Thursday, July 22, 2021

மூன்று பிரச்சினைகள்

இன்றைய (23 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:18-23)

மூன்று பிரச்சினைகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், விதைப்பவர் உவமையின் விளக்கத்தை இயேசுவே தருகின்றார். நான்கு தளங்களில் விதைக்கப்படுகின்ற விதைகளில் முதல் மூன்று தளங்களில் விதைக்கப்பட்ட விதைகள் பயன்தரவில்லை.

அவற்றுக்கு மூன்று காரணங்களை நாம் இங்கே காண்கின்றோம்.

முதல் வகை நிலத்தில் தீயோன் விதைகளைக் கைப்பற்றிக்கொண்டான்.

இரண்டாம் வகை நிலத்தில் வேதனையோ இன்னலோ வரும்போது அவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.

மூன்றாம் வகை நிலத்தில் உள்ள விதைகளை உலகக் கவலையும் செல்வ மாயையும் நெருக்குகின்றன.

ஆக, விதை என்பது இறைவார்த்தை.

இறைவார்த்தை அல்லது நற்செய்தியை ஏற்றுக்கொண்ட தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் அனுபவித்த பிரச்சினைகளை நாம் இங்கே உருவகமாகக் காண்கின்றோம்.

தீயோன் என்பவன் இறைவனுக்கு எதிரி.

இன்னலும் வேதனையும் வெளியே இருந்து வருகின்றன.

கவலையும் செல்வ மாயையும் நமக்கு உள்ளேயிருந்து புறப்படுகின்றன.

ஆக, வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் வரும் காரணிகளால் இறைவார்த்தை பயன்தராமல் போகின்றது.

புரிந்துகொள்வோரே பயன்தருகின்றனர். அவர்கள் தரும் பயனின் அளவும் மாறுபடுகிறது.

ஆக, நல்ல நிலமாக இருந்தாலும் பயன் தருவதில் மாற்றம் வரலாம்.

இறைவார்த்தை தன்னகத்தே ஆற்றல் கொண்டிருந்தாலும் அதை ஏற்று, புரிந்துகொண்டு, செயல்படுத்துபவரின் வழியாகவே அது பலன் தருகின்றது.

இன்று நாம் இறைவனின் வார்த்தைகளைக் கேட்கத் தடையாக இருக்கின்ற அக மற்றும் புறக் காரணிகளை அடையாளம் காணுதலும் களைதலும் நலம்.

1 comment:

  1. நாம் அடிக்கடி கேட்டு கருத்து பறிமாறப்பட்ட விஷயம் தான் இன்றையப் பதிவின் மையக்கருத்து.” விதை என்பது இறைவார்த்தை.” இதைக்கேட்டு செயல்படுவதில் தான் எத்தனை சங்கடங்கள் மனிதனுக்கு.தீயோன் எனும் எதிரி நம் மனத்துக்குள்ளும் இருக்கின்றான். வெளியேயிருந்து கொண்டும் தன் வேலையைக் காட்டுகிறான். எல்லா நேரங்களும் ஒன்றுபோல் இருப்பதில்லையே! உள்ளே சென்ற தீயோனுக்கு சிம்மாசனம் தந்து அமரச்செய்பவர் சிலர்…. அவன் நிழல் கண்டவுடனே சுவடு தெரியாமல் துரத்திவிடுபவர் பலர். கரடு முரடான நிலங்களுக்கு மட்டுமில்லை; நல்ல நிலங்களுக்கும் இந்நிலமை வரலாம்.

    நான் எந்த மாதிரி நிலம்? நான் நல்லமாக இருப்பினும் இறைவார்த்தையை உள்ளிழுத்து செயல்படுத்துகிறேனா? இல்லையெனில் காரணமென்ன? என் மனத்தடைகளை…..இறைவார்த்தையை ஏற்க மறுக்கும் காரணிகளை அடையாளம் கண்டு அவைகளைக் களைய முயல்வோம்! முயன்றால் தானே வெற்றி கிட்டும்!

    நாம் நாளும் வாழ வேண்டிய நல்லதொரு வாழ்க்கைப்பாடத்தைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete