Wednesday, July 7, 2021

கொடையாக

இன்றைய (8 ஜூலை 2021) நற்செய்தி (மத் 10:7-15)

கொடையாக

தன் பணிக்கெனத் திருத்தூதர்களைத் தெரிவு செய்த இயேசு, எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, தொடர்ந்து, 'கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்!' என அறிவுரை பகர்கின்றார்.

'எடுத்துச் செல்வது,' 'கொடுத்துச் செல்வது' என வாழ்க்கையை நாம் இரண்டு நிலைகளில் வாழ்கின்றோம். எடுப்பது எனக்கு, கொடுப்பது பிறருக்கு என்றுதான் அதன் இயக்கம் இருக்கின்றது. ஆக, எடுத்தலிலிருந்து கொடுத்தல் மனநிலைக்குச் செல்ல இயேசு தன் திருத்தூதர்களை அழைக்கின்றார்.

'நிறைய இருந்தால் நல்லது' என்ற மனநிலை இன்று எங்கும் பேசப்படுவதால், நாம் அதையே பற்றிக்கொள்ள நினைக்கின்றோம். 'நிறையப் பணம்,' 'நிறையப் புகழ்,' 'நிறைய நண்பர்கள்' என யார் அதிகம் எடுத்துக்கொள்கிறாரோ அவரே இன்று மேன்மையானவராகக் காட்டப்படுகின்றார். 'நிறைய' என்பது ஓர் ஆபத்தான வார்த்தை. ஏனெனில், 'இதுதான் நிறைய' என்று எப்போதும் நாம் எதையும் வரையறுத்துவிட முடியாத வண்ணம் நம் ஆசை கூடிக்கொண்டே போகும்.

நலம் தரும் பணியும், பேய் ஓட்டும் பணியும் கொடையாக மட்டுமே நடக்க வேண்டும் என்பது இயேசுவின் பாடம். ஏனெனில், இவ்விரண்டும் திருத்தூதர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டவை. ஆக, அவற்றுக்கு விலை பேசுவது சரியல்ல.

ஒவ்வொரு பொழுதும் நாம் இறைவனிடமிருந்து பெற்றிருக்கின்ற கொடை என்பதை உணர்தலே பெரிய ஞானம். இந்த ஞானம் பிறந்தால் நாம் எதையும் எடுத்துக்கொள்ள முயற்சிக்க மாட்டோம்.

இதற்கான அழகிய வாழ்வியல் எடுத்துக்காட்டை முதல் வாசகத்தில் பார்க்கிறோம். அடிமையாக விற்கப்பட்டு, எகிப்தின் ஆளுநராக உயர்ந்த யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். அடிமையாக இருந்த தான் ஆளுநராக உயர்த்தப்பட்டது ஆண்டவரின் கொடை என்பதை உணர்ந்தார் யோசேப்பு. அதனால்தான், போத்திபாரின் மனைவி அவரைக் கவர்ந்திழுக்க முயன்றபோது, 'ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்படுவதை நான் செய்யலாமா?' என்று ஆண்டவரை மனத்தில் வைத்துக் கேட்கின்றார். அந்த நேரத்தில் அவர் தன் பார்வையில் நலமெனப்பட்டதையோ அல்லது அந்தப் பெண்ணின் பார்வையில் நலமெனப்பட்டதையோ செய்ய முயற்சிக்கவில்லை. தன் சகோதர்களைப் பழிதீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும், அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கின்றார். அவர்களைத் தன்னோடு சேர்த்துக்கொள்கின்றார்.

'நீங்கள் என்னை விற்றீர்கள். ஆண்டவர் என்னை அனுப்பினார்!' எனச் சொல்கிறார் யோசேப்பு.

தான் விற்கப்பட்ட அடிமை என்ற நிலையில் அவர் தன் வாழ்க்கையை வாழவில்லை. அப்படி அவர் வாழ்ந்திருந்தால் அடிமையாகவே இருந்திருப்பார். வன்மம், பழியுணர்வு கொண்டு வளர்ந்திருப்பார். ஆனால், அனைத்திலும் ஆண்டவர் தன்னை அனுப்பியதாகவே அவர் உணர்ந்தார்.

இதுவே நம்பிக்கைப் பார்வை.

நம்பிக்கைப் பார்வை அனைத்தையும் கொடையாகவே பார்க்கும்.

1 comment:

  1. “கொடையாக”… நாம் பெற்றதையும்,கொடுத்ததையும் நினைவில் கொண்டுவர நமக்கு அழைப்பு விடுக்கிறார் தந்தை.” கொடையாகப்பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்” என்பது திருத்தூதர்களுக்கான பாடம் மட்டுமல்ல… நமக்கும் சேர்த்துத்தான். ஒரு சிறு மணித்துளி தனிமையில் அமர்ந்து நமது கடந்த காலத்தின் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் நாம் எடுத்ததற்கும்…கொடுத்ததற்குமான கணக்கு நம் மனத்தில் ஊசலாடும். நம் மனமான துலாக்கோல் நாம் எடுத்ததன் பக்கமே சாய்ந்து நிற்கும்.” நிறைய” என்பது ஒரு comparative சொல். என்னையும் எனக்கடுத்திருப்பவரையும் ஒப்பிடுவது. நிறையோ அல்லது குறையோ அடுத்தவரின் அளவையால் அளந்து பார்ப்பதல்ல. அடுத்தவரின் “நிறைய” எனும் வார்த்தையை நாம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் அதற்கு எல்லை இல்லை தான். தந்தை சொல்வதுபோல் இந்த “ நிறைய”.. ஆபத்தான வார்த்தையே!

    “ போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”.. வாழ்வில் இதை உணர்ந்தவரே ஞானம் பெற்றவராவர். பழைய ஏற்பாட்டு யோசேப்பு போன்று….மகாபாரதத்தின் கர்ணன் போன்று “ என்னிடம் என்ன இல்லை” என்று கணக்குப் போடுவதை விடுத்து “என்ன இருக்கிறது” என்ற கணக்கைப் போடுவோம். நாமே இந்த உலகிற்கு ஒரு கொடையாக வந்தவர்களென உணர்ந்தால் நாம் எடுத்தலை விடுத்து கொடுத்தலில் மகிழ்வு காணத்தொடங்குவோம்.

    அனைத்தையும் “ நம்பிக்கைப் பார்வையாகப் பார்க்க அழைப்பு விடுக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete