Monday, October 15, 2018

கழுவாத கைகள்

நாளைய (16 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக்கா 11:37-41)

கழுவாத கைகள்

'கைகளில் உண்பது நல்லதா?' அல்லது 'கரண்டி மற்றும் முள்கரண்டியில் உண்பது நல்லதா?' என்ற விவாதம் பற்றிய செய்திகள் சில நேரங்களில் வாட்ஸ்ஆப்பில் வலம வருவதுண்டு.

'டெட்டாலு டெட்டாலுதான்' போன்ற நிறுவனங்கள் இப்போது கைகழுவப் பயன்படுத்தப்படும் நீர்ம சோப்பு பற்றி அதிக விளம்பரங்கள் வெளியிடுகின்றன. இது போன்ற நீர்ம சோப்புகளின் பயன்பாடு நம் கைகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைக் - அதாவது, உணவு செரிமானத்துக்கு உதவுபவை - கொன்றுவிடுவதாகவும் பேசப்படுகின்றன.

இயேசுவின் சமகாலத்தில் உணவு அருந்துமுன் கைகளைக் கழுவுவது தூய்மைக்காக இல்லாமல், அது தூய்மை பற்றிய சடங்காக மாறியிருந்தது. மேலும், இந்தச் சடங்கினால், தாங்கள் தூய்மையானவர்கள் எனவும், தாங்கள் சந்திக்கும், தொடும் புறவினத்தார்கள், சமாரியர்கள், பெண்கள், குழந்தைகள், விலங்குகள், வரிதண்டுவோர் ஆகியோர் பாவிகள் எனவும் அவர்கள் கருதத் தொடங்கினர்.

பரிசேயர் ஒருவர் நாளைய நற்செய்தியில் இயேசுவை தன் இல்லத்திற்கு விருந்துண்ண அழைக்கிறார். விருந்துண்ண வந்த இயேசுவைப் பற்றி அக்கறைப்படாமல் அவர் செய்யும் தூய்மைச் சடங்குகள் பற்றி அக்கறைப்படுகின்றார் அவர். இயேசு ஒரு யூத ஆணாக இருந்தும், ஒரு யூத ஆண் செய்ய வேண்டிய தூய்மைச் சடங்கை இயேசு செய்யாததுபற்றி பரிசேயர் வியப்படைகின்றார். இந்த வியப்பில் ஒருவகையான வெறுப்பும் ஒளிந்திருக்கிறது.

ஆனால், இயேசு வெளிப்புறம் என்னும் கையைத் தூய்மையாக்கிவிட்டு, உள்புறத்தில் - மனத்தில் - தீமையை வளர்த்தெடுப்பது இன்னும் மோசமானது என்று கடிந்துகொள்கின்றார்.

இன்று நாம் தூய்மை இந்தியா, தூய்மை உலகம், தூய்மை இல்லம் என நிறைய பேசுகின்றோம். தூய்மை இந்தியாவைத் தொடர்ந்து, தொலைக்காட்சிகளில் வரும் ஹார்பிக் விளம்பரங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, 'தூய்மை இந்தியா' பிரச்சாரமும் கார்ப்பரெட் நிறுவனத்தின் சதியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

'தூய்மை என்பது இறைமைக்கு அடுத்தது' என்று நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். ஆனால், தூய்மை எல்லா நேரமும் நல்லதல்ல. ஏனெனில், தெருவோரங்களில் வாழும் குறவன் குறத்தி இனப் பெண்கள், தூய்மையாக இருப்பதை வெறுக்கின்றனர். தூய்மையாக இருப்பதும், தங்களையே அழகுபடுத்திக்கொள்வதும் மற்றவர்கள் தங்களை எடுத்துக்கொள்ள பயன்படுவதால் தூய்மையற்ற நிலையிலேயே இருக்கப் பழகிக்கொள்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் தூய்மை என்பது ஆபத்து. 'தூய்மை-தீட்டு' என்ற பாகுபாட்டினாலேயே நம் மண்ணில் சமூகம், மதம், இனம் சார்ந்த தீண்டாமையினால் இந்த உலகில் எவ்வளவு கண்ணீரும், செந்நீரும் நாம் பார்க்கின்றோம்.

வெளிப்புறத் தூய்மையை விட உள்புறத் தூய்மை - நம் மனம், எண்ணம் தூய்மையாக இருத்தல் - இன்று அவசியமாகிறது.

நாளைய முதல் வாசகத்தில் (காண். கலா 5:1-6) இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவது வெளிப்புறத்தில் நாம் செய்யும் திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா அல்லது தூய ஆவியாராலா என்ற கேள்வி எழுகிறது. வெளிப்படையான செயல்களால் அல்ல - அதாவது, வெளிப்புறத்தால் அல்ல - மாறாக, உள்ளிருக்கும் இயல்பான தூய ஆவியாரல்தான் ஏற்புடைய நிலை வருகிறது என பவுல், புறத்திலிருந்து அகத்திற்கு கலாத்திய நகர திருச்சபையினரை அழைத்துச் செல்கிறார்.

ஆக, புறத்திலிருந்து அகம் நோக்கிய தூய்மை பயணமே இனிய பயணம்.

1 comment:

  1. " தூய்மை- தீட்டு" எதிரெதிர் வார்த்தைகள்.நாம் தூய்மை என எண்ணுவதை '" அவரும்" தூய்மையெனக் கொண்டாடத்தேவையில்லை என்பதே நமக்கு இந்தப்பதிவின் மூலம் உணர்த்தப்படுகிறது. "தூய்மை இறைமைக்கு அடுத்தது" எனப் பொதுவாகச் சொல்லப்படினும் எல்லா நேரமும் இது உண்மையாயிருக்கத் தேவையில்லை என்கிறார் தந்தை.ஒருபுறம் இது எதிர்மறையான கருத்து போல் தோன்றிடினும்..தெருவோரம் குடித்தனம் நடத்தும் பெண்கள் தங்களின் தூய்மையே தங்களை ஆபத்துக்கு இட்டுச்செல்லும் எனும் காரணத்தால் தங்களைத் தூய்மையற்ற நிலையிலேயே வைத்துள்ளார்கள் என்பதும்," தூய்மை- தீட்டு" எனும் பாகுபாடே நம் மண்ணில் கண்ணீரும்,செந்நீரும் கரைபுரண்டோடக் காரணம் என்பதும் நம் கன்னத்தை அறையும் செய்திகள். அகமா இல்லை புறமா எது தூய்மையாக இருக்கவேண்டும்? இரண்டுமே தான் என்பது நம் பதிலாக இருப்பினும் நாம் "அகத்தூய்மையைப்" பொறுப்பெடுத்துக்கொண்டால் அதுவே "புறத்தூய்மைக்குப்" பொறுப்பெடுத்துக்கொள்ளும்...ஏனெனில் நம்முள் உறையும் " தூய ஆவியே"இந்த அகத்தூய்மைக்கு ஊற்று.புறமிருந்து அகம் நோக்கிய பயணமே இனிமை எனில் அதை மேற்கொள்வதில் என்ன தடை நமக்கு?

    "அகத்தூய்மை" பற்றிய விஷயங்களை அடுக்குமொழியில் எடுத்துவைக்கும் ஒருவர் இந்தப் "புறத்தூய்மை"குறித்த விடயங்களையும் அதாவது இந்த 'டெட்டாலு டெட்டாலுதான்' என்பது வரை கரைத்துக்குடித்துள்ளார் என்பது மெச்சத்தகுந்த விடயம்.அதுமட்டுமல்ல... நாம் அடிக்கடி கைகழுவப் பயன்படுத்தும் நீர்ம சோப்புகள் நம் கையில் உள்ள,உடல் செரிமாணத்துக்கு உதவும் பாக்டீரியாக்களைக் கொன்று விடுகின்றன என்பது பலருக்கு புதுத்தகவலாக இருக்கலாம்.'அகம்' குறித்த பதிவுகளில் அங்கங்கே இது போன்ற 'புறம்' குறித்த தகவல்களையும் தரும் தந்தைக்கு இன்னொரு 'முனைவர்' பட்டம் கொடுத்தாலும் சரியே!!!

    ReplyDelete