கூட்டாற்றல்
கடந்த சில நாள்களுக்கு முன் யூட்யூபில் காணொலி ஒன்று பார்த்தேன். 'நாம் செய்கின்ற வேலை அல்லது தொழிலில் மேன்மையடைய என்ன செய்ய வேண்டும்?' என்பதே இதன் தலைப்பு. அதாவது, நான்கு நிலைகளில் நம்மை மேன்மைப்படுத்திக்கொண்டால் நாம் செய்கின்ற பணி மேன்மை அடையும்:
(அ) மக்கள் மேம்பாடு. அதாவது, எனக்கு கீழ் இருக்கின்ற உதவியளார்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தொடர் பயிற்சிகள் அளித்தோ, அல்லது அவர்களை புதிய முயற்சிக்கு ஊக்குவித்தோ அவர்களை நான் வழிநடத்த வேண்டும்.
(ஆ) செய்முறை மேம்பாடு. அதாவது, செயல்முறையை மாற்றுவது. எடுத்துக்காட்டாக, நான் இதுவரை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்து என் வாடிக்கையாளர்களை அழைக்கிறேன் என்றால், அதற்குப் பதிலாக செயலி ஒன்றைப் பயன்படுத்தி செய்முறையை மாற்றிக்கொள்வது. இதனால், வேலை எளிதாகும்.
(இ) தொழில்நுட்ப மேம்பாடு. கையில் எழுதக் கூடிய ஒன்றை கணினியில் தட்டச்சு செய்வதால் எளிதில் பிரதி எடுக்கவோ, மற்றவர்களோடு பகிரவோ என்னால் இயலும். தொழில்நுட்ப முறையின் மாற்றத்தைக் கண்டு அம்மாற்றங்களை என் பணிக்குத் தகவமைத்துக்கொள்வது மேம்பாடு.
(ஈ) கருவிகள் மேம்பாடு. மரம் வெட்டுகின்ற பணி செய்கின்றேன் என்றால், இன்னும் கோடரியைத் தூக்கிக் கொண்டு செல்லாமல், புதிய கருவிகளை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் பணியை மேம்படுத்துகின்றார்.
தன்னுடன் இருந்த சீடர்களிடமிருந்து 12 பேரைத் தேர்ந்தெடுத்து திருத்தூதர்கள் என்று பெயரிட்டு, நற்செய்தியை அறிவிக்கவும், பேய்களை ஓட்டவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கின்றார். ஆக, மக்களை மேம்படுத்துகின்றார்.
இரண்டாவதாக, இலக்கைக் கூர்மைப்படுத்துகின்றார். யாரிடம் செல்ல வேண்டும்? அல்லது அவர்களுடைய பணி யாரை நோக்கியதாக இருக்க வேண்டும்? என வரையறை செய்கின்றார். இவ்வாறாக, செய்முறையை மேம்படுத்துகின்றார்.
மக்களை மேம்படுத்த வேண்டுமெனில் மக்களை நாம் நம்மவர் எனப் பார்க்க வேண்டும். அவர்கள் நம் ஆற்றலைக் கூட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
ஒரு கை இன்னொருவரின் கையோடு சேரும்போது இரு கைகளின் ஆற்றலைவிட கூடுதலான ஆற்றலைப் பெறுகின்றது. இதுவே கூட்டாற்றல்.
இன்றைய முதல் வாசகத்தில், தங்கள் சகோதரன் யோசேப்பின்மேல் பொறாமை கொண்டு அவரை விற்றுவிடுகின்றனர் சகோதரர்கள். தன் சக மனிதரைப் பொறாமைக் கண் கொண்டு பார்த்து அவரைப் பழிதீர்க்க நினைப்பவர்கள் மனித மேம்பாட்டை விரும்புவதில்லை.
நம்மைச் சார்ந்தவர்கள் அல்லது நமக்கு அருகில் இருப்பவர்களின் ஆற்றலை மேம்படுத்தினால் நம் ஆற்றலும் மேம்படுகிறது.
“ கூட்டாற்றல்”…. மக்களை மேம்படுத்த,முதலில் அவர்களை நம்மவர் எனப்பார்க்க வேண்டும்….ஒரு கை இன்னொருவரின் கையோடு சேரும்போது கூடுதலான ஆற்றல்..அதுவே கூட்டாற்றல்.
ReplyDeleteநம்மைச் சார்ந்தவர்கள்,நமக்கருகில் இருப்பவர்களின் ஆற்றலை மேம்படுத்தினால் நம் ஆற்றலும் மேம்படுகிறது”…. சரியே! மேலே நான் குறிப்பிட்டுள்ள வரிகள் சாமான்யனுக்கும் பொருந்தக்கூடியவை….அவனால் சாதிக்க முடிந்தவை.ஆனால் தந்தையின் ஆரம்ப விஷயங்கள் செயலி..கணிணி..இம்மாதிரி விஷயங்கள் அறிந்த..புரிந்த மேல்தட்டு மக்கள் சம்பந்தப்பட்டது. நம்மவரும் கையூன்றி எழுந்து நிற்க தந்தை வழி செய்தல் நலம். சரிதானே!.
ஆனாலும் இந்நேரத்தில் ஏனோ….
“இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம்
பகைவர்களே ஓடுங்கள் புலிகள் இரண்டு வருகின்றன.”
எனும் பழைய பாடலின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.
மேல்தட்டோ…கீழ்தட்டோ…யாரோ ஒருவரைத் தூக்கிவிடும் உந்து சக்தியின் பிறப்பிடமான தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!