புனித தோமா
இந்தியாவின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்ற புனித தோமாவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். திருத்தூதர் தோமா வழியாக நம் நாட்டின் முன்னோர்கள் இயேசுவின் விலாவுக்குள் தங்கள் கைகளையும், இயேசுவின் கைகளில் தங்கள் விரல்களையும் இட்டார்கள் என நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கும் இந்தியாவுக்குமான இணைப்புக் கோடு புனித தோமா.
இயேசுவின் இறப்புக்குப் பின்னர் திருத்தூதர்கள் மூன்று நிலைகளில் செயல்படுகின்றனர்: (அ) யூதர்களுக்குப் பயந்து, அதாவது, தங்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுவிடுமோ என்று பயந்து பூட்டிய அறைக்குள் இருக்கின்றனர். இது பெரும்பாலும் எருசலேமில் உள்ள திருத்தூதர்களின் செயல்பாடாக இருந்திருக்கும். (ஆ) எருசலேமை விட்டு வெளியே சென்றவர்கள், தங்கள் சொந்த ஊரான கலிலேயப் பகுதிக்குச் சென்றவர்கள் மீண்டும் தங்கள் மீன்பிடிக்கும் பணிக்குச் சென்றனர். (இ) புனித தோமாவோ மக்களோடு மக்களாக நடமாடிக்கொண்டிருக்கின்றார்.
புனித தோமா பற்றி யோவான் நற்செய்தியாளரே அதிகமான குறிப்புகளைத் தருகின்றார். இலாசரின் இறப்பு செய்தி கேட்டு இயேசு புறப்படத் தயாரானவுடன், அவருடைய திருத்தூதர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் தோமா, 'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்' (காண். யோவா 11:16) என்று துணிகின்றார். இயேசுவின் இறப்பை இது முன்னுரைப்பதுடன், இறப்பிலும் இயேசுவோடு உடனிருக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தை நமக்கு எடுத்துரைக்கிறது.
தொடர்ந்து, இறுதி இராவுணவுக்குப் பின் இயேசு வழங்கிய பிரியாவிடை உரையில், 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?' என்று கேட்கின்றார் தோமா. அவருக்கு விடையளிக்கின்ற இயேசு, 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' என அறிக்கையிடுகின்றார். 'நானே' என்ற வார்த்தை இங்கே முதன்மையானது. ஏனெனில், முதல் ஏற்பாட்டில், விடுதலைப் பயண நூலில், 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்று ஆண்டவராகிய கடவுள் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார்.
இறுதியாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'ஆண்டவர்' என்ற வார்த்தையை மையமாக வைத்து நிகழ்வு நகர்கிறது. 'ஆண்டவரைக் கண்டோம்' என திருத்தூதர்கள் தோமாவிடம் சொல்கின்றனர். 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து' என்று, எந்தவொரு தலைப்பும் இல்லாமல், 'அவர்' என்று இயேசுவை அழைக்கின்றார். ஆனால், இயேசு தோன்றி, 'இதோ! என் கைகள்!' என்று சொன்ன அடுத்த நொடி, சரணாகதி அடைகின்றார் தோமா. 'நான் சீடர்களிடம் சொன்னது இயேசுவுக்கு எப்படி தெரிந்தது?' என அவர் தன் மனதிற்குள் கேட்டிருப்பார். அல்லது இயேசுவின் இருத்தல் அவரை மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்திருக்கும்.
தோமா இந்த இடத்தில் செய்யும் நம்பிக்கை அறிக்கை மிகவும் மேலானது:
'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்று தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கை செய்கின்றார் தோமா.
இதுதான் தோமா இன்று நமக்கு முன்வைக்கும் பாடம்.
ஆண்டவராகிய கடவுளை நான் தனியாக அனுபவித்தாலன்றி அவரை நம்ப முடியாது. இறையனுபவம் என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். நம் தந்தை மற்றும் தாயின் அனுபவத்தைப் போன்றே இது தனித்துவமானது.
இறையனுபவம் பல நேரங்களில் நமக்குப் புலப்படும் விதமாக இருப்பதில்லை. புலன்களுக்குப் புறம்பானதால் அது இல்லை என்று ஆகிவிடுவதில்லை.
பெருந்தொற்றுக் காலத்தில் இறைவன் நம்மைவிட்டு மறைந்தவராக இருக்கின்றார். இறையனுபவம் தரக்கூடிய அருளடையாளக் கொண்டாட்டங்கள் இல்லை. நம் அன்புக்குரியவர்களின் இறப்பும் பிரிவும் சோர்வையும் விரக்தியையும் நம் உள்ளங்களில் விதைத்துள்ளன. இந்த நேரத்தில், தோமாவின் வார்த்தைகள் நமக்கு முக்கியமாகத் தெரிகின்றன.
'என் ஆண்டவரே! என் கடவுளே!' என்ற சரணாகதி நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இருந்தால் எத்துணை நலம்!
🙏
ReplyDeleteஇந்தியாவுக்கும், கிறிஸ்துவுக்குமான இணைப்புக்கோடு “ தோமா!” அந்த தோமாப் புதைத்த இடத்திற்கருகில் 5 ஆண்டுகள் தங்கியிருந்ததைப் பெருமையோடு நினைத்துப்பார்க்கிறேன்.
ReplyDeleteநாம் ஒரு விஷயத்தை நம்பவேண்டுமெனில் அதை அனுபவிக்க வேண்டும். தீ சுடுகிறது என்ற உண்மையை உணர அதைத் தொட்டுணர வேண்டும்.இதைத்தான் செய்தார் தோமா. அவர் செய்த காரியம் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாகத் தனமாகத் தோன்றிடினும் யாருக்கும் தோன்றாத ஒரு காரியத்தை செய்ய அவரைத்தோண்டியது எது? தன்னுடன் வாழ்ந்து மரித்த யேசுவின் பால் இவருக்குப் பற்றியெரிந்த தீ! அவரைத் தொட்டுப் பார்த்த அவர் இனிவரும் தலைமுறைக்கும் அவரை அறிக்கை இடுகிறார் “ நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்” என்று.
“என் ஆண்டவரும்! என் கடவுளும்!”……. அவரிடம் நாம் தேடிப்பெற வேண்டிய சரணாகதியே நம்மை இறுதி மூச்சு வரைக் காக்கும் ஆயுதம்.
தோமா நம் தாய்த்திருநாட்டுப் பெருமையை உயர்த்தியவர் என்ற உண்மையை முழக்கமிடும் தந்தைக்கு என் நன்றிகள்! திருவிழா வாழ்த்துக்கள்!!!
ஆமென,!
ReplyDelete