவரின் இறைகுணம்.என் மனித இயல்பில் நான் அதே அன்பை எவ்வாறு பிரதிபலிக்கிறேன்? அந்த அன்புக்கு எவ்வாறு என்னைத் தகுதியாக்குகிறேன்?சிந்திப்போம்.சிந்திக்கத்தூண்டிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. மேற்சொன்ன இன்றைய நற்செய்தி பதிவில்(பகுதியில்) நட்பை முன்னிறுத்தி நான் பேச கேட்பது இதுவே முதல்முறை. Quite a different approach.good.
    இருப்பினும்,
    மூன்று வகை நட்பு---ok--"இயேசுவின் நட்பு என்பது நாம் அவரின் நற்குணத்தால் பெற்றிருக்கின்ற உரிமைப்பேறு---ok
    Now my question is what does this part of the Bible call us for according to rev.Yesu?
    If it is நற்குண நட்பு, then according to my view "ஸ்தோர்கே" "ஈரோஸ்" "ஃபிலியா" ஆகிய மூன்றும் நற்குண நட்பே! Provided அடிப்படையில் ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால்...
    So இன்றைய நற்செய்தியின் அழைப்பு---
    கிறிஸ்து வழியாக அவரது உரிமைப் பேற்றை பெற்ற நாம் தொடர்ந்து அவரது நன்மைதனத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. அப்படித்தானே? நன்றி!

    ReplyDelete