Sunday, November 3, 2013

சக்கேயு குள்ளமானவர்

இயேசுவை வழியனுப்பிவிட்டு தன் வீடு திரும்புகின்ற சக்கேயுவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கின்றது. அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் வீட்டை விட்டுப் புறப்பட தயாராய் அமர்ந்திருக்கின்றனர். தாய் உரோமை வழிப்பெண். சக்கேயு வீட்டிற்குள் நுழைந்தவுடன் கூச்சல் போடுகிறாள்: 'உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி செய்தீங்க? என்னை ஒரு வார்த்தை கேட்க வேணாமா? நீங்க சம்பாதிச்ச சொத்துக்கெல்லாம் காரணம் நானும் எங்க அப்பாவும்? எங்க அப்பாதான் உங்களுக்கு வரி வசூலிக்கும் வேலையை வாங்கிக் கொடுத்தார்? நீங்க வெறும் பொம்மைதான்? நாங்க சொல்றத நீங்க செய்யணும்? உங்க பிள்ளைங்களோட எதிர்காலத்த யோசீச்சிங்களா? நீங்க பாட்டுக்க அவரைப் பார்த்தவுடனே வள்ளலா மாறிட்டீங்க? அப்படி என்ன மனமாற்றம்? நாலு காசு இருந்தாதான் நாம வாழ முடியும். மனமாற்றத்த வச்சி ஒன்னும் செய்ய முடியாது'. சக்கேயுவின் பிள்ளைகளும் தன் தாயோடு இணைந்து கொண்டு தன் தந்தையிடம் முறையிடுகின்றனர். மூத்தவன் சொல்கிறான்: 'போகிற போக்கைப் பார்த்தா கடைசியில எங்களுக்கு ஒன்றும் மிஞ்சாது போல. நீங்க இன்னைக்கே எங்க சொத்த பிரிச்சுக் கொடுங்க'. அப்படியே அங்கிருந்த தூணில் சாய்கின்றார் சக்கேயு. 'இன்றே இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று!' என்ற இயேசுவின் குரல் எதிரொலித்து அடங்குகிறது. இது ஒரு கற்பனை நிகழ்வு என்றாலும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு. இன்று நாம் சக்கேயுவாய் மாற நினைத்தாலும் நம் குடும்பம், நம் சமூகம், நம் உறவுகள் நம்மை மாற விடுவதில்லை. இதுதான் இயேசு கொணரும் வாள்: தந்தைக்கு எதிராக மகனும், மாமனாருக்கு எதிராக மருமகனும்...!

இயேசுவைப் பார்க்க வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆர்வம் சக்கேயுவுக்கு. ஓடிச் சென்று மரத்தில் ஏறுகின்றார். இங்கே 'சக்கேயு குள்ளமானவர்' என்று சொல்லப்பட்டுள்ளது நம் உதடுகளில் சிரிப்பை வர வைக்கின்றது. இயேசுவைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளும், செயல்பாடுகளும் அவசியம் என்பதை சக்கேயு நமக்கு உணர்த்துகின்றார். முதலில் உள்ளம் சார்ந்த தடையை அகற்றுகின்றார். 'அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்!' 'மரத்தில் ஏறினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?' 'சிரிப்பார்களே!' 'நான் பார்க்கின்ற வரிவசூலிக்கும் வேலை ஒரு கௌரவமான வேலை. என் அந்தஸ்து என்ன ஆகும்?' இது போன்ற உள்ளம் சார்ந்த தடைகளைக் களைகின்றார் சக்கேயு. 'என் இயேசுவின் முன் என் அந்தஸ்தோ, என் அவமானமோ, மற்றவர்களின் கேலிப்பேச்சோ, சிரிப்போ ஒரு பொருட்டல்ல!' என்று முடிவெடுத்தவராய் மரத்தில் ஏறுகின்றார். 'உடல் சார்ந்த தடையையும்' வெல்கின்றார். இன்று இயேசுவைப் பார்க்கும் ஆர்வம் நம்மிடம் இருக்கின்றதா? ஆர்வம் இருந்தாலும் அதைச் செயல்படுத்தும் முயற்சிகள் இருக்கின்றனவா? ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இயேசுவைச் சந்திப்பதற்கு நாமே எவ்வளவு தடைகளை ஏற்படுத்திக் கொள்கின்றோம். 'மழை வர்ற மாதிரி இருக்கு', 'இன்னைக்கு ஒரு கல்யாணம்', 'ரொம்ப டயர்டா இருக்கு' என எத்தனையோ தடைகளை நாமே உருவாக்கிக் கொள்கின்றோம்.

தன்னைத் தேடி வந்தவரை தான் தேடிச் செல்கின்றார் இயேசு. 'சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்!' இயேசுவின் அழைப்பில் எந்தவொரு தீர்ப்பிடும் வார்த்தைகளும் இல்லை. 'யார் உன்னைத் தீர்ப்பிட்டாலும், குள்ளம், பாவி. உரோமையின் கைக்கூலி என அழைத்தாலும் நான் உன்னைத் தீர்ப்பிட மாட்டேன்' என சக்கேயுவை பெயர் சொல்லி அழைக்கின்றார் இயேசு. வேகமாய் இறங்குகின்றார் சக்கேயு. இயேசுவைத் தன் வீட்டில் வரவேற்கின்றார். இப்போது கூட்டம் முணுமுணுக்கின்றது. நற்செய்தி நூல்களில் 'கூட்டம்' எப்போதும் ஒரு முரணாகவும், தடையாகவுமே இருக்கின்றது. ஆனால் சக்கேயு அதைக் கண்டுகொள்ளவேயில்லை. 

தன் வீட்டில் இயேசுவை வரவேற்கின்ற சக்கேயு எழுந்து நின்று, 'ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். எவர்மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்!' என்கின்றார். இது சக்கேயுவின் மனமாற்றமா? அல்லது மனமாற்றத்தின் விளைவா? 'நீங்கள் மனமாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்!' (லூக்கா 3:8) என்ற திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்றார் சக்கேயு. ஆன்மீகம் என்பது ஒரு உதட்டுச் சிரிப்பல்ல. அது உள்ளார்ந்த செயல்பாடு. சக்கேயுவின் மனப்பாங்கு மாறுகிறது. மனப்பாங்கு மாறுவதே மனமாற்றம். 'உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக' (உரோ 12:2) என்று தூய பவுலடியாரும் எழுதுகின்றார். 

நாம் தியானம் செய்த பிறகும், ஏதாவது நற்செய்திப் பெருவிழாவிற்குச் சென்ற பிறகும், புத்தாண்டின் போதும் நமக்கென வாக்குறுதிகள் கொடுத்துக் கொள்கின்றோம்: 'இனி நான் நன்றாக இருப்பேன்!' ஆனால் மூன்றாவது நாளே நாம் பழையபடி ஆகிவிடுகின்றோம். இதற்குக் காரணம் நாம் உள்ளார்ந்த முறையில் மாறுவதில்லை (attitudinal change). ஆனால் சக்கேயுவின் மாற்றம் உள்ளார்ந்தது. தன் செல்வக்குறைவால் துன்பம் வந்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலாகச் செயலாற்றுகின்றார். 'ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையுமன்றோ!' (உரோ 5:4)

2 comments:

  1. Anonymous11/04/2013

    This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Anonymous11/04/2013

    பல சமயங்களில் இறைவன் எளியவர்களை, குறைபாடுள்ளோரைத் தன் கருவிகளாக உயர்த்துகிறார் என்பதற்கு சக்கேயு ஒரு எடுத்துக்காட்டு.நாமும் நம்மிடம உள்ள குறைகளை நிறைவான மனத்தோடு ஏற்றுக்கொண்டால் நம்மையும் அவர் தம் அன்பின் கருவிகளாக உயர்த்துவார் என்று நம்புவோம்.

    ReplyDelete