Sunday, November 13, 2016

முந்தி மாதிரி நீ இல்லை!

நாளை முதல் சில நாள்களுக்கு திருவெளிப்பாட்டு நூலிலிருந்து முதல் வாசகப் பகுதியை வாசிக்க இருக்கின்றோம்.

தன் திருவெளிப்பாட்டை ஏழு திருச்சபைகளுக்கு எழுதுகிறார் யோவான்.

அவர் விளிக்கும் முதல் திருச்சபை எபேசு.

எபேசு திருச்சபையின் நேர்முக குணங்கள் என மூன்றை முன்வைக்கின்றார்:

அ. உன் செயல்கள
ஆ. உன் கடின உழைப்பு
இ. உன் மனவுறுதி

ஆனாலும், குறை ஒன்றும் உண்டு என விரல் நீட்டுகின்றார்:

'முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை!'

சிம்சோன் காலத்திலிருந்தே இந்த புகார் மனுக்குலத்தில் ஒருவர் மற்றவர்மேல் உண்டு.

தெலீலா சிம்சோனைப் பார்த்து, 'நீ முன்போல என்னை அன்பு செய்வதில்லை!' என கடிந்து கொள்கிறாள்.

அன்பு குறையுமா?

அன்பு குறைவது ஒரு குறையா?

என் நட்பு வட்டத்திலும் என்னிடம் இதே புகாரை என் உற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

'முந்தி மாதிரி நீ இல்லை!'

'இப்ப எல்லாம் மாறிட்ட!'

'முன்னால மாதிரி நீ எனக்கு நேரம் செலவிடுவதில்லை!'

 இவை சாம்பிள்கள்.

ஆனா, வாழ்வில் நம் இலக்குகள் அல்லது அதை நோக்கிய பயணம் மாற மாற நம் உற்றவர்களுக்கான நேரம் குறையத்தான் செய்கிறது.

மேலும், தேவைகள் என்ற ஏணியில் அனைத்தையும் வைத்துப் பார்த்தால், வயது மாற மாற நம் விருப்பங்களும் மாறுகின்றன.

20 வயது முதல் 30 வயது இருக்கும்போது நிறைய உறவுகள் வேண்டும், நிறையப்பேரை தெரிய வேண்டும் எனத் தேடும் மனம், 35 நெருங்கும்போது 'தனியாய் இருப்பது நல்லது,' 'தனியாய் இருக்க நேரம் வேண்டும்' என ஏங்குகிறது.

5 வயசுல நமக்கு பஞ்சு மிட்டாய் பிடிச்சது. அதை அன்று நமக்கு கொடுத்த கடைக்காரர் இன்றும் அதை நமக்கு கொடுத்து, 'தம்பி, இது உங்களுக்கு விருப்பம்தான!' என நம் கைகளில் திணித்தார் என்றால் அவர்மேல் நமக்கு கோபம் வந்துவிடுகிறது.

ஒரு கட்டத்தில் நமக்கு பிடித்தது அல்லது நமக்கு எல்லாம் என இருந்தது இன்னொரு கட்டத்தில் நமக்கு திகட்டிவிடுகிறது.

இது எனக்கு மட்டுமா? என ஆய்ந்து பார்த்ததில் இது எல்லாருக்குமான (ஓரளவுக்கு) பரந்துபட்ட உணர்வாகவே இருக்கிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதன் வாழ்வியல் வடிவங்கள்தாம் இந்த உணர்வுகள் என நினைக்கிறேன்.

மனிதர்கள் மாறுகிறவர்கள். அல்லது மாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.

ஆனால், கடவுள் மாறாதவர்.

மாறாதவரிடத்தில் நான் கொண்டுள்ள அன்பும் மாறாமல் இருக்க வேண்டும் என அவர் விரும்புகின்றார்.

ஆகையால்தான்,

எபேசு நகர திருச்சபையைப் பார்த்து, 'முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை. ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என நினைத்துப்பார். மனம் மாறு. முதலில் நீ செய்துவந்த செயல்களை இப்பொழுதும் செய்!' என்கிறார்.

இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து விநோதமான கனவுகள் வருகின்றன:

அ. நான் செல்ல வேண்டிய இரயில் காத்திருக்கிறது. ஆனால், என் லக்கேஜ் ஒன்று தொலைந்துவிடுகிறது. அதைத்தேடி நான் அலைகிறேன். நான் என்னதான் அலைந்து தேடினாலும் நான் வரும் வரை அந்த இரயில் போக மறுக்கிறது.

ஆ. வலது காலில் இரண்டு இடத்தில் எலி கடிக்கிறது. காயம் என்று போன இடத்தில் கால் அகற்றப்படுகிறது.

இ. முன்பின் தெரியாத காட்டுப்பகுதி. யாருமில்லாத இடத்தில் ஒரு இளம்பெண். அந்தப் பெண்ணின் வீட்டில் விருந்து. பின் அந்தக் காட்டுப்பகுதியிலிருந்து என் வீட்டிற்கு வரும் பாதையை நான் மறந்து சுற்றுகிறேன்.

இவற்றில் எல்லாம் பெரிய விநோதம் என்னவென்றால், இந்தக் கனவுகள் காலையில் எழுந்தவுடன் என் நினைவில் இருப்பது என்பதுதான்.

வாழ்க்கை ஒரு டெடர் நாவல்போல இருக்கிறது கனவில்.

ஹலோ! பயந்துட்டீங்களா!

1 comment:

  1. ஒரு வித்தியாசமான,ஆனால் உண்மையை உரக்கச் சொல்கிற பதிவு. கிட்டத்தட்ட எல்லோருக்கும் தங்கள் இதயத்துக்கு நெருக்கமானவர்கள் சிறிது முகம் மாறிடினும் ஏற்படுகிற உணர்வுதான்.தந்தைக்கு இந்த உணர்வு இதுவரை ஏற்படவில்லை எனில், அவர் கொடுத்து வைத்தவர்.அவரைச்சுற்றியுள்ளவர்கள் அவருக்குக் குறைவில்லா நேசத்தைமட்டுமே கொடுக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.அவர் சொல்லும் வாழ்க்கையின் பாடங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவைதான்.சிறுவயதில் பஞ்சுமிட்டாய் பிடிக்கும் என்பதற்காக வயதுவந்த பின்னும் ஒருவர் கையில் அதைத்திணித்தால் கோபம் வரும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.ஆனால் 30-35 வயதில் தனிமைதேடும் மனது இன்னும் சிறிது காலம் கடக்கும்போது தனக்கென்று மட்டுமேயான உறவுகளைத் தேடும் என்பது புரிந்திருக்க வாய்ப்பில்லை.மாற்றம் ஒன்றே மாறாததுதான்.ஆனால் எத்தனை பேரால் இதைப்புரிந்து கொண்டு 'மாறாத இறைவனைப்' பற்றிக்கொள்ள முடியும்? ஆனால் அது முடியவேண்டும்; ஒருவருக்கு அது சாத்தியமாக வேண்டுமெனச் சொல்கிறார் தந்தை.கண்டிப்பாக தவறிவிழுந்த உயரத்தைப் பெருமூச்சுடன் பார்ப்பதை விட்டு அந்த உயரத்தைத் திரும்பி எட்டிப்பிடிக்க முயல வேண்டும்.முடியுமா? தெரியவில்லை.மற்றபடி தந்தையின் கனவுகள் பற்றிப் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.அவர் வயதைக்கடந்து வந்த அனைவருமே அனுபவித்ததுதான் என்பது இன்னும் சிறிது காலம் போனால் அவருக்கே விளங்கும்.நினைவுகளோ,கனவுகளோ வருவதை ரெசிஸ்ட் பண்ணாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் தந்தையே! காலத்தை விட சிறந்த ஆசிரியர் இல்லை என்பதைப். புரிந்து கொள்ளும் நாள் தொலைவில் இல்லை.இறைவன் தங்களை ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete