Monday, November 4, 2013

நீங்கள் தூயவராயிருங்கள்

'நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள். எனவே உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர் ... ... உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே! நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவர்!' (லேவியர் 11:44-45)

விடுதலைப்பயண நூலில் யாவே இறைவனின் வழிநடத்துதலைப் பார்த்தோம். இஸ்ராயேல் மக்களை வழிநடத்திய யாவே இறைவன் சந்திப்புக் கூடாரத்தில் அவர்களுக்காக, அவர்களோடு பிரசன்னமாகின்றார்.

ஆண்டவரின் பிரசன்னத்தோடு நிறைவு பெறுகின்றது விடுதலைப்பயண நூல். தொடர்ந்து வருகின்ற லேவியர் நூல் நமக்குச் சொல்வது ஒரே வார்த்தைதான்: 'தூயவராயிருங்கள்!' கடவுளின் பிரசன்னம் மனிதர்கள் நடுவில் வந்திருக்கிறது என்றால் மனிதர்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அல்லது மனிதர்கள் தூய்மையாக இருந்தால்தான் கடவுளின் பிரசன்னம் அவர்களோடு தங்கும்.

தூய்மை என்றால் என்ன?

இறைவாக்கினர்களுக்கு முந்திய காலம் வரை 'தூய்மை' என்பது ஆலயம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவும், கடவுளின் பிரசன்னம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது. எதெல்லாம் ஆலயத்திற்கு அருகில் இருக்கிறதோ அதெல்லாம் தூயது. எதெல்லாம் ஆலயத்தைவிட்டு விலகி நிற்கிறதோ அதெல்லாம் தீயது.

இறைவாக்கினர்களின் காலத்தில் சமூக நீதி தூய்மை எனக் கருதப்படுகிறது. யாரெல்லாம் ஒருவர் மற்றவரை மதிப்போடு நடத்துகிறார்களோ அவர்கள் தூயவர்கள் எனவும் மற்றவர்கள் தீயவர்கள் எனவும் கருதப்பட்டது.

ஆனால் இயேசுவின் வருகை அனைத்தையும் தூய்மையாக்கிவிட்டது. 'வாக்கு மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்' என வந்த இயேசு விண்ணையும் மண்ணையும் இணைக்கின்றார். இறையன்பையும், பிறரன்பையும் தூய்மையின் அளவுகோலாக வைக்கின்றார்.

அன்பில் நாம் தூய்மையாகின்றோம். அன்பால் நாம் தூய்மையாகின்றோம்.

'நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவர்!'

1 comment:

  1. Anonymous11/04/2013

    தினமும் நாம் பூசை காணும்போது 'தூயவர்' என்ற சொல்லை எத்துனை முறை கூறுகிறோம்.இச்சொல்லின் புனிதத்துவத்ததை உணர்ந்தால் எத்துனை நலமாயிருக்கும்.'நான் தூயவராயிருப்பது போல் நீங்களும் தூயவராயிருங்கள்'இவ்வார்த்தைகளை முழுமையாக மனத்தில் இருத்தி நம் உள்ளத்திலும் இல்லத்திலும் புனிதம் காண்போம்.

    ReplyDelete