Monday, July 5, 2021

நொறுங்குநிலையும் பரிவும்

இன்றைய (6 ஜூலை 2021) நற்செய்தி (மத் 9:32-38)

நொறுங்குநிலையும் பரிவும்

'என்னால் இது இயலவில்லை'

- இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். இதைச் சொல்பவர் இந்த வாக்கியத்தின் வழியாகத் தன்னுடைய இயலாமையை எடுத்துரைக்கிறார். இந்த இயலாமைதான் அவருடைய நொறுங்குநிலை.

இந்த வாக்கியத்தைக் கேட்பவர், இரண்டு நிலைகளில் இதற்கு பதிலிறுப்பு செய்யலாம். ஒன்று, 'என்னால் இது இயலவில்லை' என்று சொன்னவர்மேல் கோபம் கொண்டு அவரைக் கடிந்துகொள்ளலாம். இரண்டு, அப்படிச் சொன்னவர்மேல் இரக்கம் கொண்டு அவருக்குக் கற்றுக்கொடுக்கலாம்.

நம் கண்முன் நிற்கின்ற அனைவரும் நம்மைப்போல ஏதோ ஒரு நொறுங்குநிலையைத் தாங்கிக்கொண்டிருப்பவர்கள்தாம். நோய், முதுமை, மறதி, பசி, வறுமை, வேலையின்மை, வாழ்வின் பொருளின்மை, எதிரியின் சதி, பேய் என நிறைய நொறுங்குநிலைகளைச் சுமந்துகொண்டு நாம் நிற்கின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு தன் வாழ்வில் முதன் முறையாக தன் நொறுங்குநிலையை உணர்கின்றார். மிக அழகான முதல் வாசகப் பகுதியை இன்று வாசிக்கின்றோம். ஈசாக்கின் இளைய மகன் யாக்கோபுக்கு வாழ்வில் எல்லாமே நல்லதாகவே நடக்கிறது. இளைய மகனாக இருந்தாலும் தலைப்பேறு உரிமையைப் பெற்றுக்கொள்கிறார். தன் தாயின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு தன் தந்தையிடமிருந்து ஆசீரைப் பறித்துக்கொள்கிறார். தான் நினைத்த, காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்கின்றார் (இரண்டாவது முறையாக). இவர் தொட்ட அனைத்தும் துலங்குகிறது. கால்நடைகள் பலுகிப் பெருகுகின்றன. தன் மாமனாரிடமிருந்து புறப்பட்டு தன் இல்லம் நோக்கிச் செல்கின்றார். இப்போது இவருக்கு இருக்கும் பெரிய அச்சம் இவருடைய அண்ணன் ஏசா. அண்ணன் தன்னைப் பழிதீர்த்தால் என்ன செய்வது? அல்லது அண்ணனை எப்படி இன்னும் வஞ்சனை செய்து வீழ்த்துவது? என்று மனதுக்குள் போராட்டத்துடன் தூங்குகிறார். அந்த இரவில் ஓர் ஆடவர் அவருடன் போரிடுகின்றார். ஆக, இது அவருடைய மனப் போராட்டமும் கூட. நாணயத்திற்கும் நாணயமின்மைக்கும் எதிரான போராட்டத்தில், நாணயத்தோடும் கண்ணியத்தோடும் செயல்படுவது என்ற முடிவு எடுக்கின்றார். அதுதான் அவருடைய நொறுங்குநிலை. அந்த நொறுங்குநிலையில் அவர் நொண்டி நடக்கின்றார். அந்த நொறுங்குநிலையில் போராடி ஆடவரின் ஆசீரைப் பெறுகின்றார்.

நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில் பேச்சிழந்த ஒருவரின் பேயை ஓட்டுகின்றார் இயேசு. கூட்டத்தினர் வியப்புறுகின்றனர். இரண்டாம் பகுதியில், திரண்டிருந்த மக்கள்மீது பரிவு கொள்கின்றார்.

அதாவது, மக்களின் பிணி காணுகின்ற இயேசு, அவர்களின் நொறுங்குநிலையைக் காண்கின்ற இயேசு அவர்கள்மேல் பரிவு காட்டுகின்றார்.

பரிவு ஒரு மேன்மையான உணர்வு.

ஒருவரின் கையறு நிலை கண்டு, அவருடைய இடத்தில் தன்னை நிறுத்திப் பார்ப்பது பரிவு. பரிவு கொள்ளும் எதையும், 'இவருக்கு ஏன் இப்படி நடந்தது?' என்று கேள்வி கேட்பதில்லை. மாறாக, உடனடியாகச் செயல்படுவார். 'இவருக்கு இப்படித்தான் நடக்க வேண்டும்!' என்று அவரைத் தீர்ப்பிடவோ, அவரைக் கண்டு ஒதுங்கிக்கொள்ளவோ அவரால் இயலாது.

தன் பணியின் நிமித்தமாகப் பயணம் மேற்கொண்ட நல்ல சமாரியன், வழியில் அடிபட்டுக் கிடந்த ஒருவரைக் கண்டவுடன், தன் பயணத்தைத் தாமதித்து, தன் நேரத்தையும் ஆற்றலையும் பணத்தையும் முன்பின் தெரியாத ஒருவருக்குச் செலவிடுமாறு அவரைத் தூண்டியது அவருடைய பரிவே.

பன்றிகள் தின்னும் நெற்றுக்களால் தன் வயிற்றை நிரப்பிய தன் இளைய மகன் வருவதைக் கண்டவுடன், அவன் மீண்டும் அந்தச் சேற்றுக்குள் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, தன் ஊராரின் பழிச்சொல்லையும் பொருட்படுத்தாமல் அவனை நோக்கி ஓடி அவனைத் தழுவிக்கொள்ளுமாறு தந்தையை உந்தித் தள்ளியதும் பரிவே.

நொறுங்குநிலை கண்டு பரிவு எழுதல் நலம். ஏனெனில், நாம் இருப்பதும் அதே நிலையில்தான்.

1 comment:

  1. பரிவு…நொறுங்கு நிலை இரண்டு வார்த்தைகளுமே நம்மை உள்ளூர உறையவைக்கும் சக்தி கொண்டவை. வாழ்வின் பல கட்டங்களில் பல்வேறு நொறுங்கு நிலைகள் நம்மை நொறுக்கி எடுக்கின்றன.சிலர் அதில் மீறி எழுகிறார்கள்; பலர் அதில் வெந்து மடிகிறார்கள்.

    வாழ்வில் தொட்டாதெல்லாம் பொன்னாகும் இராசி கொண்ட இளைய மகன் யாக்கோபு.ஒரே இடறலான அவரின் அண்ணனை நினைக்கும் அவருக்கு கனவு வழியே ஒரு நொறுங்கு நிலை.அவர் தேர்ந்தெடுப்பது நாணயமும்…கண்ணியமும்.தான் கண்ட மனிதரின் அத்தனை நிலைகளிலும் அவர்கள் மீது பரிவு கொண்டவர் இயேசு.பரிவு கொள்ளும் எவரும் இலாப- நஷ்டக்கணக்குப் பார்ப்பதில்லை …நல்ல சமாரியன் போன்று…. இளைய மகனின் தந்தை போன்று.

    ‘ பரிவு’ ஒரு உண்மையான உணர்வு. உண்மைதான். இதில் கலப்படம் இருக்க வழியில்லை. நம்மில் ஊற்றெனப் புறப்படும் நேரங்களில் கட்டுப்படுத்த இயலாத ஒன்று.பரிவு தேவைப்படும் இடத்தில் அதை எந்த கூட்டல்- கழித்தலுக்கும் உட்படுத்தாமல் அள்ளி வழங்குவோம். “ நொறுங்கு நிலை கண்டு பரிவு எழுதல் நலம்.ஏனெனில் நாம் இருப்பதும் அதே நிலையில் தான்.” பனித்துளிகளை கண்களில் வரவழைக்கும் இந்த ‘பரிவு’ எனும் உணர்வை நமதாக்கிக்கொள்வோம். அழகான…மென்மையானதொரு உணர்வை உந்தியெழுப்பும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete