Tuesday, July 20, 2021

நன்றாக இருந்திருக்கும்

இன்றைய (21 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:1-9)

நன்றாக இருந்திருக்கும்

'நாஸ்டால்ஜியா' (nostalgia) (உச்சரிப்பு மாறுபடலாம்) என்ற ஆங்கில வார்த்தையை, 'ஏக்கம்,' 'தாய்வீடு அல்லது நாட்டை பற்றிய நினைவுத் துயரம்,' 'பழங்கால நாட்டம்' என்று கூகுள் மொழிபெயர்க்கிறது.

புதிய இடத்திற்குச் செல்லும்போதும், புதிய பயணம் மேற்கொள்ளும்போதும், புதிய பணியில் ஈடுபடும்போதும் நம் மனம் பழையதை எண்ணி துயரப்படுகிறது. அந்த நாள் திரும்ப வராதா என எண்ணுகிறது. அதாவது, புதியது தருகின்ற துயரம் பழையது துயரமானாலும் அதை இன்பம் என்று எண்ண வைக்கிறது. நீதிமொழிகள் நூல் ஆசிரியர் இப்படிப்பட்ட உணர்வைக் கண்டிக்கிறார். அதாவது, 'அந்தப் பழைய நாள்கள் நன்றாக இருந்தனவே!' என்று மூடரே சொல்வர் என்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விதைப்பவர் எடுத்துக்காட்டைத் தருகின்றார். நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் தவிர, மற்ற மூன்று இடங்களில் - வழியோரத்தில், முட்செடிகளுக்கு நடுவே, பாறையின்மேல் - விழுந்த விதைகள் அனைத்தும் கண்டிப்பாக ஏங்கியிருக்கும்.

நாம் பேசாம விதைப்பவரின் கைகளுக்குள்ளேயே இருந்திருக்கக் கூடாதா?! அல்லது விதை வைக்கும் சாக்கிலேயே இருந்திருக்கக் கூடாதா?! இப்படி வந்து கஷ்டப்படுகிறோமே!

ஏன் இந்த உணர்வு நமக்கு வருகிறது?

அல்லது பழையது ஏன் நமக்கு இனிமையாகத் தெரிகிறது.

இரண்டு காரணங்கள்:

ஒன்று, புதியது நமக்குக் கடினமாக இருப்பதால். புதிய வேலை கடினமாக இருக்கும்போது நாம் செய்த பழைய வேலை நமக்கு இனிமையாகத் தெரிகிறது. புதிய இடத்தின் தட்பவெப்பநிலை தாங்க முடியாததாக இருக்கிறபோது, பழைய இடம் இனிமையாகத் தெரிகிறது.

இரண்டு, புதியதில் நம் மனம் விருப்பம் கொள்ளாமல் அல்லது ஈடுபடாமல் இருப்பதால். புதியது ஒன்றைப் பற்றிக்கொள்ள மனம் மறுக்கும்போது, புதியது சுமையாக மாறிவிடுகிறது. அதிக மனஇறுக்கத்தை அது தருகிறது.

விதைகள் விதைப்பவரின் கைகளுக்குள்ளேயே இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். கைகளின் வெதுவெதுப்பு, மற்ற விதைகளின் உடனிருப்பு, கைகளில் பொதியப்பட்டு இருப்பதால் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வு அனைத்தும் விதைகளுக்கு உற்சாகம் தருகின்றன. ஆனால், வெதுவெதுப்பு, உடனிருப்பு, பாதுகாப்பு உணர்வு ஆகியவை நிரந்தரம் அல்ல. கைகளை விட்டு எறியப்பட்ட அந்த நொடியில் விதைகள் தனிமையாக உணர்கின்றன. வெயில் சுடுகின்றது. பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு அவை தள்ளப்படுகின்றன. வழியோரம் விழுந்த விதைகள் பறவைகளுக்கு இரையாகின்றன. பாறையின் வெயில் சுடுகின்றது. இருந்தாலும் சற்று அங்கே ஒதுங்க நினைக்கும் விதை முளை விடுகின்றது. முட்கள் தனிமை போக்குவதாக இருந்தாலும் அவை விதைகளை நசுக்கிவிடுகின்றன.

பாவம் விதைகள்!

இன்றைய முதல் வாசகத்தில், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட மக்கள், தாங்கள் பெற்ற விடுதலைக் காற்றை சுவாசிப்பதற்குப் பதிலாக, பழைய வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு அதை நினைத்து ஏங்குகின்றனர்: 'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்!' எனப் புலம்புகின்றனர்.

உண்டது என்னவோ இறைச்சியும் . ஆனால், இருந்தது அடிமைகளாக!

பழையதன் இன்பம் தந்த ஈர்ப்பை அவர்களால் விட இயலவில்லை. காரணம், புதியது கடினமாக இருந்தது. மேலே காற்று சுதந்திரமாகக் கிடைத்தாலும் கால் என்னவோ பாலைநில வெப்பத்தால் பொசுங்கியது. உள்ளத்தில் சுதந்திரம் இருந்தாலும் உடல் என்னவோ பசித்தே கிடந்தது.

ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு உடனே மன்னாவும் காடையும் தருகின்றார்.

இன்று புலம்பெயர்ந்தோர் பலர், படிப்பு, பணி, திருமணம் போன்ற காரணங்களுக்காகப் புலம் பெயரும் பலர், தங்கள் மண்ணையும் மக்களையும் நினைத்து ஏங்குகின்றனர். அன்று கிடைத்த மன்னாவும் காடையும் இன்று கிடைப்பதில்லை என்பதே எதார்த்தம்.

பழையதன் மேல் ஏக்கம்.

புதியது பற்றிய பயம்.

இருந்தாலும் வாழ்க்கை நகர்கிறது.

விதைப்பவன் என்னவோ விதைத்துக்கொண்டே செல்கின்றான். விதைகள்தாம் பாவம்!


3 comments:

  1. அழகான உவமை ..அதைத் தந்தை தந்திருக்கும் விதம் இன்னும் அழகு சேர்க்கிறது.

    விதைப்பவரின் விதைகள் அவரின் கைகளுக்குள்ளேயே இருந்திருப்பினும் வெதுவெதுப்பு,பாதுகாப்பு, இவை அவைகளைச்சூழ்ந்திருப்பினும் அவையால் யாருக்கு பயன்?.வழியோரம் விழுந்த விதைகள் யாருக்கோ உணவாகின்றன எனும் உண்மை அவைகளுக்குத் தெரிவதில்லை.

    பழையதை…அது எப்படிப்பட்டதாக இருந்திருப்பினும் புதியது கடினமாகத்தெரிகிறது.என்னதான் சுதந்திரக்காற்றை சுவைத்தாலும் உள்ளம் பசித்தே இருந்தது இஸ்ரேல் மக்களுக்கு. இது மோசேயின் காலம்.

    இன்றும் நிலமை மாறவில்லை.இன்று புலம் பெயர்ந்தோர் தங்கள் மண்ணையும், மக்களையும் குறித்து ஏங்குகின்றனர். அன்று கிடைத்த மன்னாவும், காடையும் இன்று கிடைப்பதில்லை என்பதே எதார்த்தம்.

    எது எப்படியோ வாழ்க்கை யாருக்காவும் நிற்பதில்லை.அது நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விதைப்பவன் விதைத்திடினும் விதைகள் என்னவோ பாவமே!

    இந்த லிஸ்டில் தந்தை தன்னையும் சேர்க்கிறாரா தெரியவில்லை! வெப்ப தேசத்திலிருந்து குளிர்ப் பிரதேசத்திற்கு தனக்குப்பழக்கப்பட்ட அனைத்தையும்…அனைவரையும் விட்டுச்சென்றுள்ளார்…இறை தந்தையின் குரல் கேட்டு. எல்லாமே அவர் நினைத்ததுபோல் அமைந்திட ….இறைவன் அவரைக் காத்திட….உடல் உள்ள சுகம் அவருக்கு ஒத்திழைக்க வாழ்த்துகறேன். விதைப்பவன் உவமையை வித்தியாசமாகத்தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Nice reflection dear father

    ReplyDelete
  3. Very Inspirational thought dear Fr.
    A new way of understanding the parable.
    Very happy about you. Thanks.

    ReplyDelete