அடையாளம் ஒன்று
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் அடையாளம் ஒன்று கேட்கின்றனர். ஒருவருடைய போதனை மற்றும் செயல்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கும் நம்புவதற்கும் அடையாளங்கள் தேவைப்பட்டன அன்று. இன்றும் அடையாளங்கள் இல்லாமல் நம்மால் வாழ முடிவதில்லை. 'நான் ஓர் அருள்பணியாளர்' என்று மற்றவர்கள் நம்புவதற்கு, 'நான் அங்கி அணிய வேண்டும்,' அல்லது 'என் மறைமாவட்டம் தருகின்ற அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்,' அல்லது 'நான் அருள்பணியாளராக இருக்கும் புகைப்படம் ஒன்றைக் காட்ட வேண்டும்'.
இயேசுவிடம் வருகின்ற பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவரை நம்புவதற்காக அல்ல, மாறாக, அவரைச் சோதிப்பதற்காக அடையாளம் கேட்கின்றனர்.
இயேசு அவர்களை இரண்டு நிலைகளில் சாடுகின்றார்.
நேரிடையாக, அவர்களை 'தீய விபசாரத் தலைமுறையினர்' என்கின்றார். இது அவர்களுக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்திருக்கும். இங்கே, 'விபசாரம்' என்பதை நாம் 'பிரமாணிக்கத்தில் இரட்டை வேடம்' என்று புரிந்துகொள்ள வேண்டும். இஸ்ரயேல் மக்களை முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் விபசாரர்கள் எனக் கடிந்துகொள்கின்றனர். அதாவது, ஆண்டவராகிய கடவுளை மறந்துவிட்டு மற்ற தெய்வங்கள் அல்லது சிலைகள் பின்னார் அவர்கள் சென்றபோது இறைவாக்கினர்கள் அவர்களை அப்படி அழைத்தனர். அதாவது, ஆண்டவருக்கும் பிரமாணிக்கம், பாகாலுக்கும் பிரமாணிக்கம் என்ற நிலையே விபசாரம். அந்தத் தலைமுறையில் வந்தவர்கள்தாம் நீங்கள் என்று இயேசு தன்னிடம் கேள்வி கேட்டவர்களைக் கடிந்துகொள்கின்றார்.
மறைமுகமாக, இரு எடுத்துக்காட்டுகள் வழியாக அவர்களைச் சாடுகின்றார்.
யோனா நற்செய்தி அறிவித்த நினிவே மக்கள், மற்றும் சாலமோனைத் தேடி வந்த சேபா நாட்டு அரசி. இவ்விருவருமே புறவினத்தார்கள். நினிவே மக்கள் அசீரியர்கள். அசீரியர்களுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நெடுங்காலமாக பகை இருந்து வந்தது. ஆனாலும், யோனா தங்கள் நாட்டில் மனமாற்றத்தின் செய்தியை அறிவித்தபோது எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அவரையும் அவருடைய செய்தியையும் அப்படியே ஏற்றுக்கொண்டு மனம் மாறுகிறார்கள். சேபா நாட்டு அரசி சாலமோனுடைய ஞானத்தைக் கேட்டு அவரைக் காண வருகின்றார். அவருடைய ஞானத்தில் மெய்மறந்து போகின்றார். ஆக, நினிவே மக்களும், சேபா நாட்டு அரசியும் புறவினத்தார்களாக இருந்தாலும் அவர்கள் முன்மாதிரிகளாகத் திகழ்கிறார்கள் என்கிறார் இயேசு.
மேலும், 'யோனாவை விடப் பெரியவர், சாலமோனை விடப் பெரியவர்' என்று தன்னை அழைக்கிறார் இயேசு. அதாவது, யோனாவையும் சாலமோனையும் நம்பியவர்களே அடையாளங்கள் எதுவும் கேட்காமல் இருந்தபோது, அவர்களைவிடப் பெரியவரான தன்னை நம்புவதற்கு ஏன் அடையாளம் கேட்கிறீர்கள்? என்பது போல இருக்கிறது இயேசுவின் சொல்லாட்சி.
இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடப்பதற்கு முன் நிகழ்ந்ததை வாசிக்கின்றோம். எகிப்து நாட்டில் மிகப்பெரும் அடையாளங்கள் செய்து தங்களை அங்கிருந்து யாவே இறைவன் வெளியேற்றினாலும், தங்களைத் தொடர்ந்து பாரவோனின் படைகள் வருவதைக் காண்கின்ற இஸ்ரயேல் மக்கள், 'எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்து வந்தீர்?' என ஆண்டவரை நோக்கிக் கேட்கின்றனர்.
என்னவொரு நம்பிக்கையின்மை!
பல நேரங்களில் நம் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கின்றது. நம் இருத்தல், இயக்கம் என அனைத்திலும் இறைவனின் கரம் செயல்பட்டாலும், அவர் நம்மிடம் இருக்கிறாரா? என்பதை அடையாளங்கள் வைத்தே சோதித்து அறிகின்றோம். செங்கடல் போல பிரச்சினைகள் நம் முன்னே நிற்கும்போது, 'நான் இறந்து போக வேண்டுமா?' என அச்சப்படுகின்றோம்.
ஆனால், நம் நம்பிக்கையின்மையை இறைவன் தன் இயங்குதளமாக மாற்றுகின்றார்.
'ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் அமைதியாயிருங்கள், சும்மாயிருங்கள்!' என்று மோசே கூறுகின்றார்.
மிகவும் நம்பிக்கை தருகின்ற வார்த்தைகள் இவை.
ஏறக்குறைய 430 ஆண்டுகளாக எகிப்தில் அடிமைகளாகவும், செங்கல் தயாரிப்பாளர்களாகவும் இருந்தவர்களுக்கு போரிடுதலும், போர்க்கருவிகள் கையாளுதலும் தெரியுமா என்ன? அவர்களின் வலுவின்மையில் இறைவன் செயலாற்றுகின்றார். அவர்கள் சும்மாயிருந்தாலே போதும்.
நம் வாழ்வின் கலக்கமான தருணங்களிலும் நாம் சும்மாயிருந்தாலே போதும்! அவர் நமக்காகப் போரிடுவார்.
நாமும் கூட நம் கையறு நேரங்களில் இறைவனின் இயக்கத்தையும், அவர் நம்முடன் பயணிப்பதையும் மறந்து அடையாளம் கேட்கிறோம்.எகிப்திலிருந்து வெளியேறிய இஸ்ரேல் மக்களின் கூடவே பயணித்த யாவே இறைவனை “ நாங்கள் சாகவா எங்களை அழைத்து வந்தீர்?” என சாடுகின்றனர். நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? சோதனைகளும்,வேதனைகளும் நம்மைத் துரத்துகையில் எத்தனை முறை அவர் இருப்பை மறந்து அவரை புறக்கணிக்கிறோம்?
ReplyDeleteஆனால் “ நம்பிக்கையின்மையை”த் தன் இயங்குதளமாக மாற்றுகிறார் நம் இறைவன்” எனும் தந்தையின் வார்த்தைகள் ஆறுதலாக ஒலிக்கின்றன. மோசேயின் வார்த்தைகள் நமக்கு திடமளிக்கின்றன. நம் வலுவின்மையிலும் நமக்காக செயலாற்றும் இறைவன் நமக்காக நம் எதிரியை எதிர்த்துப் போரிடுகிறார் எனும் வார்த்தைகள் நமக்கு மனத்திடம் தரட்டும். “நாம் சும்மாயிருந்தாலே போதும்”… என கூடுதலாக வரும் தந்தையின் வரிகள் கூடுதல் ஆறுதல் தருகின்றன. தந்தைக்கு நன்றிகள்!!!