Saturday, November 16, 2013

அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள்!

ஏனெனில் உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது. உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர். எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்போது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப்பட்டனர். அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது. உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள் ... நம்பத்தகுந்த அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள். (யோசுவா 2:9-12)

எரிகோ நகரை உளவு பார்க்க வந்த இரண்டு ஒற்றர்கள் இராகாபு என்ற விலைமகளின் வீட்டில் தங்குகின்றனர். அந்த வீட்டில் உளவாளிகள் இருப்பதைக் கேள்வியுற்ற எரிகோ அரசன் அவர்களைக் கைது செய்ய வீரர்களை அனுப்புகிறான். வீரர்கள் வந்த போது அவர்களின் பார்வையிலிருந்து ஒற்றர்களை ஒளிய வைத்து அவர்களைக் காப்பாற்றுகின்றார்.

வீரர்கள் ஏமாந்து சென்றவுடன் இஸ்ரயேலின் ஒற்றர்களிடம் இராகாபு பேசும் வார்த்தைகளே இவை. இஸ்ரயேலின் இறைவனைத் தானும் இறைவனாக ஏற்றுக்கொள்வதாக அறிக்கையிடுகின்றார். 

இராகாபின் வார்த்தைகளில் மேலும் மேலும் எழும் பொருள் பயம். நாங்கள் பயந்தோம். எல்லோரும் பயப்படுகின்றனர் என்று பயத்தை வெளிப்படுத்துகின்றார். பயம். பயப்படாதே! என்று யோசுவாவுக்கு வாக்குறுதி தந்த இறைவன் அனைத்துப் பகைவர்களின் பயமாக மாறுகின்றார். 

'தான் அழிந்து போகக்கூடாது' என நினைக்கின்ற இராகாபு அடையாளம் கேட்கின்றார். சிவப்புக் கயிற்றை அடையாளமாகத் தருகின்றனர் ஒற்றர்கள். கோட்டை வாயிலின் மேல்தளத்தில் இருந்து கயிற்றால் இறக்கி அவர்களைத் தப்புவிக்கின்றார் இராகாபு.

நாம் வாழும் இந்த உலகம் சங்கிலி உலகம். நாம் அனைவரும் ஒரே சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளோம். நன்மையை நாம் ஒருவரிடம் பெற்றால் அதை உடனே மற்றவர்களுக்கும் செய்துவிட வேண்டும். இந்தப் பாடத்தை இன்று நமக்குக் கற்பிக்கின்றனர் இராகாபிடம் வந்த ஒற்றர்கள். தாங்கள் பெற்ற நன்மைக்கு உடனே கைம்மாறு செய்து விடுகிறார்கள்.

வாழ்வின் நலன்களை பிறரிடமிருந்து பெறும் நாம் அவற்றை உடனே மற்றவர்களுக்குச் செய்யும்போது நலன்கள் பெருகிக்கொண்டே செல்லும்!

1 comment:

  1. Anonymous11/16/2013

    விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளாம் நம் இறைவன், நாம் கலக்கமுற்ற வேளையில் நம்மோடு அடையாளங்கள் வழியே பேசும் நம் தந்தை(ஆம் என் வாழ்க்கையில் இதை நான் உணர்ந்திருக்கிறேன்) நமக்கு வாரி வழங்கும் வரங்களை
    நம் சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ளலாமே! எந்த ஒரு விஷயமுமே பகிரும்போது
    இரட்டிப்பாகும் என்பது என் அனுபவம்.இதை உரக்கச் சொன்ன ஆசரியருக்கு ஒரு
    ஷொட்டு.

    ReplyDelete