Sunday, November 17, 2013

ஏன் இந்தக் கற்கள்?

யோர்தானிலிருந்து எடுத்து வந்த பன்னிரு யோசுவா கில்காலில் நாட்டினார். அவர் இஸ்ரயேலரிடம், 'எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் 'ஏன் இந்தக் கற்கள்?' என்று வினவினால், அவர்களிடம் இவ்வாறு தெரிவியுங்கள்: 'உலர்ந்த தரை வழியாக இஸ்ரயேலர் இந்த யோர்தானைக் கடந்தனர்.' (யோசுவா 4:21-22)

இஸ்ரயேல் மக்கள் யோர்தானைக் கடந்தவுடன் கில்கால் என்ற இடத்தில் உடன்படிக்கையின் அடையாளமாக பன்னிரு கற்களை நிலைநிறுத்துகின்றார். 'பன்னிரண்டு' என்ற சொல்லாடல் இங்கேதான் முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்ரயேலரின் குலங்கள் பன்னிரண்டு. புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சீடர்கள் பன்னிரண்டு. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமையில் இது ஒன்று. யோசுவா வைத்த கற்கள் 12. இயேசுவின் திருச்சபையின் அடித்தளமாம் திருத்தூதர்களும் 12. 

கற்கள் இங்கே அடையாளமாய் நிற்கின்றன. அடையாளங்கள் தாங்கள் எவைகளைச் சுட்டிக்காட்டுகின்றனவோ அவற்றையும் தாண்டி அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன. கிலாடியேட்டர் என்ற திரைப்படத்தில் அதன் கதாநாயகன் தன் மூதாதையரின் அடையாளமாக ஒரு சிறிய சிலையை வைத்திருப்பார். இது எதற்கு? என்று கேட்கப்படும்போது, அது தனக்கு வீரம் தருவதாகவும், தன் மூதாதையரோடு அது தன்னை இணைப்பதாகவும் அவர் கூறுவார். 

யோசுவாவின் 12 கற்களும் இஸ்ரயேல் மக்களை அவர்களின் மூதாதையரோடு இணைக்கின்றது. அவர்களுக்கு அடையாளத்தைத் தருகின்றது. அவர்களின் நம்பிக்கையை அதிகமாக்குகின்றது.

நாம் அன்பு செய்யும் அனைவரும், நம்மை அன்பு செய்யும் அனைவரும் நம்மோடு வாழும் அடையாளங்கள். அவர்கள் நமக்கு வீரம் தருகின்றனர். அவர்கள் நம் மூதாதையரோடு நம்மை இணைக்கின்றனர். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம். 'ஆண்டவரின் கை அவர்களின் கைகளில் உள்ளது!'

அவர்கள் நம்மைப் பெருவெள்ளம் சூழும்போதும் வறண்ட நிலத்தில் நம்மை அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் நம் இருக்கும் போது நம் கால்கள் நனைவதில்லை. தங்களின் கண்கள் கண்ணீரால் நனைந்தாலும் நம் கால்களை அவர்கள் நனைய விடுவதில்லை.

'ஏன் இந்தக் கற்கள்?'

1 comment:

  1. Anonymous11/18/2013

    இன்றையப் பகுதியின் இறுதி வரிகள் 23ம் திருப்பாடலை நினைவு படுத்துகின்றன.''சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேரிடினும் நீர் என்னோடிருப்பதால் எத்தீமைக்கும் அஞ்சேன.''ஆம்,நம்மை நேசிக்கும் அன்புள்ளங்களும் நம்மைத் சோதனைப் புயல் தாகக்கும்.நேரங்களில் அவர்கள்
    தோள்கள் தந்து நம்மைத் தூக்கி விடுகின்றனர் இவர்களைக் குறித்து பெருமை கொள்வோம்.இவர்களுக்காக இறைவனைப் போற்றுவோம்.

    ReplyDelete