Tuesday, November 1, 2016

சாக்காடு

இன்று காலை தேநீர் இடைவேளையின் போது என் நண்பர் தனராஜ் அவர்கள் தான் கடைசியாகப் படித்த நாவல் ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

'தெ மேன் ஊ டைட்' (the man who died) (இறந்த மனிதன்). இதை எழுதியவர் டி.எச். லாரன்ஸ்.

டி.எச். லாரன்ஸ் அவர்களின் அனைத்து நாவல்களிலும் மேலோங்கி நிற்கும் ஒரு சிந்தனை என்னவென்றால், 'ஆவியைவிட உடல் வலிமையானது.'

கிறிஸ்தவர்கள் இதைக் கேட்டவுடன் முகம் சுளிப்பர்.

ஏனெனில் கிறிஸ்தவர்களைப் பொறுத்த வரையில் 'உடலைவிட ஆவிதான் வலிமையானது'. இயேசுவின் உயிர்ப்பு இந்த கருதுகோலின் அடிநாதமாக இருக்கிறது. இயேசுவின் உடலைவிட அவரின் ஆவி அல்லது ஆன்மா வலிமையாக இருந்ததால்தான் அவரால் உயிர்க்க முடிந்தது. ஆக, லாரன்ஸ் சொல்வதை ஏற்றுக்கொண்டால் நாம் இயேசுவின் உயிர்ப்பை மறுக்க வேண்டும்.

பல நேரங்களில் நாம் இயேசுவைப் பற்றிப் பேசும்போது அவரின் உயிர்ப்பை பற்றியே பேசுகிறோம். ஆக, 'இறந்த மனிதன்' என்னும் இந்த நாவல் ஒரு மாற்றுச் சிந்தனையை முன்வைக்கிறது. இயேசுவின் உடலை அவரின் உடலின் தேவைகளை மறுபார்வை செய்யத் தூண்டுகிறது.

உடலைவிட ஆவிதான் வலிமையானது என்பதை விவிலியம் பல இடங்களில் பதிவு செய்கிறது:

'வாழ்வு தருவது ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது.' (யோவான் 6:63)

'உங்கள் மனம் ஆர்வமுடையதுதான். ஆனால், உடல் வலுவற்றது.' (மத்தேயு 26:41)

இதை வேறு வார்த்தைகளில் - ஆவி, ஊனியல்பு - என பதிவு செய்யும் பவுலடியார் ஆவியின் கனிகள், ஊனியல்பின் செயல்கள் என்ற பட்டியலையும் தருகின்றார் (காண். கலாத்தியர் 5:16-24)

அ. ஆவி உடலைவிட வலிமையானது
ஆ. உடல் ஆவிiயைவிட வலிமையானது

இந்த இரண்டு சிந்தனை நிலைகளில் எது சரி?

அல்லது யார் சரி? கிறிஸ்தவமா? அல்லது நாவலாசிரியர் லாரன்ஸா?

நிற்க.

இன்று நாம் அனைத்துப் புனிதர்களின் திருநாளையும், நாளை அனைத்து ஆன்மாக்களின் திருநாளையும் கொண்டாடுகிறோம்.

அல்லது

இன்று நாம் மகிமை பெற்ற திருச்சபையின் விழாவையும், நாளை துன்புறும் திருச்சபையின் விழாவையும் கொண்டாடுகிறோம்.

'ஆவி உடலைவிட வலிமையானது' என்ற சிந்தனைக்கு சான்று பகர்வோர் இருக்கும் இடம்தான் மகிமை பெற்ற திருச்சபை.

'உடல் ஆவியைவிட வலிமையானது' என்ற நிலையில் இருந்தோர் இருக்கும் இடம்தான் துன்புறும் திருச்சபை.

இப்படி நான் சொல்லிவிட்டால், ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்தியதுபோல ஆகிவிடுவேன்.

பின் என்ன வழிதான் சரி?

சரியான வழி, தவறான வழி என எதுவும் இல்லை. உனக்கு உன் வழி. எனக்கு என் வழி.

அவ்வளவே.

'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' (குறள் 339)

மரித்த ஆன்மாக்கள் இறைவனில் நித்திய இளைப்பாற்றியை கண்டடைவார்களாக!

1 comment:

  1. " உனக்கு உன் வழி; எனக்கு என் வழி".... நாலு பேர் கூடி வாழும் சமூகத்தில் இந்த வேதாந்தம் எப்பொழுதுமே எடுபடக்கூடியதாகத் தெரியவில்லை.எப்பேர்ப்பட்ட விஷயமெனினும் அலசி,ஆராய்ந்து அடுத்தவரின் கூற்றில் இருக்கும் நியாயத்தைப் புரிந்து,ஏற்றுக்கொள்பவன் தானே புத்திசாலி? உடலா,ஆவியா....எது வலிமையானது? தந்தையே ஒப்புக்கொள்கிறார்...." உடலைவிட ஆவிதான் வலிமையானது" என விவிலியத்தில் பல சான்றுகள் இருப்பதாக.ஒரு மதம்,ஒரு தனிமனிதன் என வரும்போது தனிமனிதன் லாரன்ஸின் கூற்றை எப்படி ஏற்க முடியும்? உடல்,ஆவி இதில் எதைவிட எது வேண்டுமாலும் மேலானதாக இருந்துவிட்டுப்போகட்டும்.நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆன்மா,உடல் இரண்டையுமே அவற்றிற்குரிய வழிகளில் கையாளுவது மட்டுமே நம்மை நற்கதிக்கு கொண்டுசெல்லும்.மற்றபடி,''மகிமை பெற்ற திருச்சபை", " துன்புறும் திருச்சபை" போன்ற விஷயங்களுக்காகத் தந்தையைப் பாராட்டலாம்.நாளை 'இறந்தோர் தினம்' என்ற விஷயத்தை ஒரு திருக்குறளை கோடுகாட்டித் தந்தை முடித்திருக்கும் விதம் அழகானது.பாராட்டுக்கள்! ஆம்...நம் சமூகத்தில்,உறவுகளில்,குடும்பங்களில்,நட்புவட்டத்தில் மரித்த ..மற்றும் நினைக்கக்கூட ஆளின்றி மரித்த அத்தனை ஆன்மாக்களும் இறைவனில் நித்திய இறைப்பாற்றியைக் கண்டடைய வேண்டுவோம்!!!



    ReplyDelete