Thursday, July 29, 2021

அவர்கள் தயங்கினார்கள்

இன்றைய (30 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:54-58)

அவர்கள் தயங்கினார்கள்

இயேசு தன் சொந்த ஊரில் நிராகரிக்கப்படும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் நேரிடையாகவே பதிவு செய்கின்றனர். யோவான், இந்நிராகரிப்பை உருவகமாக எழுதுகின்றார்: 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' (காண். யோவா 1:11).

இயேசுவின் இருத்தலும் இயக்கமும் அவருடைய சொந்த ஊராரிடம் ஒரே நேரத்தில் இரண்டு வகை உணர்வுகளை எழுப்புகின்றன: ஒன்று, வியப்பு. இரண்டு, தயக்கம். இயேசுவின் போதனையைக் கண்டு வியப்படைகின்றனர். போதித்தல் என்பது ரபிக்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று என்ற பின்புலத்தில், ரபி அல்லது ரபி பள்ளியின் பின்புலம் எதுவும் இல்லாமலேயே இயேசு போதிப்பது அவர்களுக்கு வியப்பு தருகின்றது. அந்த வியப்பை அவர்கள் தயக்கமாக மாற்றுகின்றார். 'என்ன இருந்தாலும் இவர் ...' என்று ஒருவர் சொல்லத் தொடங்க, ஒவ்வொருவராக அதைத் தொடர்கின்றனர்.

போதகராகவே ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்ற மக்கள் தன்னைக் கடவுளாக அல்லது கடவுளின் மகனாக ஏற்றுக்கொள்வார்களா என்ற எண்ணத்தில் இயேசு வல்ல செயல்கள் எதுவும் அங்கு செய்யவில்லை. மாற்கு நற்செய்தியாளர், இதையே, 'வல்ல செயல்கள் செய்ய இயலவில்லை' என்று பதிவு செய்கின்றார்.

'இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?' என்ற கேள்விக்கு அவர்களிடம் விடையில்லை. அவர்கள் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து, 'இறைவனிடமிருந்து' என்று சொல்ல இயலாதவாறு, அவர்களுடைய முற்சார்பு எண்ணம் அவர்களைத் தடுத்தது.

நிராகரிக்கப்படுதல் ஒரு கொடுமையான உணர்வு.

ஊராரின் மனநிலை இயேசு தங்களைப் போலவே இருக்க வேண்டும் என நினைக்கிறது.

அடுத்தவரும் என்னைப் போலவே இருந்துவிட்டால் எனக்கு நெருடல் இல்லை. என்னைவிட அவர் சிறந்தவர் என்ற எண்ணம் வரும்போதுதான் தயக்கம் வருகிறது.


1 comment:

  1. “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” எனும் கேள்விக்கு மக்களுக்கு விடை தெரிந்திருந்தும், இயேசுவைப்பற்றிய முற்சார்பு எண்ணம் அந்த உண்மையைச் சொல்ல விடாமல் அவர்களைத் தடுத்தது.” நான் எப்படியோ அப்படியே தான் நீயும் இருக்க வேண்டும்” என்பது அவர்களின் உணர்வு.நம்மில் உள்ள உயர்வு மனப்பான்மை நம்மைவிட யாரையும் சிறந்தவராகப் பார்க்க மறுக்கிறது அநேக நேரங்களில். என்ன செய்யலாம் நம்மிலிருந்து இந்த எதிர்மறை உணர்வைக் களைந்தெறிய? எப்பொழுதுமே எனக்கடுத்தவரில் உள்ள நேர்மறை விஷயங்களை மட்டுமே பார்ப்பதும்…அப்படியே ஏதேனும் எதிர்மறை விஷயங்கள் இருப்பின், அதற்கும் அவர் பக்கம் ஏதேனும் நியாயமான காரணங்கள் இருக்கலாம் என்று நம் மனத்தை சமாதானப்படுத்துவதுமே! கொஞ்சம் கடினம் தான். முயற்சி செய்யலாமே!

    அன்றாடம் நாம் வாழ்வாக்கக் கூடிய ஒரு விஷயம். முயன்றுபார்க்கலாம் என்று சொல்லாமல் சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete