Sunday, July 25, 2021

உவமைகள் இன்றி

இன்றைய (26 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:31-35)

உவமைகள் இன்றி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மேலும் இரு உவமைகளை எடுத்தாளுகின்றார். கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு உவமைகளின் வழியாக விண்ணரசின் மறைபொருளை விளக்குகின்றார் இயேசு. இறுதியில், 'உவமைகள் இன்றி இயேசு மக்களோடு பேசியதில்லை' என நிறைவு செய்கின்றார் மத்தேயு.

உவமைகள் அல்லது கதைகளின் நோக்கம் காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத பொருளுக்கு, வாசகரை அல்லது கேட்பவரை அழைத்துச் செல்வதுதான். தன் சமகாலத்தவரின் அன்றாடப் பயன்பாட்டிலிருந்த பொருள்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து இயேசு உவமைகளை எடுத்தாளுகின்றார்.

கடுகு விதை விண்ணரசு பற்றிச் சொல்வது என்ன?

(அ) விண்ணரசு காண்பதற்கு மிகச் சிறிய அளவாக இருந்தாலும் அது பெரிய அளவில் வளரும்.

(ஆ) விதையைப் போல அது தன்னகத்தே ஆற்றல் கொண்டிருக்கிறது.

(இ) அது வளரும்போது அனைவரையும் தழுவிக்கொள்ளும்.

புளிப்பு மாவு விண்ணரசு பற்றிச் சொல்வது என்ன?

(அ) புளிப்பு மாவு பார்ப்பதற்கு சாதாரண மாவு போல இருந்தாலும் அது தன்னகத்தே ஆற்றல் கொண்டது.

(ஆ) புளிப்பு மாவு செயல்படத் தொடங்கியவுடன் அதன் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது.

(இ) புளிப்பு ஏறிய மாவிலிருந்து புளிப்புத் தன்மையை நீக்கவும் முடியாது.

இவ்வாறாக, விண்ணரசு மேல் நோக்கி வளரும் என்றும், சமமாக அனைத்திலும் கலக்கும் என்றும் சொல்கிறார் இயேசு.

நம் வளர்ச்சியும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

நம் வாழ்வில் நாம் மேல்நோக்கிய நிலையிலும், சமநிலையிலும் ஒருவர் மற்றவரோடு இணைந்திருத்தல் அவசியம். நம் வழியாகவே இறையரசு வளரும். இறையரசின் கடுகுவிதையாக, புளிப்பு மாவாக நாம்தான் செயல்படுகின்றோம்.

நாமே இறைவன் பயன்படுத்தும் கதைகள், உவமைகள்!

 

1 comment:

  1. சிறியவற்றிலிருந்து பெரியவற்றிற்கு…..காணக்கூடியதிலிருந்து காண முடியாதவற்றிற்கு….அறிந்த ஒன்றிலிருந்து அறியாத ஒன்றிற்கு….தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றிற்கு! கற்றல் மற்றும் கற்பித்தலின் சூட்சுமமே இதுதான். இயேசு கையாளுவதும் இதையேதான். கடுகு….சிறியது என்பதற்காக அதை சமையலில் சேர்க்காமலிருக்கிறோமா? வெகு சாதாரணமாக நாம் நினைக்கும் புளிப்பு மாவு மனிதனுக்கு பல வடிவங்களில் உணவுப்பொருளாக மாறுவதில்லையா? யாரையும்…எதையும் தேவையற்றவர்கள்/ தேவையற்றவை என விலக்கி வைக்க முடியாது என்பதே இன்றைய உவமை நமக்குக் கற்றுத் தரும் பாடம்.

    நாமும் இறையரசின் கடுகு விதையாக…..புளிப்பு மாவாக மாற வேண்டுமென்பதே ‘அவரின்’ திருவுளம்.நம்மிடமுள்ளவற்றை…அவை பொருளானாலும் சரி…திறமைகள் போன்ற விஷயமாயினும் சரி.. நம் தாராள உள்ளத்தினால் இந்த சமூகத்திற்கு கடுகு விதையின் காரத்தையும், புளிப்பு மாவின் மிருது தன்மையையும் கொடுத்து நாம் வாழும் இந்த சமூகத்தையே விண்ணரசாக மாற்ற முயற்சிப்போம்.

    புளிப்பு மாவாக….கடுகு விதையாக நான் பல நேரங்களில் அடையாளம் காணும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete