Thursday, November 14, 2013

உன்னைக் கைநெகிழ மாட்டேன்!

உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன். கைவிடவும் மாட்டேன். வீறுகொள். துணிந்துநில் ... ... இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுதுதான் நீ செல்லும் இடமெல்லாம் நலம் பெறுவாய். வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன். (யோசுவா 1:5-6, 8-9)

வாக்களிக்கப்பட்ட நாட்டுப் பயணம் என்னும் ஒலிம்பிக் ஓட்டத்தில் மோசேயின் கையிலிருந்து விளக்கு யோசுவாவின் கைக்கு மாறுகிறது. இனி எல்லாம் யோசுவாவின் கையில்தான். விளக்கை அணைக்காமல் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? வாசகர்கள் உள்ளத்தில் எழும் கேள்விக்கு ஆண்டவரின் பிரசன்னம் பதிலாகக் கொடுக்கப்படுகிறது. 

வாக்குறுதி – கட்டளை – வாக்குறுதி என்ற அடிப்படையில் உள்ளது இறைவனின் வார்த்தைகள்.

யாவே இறைவனின் வாக்குறுதிக்கு அடிப்படை யோசுவா திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்:

1. திருச்சட்டம் எப்போதும் முன்னால் இருக்க வேண்டும்.
2. இரவும் பகலும் தியானம் செய்ய வேண்டும்.

3. வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

திருச்சட்டத்தை முன்னால் வைத்திருக்க வேண்டும் என்றால் என்ன பொருள்? 
திருச்சட்டத்தை முன்னால் வைத்திருந்தால் யோசுவா எப்படி சண்டையிட முடியும்? 
அல்லும் பகலும் தியானம் செய்து கொண்டிருந்தால் யார் போரிடுவார்கள்?

திருச்சட்டம் யோசுவாவை முழுமையாக ஆட்கொள்ள வேண்டும். உணவு, தண்ணீர், போர், தேடல் என யாதுமாய் திருச்சட்டம் மாறியதென்றால் இறைவன் உடனிருப்பார்.

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!
என் பாதைக்கு ஒளியும் அதுவே!
(திருப்பாடல் 119:105)

***
வத்திக்கான் வானொலியில் என் குரல் 2


1 comment:

  1. Anonymous11/14/2013

    இன்று அதிகாலைநேரம் தங்களின் செய்தி படித்த எனக்கு ஏதோ உடம்புக்குள் புது இரத்தம் பாய்ச்சியது போன்றதொரு உணர்வு. எத்துணை நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்.அவ்வார்த்தைகள் தந்த உத்வேகத்தில் யோசுவா முதல் அதிகாரத்தையும் எடுத்துப் படித்தேன்.இறைவனின் வார்த்தையை எங்கள் இல்லங்களுக்கு எடுத்து வரும் தங்களை அவர் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.தொடரட்டும் தங்கள் பணி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete